|
இணையத்தில் சங்கத் தமிழ்த்தேர் |
|
- சரவணன்|பிப்ரவரி 2002| |
|
|
|
www.tamil.net/projectmadurai
வே.சா. அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளைத் திரட்ட அலைந்ததைக் கதை கதையாய்ச் சொல்வார்கள். பழைய இலக்கிய ஓலைச் சுவடிகளை அடுப்பெரிக்க நம்மவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற உண்மையை இப்போது நினைத்துப் பார்த்தாலும், நெஞ்சு பதறும்!
குப்பைகள் என நினைத்து மக்களால் தூக்கி எறியப்பட்ட ஓலைச் சுவடிகளையெல்லாம் சேகரித்து இன்றைக்கு நாம் பார்க்கிறோமே! அது போல் புத்தக வடிவாய்த் தந்து தமிழிலக்கிய உலகுக்குப் பெருஞ் சேவையாற்றிய உ.வே.சா.வின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமிழிலக்கியங்களை இணையத்தில் உலவ விடும் அரும்பணியை மேற்கொண்டிருக் கிறார்கள் மதுரை புராஜெக்ட் குழுவினர்கள்.
இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழ்மொழியின் தலைசிறந்த இலக்கியங்களை தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் தமிழார்வம் மிகுந்த பிறர்க்கும் இணையம் மூலம் எளிதாக வும் இலவசமாகவும் கிடைக்க வழி செய்வதே கணினி அறிந்த தமிழன்பர்கள் ஆர்வத்தோடு தொடங்கிச் சுறுசுறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கும் மதுரைத் திட்டத்தின் நோக்கம்.
சாதாரண காகிதத் தாள்களில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அச்சான சில நூல்கள், காலத்தின் பழமையால் மெல்ல மெல்ல செல்லரித்து உதிர்ந்து போகும் அளவுக்கு பழைய நூல்களாகி விட்டன. அவைகளை ஆவணக் காப்பகங்களில் மிகவும் சிரமப்பட்டுத் தான் பாதுகாக்க வேண்டியுள்ளன. இவைகளை யெல்லாம் மீண்டும் இணையத்தில் இடம்பெறச் செய்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பாலா பிள்ளையும் அவரது நண்பர் நெடுமாறனும் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் இணையம் என்ற ஓர் அமைப்பைத் தொடங்கினார்கள். உலகின் பல நாடுகளில் வாழும் பல நாடுகளையும் சேர்ந்த தமிழ் மக்கள் பலர் இந்தத் தமிழ் இணையத்தில் இணைந்து மின்னஞ்சல்கள் வாயிலாகப் பல சுவையான பயனுள்ள கருத்துப் பரிமாறல்களைச் செய்து வந்தார்கள். தமிழிலேயே மின்னஞ்சல் களை அனுப்பவும் படிக்கவும் தேவையான தமிழ் எழுத்துக்களையும் அமைப்பாளர்கள் தயாரித்து உறுப்பினருக்கு இலவசமாகவே வழங்கி னார்கள்.
இந்த அரும்பணியின் தொடர்ச்சியாக 'PROJECT MADURAI' என்ற ஒரு செயல் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு 'மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்' என்ற அழகான தமிழ்ப் பெயரும் சூட்டப் பட்டது. இந்த அமைப்பில் தமிழில் படைக்கப்பட்ட எல்லாப் பண்டைய இலக்கியங்களும் தற்காலத் தமிழ்ப் படைப்புகளும் மின்னெழுத்துக்களில் பதிந்து பாதுகாக்கத் தீர்மானிக்கப் பட்டது. அதன்படி பதிவு வேலைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மின்தொகுப்புத் திட்டத்துக்கு சுவிட்சர்லாந்தில் வாழும் முனைவர் கல்யாண சுந்தரம் தலைமைப் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் வாழும் முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் இணைத் தலைவராக இருந்து அரிய சேவை புரிந்து வருகின்றார். தமிழ் இணைய கணினிப் பொறுப்பாளராக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாலாப் பிள்ளையும், பொறுப்பாளர்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த முத்து நெடுமாறன், கனடாவிலுள்ள டாக்டர் கே. சீனிவாசன், அமெரிக்காவிலுள்ள சண்முகவேல் பொன் னையா, சென்னையிலுள்ள டி, நாராயணனும், சட்ட ஆலோசகராக காந்தி கண்ணதாசனும் பணியாற்றுகின்றனர். |
|
மதுரைத் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் தங்களிடமுள்ள பழைய இலக்கியங்களை மின் எழுத்துக்களில் கணினி யில் பதிவு செய்து ஈ-மெயில் மூலம் இந்தக் குழுவினர்களுக்கு அனுப்பினால், அதை உடனடியாகப் பிரசுரம் செய்கிறார்கள். அப்படிப் பதிவு செய்து கொடுத்தவரின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களும் பதிவு செய்து வைக்கப் படுகின்றன.
ஏற்கெனவே திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, திருவாசகம், திருமந்திரம், திவ்யப் பிரபந்தம், பாரதி, பாரதிதாசன் கவிதைகள் போன்றவை இத்திட்டத்தின் மூலம் மின்னிலக்கியங்களாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றை இப்பொழுது இணைவலையில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துக்களில் படிக்கலாம். தற்கால எழுத்தாளர்களின் இலக்கியங்களை அவர்களுடைய ஒப்புதல் பெற்று இணையத்தில் இப்படி இடம்பெறச் செய்வதும் மதுரைத் திட்டத்தில் ஒரு பகுதிதான்.
திருப்புகழ், திருவருட்பா, சீறாப் புராணம், கம்ப ராமாயணம், நளவெண்பா, திருவிசைப்பா, நன்னூல், திருவாசகம் ஆங்கில மொழியாக்கம், அஷ்டப் பிரபந்தம், பதிற்றுப்பத்து, பாரத சக்தி மகா காவியம், முருகன் அல்லது அழகு, தற்கால இலங்கைத் தமிழ் இலக்கியம், பண்டைய இலங்கைத் தமிழ் இலக்கியம் போன்ற இலக்கியங்களை இடம்பெறச் செய்யும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டம் குறித்து இலங்கைக்கான இணைப்பாளரான எச்.எச். விக்கிரமசிங்க, "இயற்கையின் சீற்றத்தாலும், செயற்கையான காரணங்களாலும் பல தமிழ் இலக்கியங்கள் அழிந்திருக்கின்றன. பல்லாண்டுகள் போற்றி வளர்த்த சிந்தனைகள் இவ்விதம் அழிந்து போவதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே மதுரை செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழரின் முக்கிய கருவூலங்களைப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுதிச் சேமித்து வைப்பதுதான் இத்திட்டத்தின் நோகம்" எனக் குறிப்பிடுகிறார்.
உலகமெல்லாம் வாழ்ந்து வரும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் இணைந்து பணியாற்றி வரும் மதுரைத் திட்டத்தில் நீங்களும் கைகோர்த்துக் கொள்ளலாம்...
கைகோர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் www.tamil.net/projectmadurai என்ற இணைய முகவரியில் மேலதிகமான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
சரவணன் |
|
|
|
|
|
|
|