மறை ஞானமும் இறை ஞானமும்
|
|
கவி உள்ளம் தரும் அழகு வெள்ளம் |
|
- விதுரன்|பிப்ரவரி 2001| |
|
|
|
பல மொழிகள் பல கலாச்சாரங்கள் நிலவும் நம் நாட்டின் பலமே நமது பண்,முகத் தன்மைதான். அழிந்து விட்டது; இனி எழவேமுடியாது என எண்ணதான் திரும்பத் திரும்ப முழங்கினாலும் சமஸ்கிருதம் அதன் அழகை இழக்கவே இல்லை. கம்பனுக்கு வால்மீகி என்ன இன்பத்தைத் தந்திருப்பானோ அதா சுவை அம்மொழிக்கு இன்னமும் இருக்கின்றது. இன்றைக்கு பல சமூக, அரசியல் காரணங்களுக்காக அழிந்து விட்டது; இனி எழவே முடியாது என கூறினாலும் இன்னமும் உலக இலக்கியங்களுள் சமஸ்கிருதம் முக்கிய காவியங்களை அளித்த மொழியாக நிற்கிறது.
அது மொழி, இன, சாதி அடையாளங்களைக் கடந்து, அகழிகள் எத்தனை மறித்தாலும், சதிகள் எத்தனை தோன்றினாலும் இறைவனுக்குமுன் ஜீவன்கள் எல்லாம் ஒன்று என்று கூறப்படுவதைப் போல இறை உணர்விலும் கவிச்சுவையிலும் ஓங்கியே நிற்கிறது.
ஆனால்,ஆண்டாண்டுகளாக, ஆன்மீகப் பெரியோர்களும், ஆழ்ந்த சிந்தனையாளர்களும், ஆராய்ந்து, ஒரு கட்டுக்கோப்பிலே வளர்த்து வந்துள்ள சமூகத்தை, நவநாகரீகப் பகுத்தறிவுச் சிந்தனைகள், முற்போக்கு வாதங்கள், முன்னேற்றப் பாதையென்று, ஒரு கலாச்சாரச் சீரழிவுப் பாதையிலே கொண்டு செல்லும் சமூகப் புல்லுருவிகளின் சுயநல முகமூடியைக் கிழித்தெறிய இன்னும் நேரம் வரவில்லை போலும்!
நம்முடைய இலக்கிய செல்வங்கள், தத்துவார்த்த சிந்தனைகள், பல்லாயிரக்கணக்கான வருடங்களின் மனித வாழ்க்கைச் சங்கிலியின் பல்வேறு அனுபவங்கள், ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.
ஒன்று சேர்ப்பது கடினம்; உடைப்பது எளிது.
மேலிருந்து, கீழ் இறங்குவது எளிது; உயர்வை அடைவது கடினம்.
தூய்மையான நீராய், உயர் மலையிலிருந்து, உருவாகும், நீரூற்று, மக்களை அடைய பல்வழிகளிலும் சென்று, சிலருக்கு உண்ணீராய், பலருக்கு, தூய்மையாக்கும், புண்ணிய நீராய், பலவித புற, அக அழுக்குகளைச் சுமந்து, இறுதியில், கடலிலே கலந்து, ஆர்ப்பரிக்கும் அலைக்கூட்டத்தின் அங்கமாகிப் போவதை, நாம் பார்க்கிறோம்.
அதே உவர்ப்பைச் சுமந்த கடல் நீர், சூரிய கிரணங்களால், சுட்டெரிக்கப்பட்டு, கருமேகமென வானிலே தவழ்ந்து, மீண்டும், தூய்மையான மழையாய், மண்ணில் மீண்டும் பயன்பட வருவதையும் பார்க்கிறோம்.
இயற்கை நமக்கு உணர்த்தும், இச் சூட்சுமங்களை, அறிஞர்களும், அறியும் ஆர்வலர்களும், இயல்பாக உணர்கிறார்கள்...! இருந்தாலும், பெரும்பாலான மக்களைச் சரியான முறையிலே வழிகாட்டும் சிந்தனயோ, செயலோ இல்லாமல், கையால் ஆகாதவர்களாக இருக்கிறார்கள்.
எண்ணப் பறவை விசித்திரமானது. ஓர் எண்ணப் பொறியை உண்டாக்கிவிட்டு, அதன் தொடர்பான பல கிளைகளில் செல்ல ஆரம்பித்து விடுகிறது. அதைக் கட்டி இழுத்து, எழுதத் தொடங்கிய செய்திக்கு வருகிறேன்...!
இவ்வளவு நொந்து எழுதினாலும், இந்திய மண்ணின் இறை உணர்வும், பொதுமக்களின், நற்பண்புகளும், என்னை மிகவும் வியக்கத்தான் வைக்கின்றன.
எல்லாவித வேறுபாடுகளையும் கடந்த ஒற்றுமை நிலையை, நம் அற நிலையங்களும், இறைவர்களின் திருக்கோயில்களும் காலம் காலமாக அரும்பாடு பட்டு உண்டாக்கியிருக்கின்றன. (கோவில்களில் நிலவும் வணிகமாக்கும் நிலையைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுகிறேன்!)
சமீபத்தில், தென்மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு, ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணம் சென்றுவந்தேன். பத்து வருடங்களுக்கு முன் பார்த்ததை விட பன்மடங்கு, பக்தி மக்களிடையே பெருகியிருக்கிறதே தவிர பக்தி குறைந்துபோல, காணவில்லை.
திருச்செந்தூரின், கடலோரத்தில் குடியிருக்கும், சூர சம்ஹார மூர்த்தியின், சந்நிதியினை வலம் வரும் போது, திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்ற, அருணகிரியாரின் செந்தமிழ் இறைமாலைகளப் படித்து கொண்டே வந்தேன்.
ஓரிடத்தில், ஆதிசங்கரரின், 'சுப்ரமணிய புஜங்கத்தின்' தமிழாக்கத்தைப் பார்த்துவிட்டு, நின்று படிக்கலானேன்.
திருச்செந்தூர் தலவரலாறு படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும், 'சுப்ரமணிய புஜங்கம்' உருவான கதை.
ஆதிசங்கரர் தம்மைப் பீடித்திருந்த, வெந்நோயைத் தீர்க்க, ஆலவாயன், அருளை வேண்ட, அவர் அலைகடலோரத்தில் அமர்ந்து, அன்பர் குறை தீர்க்கும், அமரர் சேநாபதியை வேண்டும்படி பணிக்க, அவ்வாறே, அத்தவ முனியும் பாட, அரவொன்று, அருமருந்தென, அநுபூதி தரும், விபூதியைத் தரவும், அவர் நோய் தீர்ந்தது, என்பது தலவரலாறு..
அந்த அரவம், ஊர்ந்து வந்த அழகை, ஆதிசங்கரரின், கவிதை நயத்திலே காணலாம்.. நல்ல கவிதைச் சந்தத்தை இரசிப்பதற்கு, மொழி தடையா என்ன..?
அதே ஓட்டத்தை, அங்கிருக்கும், தமிழாக்கத்திலும், நான் கண்டேன்..! எழுதியவரின் பெயரைப் பார்த்த போது, எனது வியப்பும், மகிழ்ச்சியும், இரட்டிப்பு மடங்காயின... வடமொழி, ஒருசாராரின் பூர்விக பிறப்புரிமையும், சொத்துமல்ல என்பதை அத்தமிழாக்கம் உணர்த்தியதே என் மகிழ்ச்சிக்குக் காரணம்.
திருச்சி கவிதாமணி, அமரர் அ.வெ.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார், என்னும், உயரிய பண்பாளர், சிறந்த கவி வாணர், வடமொழி, மூலத்திலிருந்து, கவிதைச் சுவையும், பொருள் சுவையும், குன்றாது, பல அரிய இறை துதிகளைத் தமிழாக்கி தந்துள்ளதை அறிந்த போது, என் உள்ளம், மகிழ்சியால் நெகிழ்ந்தது.
இத்துணைக்கும், இவர் வடமொழியினைக் கற்றுத் தேர்ந்தது, தன் வாழ்வின் பிற்பகுதியில் என்று அறிந்த போது, திரைகடலோடி திரவியம் தேடும் பெருமக்களிடையே, நரை தலையோடியும், நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும், தேடிப் பெற்றுக்கொள்வேன், அவற்றைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளுவேன் என்னும், மன உறுதி, எத்துணை பேருக்கு வரும்..?
"ஸௌந்தர்ய லஹரி", என்னும், வடமொழி துதித் தொகுப்பு, ஆதிசங்கரரின் அற்புத கவித்துவ வெள்ளம். மாதொருபாகனின், இடம் அமர்ந்தாளை, அவளின், அழகு உருவத்தினை, ஒரு பக்தனின் நிலையிலிருந்து, அத்வைத ஆசிரியன், உலகுக்களித்த செல்வம்.
அபிராமி பட்டரின், அந்தாதியைப் போலவே, வடமொழியில், அகிலமெல்லாவற்றுக்கும் அன்னையாகிய, அங்கையற் கண்ணியின், அழகினை, நூறு துதிகளால் சிறப்புற பாடும் நூல். |
|
அதனை, அன்பர்கள் உள்ளங் கவரும் வகையிலே, மூலத்தின் சொல்லழகிற்கு, எவ்வொறு சிதைவும் இல்லாமல், 'அழகு வெள்ளம்' என்னும் பெயரிலே, இக்கவிவாணர் பாடியிருக்கும் விதம், உயர்ந்த கவித்துவத்தையும், ஆழ்ந்த இறை உணர்வையும் வெளிப்படுத்துவதாக உள்ளது..!
இவருக்கு முன்னாலும், 'வீரை கவிராஜ பண்டிதர்' என்பவர் இந் நூலை தமிழ்படுத்தியுள்ளார். கவிதாமணியாரின் சொற் செறிவிலே, சிறிதளவும், இரசக் குறைவு இல்லை என்பதுதான், கவனிக்கப் படவேண்டியது. உதாரணத்துக்கு, அம்மையின் கற்புதிறத்தை பாடும், பாடல் 96-ன் தமிழாக்கத்தை, இருவரின் கவிதை வழியாகக் காண்போம்.
கவிராஜ பண்டிதர் எழுதுகிறார் -
கலைமகளும் பொதுமடந்தை கமலையுமற் றவளே மலைமகள்நீ கற்புடைய வனிதையெனப் பகருங் குலமறைக ளெதிர்கொடுநின் குரவினையும் அணையா முலைகுழையப் புணர்வதுநின் முதல்வரல திலையால்.
இப்பாடலைப் படிக்கும் போது, பொருள் விளங்கக் கடினமாக இருப்பதை உணர்வீர்கள். பொருள் விளங்கியபின், சொல்லும் விதம் சற்று கொச்சையாக இருப்பதைக் காணலாம். கவிராஜரின் கருத்திலே குற்றமில்லாமலிருக்கலாம், ஆனால் படிப்பவர் எல்லோர் கருத்துக்கும், உத்தரவாதம் தரமுடியாதல்லவா..?
இதே கருத்தை, கிருஷ்ணசாமி இரெட்டியார் அவர்களது வாக்கிலே பார்க்கலாம்.
கவிவாணர் வசப்பட்டு வாணிஇருந் திடுவாள் கனிவுடனே வாக்கருளும் பணிபுரிந்து நிற்பாள் புவியதனில் பலருழைப்புக் கண்டுதிரு மகளும் பொன்னாகிப் பொருளாகிக் குற்றேவல் புரிவாள் தவிசிருக்கும் தாயே!நின் அடியார்கள் எல்லாம் தாயாக நினைப்போற்றித் தலைவணங்கு கின்றார் குவிநகில்கள் புளகமுற சதாசிவனை யன்றி குராமரமும் தீண்டாத கற்புடையாள் நீயே.
எளிமையான தமிழ், உயர்ப்பொருளைச் சுவைபட சொல்லும் நேர்த்தி, இவற்றால், கவிதாமணியாரின் மொழிபெயர்ப்புக் கவியாக்கம், உயர்ந்து நிற்கிறது. இரசக்குறைவு, என்பது, துளிகூட இல்லை என்பதே மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
சொல்லும் சொல் அறிந்து, சொல்லின் பொருள், சுவை அறிந்து, சொல்லும் விதமும் அறிந்து பாடும், இக்கவிதா மணியாரின் கவி உள்ளத்திலிருந்து, இந்த அழகு வெள்ளம் மட்டுமல்ல - மற்ற பல படைப்புகளும் உருவாகியுள்ளன. இவரின் மற்ற மொழிபெயர்ப்புகளில், பஜகோவிந்தம், பகவத் கீதை, ருத்ரம், சமகம் போன்றவையும் அடக்கம்.
விருப்பமுள்ள வாசகர்கள், திருச்சியிலுள்ள, திருவடி பதிப்பகத்தை நாடினால், கவிதாமணியாரின், மற்ற படைப்புகளைப் படித்து இன்புறலாம்..!
விதுரன் |
|
|
More
மறை ஞானமும் இறை ஞானமும்
|
|
|
|
|
|
|
|