|
|
"மெல்லத் திரும்புங் கோ, மெல்லத் திரும்புங் கோ. கை மேல் கை சுழற்றுங்கோ வேகமா. இருபது, இருபதுக்கு வேகத்தை குறைங்கோ" என்று குமார ராஜா கத்தினார்.
கணேஷ் ஒரு நிமிடம் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தான். அதற் குள் குமார ராஜா தன்னி டமிருந்த பிரேக்கை பிடித்து, லாவகமாக திருப்ப மூன்று நான்கு குலுக்கலுடன் வண்டி நடைபாதையில் ஏறி மீண் டும் சாலையில் இறங்கி நின்றது. கணேஷ் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வண்டி அடுதத சிக்னலில் வந்து நின்றது.
"ஓ கடவுளே! சார், இன்னைக்கு இது போ தும். இதுக்கு மேல இன்று முடியாது போலிருக் கிறது" என்றான்.
"சரி. அப்படியே செய் வோம். விசனப் படாதீங் கோ. மூன்றாம் வகுப்பு தானே? பழகப் பழக சரியாகி விடும். கோபி அருந்துவீங்கோ தானே? நம்ம கோபி மாதிரியே இருக்கும். அதோ பாருங்கள்! டிம் ஹார்ட்டன்ஸ். இந்த முறை மெல்லத் திரும்பி கிடைத்த இடத்தில் பார்க் செய்யுங்கோ, பார்ப்பம்" என்றார்.
காபி வாங்கிக் கொண்டு அமர்ந்த பின்பும் மனது நடந்ததையே நினைத்து சுற்றிச் சுற்றி வர, கண்கள் எங்கோ வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டிருக்க, கணேஷ் குமார ராஜாவிற்கு எதிரே உட்கார்ந்திருந்தான். சனிக்கிழமைக் காலையிலும் கூட்டம் அதிகமிருந்தது. பேகலும், டோனட்டும், காபியும் எல்லோர் கைகளிலு மிருக்க அந்தக்காலை அமைதியிலும் பட்டும் படாமலும் எதையாவது பேசிக்கொண்டு தானிருந்தனர். இரண்டு நாட்களுக்கு வேலை யில்லை என்ற நிம்மதி அனைவரின் முகத்திலும் பேச்சிலும் வெளிப்பட்டன. யார் யாரைப் பார்த்தாலும் முதல் கேள்வி இந்த வார இறுதி இரண்டு நாட்களை எப்படி கழிக்கப் போகி றார்கள் என்பதைப் பற்றியே இருந்தது. இந்தக் கேள்வி வியாழக்கிழமை மதியத்திலிருந்தே தொடங்கி விடும். திங்கட்கிழமைக் காலையும் பேச்சு இதைப் பற்றியதாகத் தானிருக்கும். இடைப்பட்ட மூன்று நாட்கள் தான் வேலை நடக்கும் நாட்கள்.
சூடான காபியும், டோனட்டின் இனிப்பும் யோசனையை மாற்ற, அதை வெளிப்படுத்தும் விதமாக எதிரிலுருந்த குமார ராஜாவைப் பார்த்துச் சிரித்தான். அந்தச் சனிக்கிழமை காலை கணேஷ் தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். டொரன்ட்டோ தெருக் களில் அவ்வளவாக நெரிசல் இல்லை. பக்கத்தில் குமார ராஜா. கணேஷ¤க்கு இது மூன்றாவது வகுப்பு. டொரன்ட்டோவின் ஒரு பெரிய வங்கியில் முதன்மை என்கிருப்ஷன் டிசைனர். வேலைக்கு சேர்ந்து ஏழு எட்டு மாதங்களே ஆகிறது. அதனால் தான் இந்த ஓட்டுனர் பயிற்சி. குமார ராஜா இலங்கையிலிருந்து கனடாவில் குடியேறிய ஆயிரக் கணக்கானவரில் ஒருவர். கணேஷ¤க்கு அந்த தமிழும், அவர்களின் ஏற்ற இறக்கங்களோடு கூடிய உச்சரிப்பும் மிகவும் பிடித்த ஆச்சர்யமான விஷயம். கணேஷ் இது போல தமிழ் பேசுபவரைக் கண்டால் போதும், நின்று பேச ஆரம்பித்து விடுவான். இம்மாதிரி இலங்கைத் தமிழருடன் பழக்கம் வேண்டா மெனப் பலமுறை மற்ற இந்திய நண்பர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கிறான்.
இலையுதிர் காலம் தொடங்கிவிட்டதன் அடையாளமாக மரத்தின் இலைகள் எல்லாம் வெவ்வேறு நிறங்களில் பழுத்து ஒவ்வொன்றாக பூமியோடு கலப்பதற்கு முன் அங்கும் இங்கும் காற்றில் அலைந்து வழி தேடிக் கொண்டி ருந்தன. கணேஷ் எக்ளிங்டன் ரோடிலிருந்து இடதுபுறம் திரும்பி, ஹைவே பத்தில் தெற்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். இந்தியப் பழக்கத்தின் காரணமாக ஒவ்வொரு திருப்பத் திலும் சாலையின் இடது புறத்திற்கே வண்டி திரும்ப ஆரம்பிக்க, மிகவும் கவனமாக கனடாவில் இருக்கிறோம் என்பதை அவ்வப் போது நினைத்துக் கொண்டு ஸ்கொயர் ஒன் பிளாஸாவைக் கடந்தான். பிளாஸா என்றே சொல்ல முடியாது. ஊர் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு மாடி தான். முன்னூறுக்கும் மேற்பட்ட கடைகள். மூவாயிரம் கார்கள் நிற்க இட வசதி. நிச்சயம் ஒரு சிறு ஊர் தான். அப்போது தான் குமார ராஜா, "கணேஷ், கடைசி லேன் சென்று குயின்ஸ் வேயில் வலதுபுறம் திரும்புங்கோ பார்ப்பம்" என்றார்.
வண்ண வண்ண நிற இலைகள், குளிர்ந்த காற்று, காலை நேரம் எல்லாமாகச் சேர்ந்த ரம்மியமான சூழல் மனதைக் கவர்ந்து இழுத்தது. அதில் மனம்லயித்தவாறே கடைசி லேனுக்கு மாறி, வந்து கொண்டிருந்த அறுபது கிலோ மீட்டர் வேகத்திலேயே வலது புறம் திரும்ப ஆரம்பித்தான். அப்போது தான் இது நிகழ்ந்தது. வண்டியின் வேகம், திருப்பத் தேவையான இட அளவு எதுவும் புரிபடாமல் வண்டி கணேஷின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதே வேகத்தோடு சாலையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தது. ஒரு நிமிடம் வாழ்க்கையே முடிந்து போய் இருக்கும்.
"எப்போ இந்தியா போப்போறீர்கள்?" என்று குமார ராஜா பேச்சை மாற்றினார். கணேஷ் பதில் சொல்லவில்லை. கேள்வி காதில் கேட்டாலும் மூளை அதற்கு பதில் தயார் செய்கிற நிலையில் இல்லை.
"அதையே நினைத்து கொண்டிருக்காதீர்கள். சும்மா கதைங்கோ" என்று உற்சாகப் படுத்தினார்.
"மார்ச்ல போகலாமென்றிருக்கிறேன், சார்" என்றான்.
"போய் வாங்க, போய் வாங்க. ரொம்ப நாளாயிட்டது தம்பி, கனடாவை விட்டு வெளியில் சென்று. எனக்கும் இந்தியா, தென் மாவட்டக் கோவிலெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் கனா".
"வாங்களேன் சார், ஒரு ரவுண்டு சௌத் எல்லாம் போயிட்டு வரலாம். எப்படியும் குல தெய்வக் கோயில் பார்க்க கும்பகோணம் வரைக்கும் போவேன்".
"இல்லைங்க தம்பி. அது சரியா வராது. நீங்க போய் வாங்க. எனக்கு இன்னும் இரண்டு மூன்று வருடம் ஆகும்"
"ஏங்க ஏதாவது பணத்தைப் பத்தி யோசிக் கறீங்களா? அப்படி இருந்தா, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நம்ம ஊர் சார், சும்மா வாங்க. ஜாலியாப் போயிட்டு வரலாம்".
"அதெல்லாம் இல்லை தம்பி. உங்களிடம் கதைக்க என்ன? பாஸ்போர்ட் அரசாங்கத்து கிட்ட இருக்குது".
"என்னங்க, ஏன் உங்க பாஸ்போர்ட் அவங்க கிட்ட இருக்கு? உங்கள மாதிரி வந்தவங் களுக்கு பாஸ்போர்ட் தருவாங்களே!".
"அதில்லை தம்பி. அகதிகளா வந்தா கொஞ்ச நாள் செண்டு தந்திடுவாங்கோ. ஆனா எனக்கு மட்டும் தார விருப்பம் இல்லை அவங்களுக்கு".
"ஏங்க ஏதாவது பிராப்ளமா?"
"இல்லை. நான் முதல்ல இஞ்ச வந்தவன். நான் அறிந்த என் ஊர் உறவையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்தன் என்ற மனுஷி, மக்கள் என்று சொல்லி. அதைக் கண்டு போட்டு பாஸ்போர்ட் வெச்சுக் கொண்டு, மேற்கொண்டு வெளியே செல்லாம செய்துட்டவங்க"
"ஏங்க இது பொய்யில்லையா?"
வலது புறம் வெறித்துப் பார்த்து கொண்டே யிருந்தவரிடம், "ஏங்க ஏதாவது தப்பா பேசிட் டேனோ?, மன்னிச்சுக்கோங்க" என்றான் கணேஷ்.
"அட பரவாயில்லைங்க. ஒன்று கேட்பன். உண்மையாக் கதைப்பீங்க தானே?"
"நீங்க எதற்காக இந்தியா விட்டு இங்க வந்தவங்க?"
"நீண்ட நாள் லட்சியம், கனவு, நல்ல வேலை, பணம் சம்பாதிக்க எல்லாத்துக்குந்தான்".
"ஏன் தம்பி, இந்தியாவுல வேலை கிடையா தோ? அங்க இல்லாத வேலையா? எத்தனை வளமான பூமி? நான் சொல்றேண்டு விசனப் பட மாட்டீங்கதானே?. உங்க மனுஷங்களுக்கு எல்லாம் இருந்தும் மேல் நாட்டு மோகம். நாட்டைப் பத்தி கவலை இல்லை. உங்க மனுஷாள் எல்லாம் உம்மைப் பார்த்து பெருமைப் படணும். நீங்களும் பார்! நான் மத்தவங்கள விட பெரியவனென்று காட்டணும்".
"உங்களை ஈன்ற மனுஷி என் மகன் அமெரிக் காவுல இருக்கிறவன், கனடாவுல இருக்கிறவன் என்று கதைக்கணும். இதைக் காட்டி நல்ல வடிவுள்ள, வளமுள்ள மனுஷியைக் கொள்ளணும். நயாகராச் சென்று வீடியோ படம் புடிச்சு ஊருக்கு அனுப்ப வேணும். காசு சேர்த்து ஊருல சொத்து, சுகம் வாங்கணும். இதானே தம்பி?".
"எங்க நிலைமை அது இல்ல. எங்க கதை நினைக்கச் சொல்ல மனசு அறுந்து போகுது. கதைச்சு கதைச்சு இறுகிட்டது. நீங்கச் சுலபமா கேட்டுப்புட்டீங்க. தப்பில்லையான்னு? தப்பே இல்லை தம்பி, தப்பே இல்லை"
"முன்னமெல்லாம் மாதம் ஒரு முறை கதைக்கலாமென்று போன்ல கூப்பிடுவன். ஒரு முறை இருந்த ஊர்ல, அடுத்த முறை அழைக்கும் போது இருக்க இயலாது. தேடிப் பிடித்து கதைக்கச் சொல்ல, மகனே, அவன் குண்டு பட்டுப் போனவன், இவன் கால் போயிட்டது, சின்னவனை வந்து சண்டைக்கு கூட்டிக் கொண்டு போயிட்டாங்க. மனுஷிங்கள இம்சைப் படுத்திட்டாங்கோன்னு ஓவென்று கதறுவாங்க. வீடு இல்லை ஐயா! அந்த ஊர் அழிஞ்சுட்டது, இந்த ஊர் அழிஞ்சுட்டது என்று தான் கேள்விப்படுவன்".
"எப்படி இதெல்லாம் கேட்டு, கதைத்துக் கொண்டு, நான் மட்டும் இஞ்ச நல்லா, வளமா இருக்கிறது சரியா? அதான், வருவது வரட்டும். என்ன சிறைல புடிச்சுப் போட்டாலும் பரவாயில் லைனு, அவங்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்துவிட்டவன். என் அண்ணன், அப்பா மற்றும் சில மனுஷங்களையும் கூட்டிக் கொண்டு ஆஸ்திரேலியா போனவர். இது மாதிரி நிறையப் பேர். வீடு, வாசல் எல்லாத் தையும் விட்டுவிட்டு பிழைப்புக்கு வந்து காரோட்டி, கடை, கண்ணியில எடுபுடி வேலை செய்யறோம்".
"உங்களுக்கெல்லாம் இது புரியாது. நாடு இருக்கு. அரசாங்கம் இருக்கு. நல்லவங்களோ, கெட்டவங்களோ ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக் கறீங்க. கடை, கண்ணிக்கு போறீங்க. ·பாஸ்ட் ·புட் சாப்பிடுறீங்க. நகை வாங்குறீங்க. எதிர்காலத்தைப் பத்தின நம்பிக்கை இருக்கு. புள்ளை, குட்டிங்களை படிக்க பள்ளிக் கூடம் அனுப்பறீங்க. எங்க புள்ளங்கள மாதிரி கைல துப்பாக்கி தூக்கச் சொல்லல. பயமில்லாம ஊருக்குள்ள போய் வறீங்க. எல்லாத்தையும் விட ஊர்ல அமைதி இருக்கு. வேற என்ன தம்பி வேணும். என்ன மக்கள் தொகை கொஞ்சம் கூடப்போயிட்டது. அதனால, இதுக்கெல்லாம் போட்டி வந்துட்டது".
"ஏதோ ஏழை, பாழை சோத்துக்கில்லாதவங்க எல்லாம் வெளிநாடு வந்து இங்க வேலை செஞ்சு பிழைப்பு நடத்தினா, அதிலே அர்த்தமிருக்கு. நல்ல வேலை இருந்தும், உழைக்க வழி இருந்தும் இஞ்ச வந்து கிடைச்ச வேலை செய்யறது, அதை லட்சியம், கனவு என்று சொல்றது. இது பொய் இல்லீங்களா?".
சட்டென்று தண்ணீரிலே பிடித்து அழுத்தி, சிறிது நேரம் கழித்து மீண்டும் மேலே வந்தது போல கணேஷ¤க்கு மூச்சு வாங்கியது. உண்மையை ஏற்றுக் கொள்ள மனம் அடம் பிடித்தது. கொஞ்சம், கொஞ்சமாக சுதாரித்துக் கொண்டு, "இதெல்லாம் நடந்து எவ்வளோ நாளாகுதுங்க?" என்று பேச்சை மாற்றினான்.
"எனக்கு நடந்து பத்து வருஷமாச்சுங்க. ஆனா, இன்னிக்கும் எங்கள்ள பல பேருக்கு இது நடந்துகிட்டிருக்குதுங்க".
"உங்க அம்மா உங்களோடத்தான் இருக்காங் களா?".
"ஆமாம் தம்பி. அப்பா அண்ணன் கூட இருக் கிறவர்".
"பார்க்கவேயில்லையா இந்தப் பத்து வருஷத்துல?" |
|
"இல்ல. பார்க்கல. எப்பக் காணப் போறோம்னு விளங்கவும் இல்ல. ஆனா நல்லூரான் இருக் கிறான். அதான் கொண்டு வந்து இஞ்ச வால் மொரைன்ல கோயில் கட்டி குடி வெச்சுருக் கோம்ல. நீங்க போய்ப் பார்த்து இருக்கீங்களா? ரொம்பச் சக்தி உள்ளவன் தான். அவன் தான் குறிஞ்சி மண்ல இரவு போய் விடியல் கொண்டு வாரணும். வரும் என்ற நம்பிக்கை இருக்கு. அப்ப கட்டாயம் நாங்களெல்லாம் மீண்டும் கூடிக் கதைக்க வேண்டியது தான். அது வரைக்கும் இதோ இது மாதிரி வாழ்க்கை ஓட்ட வேண்டியது தான்".
இதற்குள் கணேஷ¤ன் வீடு வந்து விட்டது. "மன்னிச்சுக்கோங்க. விவரம் புரியாம ஏதோ பேசிட்டேன்" என்று கனத்த மனதுடன் விடை பெற ஆரம்பித்தான்.
"சரி தம்பி. உங்கள் மனசைத் திசை திருப்ப கதைக்க ஆரம்பித்தவன், ஏதோதோ கதைத்து விட்டன். எதையும் மனசில வெச்சுக்காதீங்க. இப்ப நேர் பாதையில ஓட்ட ஆரம்பித்து விட்டீங்க. திருப்பங்கள் பழகி இன்னும் ஒன்று இரண்டு வாரத்திலே தேர்வுக்குச் செல்லலாம். நான் நாளை சென்று மறுநாள் உங்களை அழைக்கிறேன். சரி தானே?".
"சரிங்க. ஹேவ் அ நைஸ் வீக் எண்ட்" என்று விடை பெற்றுக் கொண்டு மேலேறி வீட்டிற்குள் வந்தான்.
மனது ஹோவென்று வெறிச்சோடிக் கிடந்தது. இவர்களெல்லாம் யார்? எதற்காக இந்தப் போராட்டம், யுத்தம், வெறி? செய்பவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே புரியவில்லை. யோசித்துக் கொண்டிருந்த கணேஷ் அப்படியேத் தூங்கிப் போனான். எவ்வளவு நேரம் தூங்கினான் என்று தெரிய வில்லை. காலிங் பெல் சத்தம் கேட்டு கண் விழித்தான். கதவைத் திறந்து "எஸ்" என்ற போது, வாசலில் இருவர். பார்த்த உடனே நம் தேசத்தவர்கள் என்று தெரிந்தது.
"நாங்க டொரொண்டொ ஸ்டார் பத்திரிக்கை விற்கிறோம். தினமும் காலை வீட்டிற்கே டெலிவரி செய்கிறோம். மூன்று மாத சந்தா செலுத்த முடியுமா? இருபது டாலர்" என்றார்.
கணேஷ¤க்கும் சில நாட்களாகவே பேப்பர் வாங்க ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை. தினசரி ஹிண்டு பழக்கம். விட முடியவில்லை. "சரி" என்றான்.
"மிக்க நன்றி. இந்தியருக்கு இந்தியர் உதவி" என்று கூறி விண்ணப்பத் தாளை கொடுத்தார். பூர்த்தி செய்யும் போது நாகரீகம் கருதி "இந்தியாவில் எங்கிருந்தீர்கள்?" என்று பேச்சை ஆரம்பித்தான்.
ஒரு பெரிய நகரத்தைச் சொன்னார். "அட அப்படியா? நானும் அங்கிருந்திருக்கிறேன். என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?".
ஒரு வங்கியின் பெயரைச் சொல்லி அதன் உதவி கிளை மேளாளர் என்றார். கணேஷ் ஒரு நிமிடம் எழுதுவதை நிறுத்தி விட்டு "அப்புறம் என்ன இதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது பொதுச் சேவையா?".
"இல்லை. இன்னும் ஒரு வருடத்திற்குள் எதாவது வங்கியில் தொடக்க நிலை ஊழியராகி விடுவேன். அது வரைக்கும் இது"
"அதற்காக இப்படியா? அங்கு இதை விட நல்ல நிலை, வேலையாயிற்றே. அதையடைய ஏழு எட்டு ஆண்டுகள் ஆகுமே" என்றான்.
"ஆமாம். இப்போது வெளி நாட்டிலல்லவா இருக்கிறேன்? யாருக்குத் தெரியும் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று. அங்குள்ள வர்களை விட நான் மேல் நிலையிலிருக்கிறேன் என்று தான் நினைத்துக் கொள்வார்கள் அல்லவா? பேப்பர் போட்டாலும் சம்பளம் டாலரில் தானே?" என்று சிரித்தார்.
கணேஷ¤ம் சிரித்தான். வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. சற்றுக் கடுமை யாக "மன்னித்துக் கொள்ளுங்கள். என் மனதை மாற்றிக் கொண்டு விட்டேன். எனக்கு பேப்பர் வேண்டாம்" என்றான்.
"என்னவாயிற்று? இல்லை. இந்தியருக்கு உதவி..." என்று ஆரம்பித்தவரை நிறுத்தி, "தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறி கதவைச் சாத்த ஆரம்பித்தான். கூட வந்த நண்பரிடம் "தீஸ் க்ரேசி தேசிஸ்.." என்று ஆரம்பித்து ஏதோ சொல்லிக் கொண்டு போனது காதில் விழுந்தது.
இந்த வாரக் கணக்கிற்கு மாலை அம்மாவிற்கு வழக்கம் போல போன் செய்தான். "பாழாப் போன கரண்ட் நேத்திக்கு பாதி சித்தி பார்த்துண்டிருந்த பொழுது போயிடுத்துடா. கதை என்னாச்சுன்னு தெரியல. திங்கக் கிழமை வரை காத்திருக்கணும்டா" என்றாள். காத்திருப் பது என்றதும் ஏனோ குமார ராஜா தான் நினைவிற்கு வந்தார்.
"அம்மா, இந்த டிசம்பருடன் கான்ட்ராக்ட் முடியுது. மேற்கொண்டு அடுத்த கான்ட்ராக்ட் ஒத்துக்கப் போறதில்லைனு முடிவு பண்ணிட் டேன். ஜனவரியில மொத்தமா இந்தியா வர்றேன். நீ என்ன சொல்ற?" என்றான்.
"அப்படியா?, ஏன்டா? சரி பரவாயில்ல. அதுவும் நல்லதுக்குத் தான். இன்னும் மூணு, நாலு மாசமிருக்கே. நீ அங்க இருக்கும் போதே அதச் சொல்லி இங்க பெண் பார்த்துடறேன். அப்பத் தான் நல்ல இடமாவும், மத்ததெல்லாமும் சரியா வரும். நீ, என்ன சொல்ற? சரி தானே?" என்றாள்.
கணேஷ¤ம் சத்தமாகச் சிரித்தான். இந்தக் கல்யாண ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டு விட்டான் என்று நினைத்து, அம்மாவும் சந்தோஷமாகச் சிரித்தாள்.
ஜெயராமன் |
|
|
|
|
|
|
|
|