காலந்தோறும் மாமியார்கள்! நூற்றாண்டின் மாபெரும் அநீதி மர்ம தேசம் 500 ஆண்டுகளாக வேத முழக்கம் ...! டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு 'பவளக்கொடி' வழங்கிய கோணங்கியின் 'பாழி' மீதான விமர்சனச் சூழல் மன அமைதி தியானம் - ஜக்கி வாசுதேவை முன் வைத்து... தமிழகம் பெற்றெடுத்த தவப்புதல்வர்
|
|
எந்தக் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினம் |
|
- ஜெயராணி|டிசம்பர் 2000| |
|
|
|
கலர்கலராய் மிட்டாய் கொடுத்து, விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தி, கொடியேற்றி, பாட்டுப்பாடி யாருக்காகக் கொண்டாடப்படுகிறது இந்தக் குழந்தைகள் தினம்?
குழந்தைத் தொழிலாளர்கள் முறையும், குழந்தைப் பாலியல் தொழிலாளர் முறையும் இந்தியாவில் எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. UNICEF கணக்கின்படி இந்தியாவில் மட்டும் 75-90 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 14 வயதிற்கு உட்பட்டவர்கள். ஆபத்தான இடங்களில் 14 வயதிற்குட்பட்டவர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது. கட்டாயக் கல்வி என எத்தனையோ சட்டங்கள் இருந்தும்கூட அரசினால் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒரு சதவிகிதம் கூடக் குறைக்க முடியவில்லை.
63.74% குழந்தைகள் வேலைக்கு வந்ததற்குக் காரணமாக வறுமையைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தின் அடுத்த வேலை கஞ்சிக்கு இந்தக் குழந்தைகள் உழைத்தாக வேண்டிய கட்டாயம். வறுமை காரணமாக நிறையக் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் பணத்திற்காக விற்று விடுகிறார்கள். கடன் திருப்பிக் கட்டப்படும் வரை அந்தக் குழந்தைகள் கொத்தடிமைகளைப் போல் நடத்தப்படுகின்றனர் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வருமானத்தை விடவும் வாங்கப்படும் கடனின் வட்டி அதிகம் என்றால், மீண்டும் கடன், மீண்டும் வேலை என இந்தக் கொத்தடிமைத்தனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்று 53 வருடங்கள் முடிந்து விட்டது. இன்னும் கோடிக் கணக்கான குழந்தைகளை, அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் கொத்தடிமைகளாக விட்டு வைத்திருக்கிறோம். 73 மில்லியன் குழந்தைகள் தங்களின் கல்வியுரிமையை இழந்து நிற்கிறார்கள்.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், ஏதோ உற்பத்திப் பொருட்கள் போல் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மேற்காசிய நாடுகளுக்கு 2-5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். அங்கு நடக்கும் ஒட்டகப் பந்தயங்கள் மிகவும் பிரபலமானவை. ஒட்டகங்களோடு சேர்த்து இந்தக் குழந்தைகள் கயிரால் கட்டப்படுகின்றனர். ஒட்டகங்கள் ஓடும்பொழுது குழந்தைகளின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறு இறுக ஆரம்பிக்கும். வலி தாங்கமுடியாமல் இந்தக் குழந்தைகள் கத்தி அழ அழ ஒட்டகங்கள் வேகமாக ஓடத் துவங்கும். பந்தயம் முடியும்போது பெரும்பாலான குழந்தைகள் இறந்து போய்விடும். 1997 செப்டம்பரில் Free the children என்ற அமைப்பு சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவிருந்த 38 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் குழந்தைகள் பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர். பதினெட்டு வயதிற்குட்பட்டவர்களில் ஐந்து சிறுமிகளுக்கு ஒருவரும், 7 சிறுவர்களுக்கு ஒருவரும் இத்தகைய உடல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகின்றனர் எனப் புள்ளி விபரங்கள் கூறுகின்றது. யாரும் கவனிக்கத் தவறிய இந்தக் குற்றம் வருந்தத்தக்க வகையில் நாளுக்கு நாள் பெருகி வருவதுடன் 85% பதிவு செய்யப்படுவதில்லை. உலகம் முழுவதும் 250 மில்லியன் குழந்தைகள் சீரழிக்கப்படுகின்றனர். அதில் 52.5 மில்லியன் குழந்தைகள் நம் தாய்த் திருநாட்டிற்குச் சொந்தமானவர்கள்.
UNICEF புள்ளி விவரப்படி 70000 - 1 லட்சம் குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள். ஒவ்வொரு இரவும் குறைந்தது பத்து ஆண்களை எதிர்கொள்கின்றனர். இதில் பெரும்பாலனவர்கள் குடும்பக் கடன் காரணமாகப் பாலியல் தொழிலாளர்களிடம் விற்கப்பட்டவர்கள். பாலியல் தொழிலாளர்களை, ஆண்கள் பெரிதும் சிறுமிகளையே விரும்புவதால் குழந்தைப் பாலியல் தொழில்முறை கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் பெருகிக் கொண்டிருப்பதாக உலகக் குழந்தைகள் அமைப்பின் இந்தியக் கிளை அறிவித்துள்ளது. இது தவிர, பெற்றோரின் கொடுமை, அலட்சியம் காரணமாக 4 லட்சம் குழந்தைகள் ‘தெருக் குழந்தைகளாக’ இந்தியாவின் பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இப்போது சொல்வோம், குழந்தைகள் தினம் என்பது யாருக்கு? 1989-ஆம் ஆண்டு ஐ.நா. சபை அறிவித்தபடி,
வாழ்வதற்கான உரிமை. சுகாதாரம், ஆரோக்கியம், பெயர் மற்றும் குடியுரிமை. சீரழிவு, வன்முறை, அலட்சியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புரிமை. கல்வி மூலம் பெறும் வளர்ச்சியுரிமை. ஆரம்ப குழந்தைக் காப்புரிமை, ஓய்வு, பொழுதுபோக்கு உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம். இவையெல்லாம் குழந்தைகளின் உரிமைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கோடிக் கணக்கில் குவிந்து கிடக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் இதில் ஒன்றைக்கூடப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அடிப்படைக் கல்வியைக் கட்டாயக் கல்வியாக்குவதில் எத்தனைச் சிக்கல்கள்? குழந்தைத் தொழிலாளர் மசோதா 1986-ஐ அமல்படுத்த, 1994—ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. அந்தச் செயல் திட்டத்தின்படி தொழிற்சாலைகளில் ஆபத்தான நிலையில் பணிபுரியும் 2 மில்லியன் குழந்தைகளை வருகின்ற 2000-த்திற்குள் மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன?
அரசுத் திட்டங்கள் எல்லாம் பலம் மிகுந்தவைதான். அதைச் செயல்படுத்தத்தான் ஆளில்லாமல் இருக்கிறது. கட்டாயக் கல்வி முறை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டாலே ஓரளவு மாற்றங்களைக் கொண்டு வரலாம். இந்திய அரசு அடிப்படைக் கல்விக்கென்று ஒதுக்கும் நிதி மிகக் குறைவானதாக இருக்கிறது. அதே சமயம் உயர்கல்விக்கு அதிகப்பட்ச நிதியை ஒதுக்குகிறது. அடிப்படைக் கல்வியே இல்லாமல் பெரும்பாலான குழந்தைகள் புறக்கணிக்கப்படும்பொழுது உயர்கல்வியில் கவனம் செலுத்துவதில் என்ன பயன்?
அடிப்படைக் கல்வி கட்டாயமாக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளக் கண்முன் நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன கேரளாவும், ஸ்ரீலங்காவும். கேரள மாநிலம் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்தற்கென்று எந்தப் பிரத்யேக முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கியது, தீவிரப்படுத்தியது. மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதியை விடவும் அதிக நிதியை அதாவது 11.5 சதவிகிதம் ஆரம்பக் கல்விக்கென ஒதுக்குகிறது. கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டாமல் பள்ளிக் கூடங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. அதனாலேயே கேரளாவில் கற்றோர் சதவிகிதமும் கூடியது. மேலும் குழந்தைத் தொழிலாளர் முறையையும் பெருமளவில் குறைக்க முடிந்தது. கேரளாவில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர்களிலும் பெரும்பாலானோர் வெளி மாநிலங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள்தான். அதே நிலைதான் இலங்கையிலும்.
சட்டப் பிரிவு 24, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பணியிலமர்த்துவது குற்றம் என்கிறது. சட்டப் பிரிவு 39 பொருளாதாரத் தேவைக்காக வயதிற்கு ஒத்துவராத வேலையை எந்தக் குடிமக்களும் பார்க்கக் கூடாது என்றும் குழந்தைகள் சீரழிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்துகிறது. |
|
கொத்தடிமைத் தொழிலாளர் முறைச் சட்டம் 1976, எல்லாக் கொத்தடிமைத் தொழிலாளர்களையும் விடுவித்து, அவர்களின் தனிப்பட்ட கடன்களையும் ரத்து செய்கிறது. மேலும் புதுக் கொத்தடிமைகளை உருவாக்கும் பத்திர ஒப்பந்தத்திற்குத் தடை விதித்து எல்லாக் கொத்தடிமைத் தொழிலாளர்களின் பொருளாதார மறுவாழ்விற்கும் வழிசெய்ய, மாநில அரசை வலியுறுத்துகிறது.
இப்படியாக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன சும்மாவே. அதனாலேயே வாழ்வின் எந்த உரிமையையும் பெறாத, பயனையும் அடையாத, குழந்தைத் தொழிலாளர்களையும், குழந்தைப் பருவத்திலேயே பாலியல் ரீதியான வன்முறைக்குத் தயார் செய்வதில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஏதோ, சந்தோஷமாக இருக்கும் கொஞ்சம் குழந்தைகளுக்காகத் தானோ இந்தக் குழந்தைகள் தினம்? பிறந்ததிலிருந்து வறுமையும், வன்முறையும் கடுமையான உழைப்புமாக மட்டுமே பழக்கப்பட்ட குழந்தைகளை இந்தத் தேசியக் குழந்தைகள் தினம் நினைத்துப் பார்க்கிறதா? திட்டங்கள் திட்டங்களாகவும், சட்டங்கள் சட்டங்களாகவும் இருக்கும் வரை கோடிக் கணக்கில் பலியாகிக் கொண்டிருக்கும் குழந்தைகளை மீட்டெடுப்பது இயலாத காரியமாகவே படுகிறது.
நம் நாட்டில்தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். குழந்தைகள் எல்லோரும் தொழிலாளர்களாகி வேலைக்குப் போகின்றனர். ஆனால் இளைஞர்களின் தாரக மந்திரமாக வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது.
குழந்தைகள் போல் வீட்டிலிருக்கும் இளைஞர்கள், இளைஞர்கள் போல் வேலைக்குப் போகும் குழந்தைகள். எப்படி உருப்படும் இந்த நாடு? எல்லாமே முரணாக, தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை பாலியல் தொழிலாளர்கள் ஒழிப்பிற்கென்று உடனடிச் செயல் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனில் ...
அதுவரை நேரு அவர்கள் வருத்தப்பட்டாலும் படட்டும், தயவு செய்து குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டாமே!
ஜெயராணி. |
|
|
More
காலந்தோறும் மாமியார்கள்! நூற்றாண்டின் மாபெரும் அநீதி மர்ம தேசம் 500 ஆண்டுகளாக வேத முழக்கம் ...! டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு 'பவளக்கொடி' வழங்கிய கோணங்கியின் 'பாழி' மீதான விமர்சனச் சூழல் மன அமைதி தியானம் - ஜக்கி வாசுதேவை முன் வைத்து... தமிழகம் பெற்றெடுத்த தவப்புதல்வர்
|
|
|
|
|
|
|