Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
சிவா நாரா, ப்ரியா ராகவன்
- |செப்டம்பர் 2006|
Share:
Click Here Enlargeகடந்த பத்தாண்டுகளில், இருபதிலிருந்து அறுபது வயதான ஒவ்வொருவருவம், ஒருமுறையாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்தோ, முதலீடு செய்வது பற்றி அறிந்து கொள்ள ஆவலுடனோ இருந்திருப்பார்கள். நாள்தோறும், நாம் பங்குச் சந்தையின் மூலம் பலர் கோடீஸ்வரர்களானதைப் பற்றியும், பணக்காரர்கள் பலர் அவர்கள் சொத்தை யெல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்ததைப் பற்றியும் படிக்கின்றோம். இதனால், பலருக்குப் பங்குச் சந்தையென்றாலே பயமாகவும், வியப்பாகவும், புரியாத புதிராகவும் விளங்கு கின்றது. இப் புதிரை, "டாலர் வைஸ், பென்னி ஃபூலிஷ்" (Dollar wise, Penny foolish) என்னும் புத்தகத்தின் மூலம் ஒரு சாமானி யனும் அறியும்படி அழகாக விளக்கியுள்ளனர், சிவா நாராவும், ப்ரியா ராகவனும். நிதி விஷயங்கள், முதலீடு என்றாலே பல மைல் ஒடுபவர்களுக்கு, அவை சம்பந்தமான நுணுக்கங்களை மிக எளிமையாக எடுத்துக் கூறியது மட்டுமின்றி, அதனை ஒரு மெல்லிய காதல் கதையினூடே நகர்த்தி, இனிப்பு கலந்த ஒரு சிறந்த மருந்தைக் கொடுத்திருக்கின்றனர்.

அவர்களுடனான ஒரு சுவையான உரையாடல்...

தென்றல்: நிதி, பங்கு பற்றிய விஷயங்களும், காதல் பற்றிய கற்பனைக் கதைகளும், இரு வேறு துருவங்களைச் சார்ந்தவை. இவற்றை இணைத்து ஒரு புத்தகத்தை எழுத எவ்வாறு தோன்றியது?

பிரியா: நானும், சிவாவும் நூலகங்களுக்குச் செல்லும்போது, சிவா நிதி பற்றிய புத்தகங்கள் உள்ள பகுதியில் மூழ்கிவிடுவார். நான், கற்பனைக் கதைப்புத்தகங்கள் பிரிவிற்குச் சென்றுவிடுவேன். எப்பொழுதாவது நிதி, பங்கு பற்றிய புத்தகங்களைப் புரட்டுவதும் உண்டு. அப்போதெல்லாம் ஒரு புத்தகம்கூட மிக எளிமையாக, அதே சமயம், முழுமையான அறிவை வளர்ப்பதாக அமையாததைக் கண்டிருக்கிறேன். பங்குகளைப் பற்றியும், பி/இ விகிதத்தைப் பற்றியும் (P/E ratio) விரிவாக ஒரு புத்தகம் பேசும்; ஆனால், எப்படி ஒரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆய்ந் தறிய வேண்டும் என்றோ, வரிச் செலவைக் கையாள வேண்டும் என்றோ அது விவரிக் காது. அதற்கு, வேறு இரு புத்தகங்களைத் தேட வேண்டும். இதுவே எங்களுக்கு உந்துதலாக அமைந்தது - நாமே ஏன் ஒரு எளிமையான, முழுமையான புத்தகத்தை எழுதக்கூடாது என்று எண்ணத் துவங்கினோம். 'டாலர் வைஸ், பென்னி ஃபூலிஷி'ன் தோற்றம் இதுவே. அதைப்பற்றி விரிவாக யோசித்த போதுதான், சிறிது கற்பனை கலந்தால் சுவாரசியம் கூடும் என்ற எண்ணம் தோன்றியது. உடல் நலத்தைப் பேணக் காய் கறிக் கலவையைக் கொடுப்பது போல், பண நலனைப் பேண, ஒரு நல்ல ஸாலட்டைத் தரத் தீர்மானித்தோம். வெறும் ஸாலட்டை மட்டும் கொடுப்பதைவிட, அதனுடன் டிரெஸ்ஸிங் கையும் சேர்த்தால் சுவையும் கூடும், வரவேற்பும் அதிகமாகுமல்லவா? அதைப் போலத்தான், நிதித் தளத்திற்கான ஆதாரத்தை/கலவையை (salad) சிவா தயாரித்தார், சுவையான மேல் பூச்சை (dressing) நான் சேர்த்தேன்.

தெ: உங்கள் முன் அனுபவம் அல்லது கல்வி, நிதி சார்ந்ததாக இருந்ததா? பங்குச் சந்தையில் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது? எதனால் அதைப் பற்றிய புத்தகம் எழுதத் தோன்றியது?

சிவா: நாங்கள் இருவரும் கணிணித்துறைச் சார்ந்தவர்கள். நான், ஒரு பங்குச் சந்தை நிறுவனத்தின் வணிக நிரலாக்கத்தின் (trading program) திட்டப்பணி மேலாளராக (project manager) செயலாற்றிக் கொண்டிருந்தேன். அதனால், பங்குகள் பற்றிய நுணுக்கங்களை அறிந்திருந்தேன். மேலும், எனக்கு அந்தத் துறையில் இருந்த ஆழ்ந்த பற்றுதலால், பல விஷயங்களை தெரிந்து வைத்திருந்தேன். இந் நாட்டில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரித்து விற்பதில் மிகப் பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதைக் கண்டபோது, அவற்றின் வளர்ச்சியை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசித்து, அந்த நிறுவனங்களின் பங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை பற்றிய செய்திகள் தினசரித் தலைப்பாய் வெளிவந்து கொண்டிருந்தன. சில மாதங்களில், என்ரான் (Enron) என்னும் சோகக் காவியம் இயற்றப் பட்டது. அது, பங்குச் சந்தை பற்றிய அறியாமையை அப்பட்டமாய் வெளிப்பட வைத்த சம்பவம். இவற்றையெல்லாம் அசைபோட்டபோது உதித்ததுதான் இந்த எண்ணம் - நாம் புரிந்து அறிந்து கொண் டதை மற்றவர்களுடன் ஏன் பகிர்ந்து கொள்ளக் கூடாது? அதை எவ்வாறு நல்ல விதமாய் செய்யமுடியும்? இதற்குக் கிடைத்த பதில்தான் எங்களின் இந்தப் புத்தகம்.

பிரியா: எனக்கு ஜான் க்ரிஷாமின் கதையமைப்புக்கள் மிகவும் பிடிக்கும். சட்ட நுணுக்கங்களை மிக அழகாக, விருவிருப்பான கற்பனைக் கதைகளில் கோர்த்திருப்பார். அவ்வாறே, நாங்களும் நிதி, முதலீட்டுமுறை பற்றி எழுதும்போது காதல் கதையை அடித்தளமாக அமைத்தால் சுவாரசியமாக இருக்கும் என்று எண்ணினோம். அந்த அஸ்திவாரத்தில் உருவானதே இப்புத்தகம்.

தெ: உங்கள் புத்தகத்திற்கு வரவேற்பு எவ்வாறு உள்ளது?

பிரியா: புத்தகத்தை எழுதி நாங்களே வெளியிட்டோம். எங்கள் வலைத்தளத்தில் புத்தகத்தின் முதல் மூன்று அத்தியாயங்களைப் பதிப்பித்திருக்கிறோம், அவற்றைப் படித்து விட்டுப் புத்தகத்தை வாங்கியவர் பலர். சமீபத்தில் ஒரு லாரி ஓட்டுனர் இந்த அத்தியாயங்களை வலைத்தளத்தில் ரசித்து, அதனால் ஊக்குவிக்கப்பட்டுப் புத்தகத்தை வாங்கினார். அதைப் படித்தபின் அவரது முதலீட்டுத்துறை எண்ணங்கள் மிகத் தெளிவாக இருந்தது என்று புகழ்ந்தார். அறிமுகமில்லாதவர்களிடமிருந்து வரும் இத்தகைய பாராட்டுக்களே எங்களுக்குச் சிறந்த கிரியா ஊக்கியாய் அமைகின்றன.

தெ: இந்த நூலை விளம்பரப்படுத்தவோ அதன் கருத்துக்கள் மக்களைச் சென்றடையவோ என்ன முயற்சிகள் மேற் கொண்டுள்ளீர்கள்?

சிவா: இந்தப் புத்தகம், நியூ ஜெர்ஸியில் உள்ள உட்பிரிட்ஜ் நூலகத்தில் இப்பொழுது கிடைக்கின்றது. நாட்டில் உள்ள பிற நூலகங்களிலும் கிடைப்பதற்கு முயன்று வருகிறோம். அடுத்த ஆண்டு முதலாக, நாட்டின் பல நகரங்களுக்கும் சென்று எங்கள் புத்தகத் தையும், முதலீட்டுத் துறை சார்ந்த எங்களின் பிற முயற்சிகளையும் எடுத்துக் கூற எண்ணியுள்ளோம். புத்தகத்தை அமேசான் (amazon.com), மற்றும் வைஸ்பென் (wisepen.com) இணைய தளங்களிலும் விலைக்கு வாங்கலாம்.

தெ: இந்நூல் தவிர வேறு என்ன முயற்சி களில்/செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளீர்கள்?

சிவா-பிரியா: எங்கள் இணைய தளமான wisepen.comல் சந்தாதாரர்களுக்காகப் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறோம். மேலும், ஊடகங்களில் வெளிவந்த எங்கள் செய்தித் தொகுப்புகளையும், கட்டுரை களையும் இத்தளத்தில் ஆர்வமுள்ளவர்கள் படித்து மகிழ இலவசமாகவே வழங்குகிறோம்.

'டாலர் சைம்ஸ்' (Dollar Chimes) என்னும் வாராந்திர வலை இதழை வெளியிடு கின்றோம். 'டாலர்-வைஸ் க்ளப்' என்ற அமைப்பையும் உருவாக்கத் திட்டமிட்டுள் ளோம். இதன் உறுப்பினர்கள் மாதம் ஒருமுறை சந்தித்துச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும், தங்களது வெற்றி தோல்வி களைப் பற்றி ஆராயவும், பல புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் இது பாலமாக அமையும். எங்கள் இணைய தளத்தில், அளவளாவுதலுக்கும் (web chat) வழி வகுக்கவிருக்கின்றோம். இதைத் தவிர, பிரபல இந்து பத்திரிகையின் பிஸினஸ்லைன் நாளிதழில் வாரமொரு முறை நிதி சார்ந்த கட்டுரைகளை எழுதுகின்றோம். நியூ ஜெர்ஸியின் புகழ்பெற்ற ஐடிவி தொலைக்காட்சித் தடமும் எங்களைப் பேட்டி கண்டுள்ளது. பிரபல ரிடிஃப் (rediff.com) இணைய தளத்திலும், ஸ்டார் லெட்ஜர் பத்திரிகையின் ஞாயிறு பதிப்பிலும் எங்களைப் பற்றி எழுதியுள்ளனர். மாதந் தோறும் தென்றலிலும் எங்கள் கட்டுரை வருகின்றது, இக்கட்டுரைகளைப் படித்து விட்டுப் பலர் முதலீட்டு முறை பற்றி மேலும் அறிய எங்களை ஆர்வமுடன் தொடர்பு கொள்கின்றனர்.
தெ: நீங்கள் ஏன் பங்குச் சந்தையில் நேரடி முதலீட்டைப்பற்றி அதிகமாகப் பரிந்துரைக் கின்றீர்கள்? பரஸ்பர நிதிகளிலோ (mutual funds) தங்கம், நிலம், வீடு போன்றவற்றிலோ கூட முதலீடு செய்யலாமே.

சிவா: நிச்சயமாக. ஆனால், முதலீட்டுத் துறையில் வாய்ப்புகள் அதிகம். பரஸ்பர நிதிகள் சில கட்டுப்பாட்டிற்கும், விதிகளுக்கும் உட்பட்டவை. அதனால் சில வாய்ப்புகள் நழுவி விடலாம். இவற்றைச் சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வாங்கும் பங்குகள் எல்லாம் ஒரே மாதிரி முன்னேறும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, டெல் கம்ப்யூட்டர் (Dell Computer) நிறுவன பங்குகளின் விலை முன்னேற நல்ல வாய்ப்பு உள்ளது என்று வைத்துக் கொள்வோம், ஒரு பரஸ்பர நிதியின் வரைமுறைகள் அதன் மொத்த முதலீட்டில், 5% மேல் ஒரே நிறுவனப் பங்குகளில் போடமுடியாது என்று இருக்கலாம். அதுவே நேரடி முதலீடாக இருந்தால், அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. தங்கம் மற்றும் நிலம் முதலியவற்றில் முதலீடு செய்வது அவ்வளவு சுலபமல்ல, மேலும் ஒரு சிறிய தொகையை நிலத்தில் முதலீடு செய்வது என்பது முடியாத காரியம்; வேண்டும்போது உடனடியாக விற்று லாபத்தை அடையும் நீர்மத்தன்மையும் (liquidity) அதற்குக் கிடையாது.

தெ: அமெரிக்கா மட்டுமின்றி ப்ரிக் (BRIC - Brazil, Russia, India, China) போன்ற பிற நாடுகளில் முதலீடு செய்வதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

சிவா: இந்த நாடுகள் மிக வேகமாக முன்னேறி வருவது நிதர்சனமான உண்மை. இங்கிருந்து அந்த நாட்டுப் பங்குச் சந்தை களில் நேரடியாக முதலீடு செய்வது சற்று சிரமமான காரியம். ஆனால் அந்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை நாம் வேறு விதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றில் சில முதன்மையான நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்கப் பங்குச் சந்தைகளிலேயே வாங்கமுடியும். எடுத்துக் காட்டாக, இந்தியாவின் இன்ஃபோசிஸ் (INFY), சீனாவின் பாய்டு.காம் (BIDU) போன்றவை. அவற்றில் முதலீடு செய்து பயன்பெறலாம்.

தெ: பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விழையும் பலர் செய்யும் தவறுகள் என்ன?

சிவா: இவை பலவகைப்படும். ஒருவருக்கு அவரது எல்லா முதலீடுகளும் லாபம் தரும் என்பதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவே. தவறான விளைவுகளை சில சமயம் சந்திக்க நேரிடும். நாங்கள் கண்டவரை, இத்தகைய விளைவுகளின் மூலகாரணங்களாகச் சில வற்றை வகைப்படுத்தலாம். முதலாவது, சரியான ஆய்வுகளைச் செய்யாமல் (research), வதந்திகளை நம்புவது. இரண்டாவது, வாங்கிய பங்கை எப்போது விற்பது என்பதைத் திட்டமிடாமல் இருப்பது (exit strategy) - சில சமயம், பேராசை அல்லது பயத்தினால் (greed or panic) சரியான தருணத்தில் விற்று வெளிவராமல் இருந்து விடுகின்றோம். அதனால்தான், நமது குறிக்கோளைத் தெளிவு செய்து கொள்ள வேண்டும். செய்த முதலீட்டை எவ்வளவு நாள் தக்க வைத்துக் கொள்ளவேண்டும், எவ்வளவு லாபம் ஈட்டவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அதைவிட முக்கியம், நமது முடிவுகள் தவறாக இருந்தால் எந்த நிலையில் பங்குகளை விற்று வெளியே வரவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதை முடிவு செய்வது மட்டுமின்றி, செய்த முடிவை தக்க தருணத்தில் செயல்படுத்துவதும் மிக முக்கியம்.

தெ: பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விழைவோர்க்குத் தங்கள் அறிவுரை என்ன?

சிவா: முதலில் நிறுவனங்கள் அடைய வேண்டிய அளவுகோலை நிர்ணயம் செய்யவும். அந்த அளவு நிலையை பூர்த்தி செய்யும் நிறுவனப் பங்குகளை மட்டுமே வாங்குவதுஎன்று முடிவுசெய்து கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு நிறுவனம் தவறாமல் வருடாவருடம் லாபம் ஈட்டுகிறதா, அந் நிறுவனத்தின் கடன்கள் எல்லைக்குட் பட்டுள்ளனவா, லாப விகிதாசாரம் ஏறு முகத்தில் இருக்கிறதா? (liquidity, margins, debt burden, earnings, cashflow).

2. எவ்வளவு நல்ல நிர்வாகமாகவும், நிறுவனமாகவும் இருந்தாலும் அதன் பங்குகளை சரியான விலையில் வாங்குவது மிக முக்கியம்.

3. நிறுவனங்களின் நிதி நிலை, மற்றும் லாப நஷ்டக் கணக்குகளைக் கூர்ந்து படியுங்கள்.

4. பங்குச் சந்தை நடப்புகளை தவறாமல் கவனித்து வாருங்கள்.

5. ஒவ்வொரு துறையின் பரிணாம வளர்ச்சி யையும் கவனியுங்கள். சில தொழில்கள் வளர்பிறை தேய்பிறை போல் சுழல் நகர்வுத் தன்மையுடையவையாய் இருக்கும் (subject to cyclical movements).

6. அடுத்த மிகப் பெரிய தொழில்நுட்பப் புரட்சி எங்கே ஏற்படும் என்று ஆராய்ந்து பாருங்கள்.

இவற்றை எழுநிலை தொழில்துறை (sunrise industry) எனலாம். இருபது வருடங்களுக்கு முன் இணையமையம் (internet) உலகை மாற்றத்துவங்கியது. அடுத்தது என்ன? 'நீர்' (water) சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிய புரட்சியைத் தோற்றுவிக்கும் எனத் தோன்றுகிறது. வரும் காலங்களில், நீரும் எரிபொருள் எண்ணெய்போல் சந்தைப் பரிமாற்றத்திற்கு உட்படலாம்! தன்னம்பிக்கையும், தெளிவான திட்ட மிடலும் இருந்தால் பங்குச் சந்தை ஒரு தங்கச் சுரங்கமே.
Share: 


© Copyright 2020 Tamilonline