|
சேவைக்கு ஒர் ஆலயம் |
|
- |நவம்பர் 2002| |
|
|
|
சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூருக்கு 7 கி.மி. தொலைவில் கசுவா என்ற கிராமத்தில் சேவாலயா என்ற ஓர் நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக ஓர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், இலவச பள்ளியும் மிக சிறப்பாக நடத்துவதாக கேள்விப்பட்டு அதன் 14வது ஆண்டு விழாவின் போது சென்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திவரும் முரளிதரனைச் சந்தித்தோம்.
திருநின்றவூர் ரயிலடியை வந்து அடைந்தோம். சென்னை, மயிலை மற்றும் மாம்பலத்தையும் தாண்டி மிகவும் வளர்ந்திருப்பது ரயிலில் வந்த கும்பலில் இருந்து தெரிந்தது. இந்த ஊர் ஓரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டிருப்பதை நன்றாக உணர முடிந்தது.
வெளியே வந்து ஓரு ஆட்டோ காரரிடம் சேவாலயா போகலாமா என்றவுடன் ஒரு ஆச்சரியம்! வழக்கமான அடாவடி ஒன்றும் செய்யாமல் "சார் கசுவாதானே, உங்கள இட்டுகினு போய் ஒன் அவுர்ல திரும்பி இட்டாந்துடரேன் சார் 90 ரூபா குடு சார்" என்றார். சரி என்று ஏறி அமர்ந்தோம். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் ரோடின் இருபுறமும் கட்டிடங்கள் சிறிது சிறிதாக குறைந்து வெட்டவெளி வளர்ந்தது. ஆங்காங்கே தனித்தனியாய் வீடுகள் முளைத் திருந்தது. அவற்றின் சொந்தக்காரர்களின் பெருமையை அந்த வீடுகளின் முகப்புகளும் ஜாலிகளும் பறை சாற்றிக்கொண்டிருந்தன. 7 கி.மி. அந்த வெட்டவெளியில் போகும்போது 70 கி.மி. மாதிரி தோன்றியது. ஒரு வழியாக நமது வண்டி மெயின் ரோட்டை விட்டு ஒரு சிறிய கிளை ரோட்டை பிடித்து சென்றது.
மொத்தமாகவே சுமார் 100 வீடுகள்தான் இருக்கும். சுமார் ஒரு கி.மி. தாண்டியவுடன் சேவாலயா சென்று அடைந்தோம்.
நுழைவாயிலிலே 'உங்கள் ஜாதி, மத, மொழி, இன, உணர்வுகளை இங்கேயே விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்' என்னும் வரிகள் நம்மை சற்று சிந்திக்க வைக்கிறது. உள்ளே சின்னதும் சற்று பெரியதுமாய் மாணவர்களிடமிருந்து "வணக்கமய்யா" என்ற வரவேற்பு தொடர்ந்து ஒலிக்கிறது. நம் வீடுகளில் ஓரிரண்டு குழந்தைகளை பள்ளிக்கு தலை வாரி சீருடைகள் அணிவித்து கிளப்புவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்; இங்கே அத்தனை குழந்தைகளும் மிகவும் சுத்தமாக உடை அணிந்து தலை வாரி இருப்பதைக் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை.
தூரத்தில் அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்ற ஆத்திசூடி ஒலிப்பதை கேட்க முடிந்தது. இப்போதய பள்ளிகளில் ஆத்திசூடி எல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை.
மேடையில் மஹாத்மா காந்தி, விவேகானந்தர் மற்றும் பாரதியார் ஓவியம் கண்ணை கவர்ந்தது.
சரியாக குறிப்பிட்ட நேரத்தில் விழா தொடங் கியது. முதலில் "அச்சமில்லை அச்சமில்லை " என்ற பரதியார் பாடலை அழகாக உணர்ச்சியோடு குழந்தைகள் பாடினர். மழலைகளின் "டைம் டு பி ஹாப்பி" என்ற ஆட்டம் நம்மையும் மகிழ்சி கடலில் ஆழ்த்தியது. மத நல்லிணக்கத்தை உணர்த்தும் நாடகம் உயரிய சிந்தனைகளை தூண்டியது. சிறப்பு அம்சமாக அமெரிக்காவிலிருந்து வந்திருந்த சான்ட்ராவின் பாலே நடனம் பிரமாதமாய் இருந்தது. விழாவிற்கு தலைமை தாங்கிய தொழிலதிபர் திரு. கிருஷ்ணமாசாரி மற்றும் டெக்கான் மூர்த்தியின் உரைக்கு பிறகு திரு. முரளிதரனை சந்தித்தோம்.
இத்தகய நிறுவனத்தை உருவாக்க உங்களுக்கு எப்படி தோன்றியது?
சிறு வயதிலிருந்தே எனக்கு பாரதியார் கவிதைகள் மேல் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒரு முறை சரஸ்வதி பூஜை அன்று பாரதி கவிதைகள் படித்துக் கொண்டிருந்தேன்.
"மந்திரத்தை முணுமுணுத் தேட்டை வரிசையாக அடுக்கியதன் மேல் சந்தனத்தை மலரையிடுவோர் சாத்திரம் இவள்பூஜையன்றாம்...
என்றும்,
வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொ¡ரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்களெங்கும் பல பல பள்ளி...
என்றும்,
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் அதுவுமற்றவர் வாய்ச்சொலருளீர்..." என்று பாடியவையும்.
இன்னும் ஒரு பாடலில்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னவ யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்...
இதேபோல்,
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்... பசித்தவர்க்கு உணவளி என்பது விவேகானந்தரின் வாக்கு. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்பது காந்தியின் தத்துவம்.
இம் மூவர்மீதும் எனக்கிருந்த ஈடுபாட்டால் இவர்கள் சேவாலயாவின் வழிகாட்டிகள் ஆனார்கள்.
அப்பொழுது தோன்றிய எண்ணத்தின் விளைவுதான் சேவாலயா. முதலில் 5 குழந்தைகளுடன் 1988ல் ஒரு வாடகை வீட்டில் ஆரம்பித்து என் நண்பர்களின் உதவியால் சிறிது சிறிதாக வளர்ந்து இப்போது இந்த நிலை அடைந்துள்ளது.
சேவாலயாவின் தற்போதய நிலை என்ன?
இப்போது இங்கே ஆதரவற்ற ஆண் குழந்தை களுக்கு விவேகானந்தா விடுதியும், பெண் குழந்தை களுக்கு அன்னை தெரசா விடுதியும், ஆதரவற்ற முதியோர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் இல்லமும் உள்ளன. மேலும் மஹாகவி பாரதியார் உயர்நிலைப்பள்ளி, மஹாத்மா காந்தி இலவச மருத்துவமனையும், விவேகானந்தர் நூலகமும், வினோபா பசு பராமரிப்பு நிலையமும் செயல்படுகின்றன.
எங்கள் விடுதியிலிருந்து 160 குழந்தைகளும், வெளியிலிருந்து சுமார் 250 குழந்தைகளுமாக சுமார் 400 க்கும் மேல் குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள். எல்லா குழந்தைகளுமே ஏழை குழந்தைகள். அவர்களுக்கு அனைத்தும் இலவசம். பள்ளிச் சீருடை, புத்தகங்கள், வந்து போக பேருந்து எல்லாம் அளிக்கிறோம். இந்த பள்ளி தொடங்குமுன்பு சுமார் 7 கி.மி. தூரம் சென்றால் தான் பள்ளி. பேருந்து வசதிகளும் கிடையாது.
முதியோர் இல்லம் சமீபத்தில்தான் தொடங் கினோம். 25 முதியவர்கள் இப்போது இங்கே தங்கியிருக்கிறார்கள். மொத்தம் 60 நபர்கள் தங்கும் வசதி உள்ளது. இதுவும் ஒரு இலவச இல்லம் தான்.
மருத்துவ நிலையத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதிகள் உள்ளன. நூலகத்தில் சுமார் 6000 புத்தகங்கள் உள்ளன. சேவாலயாவிற்கு மட்டுமின்றி பக்கத்தில் உள்ள கிராம மக்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னையில் நிறைய தொண்டு நிறுனங்கள் உள்ளன. சேவாலயாவின் சிறப்பு அம்சங்கள் என்ன?
நம் நாட்டின் நிலையை பார்க்கும் பொழுது இத்தகைய நிறுவனங்கள் நிறைய வேண்டும். இங்கே ஜாதி மத உணர்வுகள் கிடையாது. எங்கள் வழிகாட்டிகளான காந்தி, விவேகானந்தர் மற்றும் பாரதியின் கனவுகளை நனவாக்க முயல்கிறோம். மேலும் குழந்தைகள் விடுதி, பள்ளிக்கூடம், முதியோர் இல்லம், பசு பராமரிப்பு, நூலகம் மற்றும் மருத்துவ நிலையம் இப்படி சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒரே இடத்தில் நடக்கும் சேவை நிறுவனம் சேவாலயா.
சேவாலயா நடத்த பொருள் உதவி எப்படி கிடைக்கிறது?
முழுவதும் நன்கொடைகள் மூலமே நடக்கிறது. மிகவும் அக்கறையோடு வருடா வருடம் எங்கள் ஆண்டு அறிக்கைகள் வெளியிடுகிறோம். (இந்த வருட நகலை எடுத்து காண்பிக்கிறார்). நான் வேலை செய்யும் டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் நிறைய நண்பர்கள் உதவுகிறார்கள். இப்போது சேவலாயாவைபற்றி நிறையபேர் கேள்விப்பட்டு அவர்களாகவே நன்கொடை வழங்குகிறார்கள்.
நிதி உதவி ஆரம்ப காலத்தில், அதாவது நிறைய நபர்களுக்கு சேவாலயாவை பற்றி தெரிவதற்கு முன்னால், கடினமாக இருந்திருக்குமே?
ஆம். நிதி உதவி பெறுவதற்கு இத்தகைய ஒரு நிறுவனம் உண்மையாகவே நடக்கிறது என்று தெரிந்தால்தான் முடியும். எனக்கு இத்தகைய எண்ணம் மிக நீண்ட நாட்களாகவே இருந்ததால் இதற்காக கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தேன். அது 6 மாதத்திற்கு போதுமாய் இருந்தது. சிறுக சிறுக எனக்கு தெரிந்தவர்கள் நன்கொடை அளிக்க முன்வந்தனர். முக்கியமாக ஜெர்மனியில் வசிக்கும் திரு ராஜகோபாலன் பெயரை இங்கே குறிப்பிட வேண்டும். |
|
நீங்கள் ஒரு மென்பொருள் பொறியாளர். மிகுந்த பொறுப்புமிக்க பதவியை வகிக்கிறீர்கள். அப்படி இருக்க உங்களுக்கு எப்படி சேவாலயாவை நடத்த நேரம் கிடைக்கிறது?
காந்தி அடிகள் சொல்லியதுபோல் ஒருவரின் வாழ்க்கை எல்லாம் சேர்ந்தது. அதை நாம் செய்யும் காரியங்களால் வெட்டி வேறு வேறு பகுதிகளாக ஆக்க முடியாது. என் வேலை நான் செய்யும் இந்த சமூக வேலை நன்றாக நடக்க மிகவும் உதவுகிறது. மென்பொருள் வளர்ச்சியில் என்னோடு வேலை செய்யும் நிறைய நண்பர்களின் உதவி கிடைத்தது. இல்லை என்றால் சேவாலயா இத்தனை வளர்ச்சியை இத்தனை விரைவில் அடைந்திருக்காது. நம் நேர பராமரிப்பு நன்றாக இருந்தால் எல்லாம் முடியும்.
விவேகானந்தர் சொன்னது; "ஏதேனும் காரியத்தை முடிக்கவேண்டுமென்றால், அதை செய்வதற்கு, நிறைய வேலை செய்து கொண்டிருப்பவனாக தேடு. அவன் கண்டிப்பாக அந்த வேலையை செய்து முடிப்பான். மற்றவர்களை கேட்டால் அவர்கள் நிச்சயம் எனக்கு "நேரம் இல்லை" என்றுதான் சொல்வார்கள்
உங்கள் குடும்பத்தினரிடம் நீங்கள் செலவிடும் நேரத்தை இது பாதிக்கவில்லையா?
நல்ல கேள்வி. எல்லோரும், எனக்கு திருமணம் ஆன பிறகு சேவாலயாவை நடத்த நேரம் கிடைக்காது என்று சொன்னார்கள். மாறாக என் மனைவி புவனாவும் சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் ஆதலால் இப்பொழுது எங்கள் இருவர் நேரமும் சேர்த்து இரட்டிப்பு நேரம் கிடைத்துள்ளது.
சேவாலயா சேவையில் உங்களுக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கும் விஷயம் என்ன?
மிக சிறிய அளவில் தொடங்கிய சேவாலயாவிற்கு இன்று உலகம் முழுதிலுமிருந்து ஒருமித்த வரவேற்பும், அங்கீகாரமும் கிடைக்கிறது. இது என்னை மிகவும் மகிழச்செய்கிறது.
சேவாலயா சேவையில் உங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயம் உண்டா?
வருத்தம் தரும் விஷயம் என்றால், இந்த சேவாலயாவின் வசதிகளை பெறுவதற்கு நிறையபேர் பொய்கள் சொல்லி அவர்கள் குழந்தைகள அனாதைகள் என்றோ, அல்லது அவர்களுக்கு தாய் தந்தை இல்லை என்றோ சொல்லி சேர்க்க முற்படுவதுதான்.
சேவாலயா வரும் ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
சேவாலயா ஒரு தன்னிறைவு நிறுவனமாக ஆக வேண்டும் என்பதே. அனைத்து தேவைகளயும் சேவாலயாவிலேயே பூர்த்தி செய்துகொள்ளும் நிலை வரவேண்டும்.
என் நீண்டகாலத்திற்கான எண்ணம், இது ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக வளர்ந்து ஏழை மக்களுக்கு உதவவேண்டும் என்பதே.
அவர் எண்ணம் நிறைவேற வாழ்த்திவிட்டு நன்றி கூறி விடை பெற்றுக்கொண்டோம். தூரத்தில் குழந்தைகளின் "அறம் செய விரும்பு, ஆறுவது சினம்" என்ற ஆத்திசூடியின் ஒலி நம்மை ஒரு கோவிலுக்கு போய்வரும் உணர்வுகளை உண்டாக்குகிறது.
சேவலயா
நிர்வாக அலுவலகம்: 3, முதல் லிங்க் தெரு, கற்பகம் கார்டன்ஸ், அடையாறு, சென்னை- 600 020. தொலைபேசி: 91-44-446 8202 பேக்ஸ்: 91-44-446 8205.
சேவை மையம்: கசுவா கிராமம், (பாக்கம் அஞ்சல்) திருநின்றவூர் - 602 024. தொலைபேசி: 91-44-6344243, 6344244. மின்னஞ்சல்: sevalaya@vsnl.com இணையதளம்: http://www.sevalaya.org |
|
|
|
|
|
|
|