பொங்கலோ பொங்கல் 'புதுமைப்பித்'தனின் அழகான கிறுக்கல்கள் மீண்டும் வந்த ந(ம்பிக்)கைக் கடை வழக்கு சொற்கள் - தடைபடாமல் தமிழ் வளர மதச்சார்பின்மை சனநாயகம் வேண்டும் டிசம்பர் 6 - டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பழமொழி என்றுமே அழியப் போவதில்லை அடிமைத்தனம் இன்றைய தேவை தன்னலம் கருதாத் தொண்டுள்ளம் கார்த்திகை தீபங்கள் ஒளிர்கின்றன ரமலான் நோன்பும் நீரிழிவு நோயும்
|
|
விருது விஷ(ம)யம் |
|
- |ஜனவரி 2001| |
|
|
|
வருடம் 2020 - டிசெம்பர் 15
நவம்பர் மாத ஆரம்பத்தில் தொடங்கிய சங்கீத சீசன் முன்றில் ஒரு பகுதி முடிந்திருந்தது. பர பர பட்டுப் புடவைகள் ஒருபுறம். வள வள அரட்டைக் கச்சேரிகள் மறுபுறம். சென்னை ம்யூசிக் அகாடமியைச் சுற்றி, பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரே சங்கீத சமாசாரம்தான்..
இளநிலை வித்வான்களும், வித்வாம்சினிகளும் ஒரு சுற்று வந்த பிறகு, சற்றே சீனியர், மற்றும் 1-1/2 கட்டையிலிருந்து 1/2 கட்டைக்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் முதுநிலை வித்வான்களின் கச்சேரிகள் பக்கத்துக்குப் பக்கம் ரசிக மஹா ஜனங்களை இசை வெள்ளத்தில் முழ்க வைத்துக் கொண்டிருந்தன.
இந்த வெள்ளத்துக்கு நடுவில் வங்கக்கடலில் உருவாகி, ஆந்திராவில் மையம் கொண்டு, சென்னையை நோக்கி நகர்ந்து, நாகப்பட்டினத்தை நாசமாக்கவிருக்கும் புயல் சின்னம், பெருமழையை ஏற்படுத்தி, சிங்காரச் சென்னையாகவிருக்கும் நகரை ஹதாஹதம் (நிரம்ப நாட்களாக யாருமே உபயோகிக்காமல், புராதனத்தை எட்டிக்கொண்டிருக்கும் பதம்) செய்து கொண்டிருந்தது.
யாரும் கவலைப்பட்டதுபோல தெரியவில்லை.
வாராந்திர சஞ்சிகைகளும் ( இன்றைய எழுத்தாளர்களின் பாணி, 50களின் எழுத்தாளர்களை ஒட்டியதாக இருக்கிறது ), தினப்பத்திரிகைகளும், அவரவர் ரசனைக்கு ஏற்றவாறு, சங்கீத விமரிசகர்களையும், விமரிசகராகவிரும்பிகளையும், கச்சேரிகளுக்கு துரத்தி பக்கத்துக்குப் பக்கம், பத்தி பத்தியாக எழுதித்தள்ளி, இலக்கியப்புரட்சியையும், சங்கீத, நாட்டிய கலைகளுக்கு சேவையையும் செய்து கொண்டிருந்தன.
ஆனந்த விகடனில், நந்துரு (நாரதர் + தும்புருவின் சுருக்கம்), வழக்கமான ஹாஸய நயத்தோடு, அவருக்கே உரித்தான ட்ரேட் மார்க் வார்த்தைப் பிரயோகங்களோடு, தரமான விமரிசனங்களை வழங்கிக் கொண்டிருந்தார்.
இந்த வாரப்பதிப்பில், ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றியது அவரது வ்யாஸம். அகாடமி வாசலில் ஒரு சுவரொட்டியைப் பார்த்தாராம்..
அதில், யுவகலா ப்ரவீண உள்ளிட்ட இத்யாதி இத்யாதி விருது சங்கிலித்தொடரின் முடிவில், வித்வானின் சுருக்கமான இரண்டெழுத்துப் பெயர்... ஒரு பேச்சுக்கு, ரகு என்று வைத்துக் கொள்வோமே...
உள்ளே சென்று பார்த்தால், நல்ல ஒரு கிழக்கலா ப்ரவீணர், நடுநாயகமாக உட்கார்ந்துகொண்டு 1/2 கட்டைக்கு பக்கவாத்தியகாரர்களை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தாராம்... மற்ற விவரங்களை அவரது எழுத்து முலமாகவே பார்க்கலாமே..
இந்த ஸபாக்காரர்கள், விழுந்து விழுந்து, விருதுகளை சகட்டுமேனிக்கு அள்ளி வழங்குகிறார்களே... இவர்கள் விவரத்தோடுதான் இந்த விருதுகளைத் தருகிறார்களா - அல்லது, மற்றவர்களெல்லாம் தருகிறார்களே.. நாமும் ஏதேனும் வித்தியாசமாக செய்யவேண்டுமென்று செய்கிறார்களா என்று தெரியவில்லை....
உண்மையைச் சொல்லப்போனால், நம்முர்காரர்களுக்கு, (அதாவது இந்தியர்களுக்கு) குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு விருதுகளிலும், பட்டங்களிலும் இருக்கிற மோகம், வேறெந்த நாட்டவர்க்கும் இருப்பதாக தெரியவில்லை...
அந்த காலத்தில், ஒரு பாரதி பட்டமோ அல்லது காயக சிகாமணி விருதோ, பொறுக்கியெடுத்து, அபூர்வமாக யாராவது ஒரிருவருக்கு கொடுப்பார்கள்.. அவர்கள் நிச்சயமாக அவ்விருதுக்கு முற்றிலும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள்... தவிர, அப்பேர்ப்பட்ட மஹானுபாவர்கள்கூட, அவ்விருதுகளைப் போட்டுக்கொள்வதற்குக் கூச்சப்படுவார்கள்.
இப்போது என்னடாவென்றால், சபாவுக்கு சபா போட்டி போட்டுக்கொண்டு, வருடா வருடம், சங்கீத சாம்ராட், சங்கீத கலா கோவித, கானகலா நிபுண, யுவ கலா ப்ரவீண (பாரதி), ந்ருத்ய மணி என்று, ஒரு தொழிற்சாலை வேகத்தில் விருது/பட்ட உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்...
சீசனுக்கு சீசன் புது உருப்படிகள் பாடப்படுகின்றனவோ இல்லையோ, புது சபாக்களும், புது விருதுகளும் உற்பத்தியாவதற்கு, ஒன்றும் குறைவில்லை...
எல்லாவித விஷயங்களிலும், மேற்கத்திய கலாச்சாரத்தை, அசுர வேகத்தில் எட்டிப் பிடிக்கும் நம்மவர்கள், விருதுகள் விஷயத்திலும் அவர்களை காப்பியடித்தால் என்ன? அவர்களும், ஆஸகர், எம்மி, அது, இதுவென்று, பல விருதுகளை வருடா வருடம் தருகிறார்கள்...
எனக்குத்தெரிந்து, நடிப்பிசைத் திலகம் மார்லன் ப்ராண்டோ என்றோ, இளைய திலகம் டாம் க்ருஸ என்றோ, ஸவர அல்லது ஹார்மனி பூஷணி பார்பரா ஸட்ரைஸண்ட் என்றோ எவருக்கும் பட்டம் கொடுப்பதோ - அப்படியே கொடுத்தாலும், போட்டுக்கொள்வதோ கிடையாதே... (சரி..சரி.. இவ்விருதுகளின் ஆங்கில சமம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்...).
என்று தணியும் இந்த விருதெனும் மோகம்..? |
|
சரி ஐயா விருதுகளைக் கொடுக்கட்டும்.... அவ்விருதுகளுக்கு ஒரு சிரஞ்சீவத்துவம் வேண்டாமா? சினிமாவாகட்டும், அரசியலாகட்டும், இசையுலகமாகட்டும், எங்கு போனாலும், இளைய, புதிய, யுவ போன்ற அடைமொழிகள் வேறு.. என்ன.. இவர்கள் என்றைக்கும் இளையவர்களாகவோ, புதியவர்களாகவோ அல்லது யுவர்களாகவோ இருந்துவிடப் போகிறார்களா..?
இன்றைக்கு நான் போன கச்சேரிகூட அப்படித்தான். அகாடமி வாசலில் அரை கிலோமீட்டர் நீள விருது வாக்கியங்களுக்குப் பிறகு வந்த இரெண்டெழுத்து பாகவதருடையது. உள்ளேபோய் உட்கார்ந்தால், கிழக்கலா ப்ரவீணராக அந்த பாகவதர். அவ்வப்போது சேர்ந்து கொள்ளும் ஸருதியோடு, ஆயிரம் விதமான அகட விகடங்கள்......
டீ.வீ.யிலாவது ஒலியைக் குறைத்துக் கொள்ளலாம்... இங்கு அதுவும் சாத்தியமில்லை... அக்கடாவென்று, விச்ராந்தியாக ஒரு நல்ல கேட்டுவிட்டு வரலாமென்றால், நம் தலையெழுத்து சரியில்லை ஸ்வாமீ...
இப்படியாக சங்கீத விமரிசனமாகஇருக்கவேண்டிய வ்யாஸம், விருது விமரிசனமாக தடம் புரண்டு கொண்டிருந்தது. என்ன சொல்வது... என்ன இருந்தாலும், நம்முடைய அபிமான சங்கீத வித்வான்/வித்வாம்சினிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடிய, விமர்சன திலகம், நந்துருவின் எழுத்தல்லவா..?
எனக்கோ, நிரம்ப நாட்களாக எழுத்தாளனாகவேண்டுமென்கிற ஆசை. எதைப்பற்றி என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, தற்செயலாக, நந்துருவின் வ்யாஸத்தைப் படிக்க நேர்ந்ததா.. சரி, இதைப்பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியதா.. அந்த எண்ணத்தில் தோன்றிய எழுத்துப் பிரசவம்/ப்ரவேசம்தான் இது.
ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்... நந்துருவின் கேள்விகள் உங்களில் யாருக்குமே உதிக்கவில்லை..? நியாயமாகத் தெரியவில்லை...? அவருடைய எழுத்தில், ஏதோ கொஞ்சம் சமுகப் ப்ரக்ஞை கலந்திருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது... இப்படி இருக்குமோ..?
விருதுகள்/பட்டங்கள் குறைந்தால், சுவரொட்டி வாக்கியங்களின் நீளம் குறையும்.
அதனால், அவற்றில் உபயோகப்படுத்தக்கூடிய மசியும் குறையும்.
சுவரொட்டிகளின் பரிமாணமே சுருங்கி, சிறிய சுவரொட்டிகளாகலாம்.
மேலும், இந்த விருதுகள் இல்லாததால், சுவரொட்டிகளில் படிப்பதற்கு சுவாரசியமான விஷயங்களே இல்லாது போகலாம்.
அதனால், சுவரொட்டிகள் அடிப்பதே குறையலாம்..
அப்படி, சுவரொட்டிகள் அடிப்பது குறைந்தால், மாடுகளும், கழுதைகளும், தின்பதற்கு, போதிய சுவரொட்டிகள் இல்லாததால், அவை சாலைகளுக்கு வருவதையே தவிர்க்கலாம்.
யார் கண்டது..? சென்னை நகரம் உண்மையாகவே, சிங்காரச் சென்னையாகிவிடலாம்..
நீங்கள், நம்பினால் நம்புங்கள்.. விருதுகள் எதுவும் இல்லாத விருதாவாக இருப்பதால், நான் இதை எழுதவில்லை... சத்தியமாக சமுக அக்கறையோடுதான் எழுதினேன்.
மேலும் எழுத விஷயம் இல்லாததால், முற்றுப்புள்ளி. |
|
|
More
பொங்கலோ பொங்கல் 'புதுமைப்பித்'தனின் அழகான கிறுக்கல்கள் மீண்டும் வந்த ந(ம்பிக்)கைக் கடை வழக்கு சொற்கள் - தடைபடாமல் தமிழ் வளர மதச்சார்பின்மை சனநாயகம் வேண்டும் டிசம்பர் 6 - டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பழமொழி என்றுமே அழியப் போவதில்லை அடிமைத்தனம் இன்றைய தேவை தன்னலம் கருதாத் தொண்டுள்ளம் கார்த்திகை தீபங்கள் ஒளிர்கின்றன ரமலான் நோன்பும் நீரிழிவு நோயும்
|
|
|
|
|
|
|
|