|
|
பூவரிசைகளைப் போல் நீலக்கடலில் அலை கள் குதித்துக் குதித்துக் கரையை நோக்கி வரும் அந்தக் கட்டு மரத்தைத் தாங்குகின்றன. கரையிலே கட்டை போல் கிடந்த உடலில் சூறாவளியாய் எழும்பும் ஒரு வெறியின் உந்துதல் - அவன் கடலில் பாய்ந்து நீந்திச் சென்று கரை திரும்பும் அந்த மரத்தின் கொடுங்கையைப் பற்றி ஏறிவிடுகிறான். மரத்தைத் தள்ளி வரும் சூசை அவனிடம் கோலைக் கொடுத்து விடுகிறான். மேலே நீலவானில் ஒரு மாசு மருவில்லை. கீழே நீலக்கடல். மரச் சொந்தக்காரன் சூசையும், அவன் கூட்டாளி ஜோசும் மரத்தை அவனிடம் விட்டுக் கரைக்கு பாய்ந்து விடுகின்றனர். கரையிலிருந்து மீண்டும் சற்றே அகல, மரத்தை அவன் தள்ளிச் சென்று திரும்பி விடுவான். பத்து நூறு கஜங்களுப்பாலிருந்து கரையை நோக்கி, நிறைந்த வலைகளுடன் கட்டுமரத்தைச் செலுத்தி வரும் உணர்வில் பிச்சையானுக்கு வாழ்வின் பேரானந்தத்தை எட்டிவிட்ட இலயம் கூடிவிடுகிறது. அங்கிருந்து கரையை நோக்கு கையில் கரையில் ஈயாய் மொய்த்திருக்கும் காலை நேர மீன்வாடியில், வண்ணப் புள்ளி களுக்கிடையே நீலப்புள்ளி ஒன்று பெரிதாக வளர்ந்து அவன் கட்புலன்களை நிறைக்கிறது.
அது..... அவன் ஆத்தா...
அப்பனை அவன் பார்த்ததில்லை. நீலக்கடல் கொந்தளித்துக் குழம்பிச் செம்மையும் கருமை யுமாகச் சுழன்றபோது, அப்பனைத் தன் மடியில் அழுத்திக் கொண்டதாம். அப்போது அவன் தாயின் கருவறையை விட்டு வெளிச்சம் காண வந்திருக்கவில்லை. எனவே, ஆத்தாவை அவன் நீலச் சேலை உடுத்தித்தான் பார்த்திருக்கிறான். பத்துப் பிராயத்தில் அவன் லித்வின் பர்னாந்துவின் மரத்திலேறித் தொழில் பழகச் சென்ற காலத்தில் இதே போல் காலைச் சூரியன் கடலை நீலமாக்கும் பொழுது கரையில் அவனுக்காகக் கோப்பித் தண்ணி'யை வைத்துக் கொண்டு நீலப் புள்ளியாய்க் காத்திருப்பாள். இந்த முழுக்கடற்கரையிலும் அவள் மாசு மருவற்ற நீலம் போல் விளங்கினாள். அவளுடைய பெண்மையை எந்தச் சூறாவளியும் குலைத்து விட முடியவில்லை. அவ்வாறு முயன்றவனை அவள் சுட்டுப் பொசுக்கி விடுவாளாம். சிலுவைப் பாட்டா அந்தக் 'கதை'யை அவனிடம் சொல்லியிருக்கிறார்.
ஆனால்... அப்பொழுதெல்லாம் இறாலுக் காகக் கொச்சிக்காரர் கரையெங்கும் வந்து மடியில் காசைக் கட்டிக்கொண்டு திரிய வில்லையே!இரவு பகலாக 'மிசின் போட்'டுகள் வந்து கடலைக் கலக்கி 'இறால் கூனி' களைக்கூட விட்டு வைக்காமல் வாரிச் செல்லவில்லையே?
தாறுமாறான நினைவுப் பிசிறுகளிடையே இந்தத் தூலமான ரேகைகள் அவனுக்கு முழுமையாகவே புரிகின்றன.
அலைகள் பாறைத் தொடரில் தட்டிமடித்து விழுகின்றன. அவன் மிகக் கவனமாக, லாவகமாக அதைத் தவிர்க்க விலக்கிச் செலுத்தி வருகிறான். கரை...கரை வருகிறது. கரையில் ஒவ்வொரு சிறுமியாக அவன் முகம் தேடுகிறது.
லிலி... லிலிப் பொண்ணு எங்கே?
அவனுடைய முடியிலிருந்தும் கண்களிலி ருந்தும் உப்பு நீர் வந்து உதடுகளில் கரிப்பைத் தடவுகிறது. செம்மையும் கருமையுமாக உறுதி வாய்ந்த தசைகள் மணலில் அவன் கால்கள் பதிந்தும் பதியாமலும் ஓடுகையில் குலுங்கு கின்றன. இடையில் வெறும் அழுக்குக் கச்சை. கண்களில் துழாவும் பார்வை.
லில்லிப் பொண்ணு எங்கே?
'ஓமல்' என்ற பனை ஓலைக்கூடையில் நீலமும் வெண்மையுமாக... 'பல் கிளிஞ்சான்' மீன் மேலாகத் தெரிய, குத்தகை சாயபு சைக்கிளை மணலில் தள்ளிப் போகிறார். 'லில்லி, லில்லிப் பொண்ணக் கண்டியளா? நீலப் பாவாடை ப்ளவுஸ் போட்டிட்டிருக்கும்...?''
அவர் ஒரு கணம் அவனைப் பேரிரக்கத்துடன் பார்த்து விட்டுச் சைக்கிளைத் தள்ளிச் செல்கிறார்.
உதடுகள் துடிக்க அவன் கோயில் மேட்டில் நடக்கிறான். பக்கத்தில், புனிதமேரி உயர் நிலைப் பள்ளிக்குச்செல்லும் வழியில் நீலமும் வெண்மையுமாகச் சீருடையில் சிறுமியர். எல்லோரும் பெண்கள். ''பொட்டச்சிகதாம் படிக்கா. ஆம்பிள கடலுக்குப் போவா. அவெக்குப் படிப்பு எதுக்து?'' என்பதுதான் கடற்கரை மக்களின் தீர்ப்பு. குழந்தை முதலில் தவழ்ந்து கடலை நோக்கித்தான் வரும். ஐந்து வயசுக்குள் கடலில் முக்குளிக்கப் படித்து விடுவான். மரத்தைத் தள்ளி மணற்கரையில் சேர்க்க, நீரில் தள்ள, வலையை இழுத்து மீன்களைப் பிடிக்கப் படித்து விடுவார்கள். அவன் பத்து வயசில் கடல்மீது போனான். முப்பது வருஷங்களாகப் போகிறான். சரேலென்று அந்த நிர்மலமான நீலம் துண்டு துண்டாகப் பிய்ந்து சிதறிவிட்டது.
துண்டு துண்டாக... அவன்தான் கிழித்துக் குதறி எறிந்தான். மினுக்கும் பட்டு நீலம். அதில் தங்க நட்சத்திரச் சுடர்ப் புள்ளிகள். பன்னரிவாளி கருக்கிலே அதைக் கிழித்துப் பற்களால் இழுத்துக் குதறினான்.
''ஐயோ, நாங் கடன்சொல்லி, கோயிலுக்குக் கட்டச்சீலையில்லேன்னு எடுத்தாரச் சொல்லி வச்சிருந்தேன். இப்படி ஏன் கிழிக்கிறிய?'' என்று ஆங்காரமாக அவள் பாய்ந்து வந்தாள்.
''வராதே கிட்ட. கொன்னிடுவேன் ! வெக்கங்கெட்ட மூதி, கொச்சிக்காரங்கிட்டப் படுத்திட்டு... சீ...'' என்று அதைக் கிழித்துத் துண்டாக்குவதிலேயே அவன் கண்ணாக இருந்தான்.
''ஐயோ சவத்து மாடன் என்னக் கொல் லானே?'' என்று அவள் ஓலமிட்டாலும்கூட அந்தக் கரையில் இதெல்லாம் சகஜம் என்று அலைகள் கரையை அலப்புகையில் சிரித்து விட்டுப் போகும். கடற்கரைக்காரர்களுக்கு இத்தகைய ஓலங்கள் பழகிப் போனவை.
கூலிக்கு வலைக்காரனாகச் சென்று, கிடைப்பதில் தொண்ணூறு விழுக்காட்டையும் குடித்துவிட்டு வந்து அடிக்கும் கணவனிடம் எத்தனை நாட்கள்தாம் உறவு பற்றிக் கிடக்கும்? இறால் ஏஜண்டுகள் மடி நிறையக் காசுடன் கடற்கரைகளில் திரியும்போது, இளவட்டப் பெண்களின் அடித்தள ஆசைகளுக்கும் அவர்கள் தூண்டில் போடத்தான் செய்தார்கள். அவை மிக விரைவில் குபீரென்று பற்றிக் கொண்டன. யாரையும் யாரும் ஏசுவதற்கோ, பேசுவதற்கோ இடமில்லை. இராக்கடல், பகற்கடல் என்று கட்டுமரத்தைக் கட்டிக் கொண்டு பணத்தை அள்ளித் தரும் இறால் மீனுக்காகக் கடலின் மடியை இவர்கள் ஓயாமல் துழாவினாலும் இவர்களைக் காட்டிலும் பல நூறுமடங்குகள் பலம் கொண்ட பிள்ளைகள் கடலின் மடியை உறிஞ்சிக் குடிக்க முன்வந்து விட்டார்களே? இறால் இவர்களுக்கு எட்டாச் சரக்காயிற்று. மரச் சொந்தக்கரனுக்கே அடுப்பில் நீலப் புகை காண வழியில்லாதபோது, கூலிக்காரனுக்கு என்ன கிடைக்கும்? ஒன்று, அரை கிடைக்கும். அதைக் கொண்டு போய்க் குடித்து, கனமான கருமைகளைக் கரைத்துக் கொள்வான். நீலவானில் பஞ்சாய் மிதக்கும் சொகுசுடன் குடிலை நோக்கி வருவான்.
வெற்றுப் பானையை கவிழ்த்துவிட்டு, வயிற்றுப் பிள்ளையும், கைப்பிள்ளையுமாக வாசலில் நின்று அவனிடம் அடிபட்டுக் கொண்டிருந்தவள், அவன் வருகையில் சோறு போட்டு இறைச்சிக் கண்டம் மிதக்கும் ஆணம் ஊற்றிய போது, ஏனென்று கேட்டானா? எப்படி என்று வினவினானா?
பிறகு அரச பொரசலான பிசிறுகள் தெறித்து உண்மை நீலத்தை அவனுக்குத் தெளிய வைத்து விட்டது.
பலன்தான் மினுக்குப் புடவையைக் கிழித் தெறிந்தான். அவள் முடியைப் பற்றி உலுக்கி னான். வெறி தணிந்ததும் கடலைப் பார்க்கப் போய் அமர்ந்து கொண்டான்.
வலைகளை விரித்து, பாறை பற்றிக் கிழிந்த இடங்களைச் செப்பம் செய்கையில், ''இறால் நிறைச்சுக் கெடச்சா, எல்லாம் செரியாப் போவும். அப்பம் சொந்த மரம் வாங்கலாம். ஒரு நாளைக்குப் பத்து ஐந்நூறு ரூபாய்ப்பாடு கிடைக்குமே? கடல் நாச்சி மனசு வச்சா இந்தா இந்தான்னு கொடுப்பா!'' என்று நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டான்.
அதிகாலையில் தொழிலுக்குச் செல்லும் போது, ''றால் படணுமின்னு மாதாவை வேண்டிக்க ரோசி. ஒம்மேலே எனக்கு மனத்தாவமே இல்லை...'' என்று கண்ணீருடன் இறைஞ்சுவான். ''நா குடிக்கவே போகமாட்டெ. நேர மீன் தட்டினதும் இங்கத்தா வருவேன்'' என்று ஆணையிடுவான்.
கடலின் எல்லையில்லா பரப்பில் வானமும் கடலுமாகச் சூழ்ந்த நீல வெள்ளத்தில் எல்லையில்லாததோர் விடுதலை உணர்வில், கரையின் கருமைகளும், சட்டதிட்டங்களாகிய பந்தங்களும் அகன்று போகும். வானில் பறப்பது எப்படி என்று அவனுக்குத் தெரியாதுதான். ஆனால் கடலில் அந்தப் பூ அலைகளில் ஏறியும் இறங்கியும் மிதந்தும் சவாரி செய்கையில் அவனுக்குப் பத்து நூறு யானைப் பலம் தோன்றும். முழு விடுதலையின் ஆனந்தத்தில் மிதப்பான். பனையுயர அலை வந்தாலும் அவன் அஞ்சியதில்லை. ஆனால் கரையில் வந்தாலோ அந்த நீலம் தந்த விடுதலைப் பலங்களனைத்தும் கனமாய்க் கவிழ்ந்து கொண்டன. அதைக் கரைக்க உடனே அவன் குடிக்கப் போய் விடுவான்.
அன்று அப்படித்தான் மணலில் கிடந்த அவனை யாரோ உலுக்கினார்கள். தட்டி எழுப்பினார்கள். |
|
''ஏலே, பிச்ச எழுந்திரிலே ! உம்பெஞ்சாதி ரோசி, புள்ளியெல்லாம் தூத்துக்குடி சினிமாக் கொட்டகையில கரிஞ்சி கெடக்காவ... எந்திரிலே !''
''பாவம்... ஆம்பளப் புள்ளிய ரெண்டும் போயிற்று... மிஞ்சுனது லில்லிப் பொண் ணுதா....அது சினிமாவுக்குப் போவாம டீச்சர் கூட்டிற்றுப் போயிட்டா.'' குரல்கள் எங்கோ மலை முகட்டில் துளைக்கும் பூரானைப் போல் குடைந்தன.
''அப்பச்ச... அப்பச்சி...!'' லில்லிப் பெண்ணின் ஓலம் நீண்டது.
குடலைப் பிடுங்கி விட்டாற் போல் குபுகுபு வென்று எரியுணர்வு மேலிட்டது. நீல நீலமாகச் சுவாலைப் பூக்கள்எழும்பி அவனுக்குள்ளேயே விழுந்தன. அவளுடைய சீலையா, முடியா? எது அடையாளம் கண்டுகொள்ளத் தெரிந்தது.? எல்லாம் கரிந்து ஒட்டிக் கிடந்த ஓர் உடலை, குவியலில் யாரோ அடையாளம் காட்டினார் கள்.ஜோசு, பீட்டர், இரண்டு தளிர்களும் அன்னையுடன் கருகிவிட்டன.
''லில்லிப் பெண்... ஆரஞ்சு போல் முகம். அவள் எங்கே? அவதா எம்மவ. அந்தப் பிள்ளிய கொச்சிக்காரம் பிள்ளிய...'' கோயிலின் முன் கெபி.. உள்ளே நீலமாக வண்ணம் பூசியிருக் கிறார்கள். அழகிய பசுங்கொடிகளுக்கு நடுவே தெய்வக் குழந்தையை ஏந்தி நிற்கிறாள் மரியன்னை.
கெபி மூலையில் லில்லிப் பெண் ஒளிந்திருக் கிறாளோ என்று தேடும் பார்வை உயர்ந்த சிலுவைத் தூபியுடைய கோயிலின் முகப்பி லிருந்து மின்னும் நீலமணிக் கழுத்துக்கள் அசையப் புறாக்கள் பறந்து வருகின்றன.
''லில்லிப் பொண்ணே, ஒன்ன நா அடிக்க மாட்டே. நா மாமா சத்தியமாக் குடிக்க மாட்டே. என்னை விட்டுப் போட்டுப்போயிட்டியே? என்னாத்தா? எனக்கு வூடில்லாமச் செஞ்சிட் டியே?..''
கோயிலின் உள்ளே சென்று முட்டுக்குத்தி அவன் அழுகிறான். அவனுடைய குரல் அந்த உயர்ந்த கூரையில் முட்டி மோதி எதிரொலித் துக் கடலின் அலைத் துளிகள் போல் அந்தக் கூடம் முழுதும் பரவுகிறது.
அவனைத் தேடி அங்கே சூசை வருகிறான்.
''மச்சா,ஏனளுகா? லில்லிப் பொண்ணு எங்கும் போவ இல்ல. கான்வெண்ட் ஸிஸ்டர்தா கூட்டிப்போயிற்று. ஸ்கூல்ல படிக்கா இப்பம். நாளக்கி வரும் வா...''
அவனுடைய முகம் உயர்ந்து எங்கோ வெறுமையைத் துழாவுகிறது. ''அதா... ஆஞ்சு... லில்லிப் பொண்ணுதா இவ...''
''ஆமா... வா....!''
''பாவம், புத்தி பெறண்டு போச்சு. அந்தப் பொண்ணு லில்லி ஒரு மாசம் இவங்கூடதா இருந்து, அப்பச்சி அப்பச்சின்னு கரஞ்சிச்சி. அதை அடையாளம் கூடத் தெரிஞ்சிக்காம லில்லிப் பொண்ணுன்னு தேடுறா...பாவம்...''
சூசை சகோதரி கணவனான அவனைப் பற்றிக் கொண்டு மணலில் நடக்கிறான். நீலக் கடல் பார்வையை மட்டுமன்றி முழு உணர்வையும் வளைத்துக் கொள்கிறது.
ராஜம் கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|