|
மார்ச் 2002 : வாசகர் கடிதம் |
|
- |மார்ச் 2002| |
|
|
|
டிசம்பர் மாத இதழில் மனுபாரதியின் "சிகரத்தை நோக்கி" சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வெகு சரளமான நடையில், யதார்தமான உரையாடல்களின் இடையே வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த கருத்துக்கள் இழையோட, ரம்யமான சூழலை அழகாய் படம் பிடித்து... ஒரு நல்ல சிறுகதை. நாயகியின் மனச்சிக்கலை ஓவியப்பெண்ணின் பார்வையில் வெகு இயல்பாய் தீர்த்து வைக்கிறார். அலட்டலில்லாத அருமையான கதை.
ஆனந்த் ராகவ், பாங்காக்
******
ஆசிரியர் பக்கம் பிப்ரவரி மாதம் மிக சிறப்பாக அமைந்திருந்தது. அசோகன் அவர்களின் தமிழ் ஆர்வம் கண்டோம். இன்று தமிழ் பத்திரிகை மற்றும் தமிழ் வனொலி இங்கு வந்த போதிலும், நம் மக்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுவதில்லை. குழந்தை கள் ஆங்கிலத்தை தானாக கற்றுக் கொள்வார்கள், நாம் அவர்களுக்கு தமிழில் பேச கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஏந்த விதமான முயற்சிகளும் எடுப்பதாகத் தெரியவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது.
மற்றபடி பிப்ரவரி மாத இதழில் "சுகுணா" அவர்களின் பேட்டி மிக அருமையாக இருந்தது. Good job by Alex. மற்றும் "ஸ்ரீ கோண்டு" அவர்களின் Dialog..மிகவும் ரசித்தேன்.
ஸ்ரீகாந்த் R, மில்பிடாஸ் (Milpitas)
******
தென்றலில் வெளியாகும் பலபகுதிகள் பாராட்டும் விதமாகவே உள்ளது. பத்திரிகையின் தரத்தைபோல் காகிதத்தின் தரமும் உயர்வாகவே உள்ளது.
பழுப்பு நிறத்தாளில் மாதாந்திர, வாராந்திர பத்திரிகைகள் யானைவிலை, குதிரைவிலையுடன், விஷயங்களைவிட விளம்பரங்கள் முக்கியம்பெற்று, லாபநோக்கம் ஒன்றையே கருத்தில் கொண்டு மழைகால காளான்களை போல் தோன்றும் இக்காலத்தில் இப்படியும் ஒன்றா? என்று வியக்க வைக்கிறது.
உங்களிடம் சிறு விண்ணப்பம்.
காடு, மலை, கடல் பல கடந்து வந்த எங்களுக்கு இந்திரலோகம் போன்ற இந்நாட்டில் மக்கள் பேசும் ''தேவபாஷை'' புரியவில்லை. வாசகர் கடிதம் பகுதியில் எழுதும் ரசிகர்களின் பெயர்களுடன் தொலைபேசி எண்ணையும் வெளியிட்டு எங்களிடையே புதிய நட்பு வட்டத்தை ஏற்படுத்தினால் - ''மனித பாஷை''யை காது குளிர கேட்டு மகிழ்வோம்.
எங்கள் நட்பும் சங்கிலி பிணைப்பாக தொடரும்.
நட்புக்காக ஏங்கும்
இந்திரா காசிநாதன், சன்னிவேல், தொலைபேசி 1-650-9619641
******
சென்ற ஒரு வருடமாக 'தென்றல்' இதழைத் தொடர்ந்து வாசித்து வரும் நான் மாதா மாதம் வரும் புது இதழுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மாதந்தோறும் வரும் தமிழ்ப்பண்டிகையை ஒட்டி நீங்கள் பிரசுரிக்கும் 'மாயாபஜார்' சமையல் பகுதி - மெச்சத் தகுந்தது. மார்கழி மாதத்திற்கு ஏற்ப திருவாதிரை களியும், குழம்பும் தை மாதத்திற்கு ஏற்ப பொங்கல் வகைகளும் பிசைந்த சாதங்களும் ரொம்ப பிரமாதம். எல்லாவிதமான சமையல் பகுதிகளும் ரொம்பவே நன்றாக அமைகின்றன. சமயத்திற்கு ஏற்ப பிரசுரிப்பதற்கு ரொம்ப நன்றி.
அனைத்துப் பகுதிகளுடன் மருத்துவ பகுதியையும் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சூர்யா கிருஷ்ணன், கலி·போர்னியா.
******
எனது சிறுகதை 'சமையல் அறை ராணி'க்கு (தென்றல் ஜனவரி இதழ்) வாசகர் மீரா சிவக்குமாரின் காரசாரமான விமர்சனமும், வாசகர் இந்திரா காசிநாதனின் இனிப்பான விமர்சனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல அமைந்து விட்டன! மிக்க நன்றி!!
ஹெர்கூலீஸ் சுந்தரம்.
****** |
|
பிப்பரவரி 27ல் என் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு பெங்களூர் திரும்புகின்றேன். அங்கிருந்து 'தென்றலு'க்கு கவிதைகள் அனுப்பலாமா?
எஸ். சரோஜா ராவ்
******
இந்நாளில் பெயர் நன்கு தெரிந்த பல தமிழகப் பத்திரிகைகள் கீழ்த்தரமான மொழியோடும் அதனினினும் கீழான பொருளோடும் வெளி வரும்போது அமெரிக்காவில் இருந்து இவ்வாறு தரக்கவனத்தோடு நீங்கள் செயல்படுவது போற்றத்தக்கது.
அடுத்துப் பாஞ்சாலி சபதம் என்னும் நாடகம் பற்றிய கட்டுரைகளைப் படித்தேன். இத்தகைய சிறந்த ஒரு நிகழ்ச்சியை முகப்புக் கதையாகக் கொண்டு அது சுட்டும் சாதனையை மதித்த மைக்குப் பாராட்டுகள்.
பாஞ்சாலி, துச்சாதனன் ஆகிய மையப் பாத்திரங்களில் நடித்தவர் படங்களைக் காணோம்! அவற்றையும் வெளியிட்டால் அவர்களைப் பாராட்டுவதும் இம்மாதிரி உயர்ந்த முயற்சிகளில் ஈடுபடுவோரை ஊக்குவதும் ஆகும்.
பாஞ்சாலி சபதம் என்னும் இந்த வளைகுடாத் தமிழரின் செய்யுள்வசன நாடகம் தமிழுல கத்தின் வரலாற்றில் பெரிய திருப்புமுனையாகும் என்பதில் ஐயமில்லை. கடந்த பத்திருபது ஆண்டுகளாக நகைச்சுவை என்று ஓரளவு மரியாதையாகத் தொடங்கி இன்று கோமாளித்தனத்தில் நிற்கும் தமிழ் நாடகக் கலை(கொலை?) இந்த அரங்கேற்றத்தால் பெரியளவில் புத்துயிர் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. படித்தவுடனேயே புல்லரித்தது.
தமிழ்ப்பண்பாட்டின் நிலையெண்ணி வருந்தி யோரின் கனவாக இருந்ததைச் சடக்கென நனவாக்கியுள்ளது இந்த நாடகக் குழு.
அதற்கு அதன் தோற்றுநரும் இயக்குநரும் ஆன மணிவண்ணனுக்கும் வசனவடிப்பாளர் மதுர பாரதிக்கும் முதற் பாராட்டுகள்; அவர்கள் கருத்துக்கு இசைய உள்ளமும் உடலும் செலுத்திச் செயல் படுத்திய நடிகர்களுக்கும் பாராட்டுகள் ஆகுக.
பெ.சந்திரசேகரன், அட்லாண்டா, அமெரிக்க.
******
சென்ற இதழில் பாஞ்சாலி சபதம் நாடகம் பற்றிய பகுதியில் பாஞ்சாலியாக நடித்தவர் படத்தை பதிப்பிக்க இயலவில்லை. இந்த இதழில் பக்கம் 52ல் உள்ளது.
ஆசிரியர். |
|
|
|
|
|
|
|