"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா ஆரம்பப் படிகள் நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும் தண்ணீர் இனி கானல் நீரா? மணிக்கட்டி வைணவர்கள் பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? தெய்வ மச்சான் பதில்கள் தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம் "மாற்றம் இல்லையேல் மரணம்" மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்
|
|
பேரழிவில் உதவாத பேரழகிகள் |
|
- லாவண்யா|மார்ச் 2001| |
|
|
|
குஜராத் மாநிலத்தையே உருக் குலைத்துவிட்ட அந்தப் பூகம்பம், இந்தியர்கள் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. நிலநடுக்கம் என்ற வடிவில் வந்த இயற்கைப் பேரழிவில், இருபதாயிரத்துக்கும் கூடுதலான மனித உயிர்கள் மடிய நேரிட்ட சோகம் நம் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. பலியானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும் வேளையில், கொள்ளை நோய்கள் பரவும் அபாயம் வேறு.
அவ்வப்போது விட்டு விட்டுத் தொடரும் சிறு சிறு நடுக்கங்கள். பொட்டல் வெளியில், குத்தும் குளிரில் சூனிய வாழ்க்கை...எஞ்சியவர்களுக்கு மிஞ்சியதெல்லாம் இவை மட்டுமே. நிவாரணப் பணிகள் துரிதகதியில் நடந்தாலும், பூஜ்ஜியமாகிப் போன பூஜ் நகரத்தைப் புணரமைத்து அங்கே வாழ்க்கையை வளப்படுத்துவதென்பது தொலைதூரக் கனவுதான்.
சோகம் கவ்விய இந்தச் சூழலிலும், சகோதரத் துவத்தோடு சக இந்தியர்களும்; மனிதாபிமானத்தோடு பிற நாட்டினரும் உதவிக்கரம் நீட்டி வருவது சற்று ஆறுதலளிக்கிறது. சென்னை 'சென்ட்ரல்' ரயில் நிலையத்தில் வந்து குவியும் நிவாரணப் பொருள்களைப் பார்க்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது. உணவுப் பொருள்கள், துணிமணிகள், மருந்துப் பொருள்கள், போர்வைகள், தலையணைகள் என்று சிறியதும் பெரியதுமாய் பெட்டி பெட்டியாய்...மக்கள் தங்களால் இயன்றதைத் தானம் செய்ததன் சாட்சிகள்.
நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்ல 'பூகம்ப நிவாரண சிறப்பு ரயில்' ஒன்று சென்னை - அகமதாபாத் இடையே தினம் தோறும் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. நிவாரணப் பணியில் ஈடுபட விரும்புவோர் இலவசமாகப் பயணிக்கலாம்.
வந்து குவியும் அத்தனை பொருள்களையும் 'சிறப்பு ரயிலில்' சலிப்பின்றி ஏற்றும் ரயில்வே ஊழியர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் பார்க்கும் போது மனதில் சற்று நிம்மதியும், நம்பிக்கையும் பிறக்கிறது, மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்று...
ஆனால், மனதை உறுத்தும் ஓர் கேள்வியும் நம்முள் எழுகிறதே! எங்கே போனார்கள் அந்த அழகு ராணிகள்? பிரபஞ்ச அழகி, உலக அழகி, ஆசிய-பசிபிக் அழகி...திருமதி.உலக அழகி! என்று அத்தனை பட்டங்களையும் அள்ளி வரும் 'இந்திய அழகிகளே' எங்கே சென்றீர்கள்? |
|
அழகாய் உடையணிந்து, நடந்து, புன்னகைத்துப் பேசி கோடிக்கணக்கான மக்களை வசியம் செய்த 'அழகிகளே' எங்கே சென்றீர்கள்?
''அன்னை தெரசா போல் எளியோர்க்கும், நலிந்தோர்க்கும் பாடுபடுவேன்'' என்று அழகாய் பதிலளித்து அனைவரையும் கவர்ந்த 'அழகிகளே' எங்கே சென்றீர்கள்?
அழகிப் பட்டத்தோடு கோடிக்கணக்கான பரிசுத் தொகையினையும், பிற சலுகைகளையும் தட்டிச் சென்ற அழகிகளே, உங்கள் தொண்டு உள்ளம் தொலைந்து போனதா? பூகம்ப இடிபாடுகளைக் கண்டு இந்திய நாடே இடிந்து போயுள்ள வேளையில் உங்கள் சேவை அவசியம் தேவை என்பதை நீங்கள் உணரவில்லையா?
சினிமா வாய்ப்புகளைக் கொஞ்சம் ஒத்திவைத்து விட்டு வீதிக்கு வாருங்கள். வீடு வீடாய் நிதி திரட்டுங்கள். அழகிகள் வெறும் அலங்கார பொம்மைகள் அல்ல. ஆக்கப் பணியிலும் அவர்களால் சாதனை நிகழ்த்த முடியும் என நிரூபியுங்கள்.
நல்ல சமயம் இதை நழுவவிட்டால், நாளை உலகம் உங்களை எள்ளி நகையாடும் என்பது நிச்சயம்.
லாவண்யா |
|
|
More
"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா ஆரம்பப் படிகள் நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும் தண்ணீர் இனி கானல் நீரா? மணிக்கட்டி வைணவர்கள் பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? தெய்வ மச்சான் பதில்கள் தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம் "மாற்றம் இல்லையேல் மரணம்" மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்
|
|
|
|
|
|
|