சாக்லேட் கடல் வாசனை தேர்தல் பயத்தில் தமிழ் சினிமா லிட்டில் ஜான் விண்ணுக்கும் மண்ணுக்கும் 'ஆத்தா' இன்னும் பாஸாகல.....
|
|
|
நடிப்பு : மாதவன், ஜோதிகா, மணிவண்ணன், முரளி, ரிச்சா, விவேக், (மலையாள நடிகர்) கல்பனா, வையாபுரி, டெல்லி குமார், கௌதம். இயக்கம் : என். அழகம்பெருமாள் இசை : கார்த்திக்ராஜா
திருநெல்வேலி பின்னணி. 'கல்யாணம் வேண்டாம், படிக்கப் போகிறேன்' என்று பிடிவாதம் பிடிக்கும் ஜோதிகாவுக்கும் சென்னையில் டிஸ்கொதெ- பீர்- ப்ரண்ட்ஸ் என்று ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் மாதவனுக்கும் சம்பந்தம் பேசி முடிக்கிறதுகள் சம்பந்தப்பட்ட பெரிசுகள்.
மாதவனும் ஜோதிகாவும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கல்யாணத்தை நிறுத்திவிட சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
பல்வேறு சதிகளிலும் தப்பிக்கும் திருமணம், கடைசியில் திருமணத்துக்கு முதல் நாள் இரவு சீட்டுக் கச்சேரி சண்டையினால் நின்று போகிறது. இருவரும் அவரவர் பாட்டுக்குப் படிக்கப் போய்விடுகிறார்கள். விட்டுப் போன கல்யாணம் இப்போது இருவருக்குள்ளும் காதலாகத் துளிர்க்கிறது. சம்பந்திகள் இருவரும் வெட்டுக் குத்து கேஸ் என்று கோர்ட் படி ஏறி பிரிந்து நிற்க, இங்கே இருமனங்கள் இணைகின்றன. அதன் பிறகு கதையை இன்னொரு 20 நிமிடங்களுக்கு இஷ்டம்போல இழுத்து... இறுதியில் 'டைட்டில்' சப்தத்துடன் முடிக்கிறார்கள்.
முதல் பாதி கலகலப்பில் தியேட்டருக்கே வயசு திரும்புகிறது.
சீட்டுக் கட்டு விவகாரத்தில் கல்யாணம் நின்றுபோவதற்கு அடிப்படை போதவில்லை. இடைவேளையில் கல்யாணம் நின்றுபோக வேண்டும் என்று யோசித்தது மாதிரி இருக்கிறது. பிரிவதற்குத் திட்டம் போடும் போதே மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பது புரிந்தாலும் தெரிந்துபோன கிளைமாக்ஸை வைத்துக் கொண்டு திரைக்கதையில் விளையாடுவதற்கு சினிமா திரைக்கதையாளர்கள் ஆர். செல்வராஜும் மணிரத்னமும் அழகம்பெருமாளுக்குப் பின்ன ணியில் இருந்திருக்கிறார்கள்.
மாதவனுக்கேற்ற ஜாலியான கதை. மிக இயல்பாக இருக்கிறது. ஜோதிகாவுக்குத் திருநெல்வேலிதான் சொந்த ஊரோ?... அவரை யாரோ படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் அநியாயத்துக்கு அசத்துகிறார். மலையாள நடிகர் முரளி, டெல்லி குமார், கௌதம், ரிச்சா, கல்பனா ஆகியோர் படத்தை மெருகேற்றுகிறார்கள்.
விவேக், மணிவண்ணன் போன்றவர்கள்தான் சினிமா போல இருக்க வேண்டுமே என்று சேர்க்கப்பட்டவர்கள் போல இருக்கிறார்கள். அவர்களின் வழக்கத்தனம் படத்தைவிட்டு விலகி நிற்கிறது. |
|
டும் டும் டும் கொட்டிய பிறகு கார்த்திக் ராஜாவுக்கு ஆவேசம் வந்திருக்கிறது. படம்பார்த்துக் கொண்டிருக்கும் யாரும் ஒரு தடவையாவது பக்கத்து சீட் காரரிடம் 'மியூசிக் யாரு?' என்று கேட்காவிட்டால் அவருக்குக் காதில் பிழை இருக்கிறதென்று அர்த்தம்.
ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷ¥ட்டிங் முடிந்ததும் பிலிமையெல்லாம் ஒருமுறை சுத்தமாகச் சோப்பு போட்டுக் கழுவிவிடுவாரோ?... அத்தனை பளிச்.
வசனங்கள், காட்சி அமைப்புகள், பாடல்கள் அத்தனையிலும் அசாதாரண உழைப்பு தெரிகிறது.
புதிய இயக்குநரை மேளம் கொட்டி வரவேற்கலாம்.
தமிழ்மகன் |
|
|
More
சாக்லேட் கடல் வாசனை தேர்தல் பயத்தில் தமிழ் சினிமா லிட்டில் ஜான் விண்ணுக்கும் மண்ணுக்கும் 'ஆத்தா' இன்னும் பாஸாகல.....
|
|
|
|
|
|
|