நான் மனித ஜீவி மறுபக்கம் பட்டு & அப்பு அரட்டை பெண்ணெனும் பூமிதனில்.... கீதாபென்னெட் பக்கம்
|
|
ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா |
|
- காந்திமதி|மார்ச் 2003| |
|
|
|
டிசம்பர் சீசனில் அரங்கமே நிரம்பி வழிய ரசிகர்கள் ரசிக்கக் கூடிய பரதநாட்டியம் முன்னொரு காலத்தில் கோயில்களில் தேவதாசிகள் ஆடிய 'சதிர்' ஆட்டமாக இருந்தது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? சமுதாயத் தீமை என்று ஒதுக்கப்பட்டிருந்த அந்த சதிர் ஆட்டத்தை தெய்வீகத்தன்மையுடைய பரதநாட்டிய மாக்கிய பெருமைக்குரியவர் நாட்டியக்கலைஞர் ருக்மிணிதேவி அருண்டேலின். இவரது நூற்றாண்டு விழா மார்ச் 1,2003லிருந்து, பிப்ரவரி 29,2004 வரை ஒரு வருடத்திற்கு சென்னை கலாஷேத்ரா பயிலகத்தில் கொண்டாடப்படவிருக்கிறது. 1936ல் 'இன்டர்நேஷனல் அகாதமி ஆ·ப் ஆர்ட்ஸ்' என்ற பெயரில் ஒரே ஒரு மாணவியைக் கொண்டு ருக்மிணி தேவி தொடங்கிய பள்ளிதான் பின்னாளில் 'கலாஷேத்ராவாக' மாறியிருக்கிறது.
தஞ்சை மாவட்டம் 'திருவிசை நல்லூரை'ச் சேர்ந்த வடமொழி விற்பன்னர் ஏ. நீலகண்ட சாஸ்திரி -சேஷம்மாள் தம்பதியினரின் ஆறாவது மகளாக 29.02.1904 -ல் பிறந்தவர் ருக்மிணிதேவி. இவருக்கு ஏழுவயதாக இருந்த போது இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. உலகப் புகழ்பெற்ற 'பிரம்ப ஞான சபை'யின் அகில உலகத் தலைமையகம் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட அந்தக் காலகட்டத்தில் இவரது தந்தை நீலண்ட சாஸ்திரிகளுக்கு அந்தச் சபையில் ஈடுபாடு அதிகம் இருந்தது. தந்தையிடம் இருந்த அதே ஈடுபாடு இவருக்கும் ஏற்பட்டபோதுதான், அன்னி பெசன்ட் அம்மையாரின் சீடரான ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயரைத் தன் பதினாறாவது வயதில் தீவிர எதிர்ப்புகளுக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். பிரம்ம ஞான சபை வளாகத்தில் சிறுவர்,சிறுமிகளை ஒருங்கிணைத்து ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார் ருக்மிணிதேவி. 'ஹிபர்வதா' என்ற தனது முதல் நாடகத்தை 1930ல் அரங்கேற் றினார். இதைத் தொடர்ந்து 'ஆசிய இரவு, 'பீஷ்மர்' மற்றும் சில குழந்தை நாடகங்களையும் அரங்கேற்றி தனது கலைப்பணியைத் தொடர்ந்தார்.
தனது கணவர் அருண்டேலுடன் பல வெளி நாடுகளுக்கும் பயணம் செய்யும் இவர், ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்குக் கப்பலில் பயணித்தபோது அன்னா பவுலோவா என்ற பெண்ணோடு நட்பு கொண்டார். இந்த நட்பின் மூலம் அறிமுகமான, க்ளியோ நார்டி என்பவரிடம் முறையாக பாலே நடனம் கற்றுக்கொண்டார்.
1933ல் சென்னை சங்கீத வித்வத் சபையின் வருடாந்திர மாநாட்டில்தான் 'சதிர்' என்ற நடன நிகழ்ச்சியை முதன் முறையாகக் கண்டார் ருக்மிணிதேவி. அந்த நடனத்தில் மனதைப் பறிகொடுத்தார். அதன் விளைவாக மயிலாப்பூர் கவுரி அம்மாளிடம் முதலில் பரதநாட்டியம் கற்றார். அவருக்குப் பிறகு, பந்தநல்லூர் சீனிவாச சாஸ்திரிகளிடம் தொடர்ந்து பரதம் பயின்றார்.
கோயில்களில் தேவதாசி ஒழிப்பு முறை சட்டம் பற்றி தீவிரமாய்ப் பேசப்பட்ட சமயத்தில், ருக்மிணிதேவி நடனமாடுவதை,அதிலும்பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த ஒரு பெண் நடனமாடுவதை யாருமே விரும்பவில்லை. ஆனாலும், 1935 டிசம்பரில் நடைபெற்ற பிரம்ம ஞான சபையின் வைரவிழா மாநாட்டில் ருக்மிணிதேவியின் முதல் பரத நாட்டிய நிகழ்ச்சி அரங்கேறியது. இந்த நடனத்தை எநத வித ஆபாசமான அங்க அசைவுகளும் இல்லாமல் தெய்வீகமாக ஆடமுடியும் எனபதை அந்த மேடையில்தான் நிரூபித்துக் காட்டினார் ருக்மிணி. மாநாட்டிற்கு வந்திருந்த இரண்டாயிரம் பேரும் நடனத்தைக் கண்டு களித்து கரவொலி எழுப்பினர். 'ரைட் ஹானரபிள்' சீனிவாச சாஸ்திரி, சர்.சி.பி. ராமசாமி ஐயர் மற்றும் பி.சிவசாமி ஐயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அன்னிபெசன்ட் அம்மையாருக்கு உதவியாக அயர்லாந்திலிருந்து இந்தியா வந்த ஜேம்ஸ் கசின்ஸ் ருக்மிணி தேவியின் நடனத்தைப் பார்த்துப் பிரம்மித்துப்போனார். நடனத்திற்கென்று தனியாக ஓர் அமைப்பை உருவாக்கலாம் என்று ருக்மிணியை உற்சாகப் படுத்தியவர் இவரே. அதன் விளைவாக உருவாகியதுதான் இன்றைய கலாஷேத்ரா. |
|
கலைமூலம் தெய்வத்தை அடையலாம் என்று நிரூபித்தவர் ருக்மணிணிதேவி. இவர் நடத்திய நாட்டிய நாடகங்களுக்கு உலகம் முழுதுமே நல்ல வரவேற்பு இருந்தது. நாட்டியத்தையே நாடித் துடிப்பாகக் கொண்டு கலை சேவை செய்த இவர் 1986ல் பிப்ரவரி 24ல் (82ஆவது வயதில்) மறைந்தார். மிகப் பெரம் கலைப்பாரம்பரியத்தை கலாஷேத்ரா என்ற பெயரில் கலைப்பிரியர்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
அவரது நினைவாக நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது அவர் உருவாக்கிய கலாஷேத்திரா கலைக்கூடம். இந்த ஒரு வருடக் கொண்டாட்டங்களை இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய பைரான் சிங் ஷெக்காவத் மார்ச் 1,2003 அன்று தொடங்கி வைக்கிறார். விழாவில், ருக்மிணி தேவியின் பேச்சு மற்றும் எழுத்து அடங்கிய இரண்டு தொகுதிகளை தமிழக கவர்னர் மதிப்பிற்குரிய ராம் மோகன் ராவ் அவர்கள் வெளியிடுகிறார். நூற்றாண்டு மலரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிடுகிறார். இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு கலாஷேத்திரா திட்டமிட்டிருக்கிறது.
******
அன்றைய சதிர்நடனம்தான் இன்றைய பரத நாட்டியம். தாசியாட்டம்,தேவதாசி நடனம் என்று பல பெயர்களால் வழங்கப்பட்ட இந்த நடனம் கோயில்களிலும், பெரும்பணக்காரர் களின் இல்லங்களின் திருமண விழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்தது.
காந்திமதி |
|
|
More
நான் மனித ஜீவி மறுபக்கம் பட்டு & அப்பு அரட்டை பெண்ணெனும் பூமிதனில்.... கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|