மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் திராவிடம்: திராவிடர்: திராவிட அரசியல்: DIALOG கீதாபென்னெட் பக்கம்
|
|
|
குழந்தை பிறக்கப்போகிறது என்ற இன்பமான செய்தி காதில் தேனாய் வந்து விழுந்த உடனேயே என்ன பெயர் வைப்பது என்ற காது குடைச்சலும் ஆரம்பித்துவிடுகிறது. பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்று தெரியாவிட்டால் பிரச்சினை இரண்டு மடங்குதான்.
கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பது போல் எளிதானதல்ல பெயர் வைப்பது. பிறந்தது முதல் இறக்கும்வரை நம்முடன் பிரியாமல் நிழல் போல் வருவது பெயர்தானே! நீ யார் என்று கேட்¡ல் ஊரைச் சொல்லாமல், உறவைச் சொல்லாமல் பெயரைத் தானே நாம் சொல்கிறோம். நம் பெயரை நினைக் காமல், நம்மைப் பற்றி யோசித்து பார்ப்பது கூட கடினம்தான். அப்படி சுய அடையாளத்தின் அடித்தளமாய் அமைவது பெயர்தான். அதனால் அதை சாதாரணமாய் எடுத்துக் கொள்ளமுடியாது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் சில மாதிரியான பெயர்கள் பிரபலமாய் இருக்கும். முப்பது ஆண்டு களுக்கு முன் ஆண் குந்தைகளுக்கு குமார் என்று பெயர் வைப்பது பெண் குழந்தைகளுக்கு பிரியா என்று பெயர் வைப்பது அதிகமாய் இருந்தது. அதற்கு முந்தைய தலைமுறையில் இராமச்சந்திரன், அலுமேலு என்று கடவுளின் பெயரை வைப்பார்கள். தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பது என்று முன்னோர்களை மறக்காமல் இருக்க குடும்பத்தில் இறந்து போன பெரியவர்கள் பெயரை சூட்டுவது வழக்கமாய் இருந்தது.
அரசர்கள் காலத்திலோ வைத்த பெயர் ஒன்றிருக்க காரணப் பெயர் பல இருக்கும். சிவந்த விழிகளுடன் பிறந்ததால் செங்கண்ணன் என்றும், தீயில் கால் கருகியதால் கரிகாலன் என்றும், மல்யுத்த வீரனாக இருந்ததால் மாமல்லன் என்றும் அரசர்களின் பெயர் இருக்கும். இளையதிலகம், இளைய தளபதி என்றெல் லாம் பல பட்டப்பெயர்கள் கொடுக்கப்படும் இந்த காலத்தில், காரணப் பெயரை மட்டும் நம்பி இராமல் பிறப்பு சான்றிதழ் பெற ஒரு பெயர் கொடுக்க வேண்டுமே!
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில எழுத்து 'A' என்பதில் ஆரம்பித்த பெயர்கள் பிரபலமாய் இருந்தது. தன் குழந்தை attendance எடுக்கும் போது மட்டுமல்லாமல் எப்போதும் முதலில் இருக்க வேண்டும் என்று பெற்றோர் நினைத்ததால் அப்படி பெயர் வைத்ததாக சிலர் சொன்னார்கள். சில வீடுகளில் குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்த்து முதல் எழுத்தை முடிவு செய்து அதில் பெயர் வைப்பார்கள். எண் கணித சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பிறந்த தேதிக்கு பொருத்தமான கூட்டுத்தொகை உடைய பெயரை தேர்ந்தெடுப்பார்கள். அப்படி சரியாக பெயர் வைக்காமல் பிற்காலத்தில் தவறை உணர்ந் தால் Nagorajan என்பதை Naagahrajan என்று சரி செய்து கொள்வதும் உண்டு.
குடும்பப் பெயர் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லாததால் முதல் பெயரை முழுபெயராய் நம்மை தனிப்படுத்தி காண்பிக்க வேண்டி உள்ளது. ஒரு சில முதல் பெயர்களே புழக்கத்தில் உள்ள மேலை நாடுகளில் கூட சிலர் அப்பாவின் பெயரையே பிள்ளைக்கு வைப்பார்கள். ஜார்ஜ்புஷ்ஷின் மகன் ஜார்ஜ் புஷ், மைக்கேல் ஜாக்சனின் மூன்று பிள்ளை களுக்கும் பெயர் மைக்கேல்!.
''பெயரில் என்ன இருக்கிறது, ரோஜாவை என்ன வென்று சொல்லி அழைத்தாலும் மணக்கத்தானே செய்யும்'' என்று ஷேக்ஸ்பியர் சொன்னாலும், ரோஜாவின் பெயர் துளசி என்று நினைத்தால் வேறு மணம் அல்லவா மனதுக்குள் வீசும்? ''ஆரோக்கிய சாமி என்று பெயர் இருக்கும், நாள் தவறாது ஆஸ்பத்திரியில் இருமலோடு இருப்பான்'' என்று கிண்டலாய் நம்வூரில் பெயர் வைப்பதைப் பற்றி சொன்னாலும், ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன்தான் பெயர்கள் வைக்கப்படுகின்றன. |
|
பெயர் கூப்பிடுவதற்கு எளிதாகவும், மற்ற குழந்தைகள் கிண்டல் செய்ய முடியாதபடியும் இருப்பது முக்கியம். கல்யாணராமன் என்றும் நராயணன் என்றும் அழகாய் பெயர் வைத்த பிறகு மற்றவர்கள் 'கல்லி' என்றும் 'நாணா' என்றும் கூப்பிடுவதை தடுக்க முடியாதே! மெய் எழுத்தில் பெயர் முடியாமல், உயிர் அல்லது உயிர்மெய் எழுத்தில் முடிந்தால் கூவி அழைக்கும் போது எளிதாய் இருக்கும். குமார் என்பதைவிட குமாரு என்று சொல்லிப் பார்த்தால் சத்தம் கொஞ்சம் தூரம் அதிகம் போவது தெரியும்.
இப்பொழுதெல்லாம் சின்னப் பெயர் வைப்பதும், யாரும் வைக்காத புதுமையான பெயர்கள் வைப்பதும், வடமொழி பெயர்களை வைப்பதும் பிரபலமாய் உள்ளது. முன்பெல்லாம் பெயரைக் கேட்டால் எந்த மாநிலம், எந்த மாவட்டம் என்று சொல்ல முடியும். ஆனால் பல புதுப்பெயர்களை எப்படி உச்சரிப்பது என்று தெரியாதது மட்டுமல்ல, என்ன மாநிலம் என்ன குழந்தை ஆணா, பெண்ணா என்றுகூட சொல்ல முடியவில்லை. காலத்தை ஒட்டி பெயர் இருப்பது அவசியம்தான் என்றாலும், நம் பண்பாட்டையும், மொழியையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வண்ணம் எத்தனையோ அழகான பெயர்கள் உள்ளன என்பதை நாம் மறக்கக்கூடாது.
தமிழில் மட்டும் 'ழ' என்ற எழுத்து மற்றவர்களால் உச்சரிக்க முடியாததால் தூய தமிழ் பெயர்கள் என்று சொல்லப்படும் 'கயல்விழி', 'புகழேந்தி' போன்றவை நடைமுறையை விட்டு வேகமாய் மறைந்து வருகிறது. தமிழர்கள் தெய்வமாகிய முருகனின் பெயர்களையோ, தமிழ்நாட்டு திருத்தலங்கள், ஆறுகள், பூக்களின் பெயரையோ வைப்பதுகூட மெல்ல குறைந்து வருகிறது. பெயர் நமக்கு தனிப்பட்ட முறையில் ஒரு விசேஷ பொருளுடன் இருக்க வேண்டும். குழந் தைக்கு பெயர் புத்தகங்களைப் பார்த்து வைப்ப தைவிட நமக்கு பொருத்தமான ஒரு காரணத்துடன் பெயர் சூட்டினால் மனதுக்கு நிறைவாய் இருக்கும்.
மீரா சிவா |
|
|
More
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் திராவிடம்: திராவிடர்: திராவிட அரசியல்: DIALOG கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|