|
|
முன் சுருக்கம்:
2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.
நாரதர், கலிஃபோர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.
அப்படிப்பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக்கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.
அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது.
அப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாக பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.
அருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.
******
பாலவிஹாருக்கு வெளியில் நின்று கொண்டிருந்த அருணைச் சுற்றி வழக்கம் போல் ஒரு சிறிய கூட்டம் கூடியிருந்தது. அருண், "சும்மா இங்க நிக்க வேண்டாமே?! ஒரு மணி நேரம் இருக்கு, இப்படி ஒரு பொடி நடை போட்டுட்டு வரலாமா?" என்றார். கூட்டமாக லாஸ் ஆல்டோஸ் மெயின் வீதியில் நடக்கக் கிளம்பினார்கள்!
கூட்டத்திலிருந்த ரமேஷ் என்பவர் இன்னொரு கேள்வி எழுப்பினார். "அருண், நீங்க என்னன்னா பெரிய கம்பனில அரசியல், அப்புறம் ரொம்ப குறுகிய வேலை அப்படி இப்படீங்கறீங்க. சரி. ஆனா நானும் பாத்துக் கிட்டே இருக்கேன் ஸ்டாக் ஆப்ஷனுக்கே மதிப்பு இருக்காது போலிருக்கே?! ஆரம்ப நிலை நிறுவனம்னா சம்பளமும் குறைச்சல், வேலை போகும் அபாயமும் அதிகம். என்னைக் கேட்டா பொருளாதார நிலை திரும்ப ராக்கெட் மாதிரி வளர வரைக்கும் பேசாம ஒரு பெரிய நிறுவனத்துல வாயைப் பொத்திக்கிட்டு சும்மா இருந்திடலாம்! வேலையும் ஒண்ணும் ரொம்ப இருக்காது. பேப்பரைத் தள்ளிகிட்டு அக்கடான்னு குஷியா காலம் தள்ளலாமே?! அப்புறம் பெரும் வளர்ச்சி, ஆனந்த காலம் மீண்டும் திரும்பினதும் எதாவது ஒரு நல்ல புது pre-IPO கம்பனிக்குத் தாவினாப் போச்சு! திடீர்ப் பணம்! என்ன சொல்றீங்க!" என்றார்.
அருண் அந்த மாதிரி எண்ணப் போக்கின் மேல் தன் மனத்தில் எழுந்த இகழ்ச்சியை அடக்கிக் கொள்ளக் கண்ணை மூடிக் கொண்டு பத்து வரை மெல்ல எண்ணினார்! பிறகு சோகமானப் புன்னகையுடன் பொறுமையாக பதிலளித்தார்.
"ரமேஷ், நான் சொன்னதைக் கொஞ்சம் தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னு நினைக்கறேன். நான் எல்லாரும் பெரிய கம்பனியை விட்டுட்டு சின்ன கம்பனிக்கு ஓடிடணும்னு சொல்லலை! நான் ஏன் இப்படி சின்ன நிறுவனமாப் பாத்து பாடு படணும்னு சுரேஷ் கேட்டதுக்கு என் மனப் போக்கைச் சொன்னேன், அவ்வளவுதான்...
"...ஆனா, பொதுவா சொல்லணும்னா, எந்த அளவு நிறுவனத்துல என்ன வேலை செய்யறீங்கங்கறது முக்கியமில்லை. இருக்கற இடத்துல, செய்யற வேலையை, குடுக்கற சம்பளத்துக்கு வஞ்சமில்லாம உழைக்கணும். நம்ம கடமையை நம்மால ஆகற அளவுக்குப் பிரமாதமா நடத்தணும். சம்பளமோ, ஸ்டாக் ஆப்ஷனோ, வேலை போற அபாயமோ அதைப் பத்திக் கவலைப் பட்டுக் கிட்டிருந்தா நிறுவனத்துக்கும் பயன் குறைச்சல். நமக்கும் நல்ல பேர் கிடைக்காது. அது தானே பலிக்கற ஜோஸ்யம் மாதிரி ஆயிடும்! நமக்குப் பலன் கிடைக்காதுன்னு நினைச்சு கடுமையா உழைக்காம இருந்துட்டா, பலன் வராதுதான்! உழைச்சுட்டு, பலன் தானே வரட்டும்னு விட்டுடணும்."
அருண் சில நொடிகள் நிறுத்தி விட்டு கேள்வி கேட்ட ரமேஷைக் கூர்ந்துப் பார்த்தார். அவர் அருணின் தீர்க்கப் பார்வையைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்து கொண்டார். |
|
அருண் தொடர்ந்தார். "பெரிய கம்பனில குஷியா இருந்திடலாம்னு சுலபமா சொல்லிட்டீங்க. முன்னே அப்படி இருந்திருக்கலாம். ஆனா இப்ப நடக்கறதையெல்லாம் பாக்கறீங்க இல்ல? எந்த வேலையுமே சாஸ்வதமில்லைன்னு ஆயிடுச்சு! IBM, Sun, HP, இந்த மாதிரி பெரிய பெரிய கம்பனிகளிலேயே வேலை நீக்கம் ரொம்பப் பொதுவாப் போச்சு. அது மட்டுமில்லை, இந்தக் காலத்துல திட்டமிட்டே ஒவ்வொரு காலாண்டுலயும் (quarter) சரியா வேலை செய்யாத, கடைசி அஞ்சு சதவிகிதத்துல மதிப்பிடப் படறவங்களை Routine Performance Management அப்படிங்கற பேரில வெளில அனுப்பிடறாங்க!
"இன்னும் இருக்கு! Planned Attrition அப்படின்னு ஒண்ணு. எதாவது காரணத்துனால சில பேரை உடனே அனுப்பிட முடியலைன்னா அவங்களுக்கு ரொம்ப மோசமான வேலை போட்டுக் குடுப்பாங்க. அல்லது மேல் பதவியிலிருந்து மாத்தி அவங்க கீழே நல்லா வேலை செய்யறவங்க கீழேயே அவங்க இப்ப வேலை செய்யறா மாதிரி மாத்திடுவாங்க! தாங்க முடியாம அவங்க தானாவே வெளியே போயிடற மாதிரி பண்ணிடுவாங்க. அதுனால ரொம்ப எதிர்பார்க்காம குடுக்கற காசுக்கு நம்ம திறமையெல்லாம் காட்டி ஒரு நொடி கூட வீணாக்காம உழைக்கறதுதான் நல்லது!"
கூட்டத்தில் இருந்த, மிக அனுபவமில்லாத, மணி எனும் இளைஞன் இதைக் கேட்டு விட்டு, "அய்யய்யோ! அந்த மாதிரி செய்யறாங்கன்னு எனக்குத் தெரியவே தெரியாதே! இனிமே நான் ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேரம் வேலை செய்யறேம்பா! நொறுக்கித் தள்ளிடறேன்!" என்றான்.
அருண் வாய் விட்டு சிரித்தார்! "அது நல்லது தான்! ஆனா வெளில தள்ளிடப் போறாங்களேன்னு மட்டும் அப்படி உத்வேகமா வேலை செஞ்சா அது ரொம்ப நாள் தாங்காது! கொஞ்ச நாள் அந்தப் பயம் இருந்துட்டு போயிடும், அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி கேஸ்தான்!"
மணி, "அப்ப? எப்படி இருக்கணுங்கறீங்க? எனக்கு குழப்பமா இருக்கே!" என்றான்.
அருண் விளக்கினார். "பயத்தால மட்டும் உழைக்காம, உண்மையான உற்சாகத்தோட வேலை செய்யணுங்கறேன். எந்த வேலைலயும் புதுசா கத்துக்க முடியும். புது விதமான வழிமுறைகளைக் கண்டு பிடிக்க முடியும். அந்த வேலையிலிருந்து மேலே முன்னேற பயிற்சி எடுத்துக்க முடியும். கூட வேலை செய்யறவங்களுக்கு உதவி செஞ்சு கொஞ்சம் வித்தியாசமான வேலைகளைக் கத்துக்க முடியும். இந்த மாதிரி செஞ்சா உற்சாகம் குறையாம இருக்கும், நிறுவனத்துக்கும் பயன் கிடைக்கும். நல்ல பேர் வாங்கி முன்னேறவும் முடியும்."
மணி, "ரொம்ப சரி சார் அப்படியே செய்யறேன்!" என்றான். முதலில் கேள்வி கேட்ட ரமேஷோ வெட்கம் தாங்காமல் நழுவி விட்டிருந்தார்!
வைகுண்டத்தில் நாரதர் சிலாகித்துக் கொண்டார். "பேஷ், பேஷ்! நல்ல பதில்கள்! வாசுதேவா, நீ சொன்னதை நான் ஒப்புக் கொள்கிறேன். மாயை, மமதை, பேராசை இவற்றால் விளையும் துன்ப நிலையைச் சமாளிக்க நீ உரைத்த கீதையின் கருத்துக்கள் அருணைப் போன்ற தற்கால பூலோக ஞானிகள் கூறும் அறிவுரையிலும் உண்டு. மேலும் பார்க்கலாம்"
லக்ஷ்மியும் விஷ்ணுவும் புன்னகையுடன் ஆமோதித்து மேலும் அருணின் பூலோக உரையாடல்களைக் கவனிக்கலானார்கள்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|