காதல் வைரஸ் ரெடி டேக் குடிமகள்கள் உடான்ஸ் தோஸ்த் ரெடி டேக் டிசம்பர் குளிரில் நடிக்க வந்தான் ப்ரண்ட்ஸ் - திரைப்பட விமர்சனம் மின்னலே - திரைப்பட விமர்சனம்
|
|
கதைகளின் கலகக்காரன் கே. பாலசந்தர் |
|
- தமிழ்மகன்|மார்ச் 2001| |
|
|
|
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பி.எஸ்ஸி., படித்தார். அறுபதுகளில் ஏ.ஜீ.எஸ். அலுவலகத்தில் கணக்காளராக வாழ்க்கைக் கணக்கைத் துவங்கியவரின் உள்ளே ஒரு படைப்பாளி உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டு நாடகம் போட ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். நடித்த `தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதுகிற வாய்ப்பு க்¢டைக்கவே ஒரு கட்டத்தில் கணக்காளர் வாய்ப்பை உதறிவிட்டு வெளியே வரவேண்டியதானது. படங்களுக்கு வசனம் எழுதினார், படங்களை இயக்கினார், படங்கள் தயாரித்தார். இப்போது இவர் எழுதிய, இயக்கிய, தயாரித்த படங்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டுவிட்டது. `அப்பு' படத்தயாரிப்புக்குப் பிறகு அவர் இயக்கவிருக்கும் 'பார்த்தாலே பரவசம்' படம்தான் அவருடைய 100 ஆவது படைப்பு.
சின்னத்திரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் அவருடைய சாதனையைச் சற்றே நிறுத்திவிட்டு, திரையில் நூறாவது படைப்பை அவரே இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். `அலைபாயுதே' மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இவருடன் ஸ்நேகா, விவேக், மணிவண்ணன், தாமு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப் படத்தை வேறு ஒரு பட நிறுவனம் தயாரிக்கிறது.
சினிமா கதைகளின் கலகக்காரன் இவர். அக்கரகாரத்துப் பெண்ணொருத்தி, தன் உடம்பை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தி தம்பி, தங்கைகளைப் படிக்க வைப்பதாகப் படம் (அரங்கேற்றம்) எடுத்தார்.
தான் மணக்கப் போகும் பெண்ணின் தாயைத் தன் மகன் காதலிப்பதாகச் சிக்கலான முடிச்சோடு ஒரு படம் (அபூர்வராகங்கள்).
காமுகனின் காதல் துரத்தலுக்குத் தன் காதலனைப் பலி கொடுத்துவிட்டு, அந்தக் காமுகனின் தந்தைக்கே வாழ்க்கைப்படும் பரிதாபத்துக்குரிய பெண்ணின் வாழ்வைச் சொல்லும் `மூன்று முடிச்சு'...
குடிகார அண்ணன்- வாழ்வைச் சமாளிக்கப் பயந்து வீட்டை விட்டு ஓடிப்போன தந்தை- கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் தாய்- திருமணமானதுமே விதவையாகி நிற்கும் தங்கை- ஊனமான தம்பி- அண்ணி- அண்ணனின் குழந்தைகள்... இவ்வளவு உறவுப் பாரங்களையும் தனியாளாக இழுத்துக் கொண்டு போகும் பெண்ணின் கதை (அவள் ஒரு தொடர்கதை),
சாடிஸ்ட் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு கைக்குழந்தையோடு வாழும் பெண்ணுக்கும் அவள் மீது அக்கறை காட்டும் அலுவலகத் தோழனுக்கும் ஏற்படும் ஈர்ப்பு- கணவனால் மீண்டும் அந்த ஈர்ப்பு சிதைதல் (அவர்கள்) என இவருடைய கதைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவருடைய தலைப்புகளிலேயே புதுமை பொதிந்து கிடக்கும். `தப்புத்தாளங்கள்', `இருகோடுகள்', `புன்னகை', `நான் அவனில்லை', `நீர்க்குமிழி', `நாணல்', `நூல்வேலி', `நிழல் நிஜமாகிறது', `சொல்லத்தான் நினைக்கிறேன்'... |
|
`நீர்க்குமிழி' இவர் இயக்கிய முதல் திரைப்படம். ஆன்டி செண்டிமெண்ட்டுதான் இவருடைய `செண்டிமெண்ட்' என்பதை இவருடைய முதல் படத்தின் தலைப்பே விளக்கும். `இருகோடுகள்', `அபூர்வ ராகங்கள்', `தண்ணீர் தண்ணீர்', `அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய படங்கள் பிராந்திய மொழிகளுக்கான தேசிய விருது (வெள்ளத்¢ தாமரை) பெற்றன. `ஒரு வீடு இரு வாசல்' திரைப்படம், சமூகப் பிரச்சனையைப் பிரதிபலித்தமைக்காகத் தேசிய விருது பெற்றது. இவருடைய இயக்கத்தில் வெளியான `பாமா விஜயம்', `தாமரை நெஞ்சம்', `எதிர் நீச்சல்', `அக்னி சாட்சி', `வறுமையின் நிறம் சிவப்பு', `புதுப் புது அர்த்தங்கள்', `வானமே எல்லை', `ஜாதிமல்லி' ஆகிய படங்கள் தமிழக அரசு விருது பெற்றன. இவர் தயாரித்த `ரோஜா' தமிழக அரசின் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது.
87-ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது. தமிழக அரசின் கலைமாமணி, கலைமாமேதை போன்ற விருதுகள் இவருடைய புகழ் மகுடத்தின் அணிகள்.தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (பெப்ஸி) தலைவராகச் செயல்பட்டு வரும் இவர், அந்த அமைப்பின் பெயரை தமிழ் படைப்பாளிகள்- தொழிலாளர்கள் கூட்டமைப்பு என பெயர் மாற்றம் கொண்டு வருவதற்காகப் போராடியவர். ஆனால் அதன் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், அந்தக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்பது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு. பெயர் மாற்றத் தீர்மானம் இன்னமும் கிடப்பில். தமிழ் இயக்குநர்களின் கோபமும் அப்படியே அடங்காமல் இருக்கிறது.
படங்களுக்குப் பெயர் வைப்பதில் ஆண்டி செண்டிமெண்ட் பார்ப்பவர், அமைப்பின் பெயருக்கும் அதே முடிவை எடுத்திருப்பாரோ?
நூறாவது படமான 'பார்த்தாலே பரவசம்' படப்பிடிப்பு காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் சென்னையில் தொடர்ந்து நடைபெறுகிறது.
கதைக்கான நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் தனி கவனம் எடுத்துக் கொள்வார் இவர். கமல்ஹாசன், ரஜினி போன்றவர்களை உருவாக்கியவர் என்ற பெருமையோடு வேறு துறையில் பேரெடுத்தவர்களை நடிப்புத்துறையில் அறிமுகப்படுத்துவதிலும் தேர்ந்தவர் இவர். குஷ்புவை கஜல் பாடகராக அறிமுகப்படுத்தியதும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்ததும் ஏறத்தாழ ஒரே மாதிரி முயற்சிகள்தான். இந்த மாதிரி மெனக்கெடுவதில் எப்பொதுமே அவருக்கு ஆர்வமுண்டு.
சிம்ரனையும் மாதவனையும் என்னவாக வார்க்கப் போகிறார்?...
பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்மகன் |
|
|
More
காதல் வைரஸ் ரெடி டேக் குடிமகள்கள் உடான்ஸ் தோஸ்த் ரெடி டேக் டிசம்பர் குளிரில் நடிக்க வந்தான் ப்ரண்ட்ஸ் - திரைப்பட விமர்சனம் மின்னலே - திரைப்பட விமர்சனம்
|
|
|
|
|
|
|