Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
எதற்கும் தயாராக இருங்கள்
- மணி மு.மணிவண்ணன்|டிசம்பர் 2002|
Share:
மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தென்றல் இதழின் ஆசிரியர் குழுவில் இணைவதில் மகிழ்கிறேன். அமெரிக்கத் தமிழர்களின் வாழ்வையும் தமிழ்ப் பண்பாட்டையும் பதிவு செய்யும் தென்றலின் முயற்சிக்கு எனது 24 ஆண்டு அமெரிக்க வாழ்க்கை அனுபவமும் உதவும் என நம்புகிறேன். சென்ற மாதத்திலிருந்து தொடங்கிய புழைக்கடைப் பக்கத்தைப் பற்றி நேரிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு கருத்துத் தெரிவித்த வாசகர்களுக்கு என் நன்றி. சென்ற மாதக் கட்டுரையின் அறிமுகத்தில் சிந்தனைச் சிதறல்களை வெளியிடுவது பற்றிக் குறிப்பிருந்தேன். அப்படி எழுதுவதால் முழுச் சிந்தனையையும் புரிந்து கொள்ள இயலாமல் போகக்கூடும் என்று ஒரு வாசகி குறிப்பிட்டிருந்தார். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்வேன். நன்றி.

******


சென்ற மாதம், எழுத்தாளர் ஜெயமோகனின் மருதம் வலையிதழ் பற்றியும் அவரது “சொல் புதிது” சிற்றிதழ் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அண்மையில் “சொல் புதிதை நிறுத்த முடிவெடுத்து விட்டோம். மருதம் ‘ஓடுகிறவரை லாபம்’ கணக்கில் உள்ளது. நிதி நெருக்கடிதான். மத்திய வர்க்கத்துக்கு சிற்றிதழ் கனவு விடவும் விடாது. வைத்திருக்கவும் முடியாது” என்று எழுதியிருந்தார். ஆழமான சிந்தனைகளைத் தமிழில் தேடிப் படிப்போர் இவை போன்ற சிற்றிதழ்களை வாங்கி ஆதரிக்க வேண்டும்.

******


பில் கேட்ஸின் இந்தியப் பயணம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மைக்ரோசா·ப்ட் நிறுவனத்தின் வெற்றிக்கு இந்தியக் கணிஞர்களின் பங்குக்கு நன்றிக் கடனாக இந்தியாவில் எய்ட்ஸ் தடுப்பு முயற்சிக்கு பில் கேட்ஸ் நூறு மில்லியன் டாலர் வழங்கியிருக்கிறார். அப்படியே ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மைக்ரோசா·ப்டின் ஈடுபாட்டைக் கூட்டி இருக்கிறார். கேரளாவின் பள்ளியில் கணினித் திட்டத்தையும் பாராட்டியிருக்கிறார். தமிழ் நாட்டைப் பற்றி மூச்சு விடக்காணோம்! இது தமிழ்நாட்டின் தலைவர்களுக்கு உறுத்தியிருக்குமா?

அப்படி உறுத்தியிருந்தால், மைக்ரோசா·ப்டுக்குப் பதிலாக வேறொரு நல்ல இயக்குதளத்தை வேறு எங்கேயும் தேடிப் போக வேண்டாம்! மத்தியப் பிரதேச முதல்வர் திக் விஜய் சிங்கைக் கேட்டால் போதும்! கொட்டிக் கொடுத்தாலும் மைக்ரோசா·ப்ட் வேண்டாம், லினக்ஸ் தான் வேண்டும் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார் சிங்! வளர்ந்து வரும் நாடுகளுக்குத் திறந்த செயலிகளின் தேவையைப் புரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே. அப்படிப் பட்டவர்களின் முயற்சியால் லினக்ஸ் இயக்குதளத்தில் இடம் பெறும் முதல் இந்திய மொழி என்ற பெருமையைத் தமிழ் தட்டிக்கொண்டு விட்டது. மேண்ட்ரேக் 9.0 லினக்ஸில் தமிழ் பற்றிய அக்டோபர் தென்றல் அட்டைப் படச் செய்தி படித்திருப்பீர்கள். பல ஆண்டுகளாய்த் தமிழ்நாட்டில் கணினி ஆர்வத்தைத் தூண்டி வந்திருக்கும் எழுத்தாளர் சுஜாதாவும் இந்தியாவின் எதிர்காலம் திறந்த செயலிகளில் என்கிறார். தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் தமிழகம் மக்களுக்குத் தாய்மொழியில் மின்னரசு அமைப்பதில் தலைமை வகிக்க முடியும்.

******


இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அமெரிக்காவிலிருந்து வேலைகளை ஈர்த்துக் கொள்ளும் என்கிறார்கள் வல்லுநர்கள். கடும் பொருளாதார மந்த நிலைக்கிடையே இதைக் கவலையோடு பார்த்துக்கும் அமெரிக்கத் தமிழர்களை “எதற்கும் தயாராக இருங்கள்” என்கிறார் கெல்லாக் மேலாண்மைப் பேராசிரியர் பாலா பாலச்சந்திரன். இந்த மாத நேர்காணல் பகுதியில் “அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் என்ன நுட்பங்கள் வளரப் போகின்றன என்பதைப் பார்த்து, எதிர்காலத்துக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறுகிறார். தமிழர்களில் பலர் மேற்படிப்புக்கும் வேலைக்கும் வேண்டிய துறைகளை ஆராய்ந்து தேவைக்கேற்ப தங்களைப் புதுப்பிக்கும் திறமை கொண்டிருந்ததால்தான் அமெரிக்காவுக்கு வர முடிந்தது. கார், வீடு, குழந்தைகள் வந்தபின், பங்குச் சந்தை இழப்புகள், கடன் சுமை, வரவுக்கு அதிகமான செலவுகள் என்று திணறிக் கொண்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் தம்மைப் புதுப்பிக்கும் அடிப்படைத் திறமை உள்ளவர்கள்தாம். வேலைகள் எல்லாம் இந்தியா போகின்றன என்றால் மூளைகளும் திரும்பும் (Reverse Brain Drain) நாள் வந்தாயிற்று! இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தென்றலுக்கு எழுதுங்களேன்!

******
இன்னும் எத்தனை காலம்தான் காவேரிப் பிரச்சினை, சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றி எழுத வேண்டி வரும் எனத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுச் சட்டத்தின் கீழ்ப்படியும் பண்பாட்டைக் கர்நாடகா காப்பாற்றியிருந்தாலும், அதன் தமிழ்ப் படங்கள் தடை, சட்ட மன்றத் தமிழ் உறுப்பினர் தாக்குதல் போன்ற காட்டுமிராண்டி நடத்தை கவலைக்கிடமளிக்கிறது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் என்று தலையங்கம் எழுதும் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் கண்ணுக்கு இது ஏனோ தெரியவில்லை. இதற்கு நடுவில், வீரப்பனிடமிருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்கக் கர்நாடக அரசு 25 கோடி ரூபாயைப் பணயமாகக் கொடுத்திருக்கிறது என்கிறார் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. காட்டுவாசி வீரப்பன் 25 கோடி ருபாயை எந்த வங்கியில் போட்டு வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை. J

கொள்ளைக்காரனுக்குப் பணயம் கொடுத்தல், உச்சநீதி மன்றத் தீர்ப்பைப் புறக்கணித்தல், சிறுபான்மை உரிமைகளைப் பறித்தல், சட்ட மன்ற உறுப்பினரைத் தாக்குதல் போன்ற நிகழ்ச்சிகளால் இந்தியாவில் முதலீடு செய்ய நினைக்கும் நிறுவனங்கள் தயங்கும். தொழிலும் வணிகமும் வளர வேண்டுமென்றால் மனித உரிமைகள் மதிக்கப் படவேண்டும். மனித உரிமைகளோடு, சொத்து உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றங்களும் இந்திய அரசுகளும் தவறி விட்டால், இருக்கவே இருக்கிறது ·பிலிப்பைன்ஸ்! யாருக்காவது டாகலாக் தெரியுமா?

******


பாகிஸ்தானின் அணுக்குண்டுக்கு வட கொரியா ஏவுகணைத் தொழில் நுட்பத்தைப் பண்ட மாற்றுச் செய்து கொண்டிருக்கிறதாம். பெங்களூர், சென்னை, கோவை மட்டுமல்லாமல் அந்தமான் தீவுகளையும் தாக்கக் கூடிய ஏவுகணையைப் பாகிஸ்தான் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அடி பட்டுக் கிடக்கும் ஓசாமா பின் லாடனுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது கராச்சியின் பினோரி மதரசா என்கிறார் பி. ராமன். ஆனால் தீவிர வாத எதிர்ப்புக்குத் துணைவன் என்று அமெரிக்கா பாகிஸ்தானை பாராட்டுகிறது. வட கொரியாவும், பாகிஸ்தானும் அமெரிக்காவுக்கு ‘வெவ்வெவ்வே’ காட்டுவதைப் பார்க்கும் ஈராக் அணுக்குண்டையும் ஏவுகணையையும் ஏன் தேடாது?

******


தேர்தல் முடிந்தது. உரிமையிருந்தும் நீங்கள் வாக்களிக்காதிருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு அரசைக் குறைகூறாதீர்கள்! அமெரிக்காவிலேயே இந்தியர்கள் அதிகம் வாழும் ·பிரிமாண்ட்டில் தேர்தலில் போட்டியிட்ட இந்தியர்கள் தோல்வி. சான் ·பிரான்சிஸ்கோவில் வாக்குச் சீட்டுகள் போதாததால் பலர் வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்களோ நகராட்சியே கஞ்சா வளர்த்து நோயாளிகளுக்கு “மருந்து” தரலாம் என்றனர். அலமேடா மாவட்டத்தில் முதன்முறையாக தொடுதிரைக் கணினியில் வாக்களிப்பு. எத்தனை வாக்காளர்கள் வந்தாலும் தாக்குப் பிடிக்கும் கணினி. லாஸ் ஏஞ்சலஸில் இருந்து பிரிந்து தனி நகர் உருவாக்கும் முயற்சியில் சான் ·பெர்னாண்டோ வேல்லி தோற்றது. மாநிலங்களவை, மக்களவை இரண்டிலும் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் புஷ் அறுதிப் பெரும்பான்மை வென்றார். அதனால், அநேகமாக அடுத்த மாதம் ஈராக் போர் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்.

மணி மு. மணிவண்ணன்
Share: 


© Copyright 2020 Tamilonline