Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
அஞ்சல் தலைகள்
அஞ்சல் தலை(வர்)கள்
கண்ணீர் தேசம்
கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு
கீதாபென்னெட் பக்கம்
IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்?
- சரவணன்|அக்டோபர் 2001|
Share:
பசுமை நிறைந்த நினைவுகளாய்... பாடித் திரிந்த பறவைகளாய்... வாழ்ந்து பறந்து போன பறவைகளான பழைய மாணவர்களை, ஒரே மரத்திற்குக் கீழ் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.ஐ.டி பழைய மாணவர் கூட்டமைப்பின் (IIT Madras Alumni Association) தற்போதைய வயது முப்பத்தி யேழு. கடந்த 1964-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி பழைய மாணவர் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

கடந்த 1991-ஆம் ஆண்டு 25 வருடம் நிறைவு பெற்றதை அடுத்து நிறைவு விழா நடத்தப் பட்டது. அந்த விழாவில் தங்களுக்கென்று தனியாக ஒரு அலுவலகம் ஐ.ஐ.டி வளாகத்திற் குள்ளாகவே இருந்தால் நலமாகயிருக்கும் என்று பழைய மாணவர்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் கருத்துத் தெரிவித்தார்கள். அதன்படி நிர்வாகம் 94-இல் இப்போது கூட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அலுவலகத்திற்கென்று ஊழியர்கள் வசதியையும் செய்து கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் தற்போது புதிய நவீன வசதிகள் அடங்கிய அலுவலகமொன்றையும் நிறுவி இந்தக் கூட்டமைப்பு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இது பழைய மாணவர் கூட்டமைப்பின் தலபுராணம். "பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமிடயேயான உறவுப் பாலத்தை அமைத்துத் தருவதோடு மட்டுமல்லாமல், புதிய வளர்ச்சிப் பணிகளையும் இக் கூட்டமைப்பின் மூலம் துவங்குவது என்பது போன்ற பணி களுக்காகவே இந்தக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப் பட்டது" என்று கூட்டமைப்பு உருவானதன் நோக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

நோக்கம், தலபுராணம் இவைகளெல்லாம் விட இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், இந்தக் கூட்டமைப்பு தற்போது தீட்டிச் செயல்படுத்தி வரும் பணிகளே!

IIT Madras Alumni Association சார்பாக ஐ.ஐ.டி வளாகத்தின் உள்ளே நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 100 கணினிகள் நிறைந்த ஒரு வகுப்பறையைக் கட்டுவதற்குத் தீர்மானித் திருக்கிறார்கள். டிஜிட்டல் லைப்ரேரி, Fiber optical Lab ஒன்றையும் நிறுவத் திட்ட மிட்டுள்ளனர். இதெல்லாம் வருங்காலத்தில் செய்யப் போகும் பணிகளுக்கான திட்டங்கள். அதுசரி! இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது. அங்குதான் ஐ.ஐ.டியின் பழைய மாணவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். (சாரி! நிற்கிறார்கள்)

கடந்த வருடத்தில் மட்டும் இங்கிருந்து படித்து முடித்து வெளியே சென்றவர்கள் மொத்தம் 998 பேர். இதுவரை 38 வருடத்தில் படித்து முடித்து வெளியே சென்றவர்கள் மட்டும் மொத்தம் 24,000 பேர். இத்தனை பேர் இருக்கையில் இவ்வளவு பணிகளைச் செய்ய முடியாதா என்ன என்கிற கேள்விகள் எழலாம். ஆனால் அது ஒன்றும் சாதாரண வேலையில்லை.

"எல்லோரும் இத்தகைய பணிகளில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் இது போன்ற அமைப்பு இருப்பதே தெரிவதில்லை. எனவே இவ்வாறு நாங்கள் செயல்பட்டு வருவதை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அனைவருக்கும் தெரியப்படுத்துகிற நோக்கத்தில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை Alma Mater என்ற பத்திரிகையை நடத்துகிறோம்.

அந்தப் பத்திரிகையை 7,000 பேருக்கு அனுப்புகிறோம். இது தவிர website (www.iitmaa.org) ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தளத்தில் ஐ.ஐ.டி பற்றிய எல்லா விபரங்களும் இருக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. அது போக மூன்று மாதத்திற்கு ஒரு முறை சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்து நடத்துகிறோம். ஒவ்வொரு வருடத்து மாணவர்களையும் ஒன்று திரட்ட அந்த வருடத்தில் படித்த ஒருவரை ஒருங்கிணைப் பாளராக நியமித்திருக்கிறோம். அது போக நாங்கள் நடத்துகிற E-Group-இல் 5000 பேர் பங்கு பெற்றுள்ளார்கள்" என்று பழைய மாணவர்களை ஒரே குடையின் கீழ் திரட்டு வதற்குண்டான பணிகளைப் பட்டியலிடுகிறார் P.M. வெங்கடேஷன். இவர் IIT Madras Alumni Association Executive Secretary ஆகப் பணி புரிகிறார்.

இவ்வாறு பழைய மாணவர்களை ஒன்று திரட்டி அவர்களிடமிருந்து வளர்ச்சிப் பணிகளுக்கான பணம் நன்கொடையாகத் திரட்டப்படுகிறது. திரட்டிய பணத்தைக் கொண்டே புதிய பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கங்கா விடுதியில் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. கோதாவரி விடுதிக்கு தொலைக்காட்சிப் பெட்டி தரப்பட்டிருக்கிறது. சரயூ பெண்கள் விடுதிக்கு கணிப்பொறி வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. ஜமுனா விடுதிக்குத் தேவையான சைக்கிள் நிறுத்தத்திற்கு வேண்டிய பண உதவியை அளித்திருக்கிறார்கள்... இப்படி நீண்டு கொண்டே போகிறது இவர்களின் பணிகள்...

இங்கு படித்து வெளிநாட்டில் வசிக்கும் பல மாணவர்கள் கோடிக் கணக்கில் பணம் நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். அதுபோக இந்தியாவிலுள்ள பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு நன்கொடைகளை அளிக்கிறார்கள். இவர்கள் அனைவரிடமும் யாரும் கேட்டுப் பெறுவதில்லை. அவர்களாகவே முன்வந்துதான் அளிக்கிறார்கள். சிலர் பணம் தருவதோடு மட்டும் எங்களுடைய பணி முடிந்து விட்டது என்று கருதுவதில்லை. தாங்களே முன் நின்று எல்லா வளர்ச்சிப் பணிகளையும் திட்டமிட்டு, பார்வையிட்டு முன்னெடுக்கின்றனர்.

சுமார் நான்கு கோடி செலவில் 'சரவதி' பெண்கள் விடுதி கட்டுவதற்கு எல்லா வகைகளிலும் குருராஜ் தேஷ்பாண்டே மற்றும் அவரது மனைவியான ஜெய்ஸ்ரீ தேஷ்பாண்டே இருவரும் முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டு செயலாற்றியிருக்கின்றனர். இந்த விடுதியில் 376 அறைகள் உள்ளன. இன்போஷிஸ் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவியான சுதாமூர்த்தி இருவரும் மூன்று கோடி ரூபாய் செலவில் மாணவர்களுக்கான உணவருந்தும் அறை யொன்றை கட்டுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்திருக்கிறார்கள். இந்த அறையில் ஒரே நேரத்தில் 600 பேர் வரை அமரும் வகையில் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள். இன் போஷிஸ் டெபுடி மேனேஜிங் டைரக்டர் கோபாலகிருஷ்ணன் கம்ப்யூட்டர்கள் நிறைந்த, மாணவர்களுக்கான 'Cyber cafe' ஒன்றை நிறுவித் தந்திருக்கிறார்.

ஒவ்வொரு வருடத்தில் வெளியே செல்லும் மாணவர்களும் தங்களது 25-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இங்கு ஒன்றிணைகிறார்கள். அவர்கள் ஒன்றிணைகிற சந்தர்ப்பத்தில் ஐ.ஐ.டிக்கு என்னவிதமான உதவிகள் தற்போது தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அவைகளைத் திட்டமிட்டு முடித்துத் தர உறுதிகளையும் தருகிறார்கள். 1974-இல் படித்து முடித்த மாணவர்கள் தங்களது 25-ஆவது நிறைவு நாள் விழாவின் போது 50 இலட்சம் திரட்டித் தந்துள்ளனர். அதே போல் 75-ஆம் வருடம் படித்தவர்கள் 25 இலட்சம் தந்திருக் கின்றனர். அடுத்த வருடத்தோடு 25-ஆம் வருடத்தைப் பூர்த்தி செய்யப் போகிறவர்கள் இப்போதே திட்டமிட்டு செயலாற்றத் துவங்கி விட்டனர். எல்லா பழைய மாணவர்களுக்கும் தங்களால் இயன்றவரை நன்கொடைகள் தர வேண்டுமென்கிற ஆர்வம் உள்ளுக்குள் ஊறிக் கிடக்கிறது.

"இங்கு படித்து விட்டுச் செல்லும் மாணவர் களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் பத்து வருடங்களில் அவர்கள் காலூன்ற ஆரம்பித்தவர்கள். இரண்டாவது பத்தாண்டில் வளர்ந்து வருகிறவர்கள். மூன்றாவது பத்தாண்டில் நன்றாகக் காலூன்றி விழுது விட்டு வளர்ந்தவர்கள்.
இந்த மூன்றாவது வகையினர்களே பழைய மாணவர் கூட்டமைப்பிற்கு மிகுதியான அளவு பணத்தை நன்கொடையாக அளிக்க முன் வருகிறார்கள். இவர்கள் பணம் மட்டும் அளிப்பதில்லை. இங்குள்ள புதிய மாணவர் களுக்குக் குருவாக விளங்குகிறார்கள். படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேண்டிய வேலை வாய்ப்பு வசதிக்கு ஆலோசனை தருகிறார்கள். பாடம் நடத்துகிறார்கள். எனவே பழைய மாணவர்களை நாங்கள் ஒன்று திரட்ட வேண்டிய தேவையிருக்கிறது" என்கிறார் வி.வரதராஜன். Executive office of alumni Affairs ஆகப் பணி புரிகிறார்.

வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றுடன் ஐ.ஐ.டி பழைய மாணவர்கள் கூட்டமைப்பு தங்களுடைய பழைய மாணவர்களின் பங்களிப்பை எதிர் நோக்கிக் காத்திருக்கிற அதே வேளையில், புதிய மாணவர்களையும் உற்சாகப்படுத்த தவறவில்லை. "பழைய மாணவர்களுடன் புதிய மாணவர்களுக்கு உறவை ஏற்படுத்தித் தருகி றோம். அவர்களுக்குப் பாடம் நடத்தச் சொல்கிறோம். இதன்மூலம் நாமும் முன்னேற வேண்டும். நாம் படித்த நிறுவனமும் முன்னேற வேண்டும் என்கிற அடிப்படையான குணத்தை புதிய மாணவர்களிடம் உருவாக்க முயல் கிறோம். அவர்கள் படித்து முடித்ததும் செல்ல வேண்டிய வேலை வாய்ப்புகள் குறித்து ஆலோசனை தருகிறோம். அதனால் புதிய மாணவர்களும் எங்களுக்கு வேண்டிய எல்லா ஒத்துழைப்பையும் செய்து தருகிறார்கள்" என்கிறார் P.M. வெங்கடேஷன்.

"ஐ.ஐ.டி பழைய மாணவர்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்த்து நாட்டிலுள்ள ஒவ்வொரு கல்லூரி மாணவர்களும் இது போல் தாங்கள் படித்த கல்லூரியையும் முன்னுக்குக் கொண்டு வர முன்வர வேண்டும். நாங்கள் நாட்டிலுள்ள மற்ற கல்லூரி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறோம். என்பதில் எங்களுக்கு எல்லையில்லா பெருமை" என்கிறார் ஐ.ஐ.டியின் பழைய மாணவரொருவர்.

"இதுவரை 24,000 பேர் படித்து முடித்துள்ள னர். இதில் பலபேர் வெளிநாடுகளில் பணி புரிகின்றனர். அமெரிக்காவில் மட்டும் சுமார் நானூறு பேர் பேராசிரியராகப் பணி புரிகின்ற னர். இந் நிலைமை மாற வேண்டும். இன்னும் பத்தாண்டுகளில், உலகத்தில் எல்லா மூலை களிலிருந்தும் மாணவர்கள் ஐ.ஐ.டிக்கு வர வேண்டும். படித்து முடித்தவர்களும் ஐ.ஐ.டியில் பணிபுரிய வர ஆசைப்பட வேண்டு. அந்தளவிற்கு ஐ.ஐ.டியை உலகத் தரத்துக்கு உயர்த்துவதே எங்களுடைய நோக்கம்." என்று உறுதிபட நம்பிக்கையுடன் கூறுகிறார் வி.வரதராஜன்.

அவருடைய கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வெளிவரும் போது புதிய மாணவர்கள் சிலர் சாலையைக் கடந்து வகுப்பறைகளுக்குள் நுழைந்து கொண்டி ருந்தனர். தாங்களும் ஒருநாள் ஐ.ஐ.டிக்கு கோடி கோடியாய் நன்கொடை அளித்து, புதிய திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்த உதவி புரியப் போகிறோம் என்ற விஷயம், அந்த மாணவர்களுக்குத் தெரியாமலிருக்காது!

பசுமை நிறைந்த நினைவுகளை மீண்டும் புதுப்பிக்க... தொடர்பு கொள்ள விரும்பு பவர்கள்...

IIT Madras alumni association
HSB-266, i.i.t, chennai-600036
ph: 044-4458765
E-mail: alumni@acer.iitm.ernet.in
website: www.iitmaa.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சரவணன்
More

அஞ்சல் தலைகள்
அஞ்சல் தலை(வர்)கள்
கண்ணீர் தேசம்
கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு
கீதாபென்னெட் பக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline