Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
அஞ்சல் தலைகள்
அஞ்சல் தலை(வர்)கள்
கண்ணீர் தேசம்
IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்?
கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு
கீதாபென்னெட் பக்கம்
- |அக்டோபர் 2001|
Share:
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் இந்தியாலிருந்து அமெரிக்காவிற்கு வந்த என்னைப் போன்றவர்களின் அனுபவங்களுக்கும் சமீபத்திய காலத்தில் வந்தவர்களுடைய அனுபவங்களுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதற்கும் முன்பே இங்கே வந்திருக்கும் நண்பர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மாறுதலான அனுபவங் களையும் இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமே!

வந்த புதிதில் 'கனெக்டிகட்டில்' இருந்த போது நியூயார்க் 'லெக்ஸிங்டன்' அவென்யூவில் இருக்கும் கலூஸ்தியான் என்ற கடையில் தான் இந்திய மளிகை சாமான்கள் வாங்குவேன். அதுவும் மெயில் ஆர்டர் பண்ணி தபாலில் தான் மளிகை சாமான்கள் வந்து இறங்கும். அதனால் என்னென்ன தேவை என்பதை முதலிலேயே லிஸ்ட் போட்டு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

காலையில் குக்கர் வைத்துவிட்டு அச்சச்சோ! துவரம்பருப்பு ஆகிவிட்டதே! ஓடி போய் பக்கத்து கடையில் இருந்து வாங்கி வா' என்று என் திருவல்லிகேணி வீட்டில் அம்மா என்னை விரட்டுவது போல் முடியாது. ஆனால் இப்போது என் வீட்டிற்கு மிக அருகிலேயே இந்திய மளிகைக் கடை ஒன்று இருக்கிறது. இட்லிக்கு ரவை முதல் அபாரமான ருசி கொண்ட வாழைக்காய் வறுவல் வரை எல்லாம் இங்கு கிடைக்கிறது. முன்னே அம்மா சொல்படி ஓடிப் போய் வாங்கினேன். இப்போது கார் ஓட்டிக் கொண்டு போய் வாங்குகிறேன். அதுதான் வித்தியாசம்.

கல்யாணம் ஆன புதிதில் தினந்தோறும் மதியம் தபால் வந்து சேரும் வரை குட்டிப்போட்ட பூனையாக வாசலுக்கும் உள்ளுக்கும் நடைபோட்டுக் கொண்டிருப்பேன். தபால்காரர் தலை தெரிந்த உடனேயே ஓடிப் போய் தபால் பெட்டியை திறந்து பார்த்துவிட வேண்டும். நீல நிற விமானத் தபாலைக் கண்டு விட்டால் அடிவயிற்றில் ஒருவித இன்பம் பிறக்குமே! அதற்கு ஈடு இணையே கிடையாது. அப்படி எதுவும் வராவிட்டால் ஏமாற்றம் கோபம் எல்லாம் வரும். இந்தியா மாதிரி ஏன் மூன்று முறை அமெரிக்காவிலும் தபால் கொண்டு போடக் கூடாது என்று நினைக்கத் தோன்றும். அன்று இப்படி தபாலுக்காக காத்திருக்கப் போய் இன்றுவரை தினம் தபாலை வீட்டிற்கு எடுத்து வர வேண்டிய வேலை என்னுடையதாக ஆக்கப்பட்டுவிட்டது. நான் ஊரில் இல்லா விட்டால்கூட தபால், பெட்டிக்குள்ளேயேதான் கிடக்கும்.

இப்போதெல்லாம் அந்த மாதிரி நீல விமானத் தபால்களும் வருவதில்லை. அந்த உற்சாகமும் இல்லை. மின் அஞ்சல் தான் வந்துவிட்டதே! பெரியவர்கள் முதல் சின்னஞ்சிறிசுகள் வரை எனக்கு தினம் சென்னை வீட்டாரிடமிருந்து அஞ்சல் வந்து விடுகிறது. இன்றைக்கு இன்னார் கச்சேரிக்குப் போய்விட்டு வந்தேன். ஒரு த்விஜவாந்தி பாடியிருக்கிறார் பாரேன்? ஆஹா... அட்சர லட்சம் பெறும்...'' என்று எழுதி வயிற்றெரிச்சல் கொட்டிக் கொள்வர் என் அன்பு சகோதரிகள். மின் அஞ்சலுக்கு முன் என்ன பண்ணினோம் என்று நினைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை அல்லவா?

அது மட்டுமா? இன்டெர்நெட்டில் சென்னை செய்திகள் கூட கிடைத்துவிடுகின்றன. நான் தினமலர் என்ற தமிழ் பத்திரிகையை சென்னை யில் இருக்கும் போது என் அம்மா காலத் திலிருந்தே படிக்கும் பழக்கம். சென்னையை விட்டு அமெரிக்கா வரும் போது ஞாயிறு தோறும் பிரசுரிக்கும் வாரமலரை நான் திரும்பி வரும் வரை சேமித்து வைக்க சொல்லுவேன். ஆனால் இப்போது தினமலர் டாட் காமில் படித்துவிட முடிகிறது. உலகம் சுருங்கிவிட்டது என்பது நிஜமாகவே உண்மையாகி உள்ளது.
கனெக்டிகட்டில் இருந்த காலத்தில் கர்நாடக கச்சேரிகள் கேட் நியூயார்க அடிக்கடி செல்லுவோம். சனி அல்லது ஞாயிறு முழுவதுமாக அந்த ஒருநாள் பயணத்திலேயே முடிந்து விடும். லால்குடி ஜெயராமன், வீணை எஸ். பாலசந்தர், டி.வி. சங்கர நாராயணன், மைசூர் துரைசாமி ஐயங்கார் என்று பல கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். அந்த பயணங்களும் இசையும் மனதில் அகலாமல் இன்றும் இருக்கின்றன.

இப்போதெல்லாம் லாஸ் ஏன்ஜலஸில் வாரம் ஒரு கர்நாடக இசைக் கச்சேரி நடக்கிறது. அத்தோடு இங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளும் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு கச்சேரி செய்யும் அளவுக்குத் தயாராகி வருகிறார்கள். தமிழ் சினிமா, பரதநாட்டியம், கச்சேரிகள் இதைத் தவிர வேறெதெற்கும் வார இறுதிகளை செலவழிக்க முடிவதில்லை என்றால் என்னுடன் நீங்களும் சம்மதிப்பீர்கள் தானே!! இந்த காரணத்தினால் லாஸ் ஏன்ஞலஸில் இருந்துக் கொண்டும் மிக பிரபலமான ஹாலிவுட் போலில் நடக்கும் லாஸ் ஏன்ஞலஸ் ·பிலஹார்மானிக் கொடுக்கும் சிம்பனி இசையை கேட்க கொடுத்து (இதுவரை) வைக்காத நம்மவர்கள் நிறைய.

வித்தியாசங்களுக்கு இருபத்தி ஐந்து வருடங்கள் முன் போக வேண்டாம், இந்த கட்டுரை எழுத ஆரம்பித்த போது இருந்தது எழுதி முடித்த போது இல்லை. அந்த மாதிரியான உலகத்தில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும் போது வயிறு எரிகிறது. நியூயார்க் மன்ஹாட்டனில் வேர்ல்ட் டிரேட் சென்டர் கட்டிட பலியில் உயிரிழந்தவர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் என்று எண்ணும் போதே கலக்கமாக இருக்கிறது. நமக்கு தெரிந்த அல்லது தெரியாத இறந்த அத்தனை உயிர்களுக்காகவும் இந்த கணம் மனமார பிரார்த்திப்போம் !! கோபமும் பழி வாங்கும் குரூரமும் இல்லாத நல்லதோர் உலகம் வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்...
More

அஞ்சல் தலைகள்
அஞ்சல் தலை(வர்)கள்
கண்ணீர் தேசம்
IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்?
கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு
Share: 




© Copyright 2020 Tamilonline