பிள்ளையார்பட்டியின் நாயகன் விணை தீர்க்கும் வினாயகனே நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
|
|
பிள்ளையார் கதைகள் |
|
- |செப்டம்பர் 2002| |
|
|
|
பிள்ளையாரின் தோற்றம்
இந்து சமயம் என்று இன்று அழைக்கப் பெறும் மதத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன் முருகன் என மேல் நிலையில் உள்ள தெய்வங்கள் ஒரு புறமும், 'பரிவார தெய்வங்கள்' என்ற பெயரில் அனுமன், சண்டேசுவரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவையிரண்டிலும் இடம்பெறாமலும் நாட்டார் தெய்வங்கள் (கிராமிய தெய்வங்கள்) வரிசையிலும் இடம் பெறாமலும் தனக்கென தனியானதொரு இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையாராவார். சைவ வைணவப் பெருங் கோயில்களில் மட்டுமின்றி இவருக்கென உருவாக்கப் பட்ட கோயில்களிலும் இடம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் நாட்டார் தெய்வங்களைப் போல் ஆற்றங்கரை, குளத்தங்கரைப் பகுதிகளிலும் தெருச் சந்திகளிலும் கூரையின்றி வெட்டவெளியிலும் இடம் பெற்றுள்ளார்.
இவரது உருவமும் ஒரு வகையில் வினோதமான ஒன்றுதான். யானைத்தலையுடன் கூடிய இவரது உருவம், மனித - விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் களிமண், மஞ்சள், சந்தனம், அரிசிமாவு இவற்றால் மிக எளிதாக அங்க அவயவங்கள் எதுவுமின்றி உருவாக்கி வழிபடவும் செய்கின்றனர். சாணியிலும் கூட இவரது உருவம் உருவாக்கப்படுவதால், 'பிடிச்சாப் பிள்ளையார் வழிச்சாச் சாணி' என்ற சொற்றொடர் வழக் கிலுள்ளது.
வடமொழி சுலோகங்கள் கூறி ஆகமமுறையில் இவருக்கு வழிபாடுகள் நிகழ்கின்றன. இதனடிப் படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகக் காட்சியளிக்கிறார்.
இவ்வாறு தமிழக மக்களின் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் இடம்பெற்றுள்ள பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழங்கு கின்றன.
பிள்ளையாரின் தோற்றம் குறித்த கதைகள்.
கதை வடிவம் - 1
சிவனின் மனைவியான பார்வதி ஒருநாள் தன் உடலிலுள்ள அழுக்கைத் திரட்டி உருட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, அதற்கு விசித்திரமான உருவம் கொடுத்தாள். பின் அவ்வுருவத்தால் கவரப்பட்டு அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகனென்று அழைத்தாள்.
பார்வதியின் உடலில் பூசியிருந்த நறுமணத் தைலம் உடல் அழுக்கோடு கலந்து விட்டது. கங்கை கடலோடு கலக்குமிடம் சென்று அதைக் கழுவி அந்நீரை மாலினி என்ற யானைத்தலையரக்கி, பருகுமாறு செய்தாள். இதன் விளைவாக மாலினி கருவுற்று ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள். அந்தப் பிள்ளையைப் பார்வதி எடுத்துச் சென்று தன் மகனாக வளர்த்தாள். அந்தப் பிள்ளையே பிள்ளையாராகும்.
கதை வடிவம் - 2
பார்வதிக்குப் பிறந்த ஆண்குழந்தை ஒன்று சனிப்பார்வை பட்டு, பிறந்தவுடனேயே தன் தலையை இழந்தது. இதனால் வருந்திப் புலம்பிய பார்வதியின் மீது இரக்கம் கொண்ட விஷ்ணு, ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்து முண்டத்தின் மீது ஒட்டினார்.
கதை வடிவம் -3
பிள்ளையார் கருவில் வளரும்போது சிந்துரோன் என்ற அரக்கன் கருப்பையில் புகுந்து அவரது தலையைத் தின்று விட்டான். தலையில்லாமல் பிறந்த குழந்தை 'கஜசூரன்' என்ற அரக்கனின் தலையைக் கொய்து தன்னுடலில் பொருத்திக் கொண்டது.
கதை வடிவம் - 4
இமயமலை அடிவாரத்தில் சிவனும் பார்வதியும் யானையின் வடிவெடுத்துப் புணர்ந்தார்கள். அதன் விளைவாக யானைத்தலையுடன் ஒரு குழந்தை பிறந்தது என்று 'சுப்ரவேதாகமம்' என்ற நூல் குறிப்பிடுகிறது. இந்தக் கருத்தையே திருஞான சம்பந்தரின் தேவாரம்
' பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடம் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலம்உறை யினறவே'
என்று குறிப்பிடுகிறது. |
|
கதை வடிவம் - 5
அசுரேந்திரன் என்ற அசுரன் தேவர்களை அடக்க வலிமையுடைய ஒருவரைத் தேடினான். வசிட்டர் மரபில் வந்த மரகத முனிவர் மூலம் பெறும் குழந்தை வலிமையுடையதாக விளங்கும் என்று அறிந்தான். இதை நிறைவேற்ற விபுதை என்ற அசுரகுலப்பெண் மரகத முனிவரை நாடிச் சென்றாள். அவரது தவத்தைக் கலைக்க அஞ்சி, விபுதையும் அருகிலி ருந்து தவம் செய்தாள். முனிவர் தவம் முடிந்து கண் விழித்தபோது, இரண்டு யானைகள் புணர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு காமவயப்பட்டு நின்றார். அதைக் கண்ட விபுதை அவர் எதிரில் வர அவளைப் பெண் யானையாக்கித் தான் ஆண் யானையாகிப் புணர்ந்தார். இதனால் யானை முகத்துடன் கஜமுகாசுரன் தோன்றினான். தன் வலிமையினால் இவன் தேவர்களை வருத்த, பிள்ளையார் தன் கொம்பினால் அவனைத் துரத்த, பின் அவன் பெருச்சாளியாகி அவரின் வாகனமானான். இந்த அரக்கனைக் கொன்றதால் கஜமுகேஸ்வரன் என்று பிள்ளையார் பெயர் பெற்றார்.
கதை வடிவம் - 6
ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். தனிமையில் விடப்பட்ட பார்வதி தன் மீது அன்பு செலுத்தவும், தன்னைப் பாதுகாக்கவும் வேண்டி தன் உடல் அழுக்கைத் திரட்டி உருட்டி இளைஞன் ஒருவனை உருவாக்கினாள். குளியல் அறைப்பாதையில் அவனைக் காவலாளாக நியமித்து விட்டு, யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று கட்டளையிட்டாள்.
இதற்கிடையில் தியானத்தில் இருந்து விடுபட்டு பார்வதியின் அந்தப்புரத்திற்குள் சிவன் நுழைந்தார். பார்வதியின் அழுக்கிலிருந்து உருவாக்கப்பட்ட அந்த இளைஞன் அவரை அனுமதிக்க மறுத்தான். பார்வதியினால் படைக்கப் பெற்றவனே அவ் விளைஞன் என்பதனை அறியாத சிவன் அவனுடன் போரிட்டு அவனது தலையை வெட்டி வீழ்த்தினார்.
இந்தச் சண்டையால் ஏற்பட்ட ஆரவாரத்தைக் கேட்டு வெளியில் வந்து, நடந்ததனை அறிந்த பார்வதி துயரமும் கோபமும் அடைந்தாள். ஒரு புதிய தலையைப் பொருத்தித் தன் மகனுக்கு உயிர் தராவிடில் பிரபஞ்சத்தை அழிப்பதாகக் கூறினாள். எனவே, சிவன் புதிய தலை ஒன்றைக் கொண்டு வரும்படி, தன் பணியாளர்களை ஏவினார். வடதிசையை நோக்கிச் சென்ற அவர்கள் ஒரு யானையைக் கண்டு அதன் தலையை வெட்டிக் கொணர்ந்து இளைஞனின் முண்டத்தில் பொருத் தினார்கள். அவன் உயிர் பெற்றெழுந்ததும் சிவன் அவனைத் தன் மகனாக ஏற்று கொண்டதுடன் தன் கணங்களுக்கு (பரிவாரங்களுக்கு) ஈசனாக (தலை வனாக) நியமித்துக் கணேசன் என்று பெயரிட்டார்.
கணத்தின் கடவுள்
வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத -இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லையென்று, அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்துக்கு முந்தைய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லையென்று கூறும் ஆனந்த குமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறார்.
பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள, கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
கணபதி என்ற சொல்லின் பொருள் 'கணங்களின் கடவுள்' என்பதாகும். கணா + பதி என்று இச் சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்ளுவர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசர் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்துக் கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்ளுவர்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், 'கண நாயகா' என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இந்தச் சொல்லின் பொருளாகும். ரிக் வேதத்தில் இடம் பெறும் கணபதி என்ற சொல் ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக, மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்கு 'கணங்களைப் பாதுகாப்பவர்' என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார் குறிப்பிடுகிறார்.
கணபதி என்ற பெயரிலுள்ள கணா என்ற வடமொழிச்சொல் Clan என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடான சொல்லாகும். தமிழில் இதைக் குலம் என்று குறிப்பிடலாம்.
தகவல்கள் அனைத்தும் பேராசிரியர். நெல்லை. ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய 'பிள்ளையார் அரசியல்' என்னும் சிறு நூலில் வெளியான தகவல்களிலிருந்து திரட்டப்பட்டது. |
|
|
More
பிள்ளையார்பட்டியின் நாயகன் விணை தீர்க்கும் வினாயகனே நாம சங்கீர்த்தனம் - பகவான் போதேந்திர சுவாமிகள்
|
|
|
|
|
|
|