|
ஆண்டிப்பட்டி அரசிபட்டியாகுமா ? |
|
- சரவணன்|பிப்ரவரி 2002| |
|
|
|
ஒவ்வொரு சட்ட சபைத் தேர்தல் முடிந்து கொஞ்ச காலம் ஆனதும் ஏதாவதொரு தொகுதிக்கென்று இடைத் தேர்தல் நடப்பதென்பது சகஜமான விஷயம்தான். ஆனால் இந்த முறை நடைபெறும் ஆண்டிபட்டி இடைத் தேர்தல் தமிழக மற்றும் இந்திய அரசியலில் பரபரப்பு மிகுந்த ஒன்றாக மாற்றம் பெற்றிருக் கிறது.
ஆண்டிபட்டியில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றால், முதல்வர். அப்புறம்; பரபரப்புக்குப் பஞ்சமா, என்ன?
தமிழகத்தில் சைதாப்பேட்டை, வாணியம்பாடி ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் பிப்ரவரி 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்¨ பயடுத்து இந்த 3 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பில் முறைகேடு நடந்ததாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தன.
புகார் மனுவைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், மத்திய தேர்தல் ஆணைய செயலர் கே.ஜே. ராவை தமிழகத்துக்கு அனுப்பி விசாரணை நடத்த பணித்தது. விசாரணையை மேற்கொண்ட ராவ் சைதாப்பேட்டை, வாணியம் பாடி ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக ஆணையத்திற்கு பரிந்துரைத்தார்.
அதையடுத்து இவ்விரு தொகுதிகளிலும் வாக்காளர் சேர்ப்பு பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து சைதை, வாணியம் பாடி தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப் படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆண்டிபட்டி வாக்காளர் பட்டியலில் முறை கேடு எதுவும் நடக்கவில்லை என்று அங்கு விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரியான கே.ஜே.ராவ் கூறியதை அடுத்து ஆண்டிபட்டிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தீர்மானமானது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் பலமாக எதிர்த்தன. ஆண்டிபட்டி தேர்தலை நிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதிக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். தி.மு.க எம்பிக்களும் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்தனர். திமுகவின் புகார்களை நிராகரித்த தேர்தல் ஆணையம் ஆண்டிப் பட்டியில் திட்டமிட்டபடி பிப்ரவரி 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.
இதையடுத்து ஆண்டிபட்டியில் மட்டும் இடைத் தேர்தலை நடத்துவது தேர்தல் கமிஷனரின் தவறான முடிவு என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைப் பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறினார். த.மா.கா., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஆண்டிப்பட்டித் தொகுதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.
பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆண்டிப் பட்டித் தொகுதியில் ஜனவரி 17ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. தி.மு.க சார்பில் வைகை சேகரும், ம.தி.மு.க சார்பில் ஜெயச்சந்திரனும், ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான ஜனவரி 24-ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். ஜனவரி 25-ஆம் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 2 சுயேச்சை வேட்பாளர்கள், 1 மாற்று வேட்பாளர் ஆகியோருடைய மனுக் களைத் தவிர ஜெயலலிதா உள்ளிட்ட மற்றவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டது. |
|
ஜனவரி 24ம் தேதி ஆண்டிப்பட்டித் தொகுதி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆண்டிப்பட்டி தி.மு.க வேட்பாளர் வைகை சேகர் தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரணையை ஜனவரி 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதாவுக்கு எதிரான ஓட்டுக்களைத் திரட்டுவதற்காக காங்கிரஸ், த.மா.கா, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
கருணாநிதியின் வேண்டுகோளை, "பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துள்ள தி.மு.க, அ.இ.அ.தி.மு.கவுக்கு ஆண்டிபட்டி தொகுதியில் ஆதரவளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆண்டிபட்டியில் எதிர்கட்சியினர் ஆதரவு தரவேண்டும் என்று கேட்பதற்கு திமுகவுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. ஆண்டிபட்டி தொகுதி வாக்காளர்கள் தங்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்" என்று சொல்லி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சங்கரய்யா மறுத்துள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரான வைகை சேகருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.கவும் போட்டியிடும் இந்தச் சூழலில் தி.மு.கவுக்கு ஆதரவாகப் பிரச்சாரமா? எனும் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, " தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான ம.தி.மு.கவும் இத் தொகுதியில் போட்டியிடுவதால் தி.மு.கவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. ஆண்டிபட்டியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று கிருபாநிதி கூறியுள்ளார்.
மும்முனையாக நடைபெறும் இந்தப் போட்டி யில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் களமிறங்கியிருக்கிறது ஜெய லலிதாவின் அணி. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஆண்டி பட்டியை இப்போதே முற்றுகையிட்டுவிட்டனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகைதரும் ஜெயலலிதா தங்குவதற்காக பங்களாக்களை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அ.தி.மு.க, தி.மு.க இடையிலான கடுமையான மோதல் என்றே சொல்லலாம்.
கருணாநிதி கைது, பத்திரிகையாளர் கைது, பேரணிக் கலவரம், விலைவாசி உயர்வுகள், போக்குவரத்துத் துறை வேலை நிறுத்தம் போன்ற பிரச்சனைகளையெல்லாம் பிரச்சாரத் தில் பயன்படுத்தி ஜெயித்து விடலாம் என்பது கருணாநிதியின் கணக்கு. ஆனால் மாறாக ஜெயலலிதாவுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அவ்வளவு பிரபலமானவரா? என்பதும் அதிமுக்கியக் கேள்வி. ஜெயலலிதாவை எதிர்க்கும் வைகை சேகர் என்ற சு.பால சுந்தரம், கடந்த 1996-ஆம் ஆண்டு தேர்தலில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 18 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பின்னர் தி.மு.கவில் இணைந்து அக் கட்சியின் ஒன்றியச் செயலாளராகப் பதவியேற்று இப்போது தேர்தலைச் சந்திக்கிறார்.
முடிவு என்ன? 'ஆண்டி'பட்டி 'அரசி'பட்டியாக மாறுமா? என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள பிப்ரவரி 24-ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்!
சரவணன் |
|
|
|
|
|
|
|