|
செப்டம்பர் 11ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில்...... |
|
- ஆர். ஜெ.|ஜனவரி 2002| |
|
|
|
அதுவும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகான என்னுடைய அமெரிக்கப் பிராயணம் சற்றும் எதிர்பாராதது. வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வேலை பார்த்து கடைசியாக 'எங்கும் சுற்றி ரங்கனை அடை' என்ற பெரியோர்களின் வாக்குப் பிரகாரம் ஸ்ரீரங்கத்தில் நிம்மதியான ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த என்னையும், என் மனைவியையும் என் மகள் பிரசவத்திற்காக அமெரிக்கா இழுத்தது. பகவத் சங்கல்பம் என்று நினைத்து எங்களை தயார் செய்து கொண்டி ருந்தோம். 72 வயதில் அமெரிக்க பயணம். 15 வருஷம் தென்கிழக்கு ஆசியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தாலும், இந்தப் பயணம் சற்று வியப்பாகவும், சற்று கவலையாகவும் நம் தற்போதைய உடல்நிலைக்கு ஒத்துவருமா என்ற கவலையாகவும் இருந்தது.
செப்டம்பர் 11 மணி இந்திய நேரம் மாலை 6.30 மணி. அந்த நேரத்தில் தற்செயலாக CNN சேனலை பார்த்தேன். என் கண்களை என்னா லேயே நம்பமுடியவில்லை. ஒரு விமானம், உலக வர்த்தக கட்டிடத்தை நோக்கி பாய்ந்தது. மறுபக்கம் ஒரே நெருப்பு குழம்பு, விமானத்தின் ஒரு பகுதி நெருப்பு குழம்பை மீறி சிதறி விழுந்தது.
நியூயார்க், வாஷிங்டன் மீது விமான தாக்குதல் பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். அதுவும் ராணுவ பலத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் ஒருநாட்டில் ஒரு சாதாரணமான மனிதர்கள் அதுவும் ஒரு சின்னகத்தியை உபயோகித்து விமானத்தை கடத்தியது யாரும் நினைக்க முடியாத ஒரு பயங்கரவாத செயல். இதைச் செய்து எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக் கியது, நம் பண்டைய கால, தேவாசுர யுத்தத்தை கண்முன் நிறுத்தியது. மற்றபடி விவரங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.
எங்களுடைய அமெரிக்க பயணம் ஏற்கனவே திட்டமிட்ட தேதி நவம்பர் முதல் வாரம். அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் செப்டம்பர் முதல் தேதி விசாவிற்கு அப்ளை செய்திருந்தோம்.
மேற்கண்ட சம்பவத்தினால் எங்களுக்கு விசா கிடைக்காது என்று தீர்மானித்திருந்த வேளையில், செப் 10-ஆம் தேதி விசா கையெழுத்தாகி, 12-ஆம் தேதி எங்களுக்குக் கிடைத்தது ஒரு ஆச்சர்யமான விஷயம். 12-ஆம் தேதியிலிருந்து சென்னை அமெரிக்கன் காரியாலயம் 10 நாட்களுக்கு மூடப்பட்டது. இது பகவத் செயல் இல்லாமல் வேறு என்னவென்று நினைக்க முடியும்.
பிரயாண நாட்கள் நெருங்க, நெருங்க எங்களுக்குக் கவலை அதிகமாகிவிட்டது. பெண் பிரசவத்திற்கு வேண்டிய லேகியம், மிளகாய்ப்பொடி இப்படி அங்கு கிடைக்காத சாமான்களை லிஸ்ட் போட்டு வாங்கி வைத்திருந் தோம். ஆனால் அமெரிக்காவில் இவைகள் எல்லாவற்றையும் செப் 11-ஆம் தேதிக்கு பிறகு அனுமதிக்காமல் தூக்கி எறிந்துவிடுகிறார்கள் என்று செய்திகள் வந்தன. அமெரிக்காவில் விமானநிலையத்தில் பாதுகாப்பு ரொம்பவும் தீவிரமாக உள்ளது. சந்தேகத்துக்கிடமான பேர்களை கைது செய்து வருகிறார்கள். இப்படியாக வந்த செய்திகள் அனைத்தும் கவலையை அதிகரிக்கும் செய்திகளே ! எங்களுக்கு மலேசியன் ஏல்லைன்ஸ் மூலம் டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. |
|
ஒருவாராக நாங்கள் புறப்படும் தினம் நவம்பர் 6-ஆம்தேதியும் வந்தவுடன் கிளம்பினோம். கிளம்பிய விமானம் காலை 7.30 மணிக்கு (கோலாம்பூர் நேரம்) விமானம் கோலாலம்பூரை அடைந்தது. அமெரிக்கா செல்வதற்கு முன்பு முதலில் கோலாம்பூரில் 8 மணிநேரம் தங்க வேண்டும். மீண்டும் அங்கிருந்து எங்கள் அடுத்த கட்ட பயணம் மாலை 3.30 மணிக்கு. அமெரிக்கா சென்றடைந்ததும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நாங்கள் சென்ற விமானத்தில் 30% சதவிகித பிரயாணிகள்தான் இருந்தார்கள். செப்டம்பர் 11-ஆம் தேதி சம்பவத்தின் விளைவு இது என்று ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித் தார்கள்.
ஒருவழியாக மாலை 4 மணி (அமெரிக்க நேரம்) லாஸ் ஏஞ்ஜல்ஸ் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முதலில் இமிகிரேஷன் செக் கிட்டதட்ட 40 கவுண்டர்களில் நடந்தது. பல்வேறு தேசத்தினர்களும் அமெரிக்க பிரஜை களும் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு வருக்கும் 5 நிமிஷம் கூட பிடிக்கவில்லை. யார் அழைப்பின் பேரில் வந்திருக்கிறீர்கள்? எத்தனை மாதம் தங்கப்போகிறீர்கள்? இரண்டே கேள்விகள்தான்.
அடுத்த கட்டம் கஸ்டம் செக். எங்களிடம் மிளகாய்ப்பொடி, லேகியம், மருந்து (நாட்டு) சாமான்கள் துணிமணிகள் தவிர ஒன்றும் இல்லாததால் கிரீன் சேனலில் வெகு சீக்கிரமாக அனுப்பிவிட்டார்கள். லேகியம் பிழைத்தது என்பதில் என் மனைவிக்கு ரொம்பவும் சந்தோஷம். லாஸ்ஏஞ்ஜல்ஸ் விமான நிலையம் தான் விமானபோக்குவரத்து அதிகமான நிலையம். வெளிநாட்டு பயணிகள் வெளியே வருவதற்கு 3-4 மணிநேரம் ஆகும். நாங்கள் அரைமணி நேரத்தில் வெளியே வந்தததால், என் மாப்பிள்ளைக்கோ ஒரே ஆச்சர்யம்!
நாங்கள் கற்பனை செய்து கொண்டது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. அமெரிக்க இதயம் வழக்கம் போல ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. எந்தப் பயங்கரவாதத்திற்கும் பயப்பட வேண்டியதில்லை. எதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை. இதை நம்பிக்கையுடன்தான் இந்தியாவில் நாமும் கடந்த பல வருஷங்களாகச் சமாளித்து வருகிறோம். செப்டம்பர் 11-ஆம் தேதி, காலகட்டத்தில் பின்நோக்கி தள்ளப்பட்டு விட்டது. அது ஒரு கெட்ட கனவு என்று உதறித் தள்ளிவிட்டு அமெரிக்கா இயல்பான வாழ்க்கையைத் தொடர்ந்து கடைபிடித்து வருவது ரொம்பவும் மகிழ்ச்சிகரமான சம்பவம்.
ஆர். ஜெ. |
|
|
|
|
|
|
|