Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம் - (பாகம் 4)
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2002|
Share:
முன் கதை: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர்.

கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கியிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.

தான் வேலை புரியும் ஸைபோஜென் என்னும் பயோ-டெக் நிறுவனத்தில், ஒரு சக விஞ்ஞானியான ஷின் செங் என்பவர் தலை மறைவாகி விட்ட விஷயத்தை விசாரிக்க ஷாலினி சூர்யாவின் உதவியை நாடினாள். இந்த விஷயத்தை விசாரிக்க வந்த போலீஸ் டிடெக்டிவ் மார்க் ஹாமில்டன் சூர்யா சேர்ந்து கொள்வதை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொண்டார். விஞ்ஞானியின் கம்ப்யூட்டர் திரையில் இருந்த பாதியில் நிறுத்தப்பட்ட ஒரு மெமோவில் இருந்து ஷின் தானாக மறையவில்லை, கடத்தப் பட்டிருக் கிறார் என்று சூர்யா நிரூபித்தார். அதன் பிறகு அங்கு வந்த ஷின்னின் ஸெக்ரட்டரி மேரி ஷின் கடத்தப் பட்டார் என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள். அவள் உணர்ச்சிகள் உண்மையாகத் தோன்றினாலும் அவள் கூறியதில் எதோ சூர்யாவை நெருடவே அவர் மார்க்கிடம் கூறி எதோ காரியத்தை ரகசியமாக ஆரம்பித்து வைத்தார். அதன் பின் தலைமை விஞ்ஞானி ஜான் கென்ட்ரிக்ஸ¤டன் அவருடைய ஆர்பாட்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அறையில் பேசினார். அவர், ஷின் தன் ஆராய்ச்சியைப் பற்றி அளவுக்கு அதிகமாக தம்பட்டம் அடித்துக் கொண்ட தால் வந்த வினை இது என்றார், கம்பனியை மிகவும் பாதிக்கப் போகிறது என்று கவலைப் பட்டார். அப்போது ·போன் மூலம் கிடைத்த ஒரு செய்தி சூர்யாவுக்கும், மார்க்குக்கும் பரபரப்பு ஏற்படுத்தியது...

·போனில் பேசி முடித்த பின் மார்க் சூர்யாவிடம் பரபரப்பாக எதோ கிசு கிசுத்ததையும் அதனால் சூர்யாவுக்கு ஏற்பட்ட திருப்தியையும் பார்த்த ஜான், ஷாலினி, கிரண் மூவரும் கோரஸாக "என்ன, என்ன, ஷின் பற்றி ஏதாவது தெரிஞ்சுதா?!" என்று ஆவலுடன் கேட்டனர்.

மார்க் தலையசைத்தான். "இன்னும் இல்லை. சூர்யா எங்களுக்கு ஒரு ஐடியா குடுத்தார். அந்த மாதிரி செஞ்சதுல ஒரு சின்ன விஷயம் கிடைச் சிருக்கு. அது என்ன பலன் குடுக்கப் போகுதுன்னு இன்னும் நிச்சயமா சொல்ல முடியாது. அதை இப்ப விவரமா சொல்லறது நல்லதில்லை. இன்னும் கொஞ்சம் விசாரிச்சுட்டு இன்னும் நிறையத் தெரிஞ்சப்பறம் சொல்றேன்" என்றான்.

இதைக் கேட்ட ஜான் கொஞ்சம் படபடப்புடன், "இதோ பாருங்க மார்க், அது எனக்கு நியாயமாப் படலை. இது எங்க கம்பனியை ரொம்ப பாதிச் சிருக்கற, இன்னும் மிக மோசமா பாதிக்கக் கூடிய விஷயம். எனக்கு இன்னும் தெரிஞ்சாகணும்" என்று கோபமாகப் பேசினார்.

ஷாலினி வெறுப்புடன், "சே, கம்பனிதான் இவருக்கு முக்கியமாப் போச்சா" என்பது போல் பார்வையால் ஒரு கடுங்கணையை ஜான் பக்கம் வீசி விட்டு, சூர்யாவிடம் பரிதாபமாக அதே விஷயமாகக் கேட்டாள். "சூர்யா, ஷின்னுக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோன்னு ஷின்னோட மனைவி, அப்புறம் நாங்க எல்லாம் தவிச்சுப் போயிருக்கோம். இந்த மாதிரி எதோ கொஞ்சமாவது கிடைச்ச விஷயத்தை மறைச்சு வச்சுட்டா, என்னமோ ஏதோன்னு இன்னும் மனசு கலவரமாகுது. எதாவது சொன்னீங்கன்னா கொஞ்சம் நிம்மதி கிடைக்கலாம்" என்று கெஞ்சினாள்.

கிரணும் அந்தக் களத்தில் தாவிக் குதித்து, "சும்மா அவுத்து வுடுங்க பாஸ்! நீங்க மேரியை விசாரிக்கச்சயே கவனிச்சேன், உங்களுக்கு எதோ தோணியிருக் குன்னு, ஆனா நீங்க அமுக்கமா மார்க் கிட்ட மட்டும் கிசுகிசுன்னுட்டீங்க! இப்பவாவது சொல்லுங்களேன்" என்றான்!

சூர்யா மார்க்கை ஏறிட்டுப் பார்த்தார்.

மார்க் மீண்டும் தலையசைத்து விட்டு, "நீங்க எல்லாம் நினைக்கறா மாதிரி ஷின் பத்தி ஒண்ணும் இன்னும் விஷயம் கிடைக்கலை. கிரண் சொல்றா மாதிரி மேரி கிட்ட பேசினப்புறம் என் கிட்ட சூர்யா ஒரு ஐடியா குடுத்தது உண்மைதான். அவருக்கு எதுனால அப்படித் தோணுச்சுன்னு என் கிட்ட கூட அவர் சொல்லலை. ஆனா அவர் செய்யச் சொன்னது ஒரு வழக்கமான போலீஸ் செயல்முறைதான். நான் ஏற்கனவே செஞ்சிருக்கணும், அவர் சொன்னதும் செஞ்சேன். அதுலேந்து ஒரு சின்ன துப்பு, ஒரு போன் நம்பர் கிடைச்சிருக்கு அவ்வளவுதான். அதை நாங்க இப்ப ட்ரேஸ் பண்ணிக் கிட்டிருக்கோம். அது பத்தின விவரம் கிடைச்சதும், ஒரு வேளை ஷின் பத்தி இன்னும் தெரியலாம். அதுக்கு மேல இப்ப சொல்ல முடியாது." என்று கண்டிப்பாகக் கூறினான்.

சூர்யா மற்ற மூவருக்கும் ஆறுதலாக, "உங்க கிட்ட எல்லாம் அப்படி ஒண்ணும் ரொம்ப மறைச்சுடலை. அப்ப எனக்கு ஒரு பாதி யோசனை தோணுச்சு. அதுனால மார்க் கிட்ட செய்யச் சொன்னேன். அதை இப்ப விளக்கறதுனால பயன் இல்லை, சிலருக்கு வீணா இன்னும் துன்பந்தான் விளையலாம். ஷின் பத்தி எதாவது தெரிஞ்சா நிச்சயமா சொல்றேன். இப்ப சொல்ற படி எதுவும் இல்லை, நம்புங்க" என்றார்.

சூர்யாவை நன்கு அறிந்த ஷாலினியும் கிரணும், அதற்கு மேலும் வற்புறுத்துவதில் பயன் இல்லை என்று அறிந்து அமைதியடைந்தனர். ஆனால் ஜான் திருப்தி யடையவில்லை என்பது அவர் முகம் போன போக்கில் நன்றாகத் தெரிந்தது! ஆனாலும் அவர் அடக்கிக் கொண்டு, "சரி இப்ப என்ன செய்யப் போறோம்" என்றார்.

சூர்யா, "மார்க்குக்கு ·போன் கால் வரத்துக்கு முன்னால நாம பேசிக்கிட்டிருந்ததைத் தொடரலாம்" என்றார்.

மார்க் தன் நோட்டு புத்தகத்தைப் பார்த்து விட்டு, "ஆமாம், ஜான், நீங்க கான்·பரன்ஸ்களில ஷின் தன் ஆராய்ச்சியைப் பற்றித் தம்பட்டம் அடிச்சிகிட்டதால இந்த வினை வந்திருக்கலாம்னு சொன்னீங்க... விளக்கம் தர முடியுமா?" என்றான்.

ஜானின் வார்த்தைகளை மீண்டும் கேட்டதும் ஷாலினிக்கு திரும்பவும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது! "சே, சே, ஷின் அப்படிப் பட்டவர் இல்லை, எனக்குத் தெரிஞ்சு அவர் ஒரு ஷை டைப். ஒரு மூலைல ஒளிஞ்சுகிட்டு உட்கார்ந்திருக்கறதைதான் நான் பாத்திருக்கேன். அவருடைய வேலையைப் பத்தி நல்லா தெரிஞ்ச ரொம்பப் பெரிய விஞ்ஞானிகள் வந்து குறிப்பாக் கேட்டாத்தான் குறுகலாத்தான் விடை குடுப்பார்" என்றாள்.

ஜானின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன! எரிமலையாக சிதறிவிடாத குறைதான்! பொறா மையும் எரிச்சலும் அதனுடன் சேர்ந்துகொண்டு அவர் முகத்தில் தாண்டவமாடி கோரப் படுத்தி விட்டன. "உனக்குத் தெரியாது ஷாலினி, நீ சின்னப் பெண், ரொம்ப வெகுளி. எனக்குத்தான் தெரியும் ஷின் எப்படிப் பட்ட பசுத் தோல் போர்த்திய புலின்னு!" என்று சீறினார்.

அவரை அதுவரை அப்படிப் பட்ட ஆக்ரோஷத்துடன் பார்த்திராத ஷாலினி ஆடிப் போய் சற்றுப் பின் வாங்கி சூர்யாவின் பின் மறைவாக நின்று விட்டாள். கிரண் அவள் அருகில் நகர்ந்து ஆதரவாகத் அவள் தோளைச் சுற்றித் தன் கையைப் போட்டு அணைத்துக் கொண் டான். தன் சகோதரனின் பாதுகாப்பான அரவணைப் பில் ஷாலினியும் அமைதியுற்றாள்.

சூர்யா பட படப்பில்லாமல், "அது எப்படி சொல் றீங்க ஜான், இன்னும் குறிப்பான உதாரணம் சொல்ல முடியுமா, அது உதவியா இருக்கலாம்" என்றார்.

ஜான் கொந்தளிப்புடன் குமுறிக் கொட்டிவிட்டார். அவரையும் மீறி, அவருடைய வழக்கமான பள பளப்பான மெருகுடன் மெதுவாக இனிமையாகப் பேசும் தோரணை போய் விகாரமான ஆவேசத்துடன் வார்த்தைகள் அணையுடைந்த வெள்ளமாகப் பாய்ந் தன. "ஆமாம், பசுப்போல் போர்த்திய புலி, ஆட்டுத் தோல் ஓநாய்! எல்லார் கிட்டயும் வெளியில அவ்வளவு இனிப்பா இருந்து மயக்கியிருக்கார். அத்தனையும் வேஷம். எங்க அட்மினிஸ்ட்ரேடிவ் போர்ட் மீட்டிங்ல எல்லாம் என் மேல எத்தனைப் புகார் கிளப்பி என்னை எப்படிச் சித்திரவதை செஞ்சிருக்கார்னு யாருக்குத் தெரியும். எப்பவும் அவருக்கு என் வேலை மேல ஒரு கண். எப்படா கவுத்துவுடலாம்னு குறியா இருந் தார்..." ஒரு மூச்சு வாங்கிக் கொண்டு மீண்டும் வெள்ளம் ஓடியது!

"...அது மட்டும் இல்லை, நான் அவருடைய அனாலிஸிஸ், அப்புறம் பேப்பர்கள் எல்லாத்தையும் படிச்சு எவ்வளவு பிழைகளைத் திருத்தியிருக்கேன் தெரியுமா? நியாயமாப் பாத்தா, என் பேரை பேப்பர்களில இரண்டாவதாப் போட்டிருக்கணும். ஆனா ஷின் எனக்கு ஒரு அக்னாலட்ஜ்மென்ட் கூட அவர் எதுலயும் போட்டதில்லை. நான் ஒரு முறை நேரிடையா அவரைக் அது பத்திக் கேட்டே விட்டேன். என்ன திமிருடன் பேசினார் தெரியுமா? பேர் குடுக்கற அளவு என்ன செஞ்சுட்டீங்க, அப்படிப் பாத்தா மேரி பேர்தான் போடணும்னு சொல்லிட்டு அடுத்த பேப்பர்ல வேணும்னே மேரிக்கு ஒரு அக்னாலட்ஜ் மென்ட் போட்டார். மேரி பெருமையா அதை வேற எங்கிட்ட வந்து காட்டறப்ப எனக்கு எப்படி இருந் திருக்கும்?!" என்று பொருமினார்.

அவர் வார்த்தையில் தெறித்த அபரிமிதமான கசப்பு அறையிலிருந்த மீதி நால்வரையுமே சற்று அசருமாறு செய்தது. தான் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு சுயநினைவில்லாமல் கொட்டிவிட்டதை உணர்ந்து, ஜான் தன் நாற்காலியில் தொப்பென்று விழுந்து உட்கார்ந்து தன் முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டார். அறையில் சிறிது நேரம் அமைதி நிலவியது.

சூர்யா அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டி ருந்தார். ஜானின் மேஜை மேல் சில கடிதங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. புத்தகக் கேபினெட்டில் பல விதமானப் புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. விஞ் ஞானம், பண முதலீடு, நிர்வாகத் திறன், சரித்திரம் போன்ற பல துறைப் புத்தகங்கள் இருந்தன. ஜானின் கம்ப்யூட்டர் திறையில் பல எண்கள் வெவ்வேறு நிறங்களில் மினுக்கிக் கொண்டிருந்தன. சுவர்களில் ஜான் பெற்றிருந்த பட்டங்களும், பேடன்ட் பலகை களும் அலங்கரித்தன. மேஜையின் ஒரு மூலையில் இரு பெண்களின் படம். மனைவியும் மகளும் என சூர்யா யூகித்தார்.

எதையோ உணர்ந்தது போல் சூர்யாவே திடீரென சிலிர்த்துக் கொண்டு முதலில் பேசினார். "ஷின் அப்படிப் பட்டவர்னு வேற யாருக்கும் தெரியுமா?"

ஜான் குமுறலை அடக்கிக் கொண்டு, இல்லை என்று தலையசைத்தார். "அவருக்கு என் வேலை மேல்தான் குறி. இந்த வேலை காலியாகும் போது எங்க ரெண்டு பேரைதான் கடைசியாக தீர்மானிச் சிருந்தாங்க. ஆனா ஷின்னை விட எனக்கு நிர்வாகத் திறமை அதிகம்னு முடிவு செஞ்சு என்னைத் தேர்ந்தெடுத்தாங்க." அவர் குரலில் பெருமிதம் தெரிந்தது! "ஷின்னுக்கு அது பொறுக்கலை. அது லேந்து என்னைக் குண்டூசில குத்தறா மாதிரி சீண்டி கிட்டே இருக்கார். வேற யார் கிட்டயும் அதைக் காட்டறதில்லை"

சூர்யா தொடர்ந்து, "கான்·பரன்ஸ்களில ஷின் அதிகமா காட்டிக்கறதா சொன்னீங்களே அது?" என்றார்.

ஜானின் குரலில் ஏளனம் ஏறியது. "ஆமாம், அப்படித்தான், அதுக்கென்ன?!"

அவர் குரலில் காட்டிய பல்வேறு உணர்ச்சிகளைப் பார்த்து கிரண் ஷாலினியிடம் "இவர் குரலிலயே நடிச்சு ஆஸ்கர் வாங்கக் கூடிய நவரச நாயகனா இருப்பார் போலிருக்கே?! டிஸ்னி கிட்ட சொல்லி கார்ட்டூன் படத்துக்கு குரல் நடிப்புக்கு சேத்து வுட்டுடலாமா?!" என்று கிசுகிசுத்தான்.

அதிர்ச்சியால் உறைந்து போயிருந்த ஷாலினியை அது சற்று தளர வைத்து மெல்லிய புன்னகையை மூட்டியது! "சீ! சும்மா இரு!" என்று அவன் கை மீது லேசாகத் தட்டினாள்!

சூர்யா, "ஷின் அப்படிப் பேசியதுனால இந்த வினை வந்திருக்கலாம்னு சொன்னீங்க. கொஞ்சம் விளக் கமா சொல்லுங்க" என்றார்.

ஜான் தொடர்ந்து, "எந்தக் கான்·பரன்ஸ் போனாலும், விஞ்ஞானிகள் பயணத்தைப் பத்தி நிர்வாகிகளுக்கு விளக்கமா அறிக்கை அளிக்கணும். நான் ஷின் கிட்ட எச்சரிச்சேன். ரொம்ப சொல்லிட் டீங்கனா மத்த போட்டியிடற லேப்களுடைய நிர்வாகிகளுக்குத் தெரிஞ்சு போட்டியான மருந்து கள் தயாரிக்கறது, பேடன்ட் போடறது எல்லாம் நடக்கும்னு. அதை அலட்சியம் செஞ்சு அவர் தன் ஆராய்ச்சி எந்த நிலைல இருக்குன்னு ரொம்ப சொல்லிக்குவார். அதுவும் கொஞ்சம் வைன் உள்ளப் போனாப் போதும். மனுஷன் அருவியாக் கொட்டு வார்! நானே பாத்து அப்புறம் கண்டிச்சிருக்கேன். ஆனா ஷின் மாறவே இல்லை. அந்த மாதிரி பயண அறிக்கைல யாரோ ஷின் பத்தியும் அவருடைய ஆராய்ச்சியைப் பத்தியும் தெரிஞ்சு அவரையே கடத்த முடிவு செஞ்சிருக்கலாம்னு தோணிச்சு, அதான் சொன்னேன்." என்றார்.

மார்க் தன் நோட் புத்தகத்தை எடுத்துக் கொண் டான். "அட, அப்படியும் இருக்கலாம்! ஜான், அப்படிப் போட்டியிடக் கூடிய முக்கியமான நிறுவனங்கள் சிலது பேர் சொல்லுங்க" என்றான்.

ஜான் கூறிய பெயர்களைக் குறித்துக் கொண்டு, "இந்த நிறுவனங்களில் ஏதாவது ஷின்னைக் கடத்தி யிருக்கலாம்னு குறிப்பா சந்தேகப் படறீங்களா?" என்றான்.

ஜான் சற்று யோசித்துப் பார்த்து விட்டு இல்லை யென்று தலையசைத்தார். "குறிப்பா ஒண்ணும் சொல்ல முடியாது. எந்தக் கம்பனியும் லாப நோக் கோட ஒற்று வேலை செய்திருக்க முடியும். ஆனா கடத்தல் அளவுக்கு இறங்கக் கூடியவங்கன்னு ஒருத்தரையும் சொல்ல முடியலை" என்றார்.

சூர்யா திடீரென வேறு விஷயத்துக்குத் தாவினார். "ஜான், ஜென்·பார்மா பத்தி நீங்க என்ன நினைக் கறீங்க? ஸ்டாக் ரொம்ப விலை டமால்னு விழுந்து டுச்சு போலிருக்கு?! திரும்ப மேல வருமா?"

அறையிலிருந்த நால்வரும் வேறு வேறு காரணங் களால் வியப்பும் குழப்பமும் அடைந்தனர்!
மார்க் ஏன் சூர்யா அப்படி திடீரெனெ சம்பந்த மில்லாமல் எதையோ புகுத்த வேண்டுமென்று குழம்பினான். கிரண் அது வரை சூர்யா ஸ்டாக் மார்க்கெட்டில் ஆர்வம் இருப்பதாகக் காட்டிய தில்லையே என்று வியந்தான்! இருந்தால் அதிலேயே உழலும் தன்னை விட்டு ஜானைப் போய்க் கேட்பா னேன் என்று மனத்தாங்கலும் வந்தது. ஷாலினிக்கு ஜென்·பார்மா பற்றி நன்றாகத் தெரியும். ஆனால் சூர்யாவுக்கு என்ன, எப்படித் தெரியும் என்று வியந்தாள்.

ஆனால் அவர்கள் எல்லோரையும் விட சூர்யாவின் கேள்வி ஜானுக்கு ஏற்படுத்திய விளைவு பல மடங்கு மேலும் பலமாக இருந்தது. நெற்றிப் பொட்டில் யாரோ சுத்தியால் தாக்கியது போல் அவர் முகம் வெளுத்து, நிலை குலைந்து நாற்காலியிலிருந்து படாரென எழுந்து நின்றார். பதில் கூற வாயைத் திறந்து, திறந்து மூடினாரே ஒழிய முதலில் ஒரு சத்தமும் வர வில்லை. வந்த போதுத் திக்கித் திக்கிப் பேசினார்.

"எ...எ...எதுக்கு க்...கே....கேக்கறீங்க? எ...எனக்கு எப்படித் தெரியும்?!" என்றார்.

அவருடைய அதிர்ச்சி மார்க்கின் ஆர்வத்தைக் கிளறி விட்டது. சூர்யா எதையோ பிடித்துக் கொண்டுக் காரணமாகத்தான் கேட்கிறார் என்பதை உணர்ந்து கொண்டான். கிரணும் ஆர்வத்துடன் கவனித்தான்.

அது வரை தான் பார்த்திராத பரிணாமங்களை சூர்யா ஜானிடம் இருந்து எடுத்துக் காட்டுவதை உணர்ந்த ஷாலினியும், ஸ்டாக் மார்க்கெட் பற்றி ஒன்றும் தெரிந்திராவிட்டாலும், ஜென்·பார்மாவின் மருத்துவத் துறை விவரங்கள் நன்றாகத் தெரிந்திருந் ததால் மிகவும் கூர்மையான ஆர்வத்துடன் கவனித்தாள்.

சூர்யா ஜானின் உணர்ச்சிகளைக் கண்டு கொள்ளாதது போல் இயல்பாகத் தொடர்ந்தார். "எனக்கு ஸ்டாக் பத்தி எல்லாம் ஒண்ணும் நிறையத் தெரியாது, அதுவும் பயோ டெக் ஸ்டாக்னா காத தூரம்தான்! இதோ இருக்கானே கிரண் அவன் தான் அதிலெல்லாம் நிபுணன்! ஆனா, நான் நேத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல்ல ஜென்·பார்மா பத்தி எதோ மேலாப் பார்த்தேன். நீங்க தான் அந்தத் துறைல இருக்கீங் களே அதான்..."

சூர்யா முடிப்பதற்குள், அவர் பொதுவாக எதோ செய்தியைப் பார்த்து விட்டு கேட்கிறார் என்று நினைத்து ஜான் மூச்சு விட்டு சுதாரித்துக் கொள்ள ஆரம்பித்தார். ஆனால் சூர்யாவின் அடுத்த வார்த்தைகள் அவர் தலை மேல் இடி போல் இறங்கின!

"...அதுவும் நீங்க ஜென்·பார்மா ஸ்டாக்ல நிறைய விளையாடியிருக்கீங்க போலிருக்கே, நல்லா விஷயம் தெரிஞ்சவராச்சே, நேரத்துல, கப்பல் கவிழறத்துக்கு முன்னாடியே ஸ்டாக் எல்லாம் தள்ளி விட்டு தப்பிச்சிட்டிருப்பீங்க, அதான் விசாரிக்கலாம்னு தோணுச்சு" என்றார்.

ஜானின் நிலை, முன்னுக்கு இன்னும் மோசமாக மாறியது. மொத்தமாக நிலைகுலைந்து, ஆச்சரியம், விசனம், கோபம் எல்லாம் கலந்து அவருடைய முகம் பல உணர்ச்சிகளை மாற்றி மாற்றிக் காட்டியது. கடைசியில் கோபம் வெற்றி பெற்றது. முதலில் வெளிறிய முகம், குப்பென சிவப்பாகியது. அவருடை குரல் ஆக்ரோஷத்துடன் உயர்ந்தது.

"சூர்யா, அது என்னுடைய சொந்த விஷயம். என்னுடைய பண விஷயங்களைப் பத்தி நான் யாரோடையும் பேசற வழக்கம் கிடையாது. அது பத்தி நீங்க எப்படித் தெரிஞ்சுகிட்டீங்க? என் அக்கவுன்ட் விவரங்களையெல்லாம் எப்படி குடைஞ்சு வாங்கி னீங்க? என் ஸ்டாக் ப்ரோக்கர் யாருன்னு எப்படித் தெரியும்? அவர் கூட எதுக்காகப் பேசினீங்க? பேச யார் அனுமதி குடுத்தாங்க, சட்ட ரீதியா இது ரொம்பத் தப்பு! I'll sue you all!" என்று பட படவென சத்தமாக இரைந்தார். அவருக்கு மூச்சு மேலும் கீழும் இரைத்தது! மீண்டும் தொப்பென்று தன் நாற் காலியில் விழுந்தார்.

மார்க்கும் அளவில்லாத ஆச்சரியத்திலிருந்தான். "ஆமாம் சூர்யா, நீங்கள் இன்னிக்குக் காலைலதானே ஷாலினி அவசரமாக் கூப்பிட்டு இங்கே வந்தீங்க? ஜானை உங்களுக்கு முதலிலேயே தெரியுமா? எப்போ அவருடைய ப்ரோக்கர் கிட்டே பேசினீங்க? ஜான் சொல்ற படி சட்டப் பிரச்சனை வந்தாலும் வருமே?!" என்றான்.

ஷாலினியும், கிரணும் ஒன்றும் பேசவில்லை, அவர் களுக்கு ஒரு விதமான பிரமிப்பும் இல்லை. இந்த மாதிரி நடப்புக்களை அவர்கள் சூர்யாவிடம் பல முறைப் பார்த்து பழகி விட்டிருந்தனர்!

சூர்யா மெல்லிய புன்னகையுடன் ஜானையும், மார்க்கையும் அமைதிப் படுத்த ஒரு கையைத் தூக்கி உள்ளங்கையால் தட்டிக் கொடுப்பது போல் அவர்கள் புறம் அசைத்துக் காட்டினார். "ஒரு விதமான சட்டப் பிரச்சனையும் இல்லை. ஜான் நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டிருக்கீங்க. நான் உங்க ப்ரோக்கர் கிட்டப் பேசலை, அவர் யாருன்னும் எனக்குத் தெரியாது. எல்லா விவரமும் உங்க மேஜை மேலயே இருக்கு. ரெண்டும் ரெண்டும் சேத்தா அஞ்சு, அவ்வளவுதான்!" என்றார்.

ஜான் தன் மேஜையைச் சுற்றிப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தார். மீதி மூவரும் மேஜையைப் பார்த்தனர். ஒன்றும் பிரமாதமாக இருப்பது போல் தெரியாததால் மார்க் "அப்படி என்ன இருக்கு சூர்யா?!" என்றான்.

கிரண் முதலில் தன் தொழில் ரீதியான ஒரு தடயத்தைக் கண்டான். "ஆஹா! நான் ஒண்ணு கண்டு புடிச்சிட்டேன். ஜான் கம்ப்யூட்டர் திரையைப் பாருங்க. கலர் கலரா எண்கள் ஆடிக்கிட்டிருக்கில்லே?! அது மார்க்கெட் வாட்ச் ப்ரோக்ராம். சூர்யாவுக்கு நான் கூட இன்ஸ்டால் பண்ணேன். ஆனா எனக்குத் தெரிஞ்சு அவர் பயன் படுத்தியதே இல்லை. ஆனா கழுகுக் கண்ணோட இங்க கவனிச்சிருக்கார் போலிருக்கு!" என்றான்.

சூர்யா சிரித்தார். "ரைட் கிரண். நீ இன்ஸ்டால் பண்ணப்ப பார்த்ததுதான், ஆனா அது ஸ்டாக் விலை எப்படிக் காட்டும்னு ஞாபகம் இருந்தது. அந்தப் சா·ப்ட்வேர் விலை ரொம்ப அதிகம், ஸ்டாக் மார்க்கெட்ல ரொம்ப சீரியஸா வாங்கி விக்கறவங்க பயன் படுத்தறதுன்னு நீ சொன்னது நினைவுக்கு வந்தது. ஜான் பங்கு வர்த்தகத்துல ரொம்ப விளையாடற பழக்கம் இருக்குன்னு புரிஞ்சு கிட்டேன்!" என்றார்.

மார்க் நிம்மதிப் பெருமூச்சுடன் தளர்ந்தான்! ஆனாலும் ஆச்சரியத்துடன், "எக்ஸலன்ட்! அப்பாடா, ஜான் சட்டம் பேசினவுடன் நானும் கவலை யாயிட்டேன்! ஆனா ஜென்·பார்மா விஷயம் எங்க புடிச்சீங்க?!" என்றான்.

சூர்யா, "நான் சொன்னா மாதிரியே வால் ஸ்ட்ரீட் ஜர்னல்ல அது பத்தி படிச்சேன். அதே பதிப்பு அந்த பக்கத்தை மடிச்சு வச்சு ஜான் மேஜை மேலேயும் இருக்கு பாருங்க! போன வார பேப்பர். அது முக்கியம்னாத்தான் இன்னும் அங்கே இருக்கணும். மேலும், கம்ப்யூட்டர் திரைலயும் ஜென்பார்மா ஸ்டாக் சார்ட்டும் மின்வலை ப்ரெளஸர்ல இருக்கு. ஸிம்பிள்!" என்றார்.

ஜான் வேதனையுடன் பேசினார். "தலைக்கு மேல போயாச்சு, இனிமே உங்களுக்குத் தெரிஞ்சா என்ன?! எனக்கு நல்லாத் தெரிஞ்சவர் ஒருத்தர் ஜென்·பார்மால மேனேஜர். அவர் சொன்ன நல்ல செய்தியை நம்பி நான் மார்ஜின்ல நிறைய ஜென் ·பார்மா ஸ்டாக் வாங்கினேன். ஆனா FDA அங்கீகாரம் மறுக்கப் பட்டதுன்னு திடீர்னு அறிவிச் சாங்க, எல்லாம் போச்சு. நான் இப்ப வீடு எல்லாம் வித்துத்தான் மார்ஜின் கடன் எல்லாம் அடைக் கணும்..."

கிரண் ஷாலினியிடம் மெதுவாக, "இவருக்கு இருக்கற பண நெருக்கடிக்கும் ஷின் காணாமப் போனதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ? இவரே யார் கிட்டயாவது பணம் வாங்கிக் கிட்டு ஏற்பாடு பண்ணாரோ என்னவோ? ஏற்கனவே அவருக்கு ஷின்னைக் கண்டா பயங்கர கடுப்பு..." என்றான்.

ஷாலினியும் ஆமோதித்தாள். "இன்னிக்கு இவர் ஆடின ஆட்டத்தைப் பாத்தப்புறம் அந்த மாதிரி எதாவது இருந்தா எனக்கு ஆச்சரியமே இருக்காது!" என்றாள்.

அப்போது ஒரு போலீஸ் ஆ·பீஸர் ஓடி வந்து மார்க்கின் காதில் எதோ அவசர அவசரமாகக் கிசு கிசுத்தான்.

மார்க் சூர்யாவிடம், "சூர்யா, நாம இப்ப அவசரமாக் கிளம்பணும். ஷின் இருக்கற இடத்தைப் பத்தி துப்பு கிடைச்சாச்சு!" என்றான்.

ஜான் ஆவலுடன், "என்ன, என்ன?! விவரமா சொல்லுங்க!" என்றார்.

மார்க், "விவரிக்க இப்ப நேரம் இல்லை, என்னோட வெளியில வாங்க, போய் கிட்டே சொல்றேன். அப்புறம் நீங்க என் பின்னால தொடரலாம்" என்று வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

எல்லோரும் அவன் பின் விரைந்தனர்.

மார்க் விவரித்த விஷயமும், அதன் பின்விளைவுகளும் விஞ்ஞானியின் விபரீத முடிச்சை அவிழ்த்தன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline