|
கலைத்திறன் கொண்ட இளம் நிலவுகள் - ஸான் பிரான்ஸிஸ்கோ 'ரவுண்ட் அப்' |
|
- அருணா நாராயணன்|மார்ச் 2001| |
|
|
|
ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி வாழ் தமிழ் மக்கள் கலையார்வம் மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களில் பலர் சீரிய கலைத்திறன் படைத்தவர்கள் என்பதுடன், இளைய தலைமுறையினரும் கலைகளைக் கற்றும், அதன் மூலம் தமிழ்ப் பண்பாடு பெற்றும் உயரவேண்டும் என்ற எண்ணமும் கொண்டவர்கள்.
பிப்ரவரி 4, ஞாயிறு மாலை, Palo Altoவின் 'கப்பர்லி அரங்கில்' வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் ஆதரவில் நடைபெற்ற, 'இளைய நிலா', என்னும் குழந்தைகள் பல்சுவை நிகழ்ச்சி, பெற்றோர்களின் ஆர்வத்தையும், குழந்தைகளின் கலைத் திறமையயும் மிக நன்றாக எடுத்துக் காட்டியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடியும், ஆடியும், செவிக்கினிய தமிழில் வசனங்கள் பேசியும், நடித்தும், சுமார் இரண்டரை மணி நேரம் போனதே தெரியாமல் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
திருப்புகழ், பாரதியார் கவிதைகள் இவற்றை நல்ல உச்சரிப்புடனும், இசையுடனும் பாடினார்கள், 'ஒளி படைத்த கண்ணினாய்' பாடிய குழந்தைகள், பல பெரியவர்களையே திணற அடிக்கும் 'ள', 'ண', 'ழ' உச்சரிப்புகளை சிறிதும் பிழையின்றி உச்சரித்தது எல்லோரையும் அயர வைத்தது.
நடனம் என்ற வகையில், பரதமும், தமிழ் மண்ணுக்கே உரித்தான 'குறத்தி' நடனமும் இடம் பெற்றன.
கண்ணன் கதைகளைப் பரதத்திலும், திரிகூட ராசப்ப கவிராயரின், 'குற்றாலக் குறவஞ்சி' யினை, குறத்தி நடனமாக ஆடியும் சிறுமியர் தம் கலைத்திறமையை வெளிப்படுத்தினர்.
பல சிறுவ, சிறுமியர்கள், பிரபலமான திரையிசைப் பாடல்களுக்கு நடனமாடி, எல்லோரையும் கவர்ந்துவிட்டனர். |
|
'சங்கமம்', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 'திருடா திருடா' போன்ற பிரபலத் திரைப் படங்களிலிருந்து, ஒலித்த பாடல்களுக்கு, தாளம் தவறாமல், ஒருங்கிணைந்து குழுவினராக, நடனமாடியது, குறிப்பிடத்தக்கது..
'நக்கீரன் 2000', 'சீ, வாங்க', 'கடீஸ்வரன்' என்னும் நகைச்சுவை நாடகங்களில் பங்கேற்ற சிறுவ, சிறுமியர்கள், எந்தவித தயக்கமும், பயமுமின்றி இயல்பாக நடித்ததும், நகைச்சுவை நாடகங்களுக்கு, மிகவும் அத்தியாவசியமான 'டைமிங்'-ஐ கொஞ்சமும் தவறாது செய்ததும், மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.
சிவபெருமான் எழுதித்தந்த 'கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிலே'யே குற்றம் கண்டு பிடிக்கும் நக்கீரன் வாதம் நல்ல கற்பனை. எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.
பாரம்பரிய சங்கீதமானாலும் சரி, நாட்டியமானாலும் சரி, சினிமா பாடல்கள், நடனங்கள், நாடகமானாலும் சரி, எதையும் எங்களால் செய்யமுடியும், என்று இந்தக் குழந்தைகள் அன்று நிரூபித்துவிட்டனர்.
இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் நிறைவு பெற்ற, இந்நிகழ்ச்சியை வழங்கிய, தமிழ் மன்றத்தினரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
அருணா நாராயணன் |
|
|
|
|
|
|
|