|
நிழல்கள் |
|
- ஆதவன்|பிப்ரவரி 2003| |
|
|
|
பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது; பிரிய வேண்டிய இடம் வந்து விட்டது.
அவளுடைய ஹாஸ்டல் கேட் உயரமான இரும்புக் கிராதிகளாலான கேட். அந்தக் கேட்டருகே நிற்கும்போது அவர்கள் இருவருமே எவ்வளவு சிறியவர்களாகவும் முக்கியத்துவம் இல்லாதவர் களாகவும் தோற்றமளித்தார்கள்! ஹாஸ்டல் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் பொருத்தப் பட்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சம், கேட்டின் நிழலை வெளிப்புறச் சாலை மேல் நீளமாகப் படரவிட்டிருந்தது. எதிரெதிராக நின்றிருந்த அவர்கள் இருவருடைய நிழல்களும், அந்தக் கேட்டின் நிழலின் மேலேயே, ஒன்றின் மீது ஒன்றாகச் சாலையின் மீது படிந்திருந்தன.
''நம் நிழல்கள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருக்கின்றன'' என்றான் அவன்.
அவள் அவன் பார்வையின் திசையைக் கவனித்தாள். நிழல்களைக் கவனித்தாள். புன்னகை செய்தாள். அவனுடைய அர்த்தத்தைக் கண்டு கொள்ளாதது போன்ற புன்னகை. எதையுமே தெரிவிக்காத, விட்டுக் கொடுக்காத புன்னகை. நிழல் தழுவுகிறது. புன்னகை செய்வதில்லை. அவள் புன்னகை செய்கிறாள்; ஆனால்-
''இன்று என்னவோ ஒரே புழுக்கமாக இருக்கிறது, இல்லை?'' என்றான் அவன்.
'' உக்கூம்''.
''இந்தப் புழுதி வேறே, சனியன்-இப்போதெல்லாம் சாயங்காலமும் ஒரு தடவை நான் குளிக்கிறேன்-நீ?''
''நான் கூட''.
''உனக்குக் குளிக்க எவ்வளவு நேரம் ஆகும்?''
''பதினைந்தே முக்கால் நிமிஷம்''.
''ரொம்ப அதிகம்-எனக்கு ஐந்து நிமிஷங்கூட ஆகாது''.
''நான் பாத்ரூமுக்குப் போனால் உடனே குளிக்கத் தொடங்க மாட்டேன். கொஞ்ச நேரம் வாளி யிலிருக்கும் ஜலத்தைக் கையினால் அளைந்து கொண்டு, யோசித்துக் கொண்டு உட்கார்ந் திருப்பேன். கால் விரல் நகங்கள் ஒவ்வொன்றின் மேலும் சொட்டுச் சொட்டாக ஜலத்தை எடுத்து விட்டுக் கொள்வேன். தலைமயிரை ஒரு கொத்தாகப் பிரஷ்போல நீரில் தோய்த்தெடுத்து, அதனால் கை கால்களில் வருடிக் கொள்வேன். செம்பைக் கவிழ்த்தவாறே ஜலத்தினுள் அமிழ்த்தி, பிறகு ஜலத்தினடியில் அதை மெல்ல நிமிர்த்தி 'பம்பும், பம்பும்' என்று அது பேசுவதைக் கேட்பேன்''.
''நான் அந்தச் செம்பாக இருந்திருந்தால் எவ்வளவு நான்றாயிருந்திருக்கும்!...''
''நான் உங்களுடன் பேசுவதில்லையென்றா சொல்கிறீர்கள்?''
''உன்னுடன் தனியா...!''
''டோன்ட் பீ வல்கர்''.
அவள் குரலில் ஒரு இலேசான கண்டிப்பு இருந்தது. அந்தக் கண்டிப்பு அவனுக்கு ஒரு திருப்தியையும் குதூகலத்தையும் அளித்தது. அவளுடைய கவசத் தைப் பிளந்த குதூகலம். அவளை உணரச் செய்த, உணர்ந்து கண்டிக்கச் செய்த குதூகலம்.
''நான் ஒரு வல்கர் டைப்-இல்லை'' என்றான்.
''ஊஹ¥ம்; ரொம்ப நைஸ் டைப்'' அவள் சமாளித்துக் கொண்டு விட்டாள். ''அதனால் தான், நீங்கள் நைஸாகவே இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்''.
''நான் அதை விரும்பவில்லை. அவ்வப்போது சற்றே வல்கராக இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும்''.
''நானும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா?''
''சில சமயங்களில்-கொஞ்சம் கொஞ்சம்''.
''எதற்காக?''
''மை காட்! அடுத்தபடியாக, உன்னை நான் எதற்காகக் காதலிக்கிறேன் என்று கேட்பாய் போலிருக்கிறது''.
''அதற்காகத்தான் காதலிக்கிறீர்களா? அந்த லட்சியத்துடன்தானா?''
''எந்த லட்சியம்?''
அவள் பேசவில்லை. நிழல்களைப் பார்த்தாள். ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு, ஒன்றில் ஒன்று ஆழ்ந்திருந்த நிழல்கள்.
''எல்லாரும் எதற்காகக் காதலிக்கிறார்கள்?'' என்று அவன் கேட்டான்.
''நாம் இப்போது மற்றவர்களைப் பற்றிப் பேச வில்லை''.
''சரி; நீ எதற்காகக் காதலிக்கிறாய்?''
''அழுகையையும் சிரிப்பையும் போல, எனக்குள் ளிருந்து பீறிடும் ஒரு இயற்கையான உணர்ச்சி வெளியீடு இது-என்னையுமறியாமல், எனக்கே புரியாமல்...''
''ஐ ஸி''
''ஆனால் அழுகையையும் சிரிப்பையும் போல அல்லாமல் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், குறிப்பிட்ட ஒரு நபரை முன்னிட்டுத்தான் இந்த வெளியீடு நடைபெறுகிறது''.
''நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி!''
''ஆனால் பொறுமைசாலியல்ல''
''அப்படியா?''
''ஆமாம்''.
''என் அம்மாகூட அப்படித்தான் சொல்லுவாள். அவள் எது சமைத்தாலும் பாத்திரத்திலிருந்தே எடுத்துச் சாப்பிட்டு விடுவேன் நான்-அகப்பை, தட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பரிமாறுதல், காத்திருத்தல் - இதெல்லாம் என் பொறுமையைச் சோதிக்கும் விஷயங்கள்''.
அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. ''அம்மா நினைவு வருகிறதாக்கும். என்னைப் பார்த்தால்?''
''பெண்கள், பெண்கள்தான்''.
“ஆண்களின் பொறுமையைச் சோதிப்பவர்கள்-இல்லை''.
''ரொம்ப''.
''ஆனாலும் சகித்துக் கொள்ளப்பட வேண்டி யவர்கள்''.
''எங்கள் தலைவிதி''.
''த்சு, த்சு, பா......வம்!'' என்று அவள் அவன் தோளின் மேல் செல்லமாக ஒரு முறை தட்டினாள். மெல்லத் தடவிக் கொடுத்தாள். மென்மையான, மிருதுவன அந்தத் தடவலில அவனுடைய இறுக்கம் தளர்ந்தது; அவனுள் கெட்டியாக உறைந்து கிடந்த எதுவோ திடீரென்று இளகத் தொடங்கியது; பொங்கி யெழும்பத் தொடங்கியது - அவன் சட்டென்று அவள் கையைப் பற்றிக் கொண்டான். அவளை இறுக அணைத்துக் கொண்டுவிடப் போகிறவன்போல முகத்தில் ஒரு தீவிரம், உன்மத்தம்.
''உம்ம்...ப்ளீஸ், வேண்டாம்!'' என்று கோபமில்லாமல் இதமாகவும் கனிவுடனும் கூறியவாறு அவள் மெல்லத் தன் கையை விடுவித்துக் கொண்டாள். அந்தக் கணத்தில் அவனுக்கு அவளைக் கொலை செய்ய வேண்டும் போலிருந்தது. நெருப்பு மூட்டுவதும், பிறகு ஊதி அணைப்பதும்-நல்ல ஜாலம் இது!
அவள் அவனுடைய முகத்தைப் பார்த்தாள். அவனுடைய உஷ்ணத்தை உணர்ந்தாள். சுமுகமாக ஒரு மனநிலையில் அவனிடம் விடைபெற நினைத்து, அவன் தோளில் தட்டிக் கொடுக்கப் போக, பலன் இப்படியாகி விட்டது.
''கோபமா?'' என்றாள் அவள் மெதுவாக.
''சேச்சே, இல்லை; ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறேன் - இதோ பார்த்தாயா, புன்னகை செய்கிறேன்''.
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். ''ப்ளீஸ்! புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்''.
''அது அவ்வளவு சுலபமாக இல்லை. இருந்தாலும் நான் என்னால் இயன்றவரை முயன்று கொண்டுதான் இருக்கிறேன். என்னை நம்பு''.
''எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்-எல்லாவற்றையும் அல்ல, பூரணமாக அல்ல''.
''பூரணமாக உன்னை நீ சமர்ப்பித்திருக்கிறாயா, பூரணமாக உன்னைப் புரிந்து கொள்வதற்கு?''
அவள் பேசவில்லை. வெடுக்வெடுக்கென்று இரக்கமில்லாமல் எப்படிக் குதறியெடுக்கிறான் அவளை! கருணையையும் கடுமையையும் பிரிக்கும் கோடு இவ்வளவு மெலிதானதா?
குப்பென்று குளிர் காற்று வீசியது. அவர்களிடையே நிலவிய சூழ்நிலைக்குச் சிறிதும் பொருத்த மில்லாததாக. மெயின் ரோட்டிலிருந்து பஸ்கள், கார்கள் செல்லும் ஓசைகள், ஹார்ன் ஒலிகள் மிதந்து வந்தன. தலைக்கு மேலே ஒரு ஒற்றைக் காக்கை 'கக்கா பிக்கா' என்று தன் அகால இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வது போலச் சப்த மெழுப்பிக் கொண்டு பறந்து சென்றது-எங்கும் எந்தப் பஸ்ஸ¥க்கும் (அல்லது மிஸ்ஸ¥க்கும்) காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தமில்லாலிருந்தும், அதற்கு ஏனோ இன்று வீடு திரும்ப இவ்வளவு நேரமாகியிருக்கிறது.
ஆனால் அவன் பஸ்ஸ¥க்காகக் காத்து நிற்க வேண்டும். 'குட் நைட்' என்று சொல்லிவிட்டு, 'கான்ஸலேஷன் ப்ரைஸ்' போல ஒரு புன்னகையை வீசிவிட்டு அவள் ஹாஸ்டலுக்குள் நுழைந்து விடுவாள். அவன் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க வேண்டும். தன் நினைவுகளுடன் போராடியவாறு, அவற்றின் முற்றுகைக்குள் புழுங்கித் தவித்தவாறு, பஸ் வருவதை எதிர்பார்த்து பஸ் ஸ்டாண்டில் நிற்க வேண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும். பஸ்ஸின் மேல் அவனுக்குத் தனியாக பாத்தியதையோ, அதிகாரமோ இல்லை. மற்றவர் களைக் காக்க வைப்பது போல, அவை அவனையும் தனியாக காக்க வைக்கட்டும், பாதகமில்லை. ஆனால் இவள்-இவள் ஏன் அவனைக் காக்க வைக்க வேண்டும்? எவ்வளவு சிறிய விஷயம்! அதை எவ்வளவு பெரிதுபடுத்துகிறாள்! எப்போதும் எதற்கும் காத்திருப் பதும் ஏங்கித் தவிப்பதும் அவன் தலைவிதி போலும். சிலருக்கு ஒவ்வொன்றும் எவ்வளவு சுலபத்தில் கிட்டிவிடுகிறது...
சாலையின் குறுக்கே ஒரு வெள்ளை நாய் ஓடி வருகிறது. பின்னாலேயே ஒரு கறுப்பு நாய். வெள்ளை நாய் நிற்கிறது; கறுப்பு நாய் அதன் பின்னால் முகர்ந்து பார்க்கிறது... ''நாய்கள் யோசிப்பதில்லை'' என்றான் அவன்.
அவனுடைய மெளனத்தையும் பார்வையின் திசை யையும் சிரத்தையாகக் கவனித்துக் கொண்டிருந்த அவள், குபீரென்று சிரித்தாள். தன் வார்த்தைகள் அவளை அதிரச் செய்யுமென்றும் புண்படுத்துமென்றும் எதிர்பார்த்திருந்த அவன் அவள் சிரித்ததும் தடுமாறிப் போனான். ஒரு முட்டாளைப் போல உணர்ந்தான்.
திடீரென்று தொடங்கியதைப் போலவே, திடீரென்று நின்றது அவள் சிரிப்பு. அவள் முகத்தில் ஒரு ஆயாசமும் வாட்டமும் தேங்கியிருந்தன. எல்லாச் சிரிப்புகளுமே குதூகலத்தையும் உல்லாசத்தையும் மட்டுமே வித்தாகக் கொண்டவையாக இருப்பதில்லை. ''சில சமயங்களில் என்னை இதயமற்ற ஒரு கொடிய ராட்சஸியைப் போல உணரச் செய்து விடுகிறீர்கள்'' என்றாள் அவள்.
'' நீ மட்டும்? இங்கிதமோ நாசூக்கோ அற்ற காட்டுமிராண்டியைப் போல என்னை உணரச் செய்கிறாய்''. |
|
'ஒரு காட்டுமிராண்டிக்கும் ராட்சஸிக்குமிடையே மலர்ந்த காதல்' என்று அவள் மறுபடி சிரித்தாள். அடேயப்பா, இவர்களுக்குத் தெரியாத தந்திரமில்லை சிரித்து ஏமாற்றுவார்கள்; சிரிக்காமல் ஏமாற்று வார்கள்; பேசி ஏமாற்றுவார்கள்; பேசாமல் ஏமாற்றுவார்கள்-
இப்படியே பேசி, இப்படியே மழுப்பி, இரவு முழுவதையும் இவள் கழித்து விடுவாள். பிறகு காலையில் மறுபடி அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க வேண்டும்-ஹெல்-அதற்கு இப்போதே போய்விடலாம். மன்றாடுவதும், போராடுவதும், குதறுவதுமாக - சே! அவனுக்குப் படுக்கையில் போய் விழ வேண்டும் போலிருந்தது. இறுக்கமான உடை களை களைந்து, கைகால்களை இடைஞ்சலில்லாமல் நீட்டிக் கொண்டும் பரப்பிக் கொண்டும் இளைப்பாற வேண்டும் போலிருந்தது. இதெல்லாம் எப்படியாவது தொலையட்டும். இவள் இஷ்டப்படுகிற விதத்தில் இஷ்டப்படுகிற கட்டத்தில் நடந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் எனக்கும் அவ்வளவு விருப்பமில்லையோ என்னவோ, இவள் அதை ஒரு கெளரவப் பிரச்சனை யாக ஆக்குவதால், நானும், அதை ஒரு கெளரவப் பிரச்சினையாக ஆக்குகிறேன் போலும்.
''சரி; அப்போது நான் கிளம்ப வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்'' என்று அவன் தன் முகத்தில் ஒரு 'பிரிவுத்தருண'ப் புன்னகையைத் தரித்துக் கொண்டான். ''குட் நைட்-விஷ் யூ ஹாப்பி ட்ரீம்ஸ்-கனவுகளிலாவது, பிகு செய்து கொள்ள மாட்டாயே?''
''கனவில் வரப் போகிறீர்களா?''
''கனவில்தான் வரவேண்டும் போலிருக்கிறது!''
அவள் சிரித்தாள். அவன் கையை உயர்த்தி, ''கிளிக்!'' என்று அவளைப் புகைப்படம் எடுப்பது போல அபிநயம் காட்டினான். ''தாங்க் யூ மேடம்! ப்ரிண்ட்ஸ் நாளைக்குக் கிடைக்கும்'' என்றான்.
''சாயங்காலம்?''
''ஆமாம், சாயங்காலம்''.
''எங்கே?''
''நானே பர்ஸனலாக உங்களிடம் வந்து டெலிவரி பண்ணுகிறேன், மேடம்''.
''ஓ, தாங்க்ஸ்''.
''இட்ஸ் எ பிளஷர்'' என்று அவன் இடுப்பை வளைத்து, சலாம் செய்தான். ''வேறு ஏதாவது என்னாலாகக் கூடிய உபகாரம்..?''
''உங்களை நினைவு வைத்துக் கொள்ள எனக்கு ஒன்றும் கொடுக்கப் போவதில்லையா?''
''ஓ!'' என்ற தன் பைகளில் தேடுவது போலப் பாசாங்கு செய்தான். ''த்சு, த்சு, விஸிட்டிங் கார்டு எடுத்து வர மறந்து விட்டேன்'' என்றான்.
''வேறு ஏதாவது கொடுங்கள்''.
''எது வேண்டுமானாலும்?''
''ஆமாம்'' என்று அவள் அவனருகில் வந்து, முகத்தை அவனை நோக்கி நிமிர்த்தினாள். ''ஐ மீன் இட்'' என்றாள். அவன் அவளுடைய பளபளக்கும் விழிகளைப் பார்த்தான் குறும்புத்தனமாக வளைந்திருந்த மூக்கைப் பார்த்தான். சிறிய உதடுகளைப் பார்த்தான் - எவ்வளவு சிறிய உதடுகள்! அவனுடைய அம்மாவின் உதடுகளும் சிறியவைதான். ''அம்மாவுக்கு முத்தா கொடு கண்ணா'' என்று அவனருகில் வந்து முகத்தை நீட்டுவாள் அம்மா, அவன் சின்னவனாக இருக்கும் போது.
இதோ, அவனருகில் நிற்பவளும் ஒருநாள் அம்மா வாகப் போகிறவள்தான்; அம்மாவாகக் கூடியவள் தான். ஒரு குட்டி அம்மா! முரட்டுத் தனத்தை மறந்து, ஒரு திடீர் வாஞ்சையுடன் அவன் அவளுடைய வலது கையைப் பிடித்துத் தன் முகத்தை நோக்கி உயர்த்தி, அந்தக் கை விரல்களில் வெகு மென்மையாக முத்தமிட்டான்.
''அங்கே இல்லை!'' என்றாள் அவள்.
''பின்னே எங்கே?''
''த்சு, த்சு. குழந்தை - ஒன்றுமே தெரியாது'' என்று அவள் பரிகாசமாகத் தலையை ஆட்டினாள். விழிகளில் ஒரு குறும்பு; ஒரு விஷமத்தனம். தான் போடும் விதிகளின்படி ஆட்டம் நடைபெறகிற வரையில் அவளுக்குச் சந்தோஷந்தான்; திருப்தி தான். அவன் யாசிப்பதை அவள் தரவே மாட்டாள். ஆனால் அவள் தருவதையெல்லாம் அவன் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் - நல்ல நியாயம்!
அவனுக்குத் திடீரென்று, கோபம் திரும்பியது. வேடிக்கையும் விளையாட்டும் மறந்து போயிற்று. விளையாட்டுத்தனமாக அணிந்த 'போட்டோ கிரா·பர்' போர்வை பறந்து போயிற்று. இளகியிருந்த முகபாவம் மீண்டும் இறுகிப் போயிற்று. ''இதென்ன பிச்சையா?'' என்றான். அமைதியான குரலில்.
''உம்?'' அவள் குரலில் வியப்பும், ஒரு இலேசான பயமும் தெரிந்தன.
''என் மேல் இரக்கப்பட்டுச் சில்லறை தருகிறாயா?''
அவள் முகத்தில் அலை பாய்ந்து கொண்டிருந்த குதூகலம் திடுமென வற்றிப் போயிற்று. இதை இப்படி இவ்வளவு கடுமையாகச் சொல்லியிருக்க வேண்டா மோ, என்று அவனுக்கு ஒரு பச்சாதாப உணர்வு ஏற்பட்டது. ஆனால் வாயிலிருந்து வார்த்தை விழுந்தது விழுந்ததுதான். நிமிடங்களும் நிலைகளும் கலைந்தது கலைந்ததுதான். ஒரு நிமிடம் முன்பு அவன் விடைபெற்றுச் சென்றிருந்தால் எல்லாமே சுமுகமாகவும் இதமாகவும் இருந்திருக்கும்! ஆனால் இப்போது-
அவள் கண்கள் கலங்குவது போலிருந்தது; உதடுகள் துடிக்க யத்தனிப்பது போலிருந்தது-அழப் போகி றாளா என்ன? 'எவ்வளவு அஸ்திரங்களை இவர்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள்!'' என்று இரக்கத்துடன் கூடவே ஒரு பிரமிப்பும் அவனுக்கு ஏற்பட்டது. அவள் நன்றாக மூச்சை உள்ளுக்கிழுத்து வெளியே விட்டாள். மார்பகங்கள் ஒரிருமுறை எழும்பித் தணிந்தன. எழத் துடித்த விசும்பல்களை எழாமலேயே அழுத்திவிடும் முயற்சியிலோ என்னவோ, அவள் உடல் முழுவதும் இலேசாகக் குலுங்கியது. ''சில்லறை வேண்டா மாக்கும் உங்களுக்கு!'' என்றாள். குரலில் ஒரு குத்தல்; ஒரு சவால்; ஒரு மிடுக்கு. ''நோட்டுத்தான் வேண்டுமாக்கும்- சரி, எடுத்துக் கொள்ளுங்கள்''.
அவன் கூசிப் போனான்; பேசாமல் நின்றான்-அவள் வேண்டுவதும் இதுதானே! அவனை வெட்கப்படச் செய்ய வேண்டும். ஏதோ குற்றம் செய்துவிட்டவனைப் போலப் பச்சாதாபப்படச் செய்ய வேண்டும். ''ஐ ஆம் ஸாரி'' என்று மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும் - என்ன ஜோடனை, என்ன சாதுரியம்? இதமான சமர்ப்பணத்துக்குப் பதிலாக, எகத்தாளமான ஒரு சவாலை அளித்து, அவனைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறாள்.
இருந்தாலும் அவன் பணிந்திருக்கலாம். தவறு தன்னுடையதுதானென்று அவளைத் தேற்றியிருக் கலாம். அவளை மன்னித்ததன் மூலம், அவளுடைய சாகசத்தைக் கண்டும் காணாதது போல இருந்ததன் மூலம், அவன் உயர்ந்திருக்கலாம். ஆனால் பணிவு இயல்பாக வருவதில்லை. சவாலுக்கு எதிர்ச் சவால், குத்தலுக்கு எதிர்க்குத்தல்-இவைதான் இயல்பாக வருகின்றன.
''உம், எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றாள் மறுபடி. ''வேண்டுமென்பதை எடுத்துக் கொள்ளுங்கள்''.
''இப்படியல்ல; வேண்டா வெறுப்பாக அல்ல''.
''இது வெறுப்பு இல்லை''.
''ரியலி?''
அவன் பேசவில்லை.
''உனக்குப் புரியவேயில்லை'' என்று அவன் தலை யைப் பலமாக ஆட்டினான். ''இவ்வளவு நாட்க ளாகியும், நீ இன்னும் என்னைப் புரிந்து கொள்ள வில்லை, என் மேல் நம்பிக்கை வைக்கவில்லை''.
''பல மனிதர்களுக்கிடையிலிருந்து உங்களை நான் ஏன் பொறுக்க வேண்டும் - ஒரு நம்பிக்கை தோன்றா விட்டால்? உண்மையில், நம்பிக்கை இல்லாதது எனக்கல்ல, உங்களுக்குத்தான்''.
''ஓகோ! பேஷ், பேஷ'',
''என் நம்பிக்கையை உங்களுக்குத் திருப்தி யேற்படும் வண்ணம் நான் நிரூபித்துக் காட்ட வேண்டுமென்று விரும்புகிறீர்கள் - இல்லையா?''
''அதெல்லாம் ஒன்றுமில்லை-ப்ளீஸ்! அப்படி நீ நினைக்கக் கூடாது'' என்று கையை மறுபடி மென்மையாகப் பற்றிக் கொண்டான். ''பரஸ்பர நிரூபணங்களை தேவைப்படும் கட்டத்தை நாம் தாண்டிவிட்டோம் என்று நினைக்கிறேன்''.
''ஒத்துக் கொள்கிறேன்''.
''இது நிரூபணத்தைப் பற்றிய பிரச்சினையல்ல. நமக்கென்று ஒரு பொதுவான உலகம் உருவாகி விட்ட பின், அந்த உலகின் நியமனங்களைப் பற்றிய பிரச்சனை. தனி அறைகளையும் திரைகளையும் பற்றிய பிரச்சனை''.
''அந்தத் திரை எப்போது விலக வேண்டும் என்பதைப் பற்றிய பிரச்சனை-இல்லையா?''
''ஆமாம்; ஆனால் -இந்தத் திரைகள் அவசியந் தானென்று நீ நினைக்கிறாயா?''
''இது கற்காலமல்ல''.
''இதோ பார் - உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல - ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப் பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் நினைக்கிறாயே, அதுவல்ல; எனக்கு வேண்டியது நீ - பூரணமான திரைகளற்ற நீ; முழுமையாக நீ - புரிகிறதா உனக்கு? எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது...''
அவள் அவன் வாயைப் பொத்தினாள். ''ப்ளீஸ்'' என்றாள்.
''அந்த ஒன்றுக்காக நான் உன்னை அணுக வில்லையென்று சொல்ல வந்தேன்'' என்று அவன் தொடர்ந்தான். ''அந்தத் தேவையின் பூர்த்திக்காக மட்டுமல்ல-நாட் அட் ஆல். எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. பல பெண்களுக்கிடையில் நீ மட்டும் என்னைக் கவர்ந்தாய். சலனப்படுத்தினாய். இது முதலில் வருகிறது. மிச்சமெல்லாம் அப்புறந் தான் வருகிறது. பூரணமாக ஏற்றுக் கொள்ளவும் ஈடுபடுத்திக் கொள்ளவும் ஒன்றைத் தேடிப் பெற்ற பின், அளிக்க வேண்டியவற்றையெல்லாம் அளித்து, பெற வேண்டியவற்றையெல்லாம் பெற்று, அதன் மூலம் முழுமையும் நிறைவும் பெறும் தாகத்தினால் வருகிறது - இதை நீ புரிந்து கொள்வது ரொம்ப அவசியம்''.
''எனக்கு இது புரிகிறது; ஆனால்...''
''போதும்'' என்று அவன் அவளைப் பேசாம லிருக்கும்படி சைகை செய்தான். ''இது புரிந்தால் போதும். மற்ற எதுவும் முக்கியமில்லை. நம் தனியான உலகத்தின் நியமங்கள் சமூக நியமங்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாதென்று நீ விரும்பு கிறாய் - உன்னை எனக்குப் புரிவது போல, எனக்கும் உன்னைப் புரிகிறது. உன் நம்பிக்கைகள் புரிகின்றன. அவற்றைக் கெளரவிக்கும் வகையில்தான் நான் உன் மதிப்புக்குப் பாத்திரமானவனாக இருப்பேன் - இல்லையா?''
அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது; நிர்மல மானதொரு புன்னகை தவழ்ந்தது. ''தாங்க்ஸ்'' என்றாள்.
''நான் உன் நம்பிக்கைகளை மதிக்கிறேன்; ஆனால் -'' அவன் தலையைப் பலமாக ஆட்டினான். ''ஒப்புக் கொள்ளவில்லை'' என்றான்.
அவள் அவனருகில் இன்னும் நெருங்கி, சுட்டு விரலை அவன் மார்பில் பதித்து, கோலங்கள் வரைந்தாள். ''என்மேல் கோபமில்லையே?'' என்றாள். அவன் அவள் தோள்களை ஆதரவாகப் பற்றினான். அவளை அணைத்துக் கொள்ளும் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உடனே கையை எடுத்தான். ''உன் மீது நான் எப்படிக் கோபப்ட முடியும்?'' என்றான். என்றைக்கும் போல அன்றைக்கும் தான் தோற்றுப் போனதை அவன் உணர்ந்தான். அதிகமாகப் பேசியதன் மூலமாகவே தான் கட்டுண்டுவிட்டதை உணர்ந்தான். தன்னை அவள் கண்களில் ஒரு ஜென்டில்மேனாக நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சலிப்புடன் உணர்ந்தான்.
மெல்லத் தன்னை உணர்ச்சிகளின் அணைப் பிலிருந்து விடுபடுத்திக் கொண்டு, அவள் கிளம்பினாள். ''சரி குட்நைட் - இந்தத் தடவை இறுதியாக'' என்றான்.
''கிளம்பி விட்டீர்களா?''
''மணி எவ்வளவு தெரியுமல்லவா? பத்தரை''.
''நானும் உங்களுடன் வருகிறேன்''.
''பஸ் ஸ்டாண்டுக்கா?''
''உங்கள் அறைக்கு''.
அவன் திடுக்கிட்டுப் போனான். ''சேச்சே! டோன்ட் பீ ஸில்லி!''. ''அதெல்லாம் நாம் ஏற்கனவே பேசி முடிவெடுத்தாகி விட்டது. உனக்கு விருப்பமில்லா ததை நீ செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை''.
''இப்போது எனக்கு விருப்பம் வந்திருக்கிறது''.
''நோ. நோ. இனி உன்னை என்னுடன் கூட்டிப் போனால் ஒரு குற்றம் செய்ததைப் போலச் சங்கடப்படுவேன் நான்''.
''உங்களை இப்படி விட்டுவிட்டு என் அறைக்குத் திருப்பிப் போனால், நான் குற்ற உணர்வினால் சங்கடப்படுவேன்''.
அவன் ஒரு கணம் தடுமாறினான். மறுபடி சமாளித்துக் கொண்டான். ''இன்று எனக்கு மூட் கலைந்துவிட்டது; வேறு என்றைக்காவது பார்ப் போம்'' என்றான்.
''இன்னொரு நாள் எனக்கு மூட் இருக்குமோ என்னவோ!''
''பராவாயில்லை''. வெகு முக்கியமாகத் தோன்றிய ஒன்று, அவனுக்குத் திடீரென்று அற்பமாகத் தோன்றியது.
அவனுடைய திடீரென்ற விலகிய போக்கினால் சந்தேகமடைந்தவள் போல, அவனுக்குத் தன்னிடம் சிரத்தை குறைந்துவிட்டதோ என்று பயப்படுகிறவள் போல, அவள் திடீரென்று அவனை ஒரு ஆவேசத் துடன் இறுக அணைத்துக் கொண்டாள். ''நான் பொய் சொல்லவில்லை; நிஜமாக, உங்களுடன் இப்போதே வரத் தயாராயிருக்கிறேன் நான்'' என்று சொல்லி அவன் கையுடன் தன் கையை இறுகக் கோத்துக் கொண்டாள். அவளுடைய இறைஞ்சும் பார்வையும் சரணாகதியும் அவனுக்கு உற்சாக மளிப்பதற்குப் பதிலாக, அதிர்ச்சியைத்தான் அளித் தது. அவளைப் பற்றி அவன் மனதில் உருவாகியிருந்த ஒரு அழகிய பிம்பம் சேதமடைவது போலிருந்தது. ப்ள்ஸ், ப்ளீஸ்! வேண்டாம்! என்று அவன் மிகச் சிரமப்பட்டு, அவளைப் புண்படுத்தக் கூடாதென்ற ஜாக்கிரதையுடன், அவள் அணைப்பிலிருந்து வெகு மெதுவாகத் தன்னை மீட்டுக் கெண்டான். ''நீ சொல்வதை முழுமையாக நம்புகிறேன்; எனக்கு உன்மேல் கொஞ்சம் கூடக் கோபமில்லை; ஆனால் இன்றைக்கு வேண்டாம்-என்ன!''
''உங்கள் விருப்பம் போல்''.
''ஓ. கே-பை! எங்கே ஒரு ஸ்மைல் கொடு பார்க்கலாம்''.
அவள் புன்னகை செய்தாள். அந்தப் புன்னகையை நினைத்துக் கொண்டு வேறெதைப் பற்றியும் நினைக்க விரும்பாமல், அவன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். 'உண்மையில், மற்றவர்களிடமிருந்து அவளைப் பிரித்துக் காட்டியது எது, என்னைக் கவர்ந்தது எது?'' என்று அவன் யோசித்தான். 'என்னிடம் அவளுக்கிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் கலையாமல் வைத்தி ருப்பது எது?'' சாலை விளக்குகளின் வெளிச்சங் களினூடே, வெளிச்சங்களுக்கிடையிலிருந்த நிழல் களினூடே, அவன் விரைவாக நடந்து சென்றான். 'வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்து விடுகின்றன' என்று அவன் நினைத்தான்.
******
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா வெளியிட்ட அனைத்திந்திய நூல் வரிசைகளில் இந்திரா பார்த்தசாரதி தொகுத்த 'ஆதவன் கதைகள்' என்ற நூலிலிருந்து...
ஆதவன் |
|
|
|
|
|
|
|
|