|
சுந்தர ராமசாமி |
|
- சரவணன்|ஜூன் 2001| |
|
|
|
நாகர்கோயில்காரர். 'காலச்சுவடு' பத்திரிகையின் நிறுவனர். சில ஆண்டு காலம் அதன் ஆசிரியராக இருந்தவர். தமிழின் மிகச் சிறந்த புனைகதை ஆசிரியர்களுள் குறிப் பிடத்தக்கவர். பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதுகிறார். மொழி பெயர்ப் பாளரும் கூட. இவரின் முதல் நாவலான 'ஒரு புளிய மரத்தின் கதை' நாவல் யதார்த்த நாவல் வகைக்கு முன்னோடியான எடுத்துக்காட்டு.
சமீபத்தில் காலச்சுவடு பதிப்பகம் இவரு டைய சிறுகதைகள் அத்தனையையும் சேர்த்து 'காகங்கள்' எனும் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளது. ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் ஆண்கள் பெண்கள் ஆகிய நாவல்களையும், விரிவும் ஆழமும் தேடி, காற்றில் கலந்த பேரோசை ஆகிய கட்டுரை நூல்களையும், '107 கவிதைகள்' நூலையும் தமிழுக்குத் தந்துள்ளார்.
இவரின் மொழிபெயர்ப்பில் தகழியின் 'தோட்டியின் மகன்' நாவல் சமீபமாக வெளிவந்துள்ளது. இந்த மொழிபெயர்ப்பை சுந்தரராமசாமி முடித்த போது அவருக்கு வயது மீசை அரும்பத் தொடங்கிய வயது. அடைத்த கதவுகளுக்குள் நோயாளியாய்ப் படுத்த படுக்கையாய் ஆரம்ப கட்டத்தில் இருந்த சுந்தரராமசாமி, இலக்கியப் பித்துப் பிடித்து நாவலாசிரியனாய் ஆன கதையை அவர் வாயிலிருந்து கேட்க வேண்டும்; அத்தனை சுவாரசியமான கதை அது.
புதுமைப்பித்தனின் ஆளுமை ஈர்த்து கதைக் கடலில் போட்டவர்களுள் சுந்தரராமசாமியும் ஒருவர். புதுமைப்பித்தனிடமிருந்த எள்ளல் சுந்தரராமசாமியின் ஆரம்ப காலகட்டக் கதைகளிலும் அவரையறியாமலே குடி கொண் டிருந்ததை விமர்சகர்கள் அனைவரும் சுட்டிக் காட்டியுள்ளனர். புதுமைப்பித்தனின் கதை களைத் தேடி ஊரெங்கும் அலைந்ததன் விளைவாகவோ என்னவோ இவர் அதிகமாக ஊர் சுற்றியிருக்கிறார். ஒரு இடத்தில் இதைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, "பயணம் என்பது திட்டமிடப்பட்டது. ஊர் சுற்றுதல் என்பது திட்டமிடப்படாதது. திட்டமிடப்படாத பயணத் திலேயே அதிகமான அளவு அனுபவங்களைப் பெறமுடிகிறது. நான் நிறைய ஊர் சுற்றி யிருக்கிறேன்." என்றார்.
இவருடைய கதைகளில் வரையறைக்குள் சிக்காத அன்பு கரை புரண்டோடும். குழந்தைகள் பஞ்சு மிட்டாய்க்காரனைப் பார்த்தது போல குதித்துக் கொண்டு ஓடி வருவார்கள் இவரிடம். புதுமைப்பித்தனுக்கு அடுத்து இவருடைய கதைகளில் மட்டுமே குழந்தைகளின் உலகம் வெகு இயல்பாய் விரிந்திருக்கிறது. இவருடைய கதைகளில் உள்ள குழந்தைகள் சுதந்திர மானவை, வளர்ந்த மனிதர்களின் பிடியிலிருந்து தப்ப எத்தனிப்பவை.
மனித வாழ்வில் சுதந்திரம் என்பதை இவரு டைய எழுத்துக்களின் வழியாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேற்கத்திய 'தியரி'களை அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்துபவராக இல்லாமல், அதைத் தமிழ்ப்படுத்தி தமிழ்த் தன்மையுடன் கொடுத்ததில் சுந்தரராமசாமியின் வெற்றி அடங்கியிருக்கிறது. 'ஒரு புளிய மரத்தின் கதை' நாவல் வடிவ உத்தியில் கவனம் செலுத்திய முதல் தமிழ் நாவல். கட்டுக் கோப்பான மொழிநடை, தேவையில்லாத வர்ணனைகளைத் தவிர்த்தல் போன்ற அம்சங் களில் தமிழ் நாவல் உலத்துக்கு முன்னோடியாக இந் நாவல் விளங்குகிறது. |
|
இவருடைய படைப்புகளுள் 'ஜே.ஜே சில குறிப்புகள்' நாவல் அதிக அளவு ஆதரவான, எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மிதமிஞ்சிய புத்திசாலியான ஜே.ஜே என்கிற கதாபாத்திரம் தமிழ்ப் புனைகதை கதா பாத்திரங்களுள் முக்கியமாகக் குறிப் பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியான இவரின் 'குழந்தைகள் ஆண்கள் பெண்கள்' நாவல் கால மாற்றத்தை தனக்குள் அடுக்கி மாறி வரும் மதிப்பீடுகளை அலசி அசை போடுகிறது. எஸ்.ஆர்.எஸ், என்கிற கட்டுப் பெட்டியான மதிப்பீடுகளைத் தூக்கிப் பிடிக்கிற ஒருவரின் பிடியில் சிக்கித் திணறுகிற பாலு, ரமணி, லச்சம் ஆகிய குழந்தைகளின் கதையாக மேற்தோற்றத்தில் தெரிந்தாலும், நீண்ட விவாதங்களைத் தனக்குள் அடக்கியிருக்கும் நாவல். குடும்ப உறவுகளுக்குள் உள்ள எதிர்பார்ப்பு, அதைத் தொடர்ந்த உறவுகளின் வன்முறை ஆகிய வற்றை அலசிய நாவல்.
கட்டுரைகளையும் புனைகதைகளின் தரத் திலேயே எழுத முயன்று வெற்றி பெற்றவர்.
தமிழ்ச் சிற்றிதழ்களில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் 'காலச்சுவடு' பத்திரிகையைத் தோற்றுவித்தது இவர் வாழ்க்கையின் மிக முக்கியமான மைல்கல். தற்போதைய காலச்சுவட்டின் முகத்தை கவனத்தில் கொள்ளாமல் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் சுந்தரராமசாமி காலச்சுவடுக்குத் தந்திருந்த முகம் கவனத் தில் கொள்ள வேண்டியது. படைப்பின் அத்தனை வகைகளுக்கும் சமமான இடம் தருகிற வகையில் சுந்தரராமசாமி ஆசிரியரா கயிருந்த போது காலச்சுவடு பத்திரிகை இயங்கியது.
வாழ்ந்து வரும் மூத்த படைப்பாளிகளுள் சுந்தரராமசாமியும் ஒருவர். கலைஞன் பதிப் பகம் இவருடைய படைப்புலகம் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. தமிழில் வார்த்தை ஜாலம் காட்டுபவர் என்கிற குற்றச் சாட்டைப் பெற்ற சுந்தரராமசாமி, தமிழைத் தட்டுத் தடுமாறி சொந்தமாகக் கற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
சரவணன் |
|
|
|
|
|
|
|