நான் மனித ஜீவி மறுபக்கம் ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா பட்டு & அப்பு அரட்டை பெண்ணெனும் பூமிதனில்....
|
|
|
விழுப்புரம் அருகே பாண்டிச்சேரி போகும் வழியில் எட்டு மைலில் வளவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. என் பெற்றோருடைய சொந்த ஊர். அங்குள்ள வீட்டில்தான் என் அக்கா சுகன்யாவிற்குத் திருமணம் நடந்தது. கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னாலேயே எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வளவனூருக்குச் சென்றுவிட்டோம். திருமணத்திற்கு முதல் நாள் மாலைதான் மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள்.
அந்தச் சமயத்தில் கிராமத்துச் சினிமாக் கொட்டகையில் கே. பாலசந்தரின் 'இருகோடுகள்' படம் நடந்து கொண்டிருந்தது. திருமண வேலைகளை அம்மா மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அப்பா என்னை மாலையில் சினிமாவிற்குக் கூட்டிப் போனார். அது முதல் முறை.
மறுநாள் மாப்பிள்ளை அழைப்புக்கு வந்த உறவினர் ஒருவர் அப்பாவிடம் 'துணைக்குக் கீதாவை அழைத்துப் போகிறேனே!'' என்று அனுமதி கேட்டுவிட்டு என்னை அதே சினிமாவிற்குக் கூட்டிப் போனார். படம் பார்த்துவிட்டு திரும்பியபோது 'ஒரு கோட்டுக்கு ஒருமுறை என்று கீதா இரண்டு தடவை இருகோடுகள் படத்தைப் பார்த்துட்டா!' என்று அப்பா வேடிக்கையாகச் சொன்னார்.
திருமணம் முடிந்து எல்லோரும் ஊருக்குத் திரும்புவதற்கு முதல்நாள் மூன்றாவது முறையாக ராத்திரி ஷோ - அதே சினிமாவுக்கு, வேறு உறவினருடன் போனேன்.
அம்மாவிடம் நல்ல திட்டு கிடைக்கப்போகிறது என்று எனக்கு உள்ளுக்குள் ஒரே பயம். நாங்கள் வளவனூருக்கு வருவதற்கு முன்னாலேயே அம்மா என்னிடம் பல தடவை 'கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் நிறைய வேலை இருக்கும். நீ தான் கூடமாட எனக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். அதனால நான் கூப்பிட்ட குரலுக்கு ஏன்னு கேட்க என் பக்கத்திலேயே இரு'' என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார். நானோ எந்த வேலையையும் செய்யாமல் டபாய்த்து விட்டு மூன்று முறை ஒரே சினிமாவுக்குப் போயிருக்கிறேன். அதனால் எனக்குள் குறுகுறுவென்று குற்ற உணர்வு.
திருமண விழா முடிந்த பிறகு அம்மாவும் நானும் மட்டும் அங்கிருந்து ரயிலில் தனியாகப் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. இருக்கையில் ஏறி உட்கார்ந்த பின் அம்மா என்னைத் தாளித்து விடப்போகிறார்கள் என்ற பயத்தில் என்னென்ன சமாதானங்கள் சொல்லலாம். வேறு யார் மீது பழி போடலாம் என்றெல்லாம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் பயமெல்லாம் வீண். அம்மா என்னை எதுவும் கேட்கவில்லை. எப்போதும் போல் நிறைய ஜோக் சொல்லிக் கொண்டு ரசித்துக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் அம்மாவிடம் நான் சினிமாவிற்குப் போனதையும், அதனால்தான் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதையும் நானாகவே ஒப்புக்கொண்டேன்.
அம்மா என்னைக் கோபிக்காததோடு சிரித்த முகத்துடன் ''நீ மூணு தடவை சினிமா போனேன்னு நானும் கேள்விப்பட்டேன். போனா போறது. சின்னப் பொண்ணுதானே, இப்ப தானே எஞ்சாய் பண்ண முடியும்'' என்று லேசாகச் சொல்லிவிட்டார். அம்மாவை நான் அப்படியே கட்டிக் கொண்டு அழுதேன். அசடு மாதிரி இதற்கு ஏன் இவள் அழுகிறாள் என்பது போல் என் முகத்தைப் பார்த்தார்.
அப்போது எனக்கு ஒன்று புரிந்தது. அம்மா என்னைத் திட்டியிருந்தால் நானும் பதிலுக்குக் கோபப் பட்டிருப்பேன். போனால் என்னவாம் என்று வாதாடியிருப்பேன். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அம்மா கோபப்படாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டுவிட்டதால் என்மேலேயே எனக்குக் கோபம் வந்தது. அதை நினைத்துநினைத்துப் பல நாட்கள் வருந்தினேன்.
சென்னை இசைவிழா சமயத்தில் இந்தப் பக்கத்தில் நான் எழுதியிருந்த கட்டுரைக்கு சங்கீத கலாநிதி திருமதி குஞ்சுமணி அவர்களிடமிருந்து எனக்கு மின் கடிதம் வந்திருந்தது. ''அது எப்படி என்னைப் பற்றி எழுதினாய்?'' என்று அவர் கோபப்பட்டிருந்தால் நான் என் பக்கத்திற்கு ஏதாவது சமாதானம் சொல்ல பதில் தேடியிருப்பேன். ஆனால் அவரோ தாபத்துடன் வருத்தத்துடன் என் எfழுத்து அவர் மனதை நோக அடித்துவிட்டது என்பதை எனக்கு அழகாக அந்தக் கடிதத்தின் மூலம் எனக்கு உணர்த்திவிட்டார்.
என் மனதின் மிக உயரமான இடத்தில் மதிப்புடன் பெடஸ்டலில் ஏற்றி உட்கார வைத்திருக்கும் அவரைப் பற்றி அவசரப்பட்டு அந்தப் பக்கத்தில் எழுதியதற்காகப் பெருந்தன்மையுடன் என்னை மன்னிக்குமாறு இந்தப் பக்கத்தின் மூலமாகவே அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
****** |
|
கீதா பென்னட்டுக்கு....
சிக்கில் வி. குஞ்சுமணி
அன்புள்ள கீதா பென்னட்டுக்கு,
ஜனவரி 3ஆம் தேதியிட்ட 'தென்றல்' இதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை படிப்பதற்கு சுவாரசியமாகவும் அதே நேரம், மனதிற்கு மிகவும் சங்டமாகவும் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மியூசிக் அகாடமியில் சங்கீத கலாநிதி என்ற முறையில் நான் பேசியதைக் குறித்து, சில உள்ளூர் பத்திரிகையாளர்கள் அநாவசியமாகக் கிண்டல் செய்ததைப் பற்றி நான் கவலைப் படவில்லை. ஏனென்றால் அவர்கள் இசை இதழியல் (music journalism) என்ற பெயரில் கிசுகிசு எழுதுபவர்கள். ஆனால் நீங்கள் வித்தியாசமானவர். மதிப்பிற்குரிய Dr.ராமநாதன் அவர்களின் மகளாக இசைக்குடும்பத்தில் வந்திருப்பதால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுத நான் முடிவு செய்தேன்.
நேரடியாகச் சொல்வதென்றால்... அன்று நான் பேசிய பேச்சு மியூசிக் அகாடமி உயர் அதிகாரி களால் ஒருமுறைக்குப் பலமுறை திருத்தப்பட்டது. காலந்தவறாமைக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு களுக்கும் அவர்கள் பெயர்போனவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அன்று எனக்கு 12லிருந்து 15நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. நானும் அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் பேசினேன். என்னுடைய இந்த வயதில் மேடையின் தேவைக்குத் தகுந்த படி பேச்சை மாற்றிப் பேச என்னால் முடியாது. இதற்காக என்னைக் குற்றம் சாட்ட முடியாது.
மதிப்பிற்குரிய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் விமானநிலையத்திற்குச் செல்லும் வழியில் எம். எஸ். சுப்புலெஷ்மி அம்மாவை சந்திக்க, தான் விரும்புவதாகச் சொன்னார். அதனால் தனக்குப் பதிலாக தான் இசையமைத்த பாடலை தன் அறிவியல் உதிவயாளர்கள் பாடுவதற்கு அகாடமி அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உண்மையிலேயே குடியரசுத் தலைவர் மிகுந்த பரபரப்பில் மாட்டிக் கொண்டிருந் தால் ஏற்கனவே திட்டமிட்ட தனது செயல்பாடுகளை மாற்றி இப்படி நேரத்தை சுருக்கிக் கொள்ளும் செயல்களைச் செய்திருக்க மாட்டார்.
(பின்னொரு நாளில் நாங்கள் எம்.எஸ் அம்மாவை அவர்கள் வீட்டுக்குச் சென்று சந்தித்த போது குடியரசுத் தலைவர் சுமார் 45 நிமிடங்கள் தன்னோடு பேசிக்கொண்டிருந்ததாக அவரே எங்களிடம் சொன்னார்.)
அன்றைய தினத்தில் திரு.டி.டி.வாசு அவர்கள் பதட்டமடைந்து கொண்டிருந்ததற்கு என் பேச்சு மட்டுமே காரணமில்லை. எதிர்பாராதவிதமாக திரு.கலாம் அவர்கள் எம்.எஸ். அம்மாவை வீட்டுக்குச் சென்று சந்தித்ததும், அந்த சந்திப்பு தொடர்பாக ஏற்பாடு செய்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் கூட அவரது பதட்டத்திற்கான காரணங்கள்தான். மேடையில் எனக்குப் பின்னே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் திறனை நிச்சயமாகக் கடவுள் எனக்குக் கொடுக்கவில்லை. அதன் பிறகும்கூட அகாடமி அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அகாடமி சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்ததைத் தவிர வேறெதையும் நான் பேசவில்லை.
குடியரசுத் தலைவர் அவர்கள் தனது விமானத்தைத் தவறவிட்டதற்கு என் பேச்சு தான் காரணம் என்று சொல்லியிருப்பது மீண்டும் ஒரு போலியான கற்பனை. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், டெல்லிக்குச் செல்ல அவரது பிரத்தியேகமான விமானத்தைப் பிடிப்பதற்காக விமானநிலையத் திற்கு அவர் வசதியாகத்தான் சென்றார். மேலும் மறுநாள் நான் வாசுவைச் சந்தித்த போது, எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் இரண்டு நிமிடங்கள்தான் நான் அதிகமாகப் பேசியதாகக் கூறினார். அதனால், பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருந்தது போல் நான் மொத்தம் 25 நிமிடங்கள் பேசவில்லை என்பதை நீங்கள் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.
மேலே சொன்னவைகளிலிருந்து, லயம் குறித்த எனது அறிவு, மேடைப் பேச்சிலும் சரி, கச்சேரி யிலும் சரி என்னைக் கைவிடவில்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இந்தக் கடிதத்தை தயவு செய்து அடுத்த 'தென்றல்' இதழில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் என்பக்கத்தில் உண்மையில் நடந்தது என்ன என்ற கதையை வெளிப்படுத்திய திருப்தி எனக்கு இருக்கும்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
சிக்கில் வி. குஞ்சுமணி |
|
|
More
நான் மனித ஜீவி மறுபக்கம் ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா பட்டு & அப்பு அரட்டை பெண்ணெனும் பூமிதனில்....
|
|
|
|
|
|
|