அஞ்சல் தலைகள் அஞ்சல் தலை(வர்)கள் கண்ணீர் தேசம் IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்? கீதாபென்னெட் பக்கம்
|
|
கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு |
|
- வாஞ்சிநாதன்|அக்டோபர் 2001| |
|
|
|
கோலாலம்பூரில் இந்த ஆண்டின் தமிழிணைய மாநாடு நடைபெற்றதில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். தமிழ்நாட்டிலே இருந்து வருமெனக்கு அங்கே பல விஷயங்கள் ஆச்சரியத்திற்குள்ளாக்கின. அந்த விமான நிலையத்தைப் பார்த்தபின் சென்னை விமான நிலையத்தை ஒரு மாட்டுக் கொட்டகைக்கு ஒப்பிடலாம்.
சாலைகள் அமெரிக்காவிலுள்ளது போல இருக்கின்றன. கார்கள் ஓடும்போது கடபுடா கர்புர் என்ற சத்தங்கள் கிடையாது. காற்றைக் கிழிக்கும் உஸ்ஸென்ற சத்தம் மட்டும்தான்.
ஷேன் கானரி நடித்த "என்ட்ராப்மென்ட்" படத்தில் பார்த்த பெட்ரோனியா கோபுரங்கள் நேரிலே பார்க்கும்போது இன்னமும் ஆளை அசத்துகின்றன.
மாநாட்டில் பேசுவோர்க்கு பான்பசிபிக் என்ற பளபளவென்ற முப்பது மாடி விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தனர். இதுபோல் சுமார் ஒரு டஜன் கட்டிடங்கள் முப்பது, நாற்பது மாடி யென்று தென்பட்டன.
இத்தனை வேகமாக வளர்ந்து வரும் நாட்டில் சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தமிழை மேலுக்குக் கொண்டுவர முனைப்பாக இருக்கிறார்கள்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பிலிருந்தே கணினியில் தமிழில் தட்டச்சு செய்யும் "முரசு" மென்பொருளை உருவாக்கிய முத்து நெடு மாறன், இண்டர்நெட்டுக்கு 'இணையம்' என்ற அழகான சொல்லை உருவாக்கிய மருத்துவர் ஜெயபாரதி, தமிழிலே முதன் முதலில் மின்னஞ்சற் குழுக்களை உருவாக்கிய
முன்னோடிகள் எல்லாம் மலேசியத் தமிழர்கள் தான்.
இந்த மாநாட்டுக்கான செலவில் பெரும் பகுதியை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி ஏற்றுகொண்டதோடு மட்டுமல்லாமல், அக் கட்சித்தலைவர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு மூன்று நாட்களும் மாநாட்டில் பல மணிநேரங்கள் செலவிட்டார். ஜெர்மனியின் நா.கண்னன் முன்வைத்த மின்சுவடித் திட்டத்திற்கு மாநாட்டில் கேள்விப்பட்ட மறுநாளே பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை அரசு சார்பாக விதைப் பணமாக அளித்து உதவினார்.
சென்னை, பெங்களூர், கோவை இங்கே தொழில்நுட்பத்தை நோண்டும் இளம் ஆய்வாளர்கள் அச்சடித்த தமிழ்நூல்களை நூல்களை மின்பதிவு செய்வது (Optical Character recognition), தமிழைப் படித்துப் பேசும் மென்பொருள் உருவாக்குவது போன்ற பல ஆய்வுகளில் அவ்ர்கள் அடைந் திருக்கும் நிலையை விளக்கினார்கள்.
பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தி லிருந்து வந்த வாசு ரெங்கநாதன் தமிழ் வாக்கியங்களைப் படித்து அதன் இலக்கண உறுப்புகளைக் (parts of speech) கண்டறியும் (parsing, natural language processing) மென்பொருளை விளக்கி அசத்தினார். தமிழ்-ஆங்கில மொழி பெயர்ப்பு மென்பொருளை உருவாக்கு வதற்கான பெரும்பான்மையான வேலை ஆகிவிட்டதென்று இதிலிருந்து கூறலாம். |
|
தமிழில் யாப்பிலக்கணத்தைக் கற்க உதவுகின்ற, கொடுக்கப்பட்ட பாடல் இலக்கண விதிப்படி வெண்பாவா, ஆசிரியப்பாவா என்பதைச் சோதிக்கின்ற "யாப்பறிஞன்" என்ற நான் தயாரித்த மென்பொருளைப் பற்றி உரையாற்றினேன். அதை இயக்கியுங் காட்டி னேன். சிலர் அதன் பிறகு "கம்பியூட்டர் கவிதையெழுதுமா?" என்று கேட்க ஆரம்பித் தார்கள். முப்பதாண்டுகளுக்கு முன்னே "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு" என்ற சிறுகதையை எழுதிய .சுஜாதா போன்றோர் முனைந்தால் இது முடியும். ,"கணினி வெண்பா எழுதும் நாள் வெகு தூரத்திலில்லை. அதில் கவித்துவம் இருக்குமா என்பது ஐயம்தான்" என்று கூறிச் சமாளித்துக் கொண்டேன்.
யுனிகோடில் தமிழ்ச் சிக்கல்களைப் பற்றிய விவாதத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தினருக்கும் தமிழ்நாட்டு கணிஞர்களுக்கு மிடையே அனல் பறந்தது.
அட்லாண்டாவிலிருந்து வந்திருக்கும் "தமிழ்த் தீவிரவாதி" என்று செல்லமாக அழைக்கப்படும் பெ.சந்திரசேகரன் அறிவியல், தொழில் நுட்பத் துறையில் புழங்கும் கலைச் சொற்களுக்குத் தமிழில் இணையானவற்றைக் கொண்டு வருவதற்கு ஒரு வழிவகையையே விளக்கினார்.
கலிபோர்னியாவிலிருந்து வந்த மணிவண்ண னுக்கு, அவரையும் திருச்சிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராதா செல்லப்பன், குறுக் கெழுத்துப்போன்று கிறுக்கும் அடியேன், இவ்வளவு பேரையும் அரவணைத்துச் சென்று சொல்லாக்கப்பணியை முடிப்பது கடினமான காரியம்தான். ஆனாலும் சிரித்த முகத்துடன் அவ்வளவையும் அவர் செய்து கொண்டிருந்தார்.
மாநாட்டையொட்டி நடந்த புத்தக மென் பொருள் விற்பனைக் கண்காட்சியில் மருத்துவர் ஜெயபாரதியின் புத்தகமொன்று விறுவிறுவென்று விற்பனையாகியது. பல ஆண்டுகளாக அகத்தியர் என்ற மின்னஞ்சற் குழுவிலும், அதற்கு முன் மலேசியப் பத்திரிகைகளிலும் தமிழ்ப் பண்பாடு, சித்தர்கள் தத்துவம், தமிழர் வரலாறு, தமிழர் கலைகள், போன்ற வற்றை ஆராய்ந்து பிறரிடம் பகிர்ந்து கொண்ட கட்டுரைகள் "இணையத்தில் ஜெயபாரதி" என்ற நூலாக வெளிவந்தது. தமிழுக்காக இணையத்தில் பெரும்பணியாற்றிய மலேசியரை கோலாலம்பூர் மாநாட்டில் காண இயலாதோர்க்கு அப்புத்தகம் அக்குறையை ஓரளவு ஈடுகட்டியது.
மணிவண்ணன் அடுத்த ஆண்டு தமிழிணைய மாநாட்டை கலிபோர்னியாவில நடத்த உறுதியளித்தார். மாநாட்டுக் குழுவும் அதை யேற்றது.
வாஞ்சிநாதன் |
|
|
More
அஞ்சல் தலைகள் அஞ்சல் தலை(வர்)கள் கண்ணீர் தேசம் IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்? கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|