|
|
டிரங்க் ரோட்டில் பேரிரைச் சலோடு அந்த பஸ் போய்க் கொண்டிருந்தது. தனக்கு நேர் எதிரில் மூன்று வரிசைகளுக்கு அப்பால் நான்காவது வரிசையில் சன்னலோரமாக உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபனின் பக்கம் தன் பார்வை திரும்பக் கூடாது என்ற சித்த உறுதியுடன், ஓடுகின்ற பஸ்ஸின் சன்னல் வழியாக, சாலையோரக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் கன்னிகா ஸ்தீரியின் பார்வையில் அந்தக் காட்சி பட்டது.
தலையில் புல்லுக் கட்டு; இடுப்பி லிருக்கும் கைக்குழந்தை அந்த விவசாயப் பெண்ணின் திறந்த மார்பில் உறங்கிக் கொண்டி ருந்தது. தாயிடம் பால் குடித்துக் கொண்டே தூங்கிப்போயிருக்கும். சாய்ந்து வீசும் மாலைவெயில் கண்ணில் படாதவாறு ஒரு கையால் குழந்தையை அணைத்துக்கொண்டு மற்றொரு கையை நெற்றிக்கு நேரே பிடித்து, சாலையில் ஓடிவரும் பஸ்ஸைப் பார்த்துக் கொண்டிருந்த அவளை பஸ் கடந்த பின்தான் இந்தக் கன்னிகா ஸ்திரீ பார்க்க முடிந்தது. அந்த இரண்டு கன்னிகா ஸ்திரீகளுமே பஸ் போகிற பக்கம் அல்லாமல் பின் புறம் நோக்கி உட்கார்ந்திருந்தனர்.
அந்த விவசாயப் பெண், குழந்தையோடு நின்றிருந்த அந்தக் காட்சி, இந்த இளம் கன்னிகா ஸ்திரீக்கு என்ன சுகத்தைத் தந்ததோ - முகத்தில் ஒரு புதிய ஒளி வீச, சன்னலுக்கு வெளியே கொஞ்சம் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். நீலநிறத் தலையணி வஸ்திரம் கன்னத்தில் படபடத்தது. தன்னை இவள் பார்ப்பதை அறிந்த விவசாயப் பெண் புன்னகை பூத்தாள். இவளும் பதிலுக்குத் தலை அசைத்தாள்...
''கருவிலாக் கருத்தரித்துக் கன்னித் தாயாகி உருவிலானை மனித உருவினில் உலகுக் களித்த...''
அவள் உதடுகள் முணுமுணுத்தன. மனசில், அந்த விவசாயப் பெண்ணின் தோற்றம், தங்கள் மடத்து வாயிலில் கையில் தெய்வ குமரனை அரவணைத்து நிற்கும் புனிதமேரிச் சிலைபோல் பதிந்தது. பார்வையில் அந்த விவசாயப் பெண்ணின் உருவம் மறைய மறைய, பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் பஸ்ஸின் போக்கில் திரும்பி மீண்டும் நான்காவது வரிசையில் உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபனின் முகத்தில் வந்து நின்றது.
அவன் அவளையே - அந்தக் கன்னிகா ஸ்திரீயின் வட்ட வடிவமாய், நீலமும் கறுப்பும் கலந்த அங்கிக்கு வெளியே தெரியும் முகத்தை மட்டுமே - பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு உடம்பு சிலிர்த்தது. கண்கள் பட படத்தன. சடக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
''ஏன்? அவன் அழகாகத்தானே இருக்கிறான் ! அழகு இருந்தால்?... அதுதான் பாபம். பாபத்தின் விளைவு - பாபமூட்டைதான் ! மனித உரு உலகில் பிறப்பதே... பிறவியே... பாவத்தின் பலன்தானே? விலக்கப்பட்ட கனியை விரும்பித் தின்னா மலிருந்தால்.... ஆதாம் ஏவாளின் சந்ததி ஏது? ஆதாமும் ஏவாளும் பிதாவால் புனிதமாகப் படைக்கப்பட்டனர்.
''ஆனால் அவர்கள்? விலக்கப்பட்ட கனியை உண்டதன் பலனாய் பாபிகளானார்கள். அவர்களது பாபத்தின் விளைவாய், ''இந்த மனிதர்கள் அனை வரும்... நானும், என் பக்கத்தில் உட்கார்ந்திருக் கிறார்களே... யாரோ பெற்றெடுத்து எங்கோ எறிந்து விட்டுப்போன மூன்றுநாள் வயதான அநாதைச் சிசு வான என்னை எடுத்து மடத்தில் சேர்த்து வளர்த்துத் தன்னைப்போல் ஒரு கிறிஸ்துவ கன்னிகா ஸ்திரீ யாக்கிய என் தாய் இன்விலடாவும், சற்று நேரத்துக்கு முன்பார்த்த அந்தக் கிராமத்து ஏழைத் தாயும், அவள் கையிலிருந்த சிசுவும், அதோ என்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றானே அந்த இளைஞன்...அவனும், பிறந்திருக்கிறார்கள். பாவிகள்... மனிதர்கள் பாவிகள்! விலக்கப்பட்ட விஷக்கனியில் புழுத்த புழுக்கள்! விரியன் பாம்புகள் !....
பஸ் கடகடத்து ஓடிக்கொண்டே இருந்தது.
அவள் கண்கள் மறுபடியும் பஸ்ஸிற்குள் திரும்பும் போது அந்த வாலிபன் மீது விழுந்து, உடனே விலகி மறுபடியும் திரும்பியபோது அவள் எதிரே அமர்ந் திருந்த ஒரு பெண்ணின் மடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயதுக் குழந்தையொன்று தன் அழகிய சிரிப்பால் அவள் நெஞ்சைக் குழைத்தது.
அவள் குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். குழந்தை அவளை நோக்கித் தாவியது. தாயின் மடியைவிட்டு இறங்கி அவள் பக்கத்திலிருந்த கிழவி இன்விலடாவின் முழந்தாளைப் பிடித்துக் கொண்டு கிழவியின் முகத்தைப் பார்த்தது. கிழவி இன்விலடா தன் கழுத்திலிருந்து தொங்கும் மணிமாலையில் கோர்த்திருந்த சிறிய சிலுவை உருவத்தில் லயித்திருந்தாள்.
அவள் எப்பொழுதும் அப்படிப்பட்ட பழக்கத்தையே கைகொண்டவள் என்று பஸ்ஸில் ஏறியது முதல் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரியும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாய் அவள் அந்தச் சிலுவை உருவத்தில் குனிந்த பார்வையை மாற்றாமல் உட்கார்ந்திருந்தாள். அந்த வெள்ளிச் சிலுவையில் ஏசு உருவம் இருந்தது.
கிழவி குழந்தையின் மோவாயை நிமிர்த்திப் புன்முறுவலித்துக் கொஞ்சினாள். குழந்தை அவள் கையிலிருந்த சிலுவையைப் பிடித்திழுத்தது. சிலுவையைக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு, ''ஸ்தோத்திரம் சொல், ஆண்டவனே! ...ஸ்தோத்திரம் சொல்லு...'' என்று இரண்டு கைகளையும் இணைத்துக் கும்பிடக் கற்றுக் கொடுத்தாள்.
குழந்தை கும்பிட்டவாறு இளம் கன்னிகா ஸ்திரீயின் பக்கம் திரும்பி, கன்னங்கள் குழியச் சிரித்துக் கொண்டு தாவியது. அவள் குழந்தையைத் தூக்கி மார்புறத் தழுவிக் கொண்டாள். நெஞ்சில் என்னவோ சுரந்து பெருகி மூச்சை அடைப்பது போலிருந்தது. கண்கள் பனித்து அவளது இமைகளில் ஈரம் பாய்ந்தது.
"காதரின்! மணி என்ன?"-சிலுமையைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் இன்விலாடா, அந்தக் குழந் தையின் ஸ்பாஞ்சு போன்ற கன்னத்தில் தன் கன்னத்தைப் புதைத்துக்கொண்டு அந்த இன்பத்தில் தன்னையே மறந்திருந்த அவள் காதுகளில் கிழவியின் குரல் விழவில்லை.
"காதரின்! காதரின்!.....தூங்குறியா?......... குழந்தையைப் போட்டுடப்போறே?...மணி என்னா?"
"அம்மா!...மணி, அஞ்சு" என்று கிழவியிடம் சொல்லிவிட்டு குழந்தையை மடியைவிட்டுக் கீழே இறக்கி, "ஸ்தோத்திரம் சொல்லு, ஆண்டவனே.." என்று கொஞ்சினாள் காதரீன். குழந்தை கும்பிட்டது. அவளும் கும்பிட்டாள். அவள் பார்வை மீண்டும் எப்படியோ அந்த நாலாவது வரிசையில் சன்ன லோரத்தில் உட்கார்ந்திருக்கும் அந்த வாலிபன் மீது விழுந்தது...
இந்தத் தடவை, அவள் பார்வையை மாற்றாமல் அமைதியான விழிகள் அவனை நோக்கி நிலைத்திருக்க அவனில் லயித்துவிட்டாளா என்ன?
அவனுக்கு இருபது வயசிருக்கும். நல்ல சிவப்பு நிறமும், உடல் வலிவும், கம்பீரமும் சாந்தமும் கூடிய தோற்றம். சன்னலோரத்தில் பஸ் போகும் திக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் அவனது வெள்ளை ஷர்ட்டின் காலரோடு, அந்த நீல நிற சில்க் டையும் படபடத்துக் கழுத்தில் சுற்றியது; கிராப் சிகை கலைந்து நெற்றியில் சுருண்ட கேசம் புரண்டது. அவள் தன்னையே பார்ப்பது கண்டு அவன் உதடுகள் லேசாக இடைவெளி காட்டின. அப்பொழுது அவனது தூய வெண் பற்களின் வசீகரம் அவளையும் பதிலுக்குப் புன்முறுவல் காட்டப் பணித்தது.
காதரீன் சிரித்தபொழுது தேவமகள் போலிருந் தாள். 'உயிர்களிடமெல்லாம் கருணை காட்ட வேண்டும். மனிதர்களையெல்லாம் நேசிக்க வேண் டும்' என்ற பண்பினால் ஏற்பட்ட தெய்வீகக் களை அவள் முகத்தில் அளி வீசிக்கொண்டிருந்தது.
'அவன் - அந்த மனிதன் - என்னைப்பற்றி என்ன நினைப்பான்' என்று நினைத்தாள் காதரீன். 'ஓ!... அது என்ன பார்வை....' காதரீனின் முகம் விசந்து உதடுகள் துடித்தன. அவளுக்கு அழுகை வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவனும் கீழுதட்டை லேசாகக் கடித்துக்கொண்டான். காதரீனின் இமைகளின் ஓரத்தில் உருண்ட வந்த இரண்டு முத்துக்கள் யாருக்கும் தெரியாமல் அவளது தலையணியில் படிந்தன. அவன் மட்டும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் என்னைப்பற்றி என்ன நினைப்பான்? இவள் ஏன் இப்படி ஆனாள் என்று நினைப்பானோ? உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தனது கடமையை நிறைவேற்ற முடியாது தவிக்கும் பேதை என்று நினைப்பானோ? பாபத்தைப் பற்றிச் சிந்திக் காமலிருக்கும் வல்லமையில்லாத கோழை என்று நினைப்பானோ?' அவள் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கிழவி இன்விலடாவைப் பார்த்தாள். அவள் இந்த பிரபஞ்சத்தின் நினைவே அற்றவள் போல் கையிலிருந்த சிலுவையைப் பார்த்துக் கொண்டி ருந்தாள். அவள் முகத்தில் லேசான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் பிரார்த்திப்பது போல் உதடுகள் அசைந்து முனகிக் கொண்டிருந்தன.
காதரீனின் மனம் தன்னையும் தன் தாய் இன்விலடாவையும் ஒப்பிட்டுப் பார்த்து
'ஓ!... அவர்கள் எங்கே! நான் எங்கே!...'
இந்தப் பதினெட்டு வயசிற்குள் தான் எத்தனை தடவை பாவ மன்னிப்புக்காகப் புனிதத் தந்தையிடம் மண்டியிட்டது உண்டு என்று எண்ணிப் பார்த்தாள் காதரீன்.
"அம்மா?..."
"என்ன காதரீன்..." - சிலுவையில் முகம் குனிந்து கொண்டிருந்த இன்விலடா சுருக்கம் விழுந்த முகத்தை நிமிர்த்திக் காதரீனைப் பார்த்தாள்.
"அம்மா! நீங்கள் 'கன்பெஷன்' செய்துகொண்ட துண்டோ?..." "உம்; உண்டு மகளே! நாமெல்லாம் பாவிகள்தானே? ஆனால் நமது பாவங்களை மனம் திறந்து கர்த்தரிடம் கூறிவிட்டால் நாம் ரக்ஷ¢க்கப் படுகிறோம். நமது பாவங்களையெல்லாம் கர்த்தர் சுமக்கிறார் அதனால்தானே நாம் இரவில் படுக்கச் செல்லுமுன் நமது அன்றாடப் பாவங்களைக் கடவுளிடம் ஒப்புவிக்கிறோம்? அதன் மூலம் நமது ஆத்மா பரிசுத்தப்படுகிறது. அதற்குமேலும் நம் இதயத்தை நமது பாவங்கள் உறுத்திக் கொண்டி ருப்பதால்தான் நாம் புனிதத் தந்தையிடம், அவர் செவிகொடுக்கும்போது நமது பாவங்களைக் கூறி மன்னிப்புப் பெறுகிறோம். நமது தந்தை நமக்காகக் கர்த்தரை ஜபிக்கிறார். அப்படிப்பட்ட பாவங்களை நானும் செய்தது உண்டு..." என்று கிழவி கண்களைத் துடைத்துக் கொண்டாள்
காதரீனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'இன்வில டாவும் ஒரு பிராயத்தில் தன்னைப்போல் இருந்திருக் கிறார்களோ?' என்று வியந்தாள்.
"காதரீன்!...அப்போ எனக்கு உன் வயசு இருக்கும்; நான் ஒரு கனவு கண்டேன் - எனக்குக் கல்யாணம் நடப்பதுபோல் ஒரு கனவு. என்ன பாவகரமான கனவு! விழித்துக்கொண்டு இரவெல்லாம் அழுதேன். கனவு காணும்போது அந்தக் கல்யாணத்தில் நான் குதூகலமாக இருப்பதுபோல் இருந்தது. அதை நினைத்தே அழுதேன். ஒரு கன்னிகா ஸ்திரீ அப்படிக் கனவு காணலாமா? மறுநாள் அந்தப் பாவத்திற்காகப் புனிதத் தந்தையிடம் மன்னிப்புப் பெற்றேன். அன்று பூராவும் தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து கடவுளை ஜபித்துக் கொண்டிருந்தேன்."
கிழவி குரலைத் தாழ்த்திக் காதரீனிடத்தில் மெதுவாகப் பேசினாள் "அப்புறம் ஒரு பெண்ணை வகுப்பில் அடித்து விட்டேன்... கன்னத்தில் ஸ்கேலால் அடித்து, சிவப்புத் தழும்பு ஏற்பட்டுவிட்டது. அன்று பூராவும் அதை நினைத்து நினைத்து வருந்தினேன்? அதற்காகவும் 'கன்பெஷன்' செய்து கொண்டேன். இந்தமாதிரி ஐந்தாறு தடவை."
'இவ்வளவுதானா? இவர்கள் செய்த பாவமெல்லாம் இவ்வளவு தானா? நம்பக்கூட முடியவில்லையே!' என்று தவித்தாள் காதரீன்.
'ஒருவேளை எதையுத் மறக்கறார்களோ?' என்ற சந்தேகம் கூட வந்தது. காதரீனின் சந்தேகத்துக்குப் பதில் சொல்வதுபோல் இன்விலடா கூறினாள்
"பாவத்தை மறைப்பதுதான் சைத்தானின் வேலை. பாவத்தை மனம் திறந்து கடவுளிடம் ஒப்புவிப்போம். கடவுளிடமிருந்து எதையும் நாம் மறைக்க முடியாது."
"ஆமாம்; கடவுளிடமிருந்து நாம் எதையுமே மறைக்க முடியாது..." என்று காதரினும் தலையாட்டி னாள். பிறகு தன் கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துப் பிரித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள் காதரின். அவள் பார்வை ஒருமுறை சன்னல் பக்கம், நாலாவது வரிசையில்...
அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
'ஓ! அது என்ன பார்வை!' அவள் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.
'ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளுடன் விபசாரஞ் செய்தவனா கிறான். உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக் கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்
காதரினால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை - கண்களை மீடிக் கொண்டாள். புத்தகம் திறந்தி ருந்தது; கண்கள் மூடி இருந்தன...
'இதென்ன, பாப எண்ணங்கள்?' என்று மனம் புலம்பியது. இவன் ஏன் இன்னும் இறங்காமல் உட்கார்ந்திருக்கின்றான்? சாத்தானின் மறு உருவா? என்னைச் சோதிக்கிறானா இவனைப்பற்றி எனக்கென்ன கவலை?...ஓ!...பிதாவே!'
அவள் திடீரென்று உடலில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டு மனசிற்குள்ளாக ஜபிக்க ஆரம்பித்தாள்: 'பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே!... எங்களைச் சோதனைக்குட் பண்ணாமல் தீமையினின் றும் எங்களை இரட்சித்துக் கொள்ளும் ... ஆமென்...'
அனாலும் என்ன? அவள் விழிகளைத் திறந்தபோது அவனையே அவளது பார்வை சந்தித்தது.
'மனிதன் பாபத்திலிருந்து தப்பவேமுடியாதா? ஆதாமுக்காகக் கடவுள் படைத்த சுவர்க்க நந்தவன மாகிய ஏதேன் தோட்டத்தில் சர்ப்பமும் விலக்கப்பட்ட விருட்சமும் எப்படி உண்டாயின? கடவுள் மனிதனையும் படைத்து, பாபத்தையும் ஏன் படைத்தார்?... பாபத்தில் இன்பமிருப்பது வெறும் பிரமையா? இன்பமே பாபமா?- உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் நரகத்துக்குத்தான் போவார்களா? நான் மட்டும் ஏன் பாபங்களுக்காகப் பயப்படுகிறேன்? இதோ, இந்த அழகான வாலிபன் தன் உயிரையே கண்களில் தேக்கி என்னைப் பார்க்கிறானே!... மனிதர்கள் எல்லாம், பெண்கள் எல்லாம் உருவத்தில் என்னைப்போல் தானே இருக்கிறார்கள்?...’
காதரின் தனக்கு நேரே இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த அந்த இளந்தம்பதிகளைப் பார்த்தாள். அவள் கர்ப்பிணி, மயக்கத்தினாலோ, ஆசையினாலோ கண்களை மூடிக்கொண்டு கணவனின் தோள்மீது சாய்ந்திருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்தபோது காதரினின் உள்மனத்தில் சைத்தானின் குரல் போல் ஓர் எண்ணம் எழுந்தது.
'அவளுக்கும் எனக்கும் பேதம் இந்த உடையில் தானே? இந்தக் கோலத்தைப் பிய்த்தெறிந்துவிட்டு ஓடிப்போய் அந்த இளைஞனின் தோளில் சாய்ந்து கொண்டால்?...
'ஐயோ; பிதாவே! நான் அடுக்கடுக்காகப் பாபங் களைச் சிந்திக்கின்றேனே! என்னை ரட்சியும்...'
பஸ் நின்றது. பஸ் ஸ்டாண்டில் ஒரே கூட்டம். அந்த இரைச்சலில் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டி ருக்கும் கும்பலின் பேச்சுக் குரலும் சங்கமித்தது. எல்லோரும் இறங்கும் வரை கிழவி இன்விலடாவும் காதரினும் காத்திருந்தார்கள். கடைசியாக இருவரும் கீழிறங்கினர்.
ஜட்கா வண்டிக்காரன் ஒருவன் ஓடிவந்தான்.
"மடத்துக்குத்தானே அம்மா? வாங்க வாங்க" என்று வண்டிக்கருகே அழைத்துக்கொண்டு போனான்.
அப்பொழுது, மாலை மயங்கும் அந்தப் பொன் னொளியில் நீல நிற சூட்டும், வெள்ளை ஷர்ட்டும், நீல டையுமாகக் கையில் ஒரு ஸ¥ட்கேஸ¥டன் அவன் - அந்த இளைஞன், அழகன் - சாத்தானின் தூதுவன் போன்று நின்றிருந்தான்.
காதரினுக்குக் காதோரம் குறுகுறுத்தது; புன்முறுவல் காட்டினாள் அவனும் சிரித்தான். அவர்களை நெருங்கி வந்து முதலில் இன்விலடாவை நோக்கி, "ஸ்தோத்திரம் மதர்" என்று கை கூப்பினான்.
"ஸ்தோத்திரம் ஆண்டவனே!"என்று கிழவி கைகூப்பினாள்.
"ஸ்தோத்திரம்..." என்று காதரினை அவன் பார்க்கும் போது பதிலுக்கு வணங்கிய காதரினின் கைகள் நடுங்கின "ஸ்தோத்திரம்..." என்று கூறும்போது குரம் கம்மி அடைத்தது. கண்கள் நீரைப் பெருக்கின
இவர்கள் இருவரும் வண்டியில் ஏறி அமைர்ந்ததும் அவன் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி ஆட்டிய வண்ணம் விடையளித்தான்; அவளும் மனம் திறந்து சிரித்தவாறு கைகளை ஆட்டினாள்... வண்டி விரைந்தது; அவன் உருவம் மறைந்தது. அவள் கைகள் துவண்டு விழுந்தன; நெஞ்சு விம்மியது.
"காதரின்! யாரது? எனக்குத் தெரியவில்லையே" என்றாள் இன்விலடா.
"ஹ்ஹோ....." என்று கைகளை நெரித்தவாறு ஒர பொய்ச் சிரிப்புடன் காதரின் சொன்னாள்
"அம்மா! முதலில் எனக்கும் கூடத் தெரியவில்லை. என் கிளாஸில் படிக்கிறாளே இஸபெல் - அவளோட அண்ணன்..."
"ஓ..." |
|
"பிதாவே! என்னை ரட்சியும். எவ்வளவு பாபங்கள்! எவ்வளவு பாபங்கள்..." என்று மனசில் முனகிக் கொண்டாலும் காதரினின் கண்கள் அவன் புன்னகை பூத்த முகத்தோடு கைகளை ஆட்டி விடை பெற்றுக் கொண்ட அந்தக் காட்சியையே கண்டு களித்துக் கொண்டிருந்தன.
'அவர் யாரோ? மறுபடியும் அவரைக் காணும் அந்தப் பாக்கியம்...பக்கியமா?... இல்லாவிட்டால் அந்தப் பாபம்-மறுபடியும் எனக்குக் கிட்டுமா?' என்று மனம் ஏங்கியது...
பாபம் செய்யக்கூடத் தனக்கு நியாயமில்லையே என்று நினைத்த பொழுது கண்கள் கலங்கின; தொண்டையை அடைத்துக்கொண்டு அழுகை பீறிட்டது. அவள் அழ முடியுமா? அழக்கூட அவளுக்கேது நியாயம்?...
தலையணி காற்றில் பறந்து முகத்தில் விழுந்தது வசதியாய்ப் போயிற்று. அந்த நீலத் துணிக்குள் அவள் உடலும் மனமும் முகமும் பதைபதைத்து அழ, வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
கிழவி இன்விலடா கையிலிருக்கும் சிறிய சிலுவையில் ஆழ்ந்து மனசிற்குள் கர்த்தரை ஜபித்துக்கொண்டிருந்தாள்.
அன்று இரவெல்லாம் காதரின் உறக்கமில்லாமல் படுக்கையில் கிடந்து தனது பாபங்களுக்காகக் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
சில நேரங்களில் அந்த இளைஞனின் முகத்தை, புன்னகையை எண்ணிப் பெருமூச்செறிந்தாள்.
பிறகு அயர்ந்து உறங்கிப்போன பின் ஒரு கனவு கண்டாள்.
கனவில்...
...ஒரு பெரிய சிலுவை, கிழவி இன்விலடா அதைத் தூக்கித் தோள் மீது சுமந்துகொண்டு நடக்கிறாள். வெகுதூரம் நடந்தபின் இன்விலடாவின் உருவம் மாதாகோயில் மாதிரி மிகப் பெரிய ஆகிருதியாகிறது; தோள்மீது சுமந்து வந்த பிரம்மாண்டமான சிலுவை அவள் உள்ளங்கையில் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே மெல்லிய புன்னகையோடு கர்த்தரை ஜபித்துக் கொண்டிருக்கிறாள் இன்விலடா...
மாதாகோயில் மணி முழங்குகிறது. வானத்திலி ருந்து புனித ஒளி பாய்ந்து வந்து இன்விலடாவின் மேனியைத் தழுவுகிறது...
மாதாகோயில் மணி முழங்கிக்கொண்டிருக்கிறது...
இன்னொரு பெரிய சிலுவை. அதைத் சுமப்பதற் காகக் காதரின் வருகிறாள். குனிந்து புரட்டுகிறாள். சிலுவையை அசைக்கக்கூட அவளால் முடிய வில்லை... திணறுகிறாள்... அவள் முதுகில் கசையால டிப்பது போல் வேதனை... சிலுவையைப் புரட்ட முடியவில்லை...
அப்பொழுது தூரத்தில் ஒரு குரல் கேட்கிறது ''காதரின்!... என் அன்பே!... காதரின்!...''
திரும்பிப் பார்க்கிறாள்; அந்த இளைஞன் ஓடி வருகிறான். காதரினும் சிலுவையை விட்டுவிட்டு அவனை நோக்கித் தாவி ஓடுகிறாள். அவனது விரித்த கரங்களின் நடுவே வீழ்ந்து அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு அழுகிறாள். அவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவளது உதடுகளில் முத்தமிடுகிறான்...
ஆ! அந்த முத்தம்!...
'இது பாபமா?... நான் பாபியாகவே இருக்க விரும்புகிறேன்...?' என்று அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போது...
மாதாகோயில் மணி முழங்குகிறது...
விழிப்பு; கண்ணீர்; குற்றம் புரிந்த உணர்ச்சி!...
தலை குனிந்துகொண்டு எல்லோருடனும் சேர்ந்து முழந்தாளிட்டுக் கர்த்தரை ஜபிக்கும்போது...
ஐயோ! பாவம்... மனமாரக் கண்ணீர் வடிக்க முடிந்தது.
நெஞ்சில் கனக்கும் பாவச் சுமை கண்களின் வழியாகக் கண்ணீராய்க் கரைந்து வந்துவிடுமா?...
அன்று புனிதத் தந்தையிடம் பாப மன்னிப்புக்காகச் சென்றாள் காதரின்.
தூய அங்கி தரித்து, கண்களில் கருணையொளி தவழ, குழந்தை போல் புன்னகை காட்டி அழைக்கும் அவரது முகத்தைப் பார்த்து அருகில் நெருங்கு வதற்குக் கூசிச் சென்றாள் காதரின்.
''Father!"
''மகளே!...'' - அவர் அவளுக்குச் செவி சாய்த்தார்.
''நான் மகாபாபி!. பெரிய பாபம் செய்து விட்டேன்!.. நான் பாபி!...''
''பாபிகளைத்தான் கடவுள் ரட்சிப்பார் மகளே!... இயேசு நீதிமான்களை அல்ல - பாபிகளையே மனம் திரும்புவதற்காக அழைக்க வந்தேன்'' என்றார் - என்று நீபடித்ததில்லையா?... உன் பாபங்களை உன் வாயாலேயே கூறி வருந்தினால் இரட்சிப்பு ஆயத்தமாயிருக்கிறது மகளே!...''
காதரின் அவர் காதுகளில் குனிந்து உடல் பதைக்க, கண்கள் கலங்கிக் கலங்கிக் கண்ணீர் பெருகக் கூறினாள். வார்த்தைகள் குழைந்தன; பாதிரியார் திகைத்தார்.
அவள், ''father... நான் செய்த மகாபாபம், மன்னிக்க முடியாத பாபம்!... ஓ... கன்னிகாஸ்திரீயாக நான் மாறிய பாபம்... ஓஓ!...'' - அவள் விக்கி விக்கி அழுதாள். தன்னையே சிலுவையில் அறைந்ததுபோல் துடித்தாள்.
ஜெயகாந்தன் |
|
|
|
|
|
|
|