Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ஒளரங்கசீப்
- இந்திரா பார்த்தசாரதி|செப்டம்பர் 2002|
Share:
இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'ஔரங்கசீப்' நாடகத்திலிருந்து இறுதி இரண்டு காட்சிகள் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

நாடகத்தின் முன்னுரையில் இ.பா.:

'ஔரங்கசீப்' ஒரு சரித்திர நாடகம். இது ஒரு சரித்திர நாடகமென்பது ஓர் எதேச்சையான சம்பவம். உங்களுக்குச் சரித்திரம் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது என் நோக்கமல்ல. சரித்திரத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள முயலும்போது தான் சரித்திரம் தத்துவமாகிறது.

(அரங்கம் இருளில் ஆழ்கிறது. சில விநாடி களுக்குப் பிறகு ஒளி வரும் போது... ஆக்ரா மேடையின் மீது நடுவே போடப்பட்டிருக்கும் திவானில் திண்டில் மீது சாய்ந்து கொண்டு ஷாஜஹான் உட்கார்ந்திருக்கிறான். அருகே ஜஹனாரா உட்கார்ந்திருக்கிறாள். மங்கலான ஒளி...)

ஷாஜஹான்: கருஞ்சலவைக் கல் மஹல் கட்டியாகிவிட்டதா? கட்டி முடித்த பிறகு செய்தி அனுப்புவதாகக் கூறினான். தாரா... ஏன் அனுப்பவில்லை...?

ஜஹனாரா: இன்னும் கட்டி முடிக்கவில்லை...

ஷாஜ: தாரா என்னை வந்து ஏன் பார்ப்பதே இல்லை? அரசாங்க அலுவல்கள் மிகவும் அதிகமோ?(ஜஹனாரா பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள்)

ஷாஜ: மும்தாஜ் என்னைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். நான் போவதற்குள் அந்த மஹலைப் பார்க்க வேண்டும் (திரும்புகிறான்) தாஜ்மஹால் எங்கே...? யார் திருடிக் கொண்டு போய்விட்டார்கள்? (ஜஹனாரா பதில்கூறவில்லை) என்ன பேசாமல் இருக்கிறாய்? பதில் சொல்லக்கூடவா உனக்கு அலுத்து விட்டது?

ஜஹனா: தாராவிடம் சொல்கிறேன். தாஜ் மஹலைத் திருடியவர்களைக் கண்டுபிடிப்பான். புது மஹலையும் கட்டி முடிப்பான்.

ஷாஜ: அப்படியானால் நான் போக வேண்டும் என்கிறாயா? ஆ¡...! என்ன அருமையான குழந்தைகள் எனக்கு...! ஒரு பிள்ளை படையெடுத்து வருகிறான், ஒருத்தி 'நீங்கள் போய்விடுவீர்கள்' என்கிறாள்...!

ஜஹனா: நீங்கள் போய்விடுவீர்கள் என்று நான் சொல்லவேயில்லை.

ஷாஜ: ஆமாம்... படையெடுத்து வந்தவன் ஒளரங்கசீப் தானே!

ஜஹனா: ஆமாம்...

ஷாஜ: அப்படியானால் போரில் வெற்றியடைந்தவன் ஒளரங்கசீப் ஆயிற்றே? தாரா எப்படிக் கருஞ் சலவைக்கல் சமாதி கட்டுகிறான்? அவன் தில்லிக் கல்லவா ஓடிப் போனான்...? ஏன் பொய் சொல்லி என்னை ஏமாற்றுகிறாய்...?

ஜஹனா: தாரா கருஞ்சலவைக்கல் மஹலைக் கட்டுவதாக நான் சொல்லவேயில்லை... நீங்களே சொல்லிக் கொண்டீர்கள். நீங்கள் அப்படி நினைப்பது தவறு என்று சொல்லி, உங்களை வேதனைக் குள்ளாக்க வேண்டாமென்றுதான், நீங்கள் சொன்னதை நான் மறுக்கவில்லை.

ஷாஜ: அப்படியானால் மஹலை யாருமே கட்ட வேயில்லையா? என்னை எங்கே புதைக்கப் போகிறீர்கள்? ஹிந்துக்கள் காசியில் பிணங்களைக் கங்கையில் இழுத்து விடுவதுபோல என் உடலை ஜமுனாவில் இழுத்துவிடப் போகிறீர்கள். இப் பொழுதே இழுத்துவிடுங்கள், சந்தோஷமாகப் போகிறேன்.

ஜஹனா: ஒளரங்கசீப் மத நம்பிக்கை கொண்டவன் அப்படிச் செய்யமாட்டான்.

ஷாஜ: ஒளரங்கசீப்பா இப்பொழுது சக்கரவர்த்தி?

ஜஹனா: ஆமாம்...

ஷாஜ: அப்பொழுது நான்?

ஜஹனா: கைதி... இப்பொழுது கொடுக்கப்படும் மரியாதையெல்லாம் சக்கரவர்த்தியின் தந்தைக் குத்தான்... சக்கரவர்த்திக்கு அல்ல..

ஷாஜ: யார் சக்கரவர்த்தி?

ஜஹனா: ஒளரங்கசீப்

ஷாஜ: ஒளரங்கசீப் பெரியவனா? தாரா பெரியவனா?

ஜஹனா: ஒளரங்கசீப்.

ஜஹனா: தாரா...

ஷாஜ: அப்படியென்றால் அவன்தானே பட்டம் ஏறவேண்டும்... ஒளரங்கசீப் எப்படி ஏறினான்? ஒளரங்கசீப்பிடம் சொல்லிப் பட்டத்தைத் தாராவுக்கு வாங்கிக் கொடுத்துவிடு.
(ஜஹனாரா பேசாமல் இருக்கிறாள்)

ஷாஜ: என்ன பேசாமல் இருக்கிறாய்? ஒளரங்கசீப்பிடம் சொல்வாயா, மாட்டாயா?

ஜஹனா: சரி... சொல்லுகிறேன்...

ஷாஜ: மூரத் குஜராத்தில் இருக்கட்டும். ஷ¤ஜா வங்காளத்தை நிர்வகிக்கட்டும். ஒரளங்கசீப்புக்கு தட்சிணம் - தாராவுக்கு டெல்லி, ஆக்ரா, பஞ்சாப்... அவன்தானே என் மூத்த மகன்? எப்படி என் ஏற்பாடு?..

ஜஹனா: நாங்கள் இருக்கிறது.
(சில வினாடிகள் மெளனம்)

ஷாஜ: தாரா கருஞ்சலவைக் கல் மஹலைக் கட்ட ஆரம்பித்துவிட்டானா?
(ஜஹனாரா பேசாமல் இருக்கிறாள்).

ஷாஜ: ஏன் பேசாமல் இருக்கிறாய்?

ஜஹனா: திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன பதில் சொல்வது?

ஷாஜ: ஒரே பதிலைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் நீ வெவ்வேறு பதில்களை அல்லவா செல்லுகிறாய். இப்பொழுது சொல் - தாரா கருஞ்சலவைக்கல் மஹலை...

ஜஹனா: (அலுப்புடன்) ஏன் இப்படி உயிரை வாங்குகிறீர்கள். தாராவைக் கைது செய்து விட்டார்கள், சிரச்சேதம் செய்யப் போகிறார்கள்.

ஷாஜ: தரா¡வை யார் சிரச்சேதம் செய்யப் போகிறார்கள்?

ஜஹனா: ஒளரங்கசீப்...

ஷாஜ: ஏன்?

ஜஹனா: ஒளரங்கசீப் பட்டமேறிவிட்டான், தாராவை வேட்டையாடிப் பிடித்துவிட்டான். இஸ்லாமியத் துரோகி என்று குற்றம் சுமத்தி அவனைச் சிரச்சேதம் செய்யப் போகிறார்கள்,

ஷாஜ: அப்படியானால் நான் கனவு கண்ட மஹலை யார் கட்டப் போகிறார்கள்?

ஜஹனா: ஒருவரும் கட்டப் போவதில்லை...
(ஷாஜஹான் சீறி எழுந்திக்கிறான். கைகளைத் தட்டுகிறான்... ஒருவரும் வரவில்லை)

ஷாஜ: என்னுடைய எல்லாப் பிள்ளைகளையுமே இழுத்துக் கொண்டு போய் சிரச்சேதம் செய்யுங்கள். உன்னைப் பட்டத்தில் ஏற்றப் போகிறேன் மகளே... ஏன் முன்பு ராணி ரஸியா ஆளவில்லையா? ஹிந்துஸ்தானிப் பெண்கள் ஆட்சி புரிவது புதிதல்ல... என்ன சொல்கிறாய்? அரியாசனம் ஏற சம்மதமா? சொல்!

ஜஹனா: (சற்று உரக்க) தாராவை யார் கொலை செய்யப் போகிறார்கள்?
(ஜஹனாரா முகத்தில் வேதனை படர பேசாமல் இருக்கிறாள்)

தாராவை யார் கொலை செய்யப் போகிறார்கள்? சொல்லேன்!

ஜஹனா: நீங்கள்தான்...

ஷாஜ: நானா?...

ஜஹனா: ஆமாம்... நீங்கள்தான் எங்கள் எல்லோ ரயுமே பிறந்தபோதே கொலை செய்துவிட்டீர்கள்.

ஷாஜ: அப்படியானால் எனக்குக் குழந்தைகளே இல்லையா? எல்லோரையும் கொன்றுவிட்டேனா?

ஜஹனா: (எழுந்திருந்து) ஆமாம்... நீங்கள் கொன்றுதான் விட்டீர்கள்... நீங்கள் ஒழுங்கான தகப்பனாக இருந்திருந்தால், நாலு பிள்ளைகளும் நாலு விதமாகவா வளர்ந்திருப்பார்கள்? நாள் முழுவதும் நீங்கள் மும்தாஜ் ஸ்மரணையைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறீர்கள்? உங்கள் அருமை மனைவிக்குப் பிறந்த மக்கள் என்பதைத் தவிர, எங்களைப் பற்றி உங்களுக்கு வேறு என்ன அக்கறை இருந்திருக்கிறது? நான் பார்ப்பதற்கு உங்கள் மனைவியைப்போல் இருக்கிறேன் என்ற காரணத்தினால், என்மீது உங்களுக்குப் பாசமே தவிர நான் உங்களுடைய மகள் என்பதனால் அல்ல. இதுவே என்னையும் ரோஷனாராவையும் பிரித்து வைத்தது. தாராவின் மீது நீங்கள் உங்களுடைய சுயநலத்தின் காரணமாகக் காட்டிய பரிவு அவனை ஒளரங்கசீப்பினின்றும் பிரித்து வைத்தது. சுயநலம் ஏன் தெரியுமா? உங்களுடைய பைத்தியக்காரக் கனவுகளையெல்லாம் அவன் தான் நிறைவேற்றி வைப்பான் என்பது உங்கள் திட்டம். ஆனால்... நீங்கள் நினைத்தபடி ஒன்றும் நடக்கவில்லை. 'தாராவைக் கொல்ல இருக்கிறார்கள்' என்றால் 'எந்த தாரா?' 'ஏன் கொலை செய்ய இருக்கிறார்கள்' என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே? அவன் மீது உண்மையான பாசம் இருந்திருந்தால், இப்படியா நிதானமாக கேட்டுக் கொண்டிருப்பீர்கள்?' இப்பொழுது நீங்கள் வேஷம் போடவில்லை. இதுதான் உங்களுடைய உண்மையான சொரூபம்.
(ஷாஜகான் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்க்கிறான்)

ஷாஜ: நீ பேசியது ஒன்றும் எனக்குப் புரியவில்லை.
(அவன் அவள் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான். அவள் அவன் தலைமயிரைக் கோதுகிறாள்)

(மயிலாசனம். அதன் அருகே கீழே - மங்கலமான ஒளியில் ஒளரங்கசீப் உட்கார்ந்திருக்கிறான். வயதான தோற்றம், சோர்ந்து காணப்படுகிறான். சில விநாடிகள் மெளனம். இப்பொழுது புல்லாங்குழல் இசை கேட்கிறது. ஒளரங்கசீப் திடுக்கிட்டு எழுந்திருக்கிறான். இசை நிற்கிறது சுற்று முற்றும் பார்க்கிறான். அப்படியே யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். பிறகு படுக்கிறான். மறுபடியும் இசை. கோபமாக எழுந்திருக்கிறான். இப்பொழுது இசை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஒளரங்கசீப் உடைவாளில் கையை வைத்துக் கொண்டு சீறுகிறான்.)

ஒளரங்க: யார் அங்கே, என் முன்னால் வந்து வாசி, உன்னையும் இசையையும் சேர்த்துப் புதைத்து விடுகிறேன்...

(இசை நிற்கிறது. ஒளரங்கசீப் எழுந்து அங்குமிங்கும் உலவுகிறான். மறுபடியும் இசை. இப்போது தொடர்ந்து ஒரு நிமிஷம். ஒளரங்கசீப் தலையைத் தூக்கி மேலே பார்க்கிறான்! ஒரு பெண் சிரிக்கும் சப்தம். ஒளரங்கசீப் முகம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது.)

பெண்குரல்: அபுல் முஸா·பீர், மொஹைதீன் மொகம்மத் ஒளரங்கசீப் பஹதூர் ஆலம்கீர் பாத்ஷா காஸி...

(ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா... சிரிக்கும் ஒலி)

(ஒளரங்கசீப் ஏவலர்களைக் கூப்பிடக் கைகளைத் தட்டுகிறான்)

பெண்குரல்: (சிரித்துக் கொண்டே) யாரும் வரமாட்டார்கள். ஆலம்கீர்... கூப்பிட்டுப் பயனில்லை.

ஒளரங்க: யார் நீ? பேயாக இருக்க முடியாது. ஐந்து வேளைகள் நமாஸ் செய்யும் உண்மையான முஸல்மான் நான். பேய்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பெண்குரல்: (ஏளனமாக) ஏன் இப்படிப் பயப் படுகிறீர்கள்? நீங்கள் பயப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. எவ்வளவு பேரைத் தீர்த்துக் கட்டி யிருக்கின்றீர்கள்! பட்டியல் தரட்டுமா? தாரா, மூரத், ஷ¤ஜா, சுலைமான், ஷா, ஜவாஸ்கான், சுல்தான் முகம்மத்...

ஒரளங்க: (இடைமறித்து) போதும்... போதும்... நிறுத்து.
பெண்குரல்:அபுல் மொஸா·பர் மொஹைதீன் மொகம்மத் ஒளரங்கசீப் பகதூர் ஆலம்கீர் பாத்ஷா காஸி... இந்த நீ......ண்........ட பட்டத்துக்கு எவ்வளவு பலிகள்...!

ஒளரங்க: யாரோ வஞ்சனை செய்கிறார்கள். இது பேயாக இருக்க முடியாது... பேய்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பெண்குரல்: ஐந்து வேளைகள் நமாஸ் செய்யும் உண்மையான முஸல்மான் அவர்களே, உங்களை எதிர்க்கிறவர்கள் எல்லோருமே இஸ்லாமியத் துரோகிகள். அப்படித்தானே? ஆள்கின்றவர்கள், மதத்திலோ அல்லது ஒரு கொள்கையிலோ புகுந்து கொண்டு, மக்கள் நம்புவதற்காக ஒரு பிரமையை உண்டாக்கிவிட்டுத் தாங்களே இந்தப் பிரமையை நம்பத் தொடங்கி விடுவதுதான், ஒரு நாட்டின் துர்பாக்கியம், ஆலம்கீர்...

ஒளரங்க: எது பிரமை?

பெண்குரல்: மதந்தான் நீங்கள், நீங்கள்தான் மதம் என்று மக்களை நம்ப வைப்பது பிரமை இல்லாமல் வேறு என்ன?

ஒளரங்க: நீ அரசியல் பேசுகிறாய். பேயாக இருக்க முடியாது...

பெண்குரல்: பேய்கள் எங்கு இருக்கின்றன? வெளியில் எங்கும் இல்லை. உங்களிடத்திலேயே இருக்கின்றன. மனசாட்சியைத் தொட்டுக் கேளுங்கள்.

ஒளரங்க: என் மனசாட்சியைக் கேட்க வேண்டிய அவசியமில்லை (அரியாசனத்தில் உட்காருகிறார். சில விநாடிகள் மெளனம்) எது நியாயம் என்று எனக்குப்பட்டதோ அதைத்தான் நான் செய்து வந்திருக்கிறேன்... இயற்கையின் பாரபட்ச... தீர்ப்புக்கு உட்பட்டவன் நான். (சற்று உரக்க) ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒன்று என்னை வஞ்சித்துக் கொண்டே வருகிறது. (தணிந்த குரலில்) அன்பு என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது... அதை யாரும் எனக்குக் கற்றுத்தரவில்லை.

பெண்குரல்: இறைவன் என்றால் அன்பு மயமானவன் என்று கூறும் திருக்குரானைத் தினந்தோறும் ஓதும் நீங்கள், அன்பு என்றால் என்னவென்று யாரும் உங்களுக்குக் கற்றுத் தரவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது, சக்கரவர்த்தி!

(ஒளரங்கசீப் எழுந்திருக்கிறான்)

ஒளரங்க: யார் நீ? என்னைச் சித்திரவதை செய்யாதே...

பெண்குரல்: நானும் உங்களால் கொலை செய்யப் பட்டவர்களில் ஒருத்திதான் பாத்ஷா!

ஒளரங்க: (கலவரத்துடன்) பேயா?... நிச்சயமாக இருக்க முடியாது!

பெண்குரல்: (சிரிக்கிறாள்) என்னைக் கொலை செய்ய முடியாது. கொலை செய்ய முயன்றீர்கள். ஆனால் நான் சாகவில்லை.

ஒளரங்க: (சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே) நீ எங்கிருக்கிறாய்?

பெண்குரல்: எங்கும்... இயற்கையின் மூச்சு நான். பிரபஞ்சத்தின் உயிர்க்காற்று. ஒவ்வொருவனுக்கும் அவனுடைய வாழ்க்கையைப் பிரத்யேக முறையில் அர்த்தப்படுத்திக் காட்டும் அண்ட கோளங்களின் இசைப் பிரவாகம். பிரபஞ்சத் தொடக்கத்தில் தோன்றியது நாதம். அது உயிரினங்களின் தாளலயமாக உருவெடுத்தது. தாளலயத்தை, ஆத்மாவின் சங்கீதத்தை மனித உயிரினின்றும் பிரிக்க முயன்றால், எஞ்சுவது ஜடம்.... நீங்கள் என்னைக் கொல்ல முயன்றதன் விளைவு, உங்களை எங்கு அழைத்துச் சென்றிருக்கிறது பாருங்கள்! உங்கள் கைகளின் சிகப்புக் கறை ஏன் அழியாமல் இருக்கிறது. ஆலம் கீர்...? (இசை நிற்கிறது)

ஒளரங்க: (முணுமுணுப்பாக) இசை... நீ எங்கு இருக்கிறாய்?

பெண்குரல்: உங்களுக்கு முன்னே, உங்களுடைய சிறுவயதில் உங்கள் காதுகேட்க ஒலித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் துரத்தி விட்டீர்கள். தனியாக நின்று புலம்புகிறேன்.(இசை இரண்டு நிமிடங்கள்... ஒளரங்கசீப் இப்பொழுது அமைதியாக நின்று அனுபவிக்கிறான்.)

ஒளரங்க: குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் நீ உருவம் பெற்று வா! நான் உன்னிடம் பேச வேண்டும். (மங்கலான ஒளி மாறி வலப்பக்கத்தில் அரங்கம் பிரகாசிக்கிறது. சதங்கை ஒலி... முகத்திரையுடன் ஒரு பெண். ஒளரங்சீப் எழுந்து போய், உடைவாளால் அவள் முகத்திரையை விலக்குகிறான்... அழகான பெண் சிரிக்கிறாள்.)

ஒளரங்க: எதற்குச் சிரிக்கிறாய்?

அவள்: நீங்கள் வாளுடன் வந்தபோது, மறுபடியும் என்னைக் கொல்ல முயல்கிறீர்களோ என்று பார்த்தேன். முகத்திரையை விலக்கவா வாள்? உங்கள் முரட்டு ரசனையைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்ய முடியும்?

ஒளரங்க: நீ யார்? உண்மையைச் சொல்லி விடு...

அவள்: (புன்னகையுடன்) உங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறதா- உங்கள் உள்ளத்தின் அடித்தளத்தில் இசை இருக்க முடியுமா என்று?... இசையைக் கேட்டுச் சற்று முன்பு மெய்மறந்து நின்றீர்களே, எதனால்...?இனிமேல் என் குரலை உங்களால் கேட்காமல் இருக்க முடியாது... என்னைக் கொல்ல வேண்டுமென்றால்... (நிறுத்துகிறாள்)

ஒளரங்க: சொல்... ஏன் நிறுத்திவிட்டாய்?

அவள்: நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

ஒளரங்க: (சீறுகிறான்) ஓர் உண்மையான முஸல் மானிடம் தற்கொலையைப் பற்றிப் பேசுகிறாயே... என்ன துணிச்சல் உனக்கு?

அவள்: உண்மையான முஸல்மான் என்று அடிக்கடி கூறுகின்றீர்களே, உங்களுக்கே அதைப்பற்றி அடிக்கடி சந்தேகம் ஏற்படுகிறதா... பாத்ஷா?

ஒளரங்க: எனக்கு இதைப் பற்றிச் சந்தேகமே கிடையாது. (உட்காருகிறான்) உண்மையான முஸல்மான் எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குரானில் ஓதியிருப்பதற்கேற்ப நான் வாழ்ந்து வருகிறேன். (சற்று உரக்க) நான் உண்மையான முஸல்மான்தான். இதைப்பற்றி எனக்குச் சந்தேகமே கிடையாது... முஸல்மான் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாமை அவமதித்த முல்ஹித்துக்களைக் கொன்றுவிட்டேன். தாரா! அவன் தந்தைக்கு உயிரான தாரா! தாராவைப் பட்டத்திலும், என்னைத் தூக்கிலும் காண்பதற்கு அவர் எவ்வளவு முயன்றார்? ஆனால்... ஆனால்? தாராவின் தலை உருண்ட, நடுத்தெருவில் தொங்கியது. கடைசிவரை, தான் சொன்னதோ செய்ததோ தவறு ஒப்புக் கொள்ள மறுத்த முட்டாள்! (மெளனம்) அன்பு என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. இதை யாரும் எனக்குக் கற்றுத் தரவும் இல்லை.

அவள்: இந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டுதான், இந்தப் பரந்த சாம்ராஜ்யத்தில் துணை யாருமில்லாமல், தனிமை யாகச் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக் கின்றீர்களா, சக்ரவர்த்தி?

ஒளரங்க: தனிமை உண்மைதான். எனக்கு யாரும் துணையில்லை. ஒருவர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மகனே எனக்கு எதிரி. என் மகளும் அதற்கு உடந்தையாக இருக்கிறாள்.

அவள்: (புன்னகையுடன்) இப்படித்தானே ஷாஜ ஹானும் சொல்லி இருப்பார்!

ஒளரங்க: என் தந்தை என்னை வெறுத்ததுபோல், நான் என் மகனை வெறுக்கவில்லையே? அப்படி யிருக்கும் போது அவன் ஏன் எனக்கெதிரியாகக் கிளம்பியிருக்கிறான்? ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம்... என்று கனவு கண்டேன். எல்லாம் பொய்த்து விட்டன. நீ சொல்வதைப்போல் நான் தனிமை யைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இமயத்தின் உச்சியில் இருந்து கொண்டு பார்க்கிறேன். கண்ணுக்குத் தெரிவன அனைத்தும் பள்ளத்தாக்குகள்!(அவள் சிரிக்கிறாள்... அவன் கோபமாகத் திரும்புகிறான்)

ஒளரங்க: நான் சொல்வது உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா?

அவள்: இமயத்தின் உச்சியில் இருந்து கொண்டு பார்க்கிறேன். கண்ணுக்குத் தெரிவன அனைத்தும் பள்ளத்தாக்குகள்! என்ன அருமையான கவிதை வரிகள். இசையைப் போல் உங்களுடைய இன்னொரு எதிரி கவிதை. நீங்கள் பேசுவதைப் பார்த்தால், அவளும் வந்து கொண்டிருக்கிறாள் போல் இருக்கிறது.(அவள் பின்னால் வந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொள்கிறாள். ஒளரங்கசீப் அவளை விலக்குகிறான்)

ஒளரங்க: ஏன் என்னைக் குழப்பத்துக்கு உள்ளாக் குகிறாய்? தயவு செய்து போய்விடு! (அவள் போகிறாள்)

(அவன் மிகமெதுவாக நடந்து அரங்கத்தின் முன் பக்கம் வருகிறான். ஒளி குறைகிறது. குழலிசை. முகத்தில் அமைதியுடன் அவன் கேட்டுக் கொண்டு நிற்கிறான். இசை நிற்கிறது. அவன் மேற்குத் திசை நோக்கி மண்டியிடுகிறான். கண்களை மூடிக் கொள்கிறான்)

ஒளரங்க குரல்: 'கருணையும் இரக்கமுமுடைய திரு அல்லாவே! பிரபஞ்சத்தை ஆளும் உனக்கே எல்லாப் பாராட்டுகளும் உரித்தாகுக... இறுதித் தீர்ப்பு நாளன்றி நியாயம் வழங்கும் பெரும் பிரபுவே... எங்களுக்கு நேர்மையான வழியைக் காட்டு... நான் வரும் போது வெறுங்கையோடு வந்தேன்... போகும் போது ஒரு பாவமூட்டையைச் சுமந்து கொண்டு போகிறேன். என் கையிலுள்ள ரத்தக் கறையைக் கழுவ ஜமுனா நதி முழுவதும் போதாது. இதற்கு யார் காரணம்? நான் மதவெறியனா? இல்லாவிட்டால் பாசத்துக்காக ஏங்கிய அநாதையா? எனக்கு ஒன்றும் புரியவில்லை... உன்னைத் தவிர எனக்கு உற்றார், உறவினர் யாருமில்லை... என்னை இவ்வளவு கொலைகள் செய்யும்படி தூண்டியது எது? (மெளனம்) காரணத்தை ஆராய்வது என் பொறுப்பல்ல.. சரித்திரம்தான் சொல்ல வேண்டும். நிகழ்ச்சிகள் என் கண் முன் வந்து நிற்கின்றன. ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான். நான் சரித்திரமாக மாறிவிட்டேன்.(கண்கள் மூடி இருக்கின்றன)

(இசை தொடர்ந்து இரண்டு நிமிடங்கள்... இருள்)

இந்திரா பார்த்தசாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline