தஞ்சைப் பெரிய கோயில் சித்திரங்கள்
|
|
|
சிபி பல காலம் ஆட்சி செய்த பின் தெய்வ நலம் பெற்று முக்தி அடைய வழி யாதென தனது குல குருவிடம் கேட்டார். அவர் சிவபிரான் உறையும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புடைய சிவத்தல யாத்திரையை மேற்கொள்ளச் சொன்னார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலான மூவகைச் சிறப்புகளோடு சூரியக்கிரக தோஷ நிவாரணத் தலமாகவும் சிறந்து விளங்கும் திருத்தலமே பரிதியப்பர் கோயில் என வழங்கப் பெறும் திருப்பரிதி நியமம் ஆகும்.
அடியார் பலர் தமக்கும், தம் உறவினர்கட்கும் ஏற்பட்ட உடற்பிணி நோய் அகலவும், சித்தபேதம் உடையோர் அப் பிணி நீங்கப் பெறவும் இத் தலத்திற்கு வந்து தீர்த்தக் குளங்களில் நீராடி அருள்மிகு பரிதியப்பரை வணங்கி இத் தலத்தில் சில நாள்கள் தங்கியிருந்து நலம் பெற்றுச் செல்கின்றனர். மேலும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது முதலான ஒன்பது கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைப் போக்கிக் கொள்ள விரும்புவோர், அதிலும் குறிப்பாக ஒன்பது கிரகங்களின் தலைமைக் கிரகமாகவும், தந்தைக்குரிய கிரகமாகவும் அமையப் பெற்றுள்ள சூரிய கிரக தோஷத்தை நீக்கிக் கொள்ள விரும்புவோரும் இத் தலத்திற்கு வந்து சிறப்பு வழிபாடு செய்து கிரகதோஷ நிவாரணம் பெற்றுச் செல்கின்றனர்.
பரிதியப்பர் கோயில் எனத் தற்காலத்தில் அழைக்கப்பெறும் இத் தலம் ‘திருப்பரிதி நியமம்’ - எனத் தேவார ஆசிரியர்களால் குறிப்பிட்டுப் பாடப் பெற்றுள்ளது. பரிதி- சூரியன், நியமம்- கோயில், முன்பொரு காலத்தில் சூரியன் கோயிலாக இருந்து பின்னாளில் சிவாலயமாக மாறியிருக்கலாம் எனக் கூறப் பெறுகின்றது.
பரிதியப்பர் கோயில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சை நகரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பேருந்து வழித் தடத்தில் ‘மேலவளூர்’ எனும் இடத்திலிருந்து கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இத் தலம் அமைந்துள்ளது.
தேவாரத் தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் அத் தலத்தில் உள்ள இறைவனின் பெயர், அத் தலத்தை வழிபட்டோர் பெயர், அத் தல விருட்சத்தின் பெயர் முதலான காரணப் பெயர்களால் அமையப் பெற்றுள்ளமையைக் காணலாம். அவ்வகையில் நவக்கிரகங்களுள் தலைமைக் கிரகமான சூரியனால் வழிபடப் பெற்ற இத் திருத்தலம் சூரியனின் வேறு பெயர்களான பரிதி, ரவி ஆகியவற்றுடன் தொடர்புடையதாக திருப்பரிதி நியமம், பரிதி வனம், பரிதிக்காடு, பரிதி கேசுவரம், பரிதியப்பர் கோயில், ரவியாரண்யம் எனும் பெயர்களால் குறிப்பிடப் பெற்றுள்ளது. முற்காலத்தில் அரச மரங்கள் நிறைந்து காணப் பெற்றமையினால் இத் தலம் அரசவனம் எனவும் முல்லைக் கொடிகள் நிறைந்து படர்ந்திருந்ததால் முல்லை வனம், முல்லைக்காடு எனவும் வழங்கப் பெற்றுள்ளது. ஞான சம்பந்தரும் தம் பதிகத்தில் பைங்கொடி முல்லைப் படர் புறவில் ‘பரிதிந் நியமமே’ எனக் குறிப்பிட்டுள்ளார். பரமவனம், மறைக்காடு எனவும் இத் தலம் சூட்டப் பெற்றுள்ளது.
நடனத் தலங்களில் ஒன்று
சிவபெருமானுடைய மாகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்துள் ஒன்று நடராச மூர்த்தமாகும். அவ்வாறு சிவபெருமான் விரும்பி நடமாடிய திருத்தலங்கள் பன்னிரெண்டு எனவும் அப் பன்னிரெண்டுள் இத் தலமும் ஒன்றாயமைந்து சிவன் நடனத் தலமாக விளங்குகிறது.
தில்லை, கழனி, கச்சி, மதுரை, வேய்க்காடு, நந்திமலை, திருவெண்காடு, திருவாலங்காடு, திருவையாறு, திருவண்ணாமலை, வில்வ வனம், பரிதிவனம் ஆகியன நடனத் திருத்தலங்கள்.
சூரியத் தலங்கள் ஏழனுள் ஒன்று
சிவபெருமானைச் சூரியன் பூசித்துப் பேறு பெற்ற தேவாரத் தலங்கள் ஏழு ஆகும். அவற்றுள் இப் பரிதி நியமமும் ஒன்று.
திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருக்குடந்தைக் கீழ் கோட்டம், திருப்பரிதி நியமம், திருத்தெனிச்சேரி, திருப்புறவார் பனங்காட்டூர், திருநெல்லிக்கா முதலான ஏழு தலங்கள் சூரியனால் பூசிக்கப் பெற்றவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றளவும் இவ்வேழு தலங்களில் ஆண்டுதோறும் சில குறிப்பிட்ட நாள்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலஸ்தானங்களின் மீது விழுவதனைச் சூரிய பூசை நாள்களாக அன்பர்கள் கருதிப் போற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
தேவாரம் பாடிய மூவருள் திருஞானசம்பந்தரால் மட்டும் பாடப் பெற்ற பதிகத்தினை முழுமையாக உடைய திருத்தலங்கள் திருநெய்வாயில் முதலாகத் திருவிடைவாய் ஈறாக நூற்றுப் பதினொன்று ஆகும். அவற்றுள் திருப்பரிதி நியமமும் ஒன்றாகும்.
தலமூர்த்தியாய் அமைந்துள்ள சிவலிங்கம் பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர், பரிதீசர் என அழைக்கப் பெறுகின்றார். சுயம்புலிங்கம் எனக் கூறப்பெறும் இம் மூலமூர்த்தியை வணங்கிப் பரிதி, பிரமசர்மா, சிபிச் சக்கரவர்த்தி, சேர நாட்டு அமைச்சர் பதுமலோசனன், தனர்ந்தன் முதலானோர் பேறு பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது.
சூரிய பூசை
பரிதி எனப் பெறும் சூரியன் தன் கொடிய குன்ம நோயானது நீக்கம் பெற வேண்டி இத் தலத்திற்கு வந்து தன் பெயரால் சூரிய தீர்த்தத்தினை உண்டாக்கி அக் குளத்தில் நீராடி, இச் சிவலிங்கத்தைத் தாபித்துப் பூசனையியற்றி வழிபட்டுத் தன் நோய் நீங்கி நலம் பெற்றான் என்பது புராண வரலாறு. இவ் வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் பங்குனித் திங்கள் 17, 18, 19 ஆகிய நாள்களில் சூரிய ஒளி இச் சிவலிங்கத்தின் மீது படியுமாறு ஆலய அமைப்பு அமைக்கப் பெற்றுள்ளது. சூரிய பூசை நாள்களில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு நடத்துகின்றனர்.
சுவாமி சன்னதிகள்
கோயிலின் உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் திருமடைப்பள்ளியும் அதனையடுத்துத் தீர்த்தக் கிணறும் தெற்கு நோக்கி தென்முகக் கடவுள் சன்னதியும், கர்ப்பக் கிரகத்தின் நேர் மேற்கில் திருமால், அனுமன், முருகன் சன்னதிகளும், வடமேற்கு மூலையில் மகாலெட்சுமி சன்னதியும் நேர் வடக்கில் சண்டிகேஸ்வரர், துர்க்கை சன்னதிகளும் அமைந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து மணிவாசகர், சிவகாமி உடனான நடராசர், சன்னதியும் அடுத்து வைரவர் நவக்கிரகச் சன்னதிகளும் அமைந்துள்ளன.
கருப்பக்கிரக முன் மகாமண்டபத்தில் சுதையாலான துவார பாலகர்கள் உள்ளனர். அடுத்துத் துவார கணபதி சன்னதியும் உள்ளது. சன்னதியின் எதிரில் நந்தி பலி பீடங்களும் அவற்றையொட்டி சூரிய பகவான் சுவாமியை வழிபடும் தோற்றத்தில் அமைந்து காணப் பெறுகிறார். மகா மண்டபத்தின் வலதுபுறம் சோமாஸ்கந்தர் முதலான உற்சவமூர்த்தி சன்னதிகளும் எதிர்ப்புறம் நால்வர் சன்னதியும் அமைந்துள்ளது.
மங்களாம்பிகை மங்கள நாயகி முல்லை வன சுந்தரி வழங்கப் பெறும் இத் தல அம்பிகை அருள் முழுத் தோற்றத்துடன் அன்பர்கட்கு நாள்தோறும் அருள்பாலித்து வருகிறார்.
நடராசர், முருகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளது.
தீர்த்தங்கள்
1. சூரியபுட்கரணி (சூரியனால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தம்) 2. சந்திரபுட்கரணி (நீராடுவோர் கண் நோய் அகன்று சித்தபேதம் - நீங்கப் பெறுவர்) 3. தேவபுட்கரணி
பிதுர் தோசப் பரிகாரம் மற்றும் சிறப்புப் பிரார்த்தனை
சூரிய பகவான் தட்ச யாகத்தில் சிவபெருமானுடைய அனுமதி இல்லாமல் கலந்து கொண்டதற்காக ஸ்ரீ அகோர வீர பத்திரரால் தண்டிக்கப்பட்டு அந்தத் தோஷ நிவர்த்திக்காக 16 சிவத்தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தோசம் நிவர்த்தியடைந்துள்ளார். (சங்கரன் கோயில், தலை ஞாயிறு, சென்னை அருகில் உள்ள ஞாயிறு என்ற ஊர். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோயில், திருமங்கலக்குடி, வட இந்தியாவில் உள்ள கொனார்க் தலங்கள்)
சூரிய பகவானுக்குச் சிவ நிந்தனைகள் ஏற்பட்டு அதற்குப் பிராயச்சித்தம் ஏற்பட்டதால் இத் திருக்கோயிலில் ஜாதக ரீதியாகப் பிதுர்காரன் சூரியன், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய பாவக் கிரகங்களுடன் இணைந்தோ அல்லது மேற்படி கிரகங்களால் பார்வை பட்டோ இருந்தால் அந்த ஜாதகருக்கோ அல்லது அந்தப் பரம்பரையினருக்கோ ஏற்படும் பிதுர்தோஷம் இங்கு பிரார்த்தனை செய்வதால் நிவர்த்தியாகிறது.
மேலும் பிதுர்காரனாகிய சூரியன் கெட்டிருந்தாலும் மேற்படிப் பரம்பரையில் ஏற்படும் பிதுர் தர்ப்பணதோசம் இங்கு பிரார்த்தனை செய்வதால் நிவர்த்தி ஏற்படுகிறது.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சூரியதிசை நடைமுறையில் உள்ளவர்களுக்கும் சிம்மம் லக்னத்தில் சிம்மம் ராசியில் பிறந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களும், சூரியன் உச்சம் பெற்றவர்களும் (சித்திரை மாதம் பிறந்தவர்கள்), சூரியன் ஆட்சி பெற்றவர்களும் (ஆவணி மாதம் பிறந்தவர்கள்), சூரியன் நீசம் பெற்றவர்களும் (ஐப்பசி மாதம் பிறந்தவர்கள்) மேலும் பிரதி தமிழ் மாதம் முதல் தேதியில் பிறந்தவர்களும் இத் தலத்தில் எழுந்தருளி உள்ள விசேஷ மூர்த்திகளாகிய சூரிய பகவானையும், சிவ பெருமானையும் பிரதித் தமிழ் மாதம் சுக்ல பட்சம் வளர்பிறையில் வருகின்ற முதல் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடலாம். |
|
பெருமையும் தவம் இயற்றியவரும்
உலகத்தில் உயிர்த் தெய்வமான சூரியனும், கங்கையும் வணங்கிச் சுயம்பு மூர்த்தியின் பெருமை சொல்ல முடியாத ஒன்று ஸ்ரீ மார்க்கண்டேயர் இந்தப் பரிதி §க்ஷத்திரத்தில் ஸ்திரமாகத் தங்கித் தவம் இயற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிதுர்தோசம் பரிகாரம்.
நிவர்த்தி
ஸ்ரீகாகபுஜஸ்டர் நாடியிலும் ஸ்ரீ அகத்தியர் நாடியிலும் ஸ்ரீ சப்தரிஷி நாடியிலும் ஸ்ரீ மீனாட்சி நாடியிலும் - இத் திருக்கோயில் பரிகாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சூரிய குல மன்னன் சிபிச் சக்கரவர்த்தி வழிபட்ட வரலாறு
சிபி என்ற மன்னன் ஆட்சி செய்த புகார் காவிரிப் பூம்பட்டினம் ஆகும். சிபி பல காலம் ஆட்சி செய்த பின் தெய்வ நலம் பெற்று முக்தி அடைய வழி யாதென தனது குல குருவிடம் கேட்டார். அவர் சிவபிரான் உறையும் மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புடைய சிவத்தல யாத்திரையை மேற்கொள்ளச் சொன்னார். சிபி மன்னனும் தன் குல குருவின் அறிவுரைப்படி தன் ஆட்சிப் பொறுப்பை மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டுத் தல யாத்திரையை மேற்கொண்டான்.
இத் தல யாத்திரையின் வழி கிடைக்காது அன்று இருந்த இப் பரிதி நியமத்தில் கோடை வெப்பத்தால் களைப்புற்று சிபி சற்று இளைப்பாறினான். அது சமயம் மன்னனது சேவகன் குதிரைக்குப் புல் வேண்டி மண்ணைத் தோண்டி எடுக்க முற்பட்டான். அப்போது புல் தோண்டிய கருவி சூரியன் உருவாக்கிப் பூமிக்குள் இருந்த மூல லிங்கத்தில் பட்டு ரத்தம் பீறிட்டது.
இதனை அரசன் கண்டு அவ்விடத்தைத் தோண்டி சூரிய லிங்கத்தைக் கண்டு மகிழ்ந்தான். உடன் அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் முதலியன செய்வித்து வழிபட்டு நின்றான். அப்போது குருவின் மொழியாக (அசரீரியாக) இத் தலச் சிறப்பினை உணர்ந்தான். பின் இப் பெருமானுக்கு அழகிய கோயில் ஒன்றைக் கட்டி நித்திய பூசை விழாக்கள் நடத்த ஆவன செய்து பெரும் பேறு பெற்றான். சூரியனால் தலத்தின் சிறப்பினை உணர்ந்தான். பின் இப் பெருமானுக்கு அழகிய கோயில் ஒன்றைக் கட்டி நித்திய பூசை விழாக்கள் நடத்த ஆவன செய்து பெரும் பேறு பெற்றான். சூரியனால் உருவாக்கிப் பூசிக்கப் பெற்று பூமிக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தைச் சூரிய குலத்து மன்னன் வெளிப்படுத்தினான்.
பருந்தும் கிளியும் முக்தி பெற்றது, வணிகன் தனதத்தன் நற்கதி பெற்றது, மந்திரிகுமாரனது பாதகம் தீர்ந்தது எனப் பல வரலாறும் இத் தலம் பற்றிக் கூறப்படுகிறது.
சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற மார்க்கண்டேயர், வேதங்களை வகுத்த வியாசர் மற்றும் கபிலர் முதலியோர் இத் தலத்துப் பெருமாளை வழிபட்டு உய்ந்தனர்.
ஆண்டுதோறும் திருவிழாக்களும் கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எஸ். சந்தானராமன் |
|
|
More
தஞ்சைப் பெரிய கோயில் சித்திரங்கள்
|
|
|
|
|
|
|
|