Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
தமிழ் இணைம் 2002 - இதனால் என்ன பயன்?
- மணி மு.மணிவண்ணன்|ஆகஸ்டு 2002|
Share:
அ.கே.கே.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இணையம் என்றால் என்ன?

இண்டர்நெட் என்பதைத் தமிழில் இணையம் என்கிறோம். 1995இல் தமிழில் முதல் முறையாக மின்னஞ்சல் வழியாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள ஏது செய்த தமிழ்.நெட் என்ற மடலாடற்குழுவில் (மெயிலிங் லிஸ்ட்) இண்டர்நெட் என்பது பின்னல்வலையா வலைப்பின்னலா என்ற வாதத்திற்குத் தீர்வு கொடுப்பதுபோல் கோ என்ற மலேசிய நண்பர் “பல இதயங்களை இணைக்கும் மையம்” என்ற பொருள்பட “இணையம்” என்று சொல்லலாமே என்றார். கலைச் சொல்லிலும் கவிதை படைக்கும் தமிழ் உள்ளங்களுக்கு அந்தச் சொல் மிகவும் பிடித்து விட்டது. இன்று எல்லோருமே பயன்படுத்தும் சொல்லாகிப் புழக்கத்துக்கு வந்து விட்டது.

தமிழ் இணைய மாநாடு என்றால் என்ன?

கணினி, இணையம் என்ற இரண்டு தொழில் நுட்பச் சாதனங்களையும் தமிழ் மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் சிறப்படையச் செய்ய பல நாடுகளில் வாழும் தொழில் நுட்ப வல்லுநர்களும், வணிகர் களும், தமிழ்ப் பொதுமக்களும் ஒன்று திரளும் மாநாடு தமிழ் இணைய மாநாடு. தொழில்நுட்பக் கருத்து களைப் பகிர்ந்து கொள்ளக் கருத்தரங்கங்களும், தரப்பாடுகளை ஒருமுகப் படுத்தப் பணிக்குழுக்களும், வணிகநிலை மேம்படக் கண்காட்சியும், தமிழர் பண்பாட்டு வளர்ச்சிக்கு இந்தக் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளச் சமூக மையமும் சேர்ந்து அமைவதுதான் தமிழ் இணைய மாநாட்டின் சிறப்பு.

மாநாடு எங்கே, எப்போது நடக்கிறது?

இது உலகத் தமிழ் இணைய மாநாடு. சிங்கப்பூர் ’97, சென்னை ’99, சிங்கப்பூர் 2000, கோலா லம்பூர் 2001 என்று இது வரை நான்கு முறை நடந்துள்ளது. இந்த ஆண்டு, தமிழ் இணையம் 2002 மாநாடு சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ·பாஸ்டர் சிடியில் இருக்கும் கிரௌன் பிளாசாவில் செப்டம்பர் 27, 28, 29 தேதிகளில் நடைபெறும். விவரங்களுக்கு http://www.tamilinternet.org அல்லது http://www.infitt.org/ti2002/ என்ற சுட்டிகளைக் காணுங்கள்.

மாநாட்டை யார் நடத்துகிறார்கள்?

சிங்கப்பூர், சென்னை, கோலா லம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகள் முறையே சிங்கப்பூர் அரசு, தமிழக அரசு, மலேசிய இந்தியன் காங்கிரஸ் என்ற அமைப்புகளின் நிதி உதவியோடு நடைபெற்றன. அமெரிக்காவில் நடக்கும் தமிழ் இணையம் 2002ஐ உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் (International Forum for Information Technology in Tamil) அமைப்பும், பெர்க்கலியின் கலி·போர்னியா பல்கலைக்கழகத்தின் தெற் காசியக் கல்வி மையமும் மற்றும் தமிழ்த் துறைத் தலைவரும் (Center for South Asia Studies and the Chair in Tamil Studies of University of California, Berkeley) இணைந்து இம்மாநாட்டை வழங்கு கிறார்கள். அரசு ஆதரவோ, பெரிய நிறுவனங்களின் உதவியோ இல்லாமல் நம்மைப் போன்ற சாதாரணத் தமிழர்களின் நன்கொடையாலும் உடலுழைப்பாலும் இம்மாநாட்டை நடத்த முயற்சித்துள்ளோம்.

மாநாட்டுக்கு யாரெல்லாம் வருகிறார்கள்?

தென்றல் வாசகர்களுக்குக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நேர்காணல் பகுதியில் அறிமுகமான பல அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுகிறார்கள். முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்மஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன், பேரா. வ. வெ. குழந்தைசாமி, தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பம் செயலர் விவேக் ஹரிநாராயன், தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குநர் பேரா. பொன்ன வைக்கோ, பேராசிரியர்கள் ஜோர்ஜ் ஹார்ட், ஹெரால்டு ஷி·ப்மன், வாசு ரெங்கநாதன், “முரசு அஞ்சல்” முத்து நெடுமாறன், மதுரைத் திட்டத்தின் கு. கல்யாணசுந்தரம், குமார் மல்லிகார்ஜுனன், ‘பாசுர மடல்’ நா. கண்ணன், கணித்தமிழ்ச் சங்கத்தின் அண்டோ பீட்டர், செல்லப்பன், தமிழ் லினக்ஸ் வெங்கடரமணன், சிவராஜ், கணித்தமிழ் வளர்க்கும் சீனப் பேராசிரியர் டான் டின் வீ, அருண் மகிழ்நன், பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராதா செல்லப்பன், ஜீன் லாரன்ஸ், பகவதி, ராமகிருஷ்ணன், மைக்ரோ சா·ப்ட், ஓரக்கிள், ஐ.பி.எம். நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று பலர் எழுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைப் படைக்கிறார்கள். தென்றல் ஆசிரியர் அசோகன், தென்றல் வானொலியின் சிவகாமி ஆகியோரும் வணிகக் கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள்.

அமெரிக்காவின் தென்றல் வானொலி (http://www.thendral.com ) மாநாட்டிலிருந்து நேரடி ஒலிபரப்பு செய்ய உள்ளது. சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சிக் குழு மாநாட்டைப் படம் பிடிக்க வருகிறது. கூடவே அமெரிக்கத் தமிழர்கள் பற்றிய ஆறு பகுதித் தொலைக்காட்சித் தொடரைப் படம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர். சான் ·பிரான்சிஸ்கோ பகுதியில் வாழும் தமிழர்கள், அவர்கள் மொழி, பண்பாடு, கலைக்கழகங்கள், கல்விக்கூடங்கள், கோவில்கள், பற்றிய சுவையான செய்திகளை உலகத் தமிழர்களுக்குக் காட்டும் இந்தத் தொலைக்காட்சித் தொடர்.

மாநாட்டை ஏன் அமெரிக்காவில் நடத்துகிறார்கள்?

அமெரிக்காவும் சிலிக்கன் வேல்லியும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மையங்கள். பல்லாயிரக் கணக்கான தமிழர்களும் இந்தத் துறையில் பணிபுரிந்து தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உறு துணையாக இருப்பதும் இங்கேதான். தமிழில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் தலைமையைத் தமிழ் உலகம் ஆவலோடு எதிர்பார்க்கிறது. அது மட்டுமல்லாமல், மைக்ரோசா·ப்ட், ஓரக்கிள், ஆப்பிள், கூகிள், யாஹூ , இண்டெல், போன்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பீடங்களும் அமெரிக்காவில் தான் உள்ளன. இங்குள்ள தமிழர்கள் மனது வைத்தால் தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க சாதனைகள் படைக்கலாம்.

கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் ஏன் தமிழில் இருக்க வேண்டும்? ஆங்கிலத்தைப் போல் பெரும் வளர்ச்சி தமிழில் இருக்க முடியுமா?

தமிழர்களில் வெகுசிலரே ஆங்கிலத்தில் புலமையுள்ளவர்கள். தாய்மொழியாகத் தமிழைக் கற்றவர்களில் 90%க்கும் மேற்பட்டவர்களுக்குத் தமிழ் மட்டுமே தெரியும். ஆங்கிலத்தில் புலமை யில்லை. ஏற்கனவே செல்வந்தர்கள் ஏழைகள் என்ற பிளவு உள்ளது போக, கணினி, இணையத் தொடர்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பிளவு கூடி, அதிலும், கணினியிருந்தாலும் அதைத் தாய்மொழியில் பயன்படுத்த இயலாத பெரும் பிளவு நிலவுகிறது. இதைத்தான் தமிழ் எண்ணியப் பிளவு (Tamil digital divide) என்கிறோம். இதைக் கடக்கவில்லை யென்றால், தமிழர்கள் பலர் முன்னேற வழியே இல்லை. ஆங்கிலத்தின் பெரும் வளர்ச்சி கடந்த சில நூற்றாண்டுகளில் வந்ததுதான் என்பதை நாம் மறக்கக் கூடாது. தமிழ் மொழியில் உள்ள அரிய பல நூல்கள், மூலிகை போன்ற மருத்துவ நூல்கள், இன்னும் ஏட்டுச் சுவடி வடிவத்திலேயே இருந்து மறையக் கூடிய ஆபத்தும் உள்ளது. ஏன், ஆங்கிலம் மட்டுமே படித்த சில தமிழர்களால் பாரதியின் கவிதைகளைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத ஓர் அவல நிலை இன்று நிலவுகிறது. ஒரு மொழியின் வளர்ச்சி அதைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் பொறுப்பு.

நான் ஒரு கணிஞன் (computer engineer). என்னால் என்ன செய்ய முடியும்?

நீங்கள் http://www.tamillinux.org போன்ற குழுக்களுடன் தொடர்பு கொண்டு தமிழ் லினக்ஸ் போன்ற தளையற்ற மென்கலங்களை (free software) உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்கலாம். IETF Working groups போன்ற பணிக்குழுக்களில் பணியாற்றியிருந்தால், தமிழ்த் தரப்பாடுகள் செய்யும் பணிக்குழுக்களில் இணைந்து உதவலாம். ஒளிவழி எழுத்தறிதல் (OCR), கருவி வழி மொழி பெயர்த்தல் (machine translation), எழுத்தைப் பேச்சாக் குதல்(text to speech), பேச்சை எழுத்தாக் குதல்(speech to text), கணினிக் கேளிக் கைகள்(computer games), ஏழை எளியோர்க்குத் தேவையான மென்கலங்கள் (software needed by poor and downtrodden) உருவாக்குதல் போன்ற முயற்சிகளில் பங்கேற்கலாம். இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் தமிழ் இணையம் 2002 க்கு வருகிறார்கள். அவர்கள் உரைகளைக் கேட்கலாம், அவர்கள் குழுக்களில் பங்கேற்கலாம். அவர்கள் பயிலரங்குகளில் கற்றுக் கொள்ளலாம்.
நான் ஒரு வணிகன். என்னால் என்ன செய்ய முடியும்?

உங்கள் பொருட்களைக் கண்காட்சியில் காட்டி விற்க முடியும். மற்ற வணிகர்களோடு ஊடாடிப் புதிய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். http://www.infitt.org/ti2002/hubs/exhibition/exhibition.html என்ற சுட்டியைக் காணுங்கள்.

நான் ஒரு ஆசிரியன். என்னால் என்ன செய்ய முடியும்?

தமிழ் ஆசிரியர்கள் தம் மாணவர்களை வலைக்களப் போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். கணினி வழியாகத் தமிழ் கற்றல், கற்பித்தல் குறித்துப் பேச விற்பன்னர்கள் வருகிறார்கள். அவர்களோடு பழகிப் புது உத்திகளைக் கற்றுக் கொள்ள முடியும். கணினி ஆசிரியர்கள் தம் ஆராய்ச்சி மாணவர்களை மாநாட்டில் கலந்து கொள்ள அனுப்புங்கள்.

எனக்குத் தமிழ் கற்றுக் கொள்ளும் சிறு குழந்தைகள் உள்ளன. அவர்களால் என்ன செய்ய முடியும்?

தமிழ் வலைக்களப் போட்டியில் பங்கேற்றுத் தமிழில் வலைத்தளங்கள் அமைக்கலாம். மேலும் விவரங் களுக்கு http://www.infitt.org/ti2002/competition/ என்ற சுட்டியைக் காணுங்கள்.

என்னுடைய வயது முதிர்ந்த பெற்றோர்களால் என்ன செய்ய முடியும்?

சமூக மையத்தில் முதியோர்களுக்கான பயிலரங்கு களும், கேளிக்கைகளும் ஏற்பாடு செய்து கொண் டிருக்கிறோம். ஆர்வம் உள்ளவர்கள் ti2002@infitt.orgஎன்ற முகவரிக்கு எழுதுங்கள்.

நான் ஒரு இணைய ஆர்வலன். எனக்கு மாநாட்டால் என்ன பயன்?

உங்களைப் போன்ற பல இணைய ஆர்வலர்கள் கூடும் இடம் இது. பெயர் மட்டும் தெரிந்தவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு இதனால் கிடைக்கிறதல்லவா?

நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். என்னென்ன உதவி தேவை?

இது சாதாரணத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட மாநாடு. அதனால் உங்கள் நிதியுதவி மிகவும் தேவைப் படுகிறது. சிறு துளி, பெரு வெள்ளம். மாநாட்டு மலர்கள், விளம்பரங்கள், வலைத்தளங்கள், அறிவிப்புப் பலகைகள் இவற்றை உருவாக்க ஓவியக் கலைஞர்கள் முன் வரலாம். மாநாட்டு அரங்கை அலங்கரிக்க உதவி தேவை. கண்காட்சி அறைகள் விற்பனை, மாநாட்டுப் புரவலர்களோடு தொடர்பு கொள்ளல், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்குக் கடிதங்கள் அனுப்புதல், என்று பல வேலைகள் உள்ளன. வாரத்துக்கு வெகு சில மணிநேரங்கள் ஒதுக்கினால் பெரும் உதவியாக இருக்கும். விவரங்களுக்கு ti2002@infitt.org என்ற முகவரிக்கு எழுதுங்கள். பாரதி சொன்னது போல்

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மறவாதீர்கள்.

இது உங்கள் மாநாடு. நீங்கள் யாராய் இருந்தாலும், எங்கிருந்தாலும், செப்டம்பர் 27, 28, 29 தேதிகளில் தமிழ் இணையம் 2002இல் பங்கேற்க வாருங்கள். அமெரிக்கத் தமிழர்களால் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்த முடியும் என்று தமிழுலகுக்குக் காட்டுங்கள்.

Contact: Mani M. Manivannan
ti2002@infitt.org

Kumar Kumarappan
ti2002@infitt.org


மணி மு. மணிவண்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline