இந்திய பத்திரிகைத் துறையில் அந்நிய முதலீடு விருது ஜுரம் தாகத்தின் ஏக்கம் ராக லக்ஷணங்கள் அட்லாண்டாவில் கேட்டவை
|
|
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் |
|
- T.V. கோபாலகிருஷ்ணன்|டிசம்பர் 2002| |
|
|
|
இப்பொழுதுதான் நான் கேரளா (இங்கு ஓயாமல் மழை பொழிகிறது), கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (தினமும் தண்ணீருக்காக போராட்டங்களும் உண்ணாவிரதங்களும் தான்) ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் முடித்து விட்டு திரும்பியிருக்கிறேன். பயணம் இனிதே அமைந்தது. பெங்களூரில் நடைபெற்ற எனது கர்நாடக இந்துஸ்தானி கச்சேரி உட்பட அனைத்துக் கச்சேரிகளுக்கும் நல்ல வரவேற்பு.
திருவல்லிக்கேணி லாட்ஜ் ஒன்றில் எனது சென்னை வாழ்க்கையைத் தொடங்கிய காலத்திற்கு மீண்டும் செல்வோம். எனது வாழ்நாளில் விருப்பு வெறுப்பு மாறி மாறி வந்த காலகட்டம் அது. நகர வாழ்வின் மீது வெறுப்பு; அபாரமான, திகட்டாத கச்சேரிகள் மீது விருப்பு. கிட்டத்தட்ட தினந்தோறும் சபாக்களிலும், வார இறுதியில் கோயில்களிலும், ஒரு சில சமயங்களில் திருமண விழாவில் (அழையா விருந்தாளியாகத் தான்) இந்தக் கச்சேரிகளைக் கேட்டு மகிழவே நான் வாழ்ந்தேன். ஏனெனில் அந்தக் காலத்தில் இசைக் கலைஞர்கள் சக இசைக்கலைஞர்கள் (என்னைப் போன்ற இளைஞர்கள் உட்பட - பெயர்கள் வேண்டாமே! அவர்களில் பலர் இப்பொழுது சங்கீத கலாநிதிகள், ஆச்சார்யாக்கள்!) தங்கள் கச்சேரிகளைக் கேட்பதையே (ரசிகர்களைக் காட்டிலும்) பெரிதும் விரும்பினர். அரியக்குடி, செம்பை, GNB, செம்மங்குடி, மதுரை மணி, தேசிகர் மற்றும் இவர்களுக்கு பக்க பலம் சேர்த்த வயலின் வித்தகர்கள் ராஜமாணிக்கம் பிள்ளை, செளடய்யா, மாயவரம் கோவிந்தராஜ பிள்ளை மற்றும் வளரும் கலைஞர்கள் T.N. கிருஷ்ணன், லால்குடி போன்ற மாமேதைகளின் கச்சேரிகளில் வழிந்தோடும் அவர்களது கற்பனா சக்தி, தங்கு தடையின்றி பாயும் ஒப்பற்ற இசை ஆகியவற்றை உணர்ந்து ரசிக்கத் துடிக்கும் ஆவலை அடக்கவே முடியாது. பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணியப் பிள்ளை, இளம் கலைஞர் முருகபூபதி, T.K மூர்த்தி, மெட்ராஸ் கண்ணன், மதுரை கிருஷ்ண ஐயங்கார், S.V.S. நாராயணன் இவர்களின் விரல்கள் மிருதங்கத்தில் ஏற்படுத்தும் அந்த தெய்வீகத்தைப் பற்றி என்ன சொல்வது.
இந்த எண்ணற்ற கச்சேரிகளுள் இரண்டு நிகழ்ச்சிகளை என்னால் மறக்கவே முடியாது. தேனாம்பேட்டை ஆபட்ஸ்பரியில் நடைபெற்ற திருமணத்தில் நடந்த மதுரை மணி ஐயரின் கச்சேரி. இவரோடு இணைந்து வாசித்தனர் லால்குடி ஜெயராமன், பாலக்காடு மணி மற்றும் கஞ்சிராவில் பழனி சுப்ரமணிய பிள்ளை. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் (எனது ஹீரோ) T.S. பாலையா. இவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் போலவே கர்நாடக இசையின் பரம ரசிகர்.
கண்ணுக்கு விருந்தாக (காதுக்கும் தான்) அமைந்த இந்த ஒப்பற்ற இசை நிகழ்ச்சியின் போது மதுரை மணி அவர்களைத் தவிர மேடையில் இருந்த மற்றவர்கள் ஒரு வித பயத்துடன் இருந்தனர். "வாதாபி" என்ற தொடக்கத்திற்குப் பிறகு வந்த மற்ற பாடல்கள் அனைத்தும் அபாரம். குறிப்பாக "காணக் கண் கோடி வேண்டும்" பாடலைத் தொடர்ந்து இரு மாமேதைகளுக்கு நடுவே நடந்த தனியாவர்தனம். கிட்டத்தட்ட 50 நிமிடங்கள். முடிவில் பார்வையாளர்களிடிமிருந்து எழுந்த நிம்மதிப் பெருமூச்சும் தொடர்ந்து வந்த இடிமுழக்கமென கைத்தட்டலும். மாலை அணிவிக்கும் போது ஒரு சிறிய டென்ஷன். எப்படி வரிசையாக அணிவிப்பது என்ற குழப்பம். இதற்குத் தீர்வினை பழனியே மிகவும் நாசுக்காகத் தெரிவித்தார். நான் ஏன் இதனைத் தெரிவிக்கிறேன்? ஏனெனில் இந்த மேதைகளிடையே உள்ள விட்டுக் கொடுத்தலை நீங்களும் உணர்வீர்களே என்பதற்காகத் தான். இந்த நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க திருப்புகழ் (கண்ட சாபு என்று ஞாபகம்) "ஏறு மயிலேறி". மிருதங்கமும் கஞ்சிராவும் ஒரு துளியும் பிசகாமல் ஒன்றோடு ஒன்றாக ஒலித்தது காதில் தேனாய்ப் பாய்ந்தது. இந்தக் கச்சேரியைக் கேட்க எனக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி. இதனைக் கேட்டதற்கு நன்றிக் கடனாக என்றென்றும் இக்கச்சேரியை நினைவு கூர்ந்து நினைவுகளில் மூழ்கித் திளைப்பது தான். யாரேனும் இக்கச்சேரியைப் பதிவு செய்திருந்தால், அவர்கள் எனக்கும் ஒரு பதிப்பு கொடுக்க மாட்டார்களோ என்று ஏங்குகிறேன். |
|
அந்தக் காலக் கட்டத்தில் நான் பழனி சுப்ரமண்யப் பிள்ளை அவர்களோடு மிகவும் நெருங்கிப் பழகியிருந்தேன் (தந்தையின் நண்பர் என்பதால் மட்டுமல்ல, அவரை எளிதில் அணுக முடியும்). அவரோடு இசை மற்றும் தோல் வாத்தியங்கள் பற்றி தான் பேசிக்கொண்டிருப்பேன். மற்ற மூத்த கலைஞர்களைப் போல் அல்லாமல் எனது பல்கலைத் திறமையை அவர் வெகுவாக பாராட்டுவார். பாலக்காடு மணி ஐயர் ஒப்பற்ற மாபெரும் கலைஞர். வெகு சில வார்த்தைகளே பேசுவார். உடலசைவுகளும் அப்படியே தான்! அதன் காரணமாக அவர் என்ன சொன்னாலும் செய்தாலும் (மேடையிலும் சரி, மேடைக்கு வெளியேயும் சரி) அது வேதவாக்கு தான். இந்த இரு மாமேதைகளும் கர்நாடக இசையின் உன்னத நிலையை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மனதிலும் ரசிகர்கள் மத்தியிலும் மேலும் உயர்ந்தோங்கச் செய்தனர். அந்தக் கச்சேரிக்கு மீண்டும் செல்வோம். அரங்கத்தில் திரை உலகப் பிரமுகர்களும் ரசிகர்களும் நிறைந்திருந்தனர். இசைப் பிரியர்கள் பலர் அழைப்பில்லாமல் பெருந்திரளாக வந்திருந்தனர். (இரவு உணவுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார் பழனி சுப்ரமண்யப் பிள்ளை). இவரும் சரி, பாலக்காடு மணி ஐயரும் சரி, மாலை நேரக் கச்சேரியை முடித்துக் கொண்டு வந்திருந்தனர். வழக்கமான யார் எங்கே உட்காருவது என்ற குழப்பத்திற்குப் பிறகு, இடது கை பழக்கமுள்ள பழனி, பாலக்காடு மணி ஐயருக்கு நேர் எதிராக அமர்ந்தார். லால்குடி மதுரை மணி ஐயருக்கு சமமாக அமர்ந்தார். ஆஹா காணக் கண்கொள்ளாத காட்சி!
இனிய கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மீண்டும் சந்திப்போம்
TVG |
|
|
More
இந்திய பத்திரிகைத் துறையில் அந்நிய முதலீடு விருது ஜுரம் தாகத்தின் ஏக்கம் ராக லக்ஷணங்கள் அட்லாண்டாவில் கேட்டவை
|
|
|
|
|
|
|