"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா ஆரம்பப் படிகள் நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும் தண்ணீர் இனி கானல் நீரா? மணிக்கட்டி வைணவர்கள் பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? பேரழிவில் உதவாத பேரழகிகள் தெய்வ மச்சான் பதில்கள் தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம் "மாற்றம் இல்லையேல் மரணம்" மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா
|
|
|
வெளிநாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்கா, துபாய், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குப் போக வேண்டுமென்ற ஆசை எனக்குத் துளியும் இல்லை.
வெளிநாடுகளுக்கு நம்மைப் போகத் தூண்டுவது இரண்டு விஷயங்கள்தான்.
1. அங்கு போய் வேலை செய்து நிறையச் சம்பாதிப்பது.
2. புதுப்புது வேடிக்கை பார்த்துவிட்டுப் புதுமையான பொருள்கள் வாங்கி வரலாம்.
வேலைக்குப் போக எனக்கு இஷ்டமில்லை. இங்கிருந்து அங்கு போய் அங்குள்ள எந்த இந்தியக் குடும்பத்தினருக்கு பேபி ஸிட்டராகவோ சமையல்காரராகவோ வேலை பார்ப்பதைவிட இங்கேயே சொந்த பேரன் பேத்திகளுக்கு பேபி சிட்டர் வேலை செய்து கொண்டு ஜாலியாக இருந்துவிடலாம்.
இரண்டாவது விஷயம் புதுப் புதுப் பொருள்களாக ஏதாவது வாங்கலாம் என்பது.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும், துபாயிலும் என்னென்ன மாதிரியான புதுமைப் பொருள்கள் விற்கின்றன என்பது எனக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது.
இங்கிருந்து அடிக்கடி எனது உறவினர்களும், நண்பர்களும் அந்த நாடுகளுக்குப் போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் அங்கிருந்து திரும்பும்போதெல்லாம் எனக்கு அன்பாக ஏதாவது விசேஷ பரிசுப் பொருள்கள் வாங்கி வருவார்கள்.
அந்தப் பொருள்கள் என்னென்னவாக இருக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
புதிதாக நான் என்னத்தைச் சொல்லப் போகிறேன்.
துபாய் என்றால் பேரீச்சம்பழம் (ஸீட்லெஸ்), பிஸ்தா, பாதாம் பருப்பு, திராட்சை, சாக்லேட் தினுசுகள் - (உள்ளே நாலு சாக்லேட் இருந்தாலும் மகா உன்னதமான பாக்கிங்) இவைதான்.
அமெரிக்காவென்றால் மனப்பாடமாகச் சொல்லி விடலாம்.
வெளுப்பாகச் சற்று வளைந்த மாதிரியான கேமே சோப்பு, (வாசனை கீசனைன்னு பேசப்படாது. கேமே ரொம்ப தேமே என்று இருக்கும். அந்த ஊர் வாசனை அவ்வளவுதான்) மஞ்சள் நிறத்திலே ஒரு டஜன் பிளாஸ்டிக் ரேசர்கள் (த்ரோ அவே ரகம்), சாக்லேட்டுகள், அப்புறம் சில தினங்களுக்கு மட்டும் எழுதக் கூடிய பால்பாயிண்ட் பேனாக்கள், (ஓரிரு பக்கம் எழுதியதும் உடனே தூக்கி எறிந்துடணும் அல்லது எழுத ஆரம்பிப்பதற்கு முதலிலேயே தூக்கி எறிந்துவிடவேண்டும்.) சில சாக்லேட் தினுசுகள்.
குங்குமப் பூ என்ற பெயரோடு குழாயில் உதிரியான சிவப்பு வஸ்து, (அதைப் பாலில் போட்டுக் குடித்தால் இந்தியக் கர்ப்பிணிகள் செக்கச் செவேலென்று குழந்தை பெறுவார்களென்று ஒரு மூட நம்பிக்கை) பாதாம்பருப்பு, சுவரில் ஒட்ட வைக்கிற கோட் ஹாங்கர் வளையங்கள் - குண்டூசி, ராட்சஸத்தனமாக பேப்பர் கிளிப்புகள், நெயில் கட்டர் என்று ஒரு ரகம். அது நெயிலையும் வெட்டாது, விரலையும் வெட்டாது.
அப்புறம் நம்ம உள்ளூர் ராட்சஸன்களுக்கே தொள தொளவென்றிருக்கும்படியாக படாசைஸ் பனியன்கள். ஆப்கானியர்களுக்குப் பொருத்தமாக சட்டைகள் (எல்லாம் இங்கிருந்து ஏற்றுமதி செய்வதாகக் கூறப்படுபவை).
ஜெர்மனி, இங்கிலாந்து என்றால் சிலவகை சென்ட் தினுசுகள் (அதைத் தடவிக் கொண்டால் ஒருத்தரும் நம்மிடம் வரமாட்டார்கள். கொசுக்கள் உட்பட). அமெரிக்கன் டைமண்ட் என்ற வெள்ளைக் கல் ரகம். அமெரிக்கன் பவளம் (நம்ம உள்ளூர் நரிக்குறவப் பெருமக்கள் விற்கும் சிவப்புப் பாசிமணி).
சுங்க அதிகாரிகளுக்கு அபிமான சிலர் ரகசியமாக தங்கச் சங்கிலி, அது இது கடத்திவருவதையெல்லாம் நான் இங்கே ஆதாரமில்லாமல் குறிப்பிடக்கூடாது.
இந்தச் சில பொருள்களை விரும்பி அயல்நாடு போகவேண்டிய அவசியமில்லை.
சென்னையிலுள்ள பர்மா பஜார், சைனா பஜார், சிங்கப்பூர் பஜார் என்று போனாலே ஒரு சுற்று சுற்றிக்கொண்டு வந்துவிடலாம்.
'ஒருகால் போலியோ' என்று சந்தேகப்படவேண்டாம். எல்லாமே போலிகள்தான். |
|
சுற்றுலாப் பயணிகள் மைசூர் போகும்போது அங்கே சுற்றுலா பஸ்கள் கொண்டுபோய்த் தங்களை சூழ்ச்சிகரமாக நிறுத்தும் இடங்களிலுள்ள கடைகளில் விற்கும் மைசூர் அகர்பத்தி வாங்கி வந்தால் அவை வெறும் வரட்டிப் புகைதான் என்பதை இங்கே வந்ததும் அறிவார்கள்.
வெளிநாட்டுப் போலிகளைக் கண்டு ஏமாறும் நாம், உள்நாட்டுப் போலிகளுக்கு ஏமாறுவதால் தப்பு ஒன்றுமில்லை.
இவை தவிர கம்ப்யூட்டர் பித்துப் பேர்வழிகள் வெளிநாட்டிலிருந்து ஒசத்தி ரகமான தினுசு என்று லாப்டாப், மியூசிக் சிஸ்டம், அது இது என்று எதையாவது சுமந்து வருவது ஒரு பரிதாபம்.
எலக்ட்ரானிக் கூட்ஸெல்லாம் கியாரண்டி சொல்லமுடியாது. பெண்சாதி வாய்ப்பதுபோல் அவரவர் செய்த பூஜா பலனுக்குத் தகுந்த மாதிரி எலக்ட்ரானிக் பொருள்கள் வாய்க்கும்.
அதனால் உள்ளூரில் அஸெம்பளி பண்ணினதையே வாங்கிக்கொள்ளலாம்.
வேலை செய்யாவிட்டால் உள்ளூர் டீலரை போனிலாவது திட்டலாம்.
யு.எஸ்.ஸிலிருந்து வாங்கிவந்தால் யாரைத் திட்ட முடியும்?
திருடனைத் தேள் கொட்டின மாதிரி சும்மா இருக்கவேண்டியதுதான்.
ஆகவே அனைவரும் வெளிநாட்டுப் பொருள்களை வாங்கி ஏமாறுவதைவிட உள்நாட்டுப் பொருள்களையே வாங்கி ஏமாறவேண்டும் என்பதே என் அவா.
புதுமையான பொருள்கள் வாங்குவதற்கோ வேடிக்கை பார்த்து வருவதற்கோ அமெரிக்கா போவது வேஸ்ட் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
பாக்கியம் ராமசாமி |
|
|
More
"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா ஆரம்பப் படிகள் நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும் தண்ணீர் இனி கானல் நீரா? மணிக்கட்டி வைணவர்கள் பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? பேரழிவில் உதவாத பேரழகிகள் தெய்வ மச்சான் பதில்கள் தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம் "மாற்றம் இல்லையேல் மரணம்" மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா
|
|
|
|
|
|
|