ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...
|
|
கண்ணியம் காக்க வேண்டும் - கங்குலி |
|
- சங்கர்|பிப்ரவரி 2001| |
|
|
|
இந்திய ஜிம்பாப்வே அணிகளிடையே கான்பூரில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் பன்முகத்திறமை நன்கு பளிச்சிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பந்துவீச்சில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கங்குலி, ஜிம்பாப்வே வீரர்களைத் திக்குமுக்காட வைத்ததோடு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அலைக்கழித்து விட்டார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்குத்தான் கிடைத்தது. ஆனால்,கான்பூர் களத்தில் அவரது செயல்பாடு கிரிக்கெட் விளையாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை என்பது வேதனையளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வீரரை ஆட்டமிழந்ததாக அறிவிக்கக் கோரி,எகிறி எகிறிக் குதித்து கங்குலி செய்த ஆர்ப்பாட்டமும் விக்கெட் காப்பாளர் தாஹியாவும் அவரோடு இணைந்து கொண்டு நடுவரை நிர்பந்தத்திற்குள்ளாக்கிய காட்சியும் காணச் சகிக்கவில்லை.
கங்குலி வெறுப்போடு கால்களை உதறியதும், அப்போது அவரது உதடுகள் உச்சரித்த சொல் எத்தனை தரக்குறைவானது என்பதும் தொலைக்காட்சியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. கங்குலியின் செய்கைகளால் உணர்ச்சிவசப்பட்ட ஜிம்பாப்வே வீரர் ஜி.விட்டல் தன் பங்குக்கு ஏதோ சொல்லிவைக்க களத்தில் களேபரமான காட்சிகள் அரங்கேறின.
போதாக்குறைக்கு ராகுல் டிராவிட் வேறு 'தெருச் சண்டைக்குப் போகும் ரவுடி' போல அங்கே மூக்கை நுழைக்க, பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ரத்த அழுத்தம் எகிறியது. நல்ல வேளையாக நடுவரின் தலையீட்டால் விபரீதமாக ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தின் பின் விளைவாக, ஜிம்பாப்வே பந்துவீச்சின் போது பிரையன் ஸ்டிரேங்கும் அதே வகையிலான செய்கையில் ஈடுபட்டது ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் விளையாட்டின் கண்ணியத்தை அதளபாதாளத்துக்குக் கொண்டுசென்றது.
முன்பு இந்திய விக்கெட் காப்பாளர் கிரன் மோரேவும், பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாந்தாதும் சம்பந்தப்பட்ட கேவலமான நிகழ்ச்சியை நினைவுபடுத்துவதாக மேற்கண்ட நிகழ்வுகள் அமைந்தன.
கங்குலி, தாஹியா இருவரும் கிரிக்கெட் விளையாட்டின் 2,3 மற்றும் நான்காவது நடத்தை நெறிமுறை விதிகளை மீறியதாகக் (வீரர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டுக்கும் அவப்பெயர் உண்டாகும் வகையில் செயல்பட்டது; நடுவரின் தீர்ப்புக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற விதியை மீறியது; வாய்மொழியாகத் திட்டுவது, அடிக்க முனைவது, நடுவரை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வீரர்களின் தவறான செய்கைகள் குறித்து,போட்டி நடுவர் பேரி ஜர்மானின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. |
|
கங்குலிக்கு உடனடியாக ஒரு போட்டியில் விளையாடத் தடையும், மேலும் 2 போட்டிகளில் பின் வரும் தொடர்களின் போது விளையாடத் தடையும் விதித்துள்ளார் ஜர்மான். தாஹியாவுக்கும் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கெதிரான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிக்கு ராகுல் டிராவிட் தலைமையேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவருக்குமே தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதே நாளில் (11.12.2000), இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதற்காகப் பாகிஸ்தான் அணித்தலைவர் மொயின்கான் மேற்கொண்ட 'தாமதப்படுத்தும் யுக்தியும்' கீழ்த்தரமாக அமைந்ததோடு கிரிக்கெட் உலகில் பலத்த கண்டனத்துக்குள்ளாகியுள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே சூதாட்டக் குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டு தன் முகம் முழுவதும் கரி பூசிக் கொண்டுள்ள நிலையில், இந்த வீரர்கள் தங்கள் பங்குக்கு செம்புள்ளி குத்தியிருக்கிறார்கள்.
கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்பதையும், வெற்றியை விட திறமையாகவும் நேர்மையாகவும் போட்டியிட்டோம் என்பதே விளையாட்டில் முக்கியம் என்பதையும் வீரர்கள் உணரவேண்டும். உணர மறுப்பவர்களுக்கு, கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம் போட்டி நடுவர்கள் உணர்த்த வேண்டும்.
அணித்தலைவர்களான கங்குலியும், மொயின்கானுமே தங்கள் நிலை மறந்து தவறிழைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
கங்குலிக்கும், தாஹியாவுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் தடை, இனியாவது வீரர்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வதன் அவசியத்தை அவர்களுக்குப் புரிய வைத்திருக்கும் என நம்புவோம்.
பா.சங்கர் |
|
|
More
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே...
|
|
|
|
|
|
|