Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சிறுகதை
மனம் மாறியது
ரேடியோ
பச்சைக் குழந்தையடி....
- ரோகாந்த்|மார்ச் 2003|
Share:
படி உயரமாய்ப் போனது. சட்டென குறுக்கு ஒடிந்து சதுரமாய் இளைப்பாறிக் கொண்டது. மீண்டும் உயர்ந்து போனது, நீளமாய்க் கிடந்த வராண்டா நடுவில் சங்கமித்தது.

சங்கமித்த இடத்தில் படி உதறி வராண்டாவில் பிரவேசித்தான். படி ஏறிவந்த வேகத்திலேயே இயல்பாய் வராண்டாவின் இடப்பக்கம் திரும்பி ஓட்டம் கலந்து நடந்தான். மூச்சு வாங்கியது. பிடரி பக்கம் ஈரமாய் நசநசத்தது. கைகளில் மாத்திரை மருந்துகவர், கண்களில் ஆழமான ஒரு தேடல்.

''சரசு...''

உள்ளுக்குள் என்னவோ சதா அவள் பெயரே ஓலமிட்டுக் கொண்டிருந்தது. வராண்டாவில் போகிறவர்கள் திரும்பிப் பார்க்கும்படி 'சரசு' என்றான். அவளுடைய கலவரப்பட்ட முகம் முன்னால் வந்து அடி வயிற்றைக் கலக்கியது.

வேகம் குறைத்தான். கால்கள் அறையின் வாசலைத் தொட்ட போது சரசு பெரிதாய்க் குரலெடுத்து அலறினாள். இவன் காதுகளுக்குள் நெருப்பு ஜூவாலை திணித்தாள்.

''என்னடா...இதோ வந்துட்டேம் பாரு...''

ஓடிப்போய் இரண்டு கைகளையும் விரித்து ட்ரேயில் கவரைப் போட்டுவிட்டு அவள் கைகளைத் தாங்கிக் கொண்டான்.

''எனக்குப் பயமாயிருக்கு...'' வாய் குழறினாள். கண்களை இறுகமூடி இவன் கைகளுக்குள் முயலாய்ப் பதுங்கிக் கொண்டாள்.

இவன் உதடு கடித்து முகம் திரும்பி பக்கத்தில் நின்ற வெள்ளையுடைத் தாதியைப் பார்த்தான்.

''ஒரு இன்ஞ்செக்ஷன் போடணும் சார், பக்கத்திலேயே நெருங்கவிட மாட்டேங்கறாங்க... அந்த ஸிஸ்டர் கையை வேற கடிச்சுட்டாங்க...'' சிரிஞ் ஏந்திய வெள்ளையுடை தாதி முறையிட்டாள்.

''ஸாரி...ஸாரி...''

தடுமாறினான். நகக்கணுவிலும் அவமானம் குடி புகுந்து குத்தியது. விழிகள் சரசை எரிச்சலோடு பார்த்தன. தாதி பக்கம் திரும்புகையில் நீர் முட்ட இறைஞ்சியது.

புரிந்து கொண்ட தாதி உதடு நெளித்தாள். ''இட்ஸ் ஆல் ரைட்'' என்று முணுமுணுத்துக் கொண்டாள். சிரிஞ் எடுத்து உயர்த்திப் பிடித்தாள்.

''வேணாம்...''

''சரசு என்ன இது குழந்தை மாதிரி... வீணாக் கத்தாத...''

''முடியாது...''

இவன் நெருங்கிய போது பிடித்துத் தள்ளி விட்டாள்.

''வம்பா ஒத வாங்காத...'' இவன் குரலில் வில் நாணின் அதிர்வு இருந்தது. அம்பு சரசுவை மெளனியாக்கி விசும்பலெடுக்க வைத்தது.

இடுப்புச் சேலை விலக்கி, நர்ஸ் ஊசிமுனை பொருத்தினாள். கத்த எத்தனித்த சரசுவை மார்போடு இறுக்கிக் கொண்டான். அவளது மொத்த பாரத்தையும் தன் மார்பில் வாங்கினான்.

கல்யாணமாகி சரியாய் ஏழாவது மாதம் முதல் முறையாய் சரசு உண்டானாள்.

''கங்ராஜூலேஷன்ஸ்...எங்க வீட்ல சொன்னா... பத்திரமா பாத்துக்கோ... '' கடைத்தெருவில் எதிர் வீட்டு வழுக்கை மனிதர் வந்து கை கொடுத்தார். புரியாமல் நின்றான்.

''நேத்து உனக்கு நைட்ஷிப்டா... எட்டு மணி இருக்கும். உன் வீட்டுக்காரி ஒரே அழுகை... சத்தம் கேட்டு பங்கஜம் தான் போய் பாத்துட்டு வந்து சொன்னா... ஒண்ணுமில்ல நாலுமுறை வாந்தி எடுத்துருக்கா... ஏன்டியம்மா இப்படி அழுதுகிட்டு இருக்கேன்னு கேட்டதுக்கு பதிலே சொல்லலையாம். வாந்தி எடுத்தயான்னு கேட்டுருக்கா.. நாலு தடவைன்னு செய்கை காமிச்சுட்டு பழயபடியும் அழுகை... அப்புறம் கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இதாத்தா இருக்கும், அசடே புருஷன் வந்தா சொல்லுன்னுட்டு வந்துட்டா... என்ன இப்படி பேந்தப் பேந்த முழிக்கற... உன் வீட்டுக்காரி உன்கிட்ட ஒண்ணும் சொல்லலையா...?

இத்தனை நடந்திருக்கிறது இது வாயையே தொறக்கலியே...

''என்னப்பா...''

''சொன்னா...''

''சந்தோஷமாச் சொல்லேன்... உன் வீட்டுக்காரி தான் அர்த்தமில்லாம பயந்தான்னா நீயும் இப்படி சுரத்தை இல்லாம இருக்கியே...''

''இல்ல சார் சந்தோஷம் ஒண்ணும் புரியல...''

ரோட்டில் மூன்றாம் மனிதர் சொல்லித்தான் சரசு உண்டாகியிருக்கும் விஷயம் இவனுக்குத் தெரிய வந்தது. விஷயம் சொன்ன எதிர் வீட்டு மனிதரைக் கூட்டிப்போய் காட்பரீஸ் வாங்கிக் கொடுத்தான். கடைத்தெரு வந்த விஷயம் மறந்து வீட்டிற்கு ஓடினான்.

''என்னடா கண்ணா என்ட கூட சொல்லாம...''

''என்னது...''

மெதுவாய் அவள் வயிறு நீவினான். உச்சி முகர்ந்து இதழ் தேடினான்.

''ச்சீ...''எரிச்சலாய் எகிறினாள்.

''அந்த மாமி வந்து நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறா... எனக்கு மானமே போயிடுச்சு...'' நரகல் மிதித்த பாவனையில் சொன்னாள். ''என்னத்துக்கு இந்தக்கருமம்..''

இவன் எரிச்சல் அடைந்தான். என் ஜீன். என் இரத்தம். என் குழந்தை... சரியான இடத்தில் தளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. மண்ணோடு சண்டையிட்டு முட்டி மோதி முளைவிட்டு இருக்கிறது. இனி வளரும்... சின்னதாய் இரண்டு இலை... அடுத்து ஒன்று என்று வளரும் கிளை விட்டு பெரிதாய் வளரும். வளர்ந்து நிற்க நிழல் தரும், காய் தரும், கனி தரும், இது சந்தோஷம். தள்ளி நிற்கிற தனக்கே இது இத்தனை சந்தோஷம் என்றால்... தன்னுள்ளேயே அடக்கிக் கொண்டிருப்பவளுக்கு என் குழந்தை என்று சந்தோஷம் பொங்காதோ...

''சரசு...'' இவன் சத்தமாய் குரல் கொடுத்தபோது அவள் கிச்சனுக்குள் புகுந்திருந்தாள். எழுந்து பின்னால் போய் நின்றான். அவள் கண்டு கொள்ளவில்லை. ரொம்ப மும்முரமாய் காரியம் செய்து கொண்டிருந்தாள்.

''இது சந்தோஷப்படற விஷயம் சரசு...''

சுவரில் சாய்ந்து கொண்டு ரொம்ப அமைதியாய்ச் சொன்னான். ''ஒவ்வொருத்தர் இதுக்காக தவமிருக் கறாங்க...''

''எதுக்கு இந்தக் கருமம் எல்லாம் பண்றதுக்கா...?''

''ச்சீ.. நீ என்ன ஜென்மம்...''

''எனக்கு இதெல்லாம் ஒண்ணும் வேணாம்.''

இவன் கை நீட்டினான். பிடி கொடுக்காமல் நழுவினாள். நீட்டிய இவன் கைகளுக்குள் அவள் புடவை மட்டும் சிக்கிக் கொண்டது.

சரசு இரு கைகளாலும் மார்பை மூடிக் கொண்டு ''ராமா... ராமா...'' என்று கத்தினாள்.

இவன் மூர்க்கமடைந்தான். புடவையை விசிறி அவள் முகத்தில் எறிந்தான். கொத்தாய் அவள் பிடரி மயிர் பிடித்து வாயிலேயே அடித்தான். தன்னையுணர்ந்த போது தலையில் அடித்துக் கொண்டு வெளியேறினான்.

சரசு உதடு கிழிந்து வழிகிற ரத்தத்தோடு முகம் பொத்திக் கொண்டு அழுதாள். 'ராமா... ராமா... ' என்று புலம்பினாள்.

''ராமா... ராமா...''

அம்மா சொல்லிக் கொடுத்தாள். முதல் முறையாய் கொல்லைப்புறத்தில் உட்கார வைத்த அன்று சொன்னாள். ''ராமா... ராமான்னு சொல்லிக்கிட்டு பேசாம உக்காரு... என் பிராணனை வாங்காதே...''

சொல்லிவிட்டு அப்பாவிடம் ஓடினாள்.

அப்பா படுத்திருந்தார். ஒரு மாதமாய்ப் படுத்திருந்தார். சாதாரண ஜூரம் என்று நினைத்தது அப்பாவை விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டிருந்தது.

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று வந்திருந்த உறவினர்கள் சிலர் சரசுவைச் சூழ்ந்து கொண்டிருந்தனர்.

அம்மா திடுமென அலறினாள். ''ஐயோ என்ன விட்டுப் போயிட்டேளே...''

சரசுவுக்கு ஒன்றும் புரியவில்லை.

சுற்றி நின்ற உறவினர்கள் அப்பாவை நோக்கி ஓடினார்கள்.

''அம்மா...'' என்று கத்திக் கொண்டு சரசு எழுந்தாள்.

''அடியே... நீ அங்கியே இருடி...'' கும்பலில் ஒரு பெண் இவளிடம் பேயாய்க் கத்திவிட்டு வீட்டிற்குள் ஓடினாள்.

சரசு அப்படியே நின்றாள். கண்ணில் நீர் பொங்கிப் பொங்கி வந்தது. தலையை நீட்டி எட்டி எட்டிப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. அது நீண்டு கிடக்கிற அக்ரஹாரத்து வீடு.

அம்மாவின் ஓலம் நன்றாய்க் கேட்டது.

சரசு இங்கிருந்தபடி அம்மா சொல்லிக் கொடுத்துவிட்டுப் போன ராமா... ராமா... வைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

யாரும் கொல்லைப்புறத்தில் இல்லை. கும்பலாய் அழுகிற சப்தம் மட்டும் கேட்டது.

நேரம் போகப் போக புதிதாய் நிறைய பேர்கள் வந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் ஒருமுறை சரசுவை வந்து பார்த்துப் போனார்கள்.

''இது உக்காரதுக்கு நேரம் காலம் கெடக்கலியா...''

''அப்பன வாயில போட்டுட்டுன்னா உக்காந் துருக்கு...''

சரசு ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு 'ராமா...ராமா...' சொல்லி கண்களை மூடிக் கொண்டாள்.

துணி மாற்ற வேண்டும். அம்மா வர மாட்டாள். அசெளகர்யமாய் இருந்தது. வேறு யாரையும் கூப்பிட்டுச் சொல்லவும் கூச்சமாய் இருந்தது. ரொம்ப சோர்வாய் இருந்தது. பசித்தது. அப்பா இறந்து போயிருக்கிறார். இப்பொழுது பசிக்கலாமா...?

அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. யாரிடம் சொல்வது?

ரொம்ப நேரம் கழித்து தம்பியும் தங்கையும் கொல்லைப்பக்கம் வந்தார்கள்.

''அப்பா உள்ள இருக்கற மூலையில, நீ இந்த மூலையில...'' தங்கை தனக்குத் தோன்றியதைச் சொல்லி வைத்தாள்.

''ஏய் அம்மு அப்படிச் சொல்லக்கூடாது... அப்பா சாமியாயிட்டார் இல்லக்கா...''

தம்பி பேசினான்.

''ஐயோ அங்க பாரு இந்த பசங்கள! கிட்ட நின்னுக்கிட்டு...'' என்றபடி சரசுவைச் சுற்றி நின்ற இருவரையும் யாரோ பிடித்து வீட்டிற்குள் தள்ளி விட்டார்கள்.

இரவு முழுக்க அழுதாள். பயமாயிருந்தது. வயிற்றுவலி வேறு. துணை என்ற பெயரில் கொஞ்சம் தள்ளி ஒரு கிழவி வாய் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

அப்பா நடந்து வருகிற மாதிரி இருந்தது. நெருங்க நெருங்க பயமாய் இருந்தது. அப்பாதானே ஏன் பயப்படணும்... அப்பா செத்துப் போய்விட்டார்.
ராமா...ராமா...என்று முனக ஆரம்பித்தாள்.

அம்மாவிடம் போய் ஒட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

விடியலில் யாரோ ''இந்த கண்ராவியைப் பாரு...'' என்று கத்த சரசு விழித்தாள்.

ஒரு நிமிஷம் ஒன்றும் புரியவில்லை. தன்னை சுற்றிலும் பார்த்துவிட்டு குன்றிப் போனாள். அவமானமாய் இருந்தது. இரண்டு பெண்கள் சுத்தம் செய்ய வசை பாடியபடி உதவினார்கள்.

சரசு வாய் திறக்கவில்லை.

உள்ளே அழுகிற ஓலம் கேட்டது. அப்பாவைப் பார்க்கணும்... அப்பாவைப் பார்க்கணும்... யாரிடமும் வாய் திறந்து சொல்லவில்லை. யார் வருகிறார்கள். என்ன செய்கிறார்கள்... எதுவும் அவளை பாதிக்கவில்லை.

அப்பாவைக் குளிப்பாட்டினார்கள்.

கண்களை மூடிக் கொண்டாள்.

புதுசாய் துணி சுற்றித் தூக்கினார்கள்.

''ராமா... ராமா...'' என்றாள்.

அப்பா புறப்பட்டார்.

அம்மா அலறினாள்.

இவள் ராமா...ராமா.. என்று உச்சத்துக்குப் போனாள்.

அதன் பிறகு வாழ்க்கை மாறிவிட்டது. படிப்புக்குப் படிந்துபோக முடியவில்லை.

படித்தது போதும் என்று அம்மா சொல்லிவிட்டாள். சமைத்துவிட்டு, நீண்ட வீட்டில் தனியாய் இருந்தாள். அம்மா ஸ்கூலுக்குப் போகும்போது வீடு பூட்டி சாவி எடுத்துப் போனாள். அம்மா ஸ்கூலில்தான் தம்பி தங்கை படிப்பு... மதியம் மூவரும் சேர்ந்து வருவார்கள். சாப்பாடு முடிந்து ஸ்கூலுக்குப் போகும்போது வீடு பூட்டப்படும். உள்ளே தனியாய் சரசு இங்கும் அங்கும் நடந்தாள்.

சும்மா உட்கார முடியவில்லை. படுத்தால் தூக்கம் வருவதில்லை. தூக்கம் வந்தால் கனவில் வருகிற உருவங்களுக்குப் பயந்தே தூங்க முடிவதில்லை. பயம்...பயம்... நின்றால் பயம். உட்கார்ந்தால் பயம். தன் நிழல் பார்த்து பயம். அடுப்பை ஊதும் பொழுது எழுகிற ஒலி கேட்டு பயம். இந்த அறையில் பயம் என்றால் அடுத்த அறை. அங்கும் பயம் என்றால் அடுத்தது. அடுத்தது, கொல்லைப்புறம் அடுத்தது கிணற்றடி... திடுமென கிணற்றை எட்டிப் பார்த்து பயந்துபோய் விர்ரென்று வாசலுக்கு ஓடுவாள்.

''அம்மா எனக்கு ரொம்ப பயமாய் இருக்கும்மா...''

''அதுக்குன்னு வீட்டைத் திறந்து போட்டுட்டுப் போகச் சொல்றியா...ஆளில்லாத வீடுன்னு எவனாவது புகுந்து என்னமும் பண்ணிட்டா...''

''சும்மா உக்காந்துருக்க முடியலம்மா...''

''அதா உக்காந்தயே வீட்டையே நாசம் பண்ணிட்டு...''

''ராமா...ராமா...''

அம்மாவைத்தான் சரசுவுக்கு ரொம்ப பிடிக்கும். அம்மாவின் இந்த வார்த்தைக்குப் பிறகு அம்மாவிடம் இருந்தும் ஒதுங்கினாள். தன் பதினைந்தாவது வயதில் சுத்தமாய் அம்மாவை ஒதுக்கி விட்டாள்.

அது ஏன் நடந்திருக்க வேண்டும்? அதுவும் இவள் கண்களில் படும்படி...

அன்று சாப்பிட வரும்போது கூடவே ஒரு நபர்.

தம்பி தங்கை ஸ்கூலுக்குப் போன பின்பும் அந்த நபரும் அம்மாவும் இருந்தார்கள். சரசு தூங்கப் போனாள்.

வந்தவர் இரண்டாவது சாப்பாடு சாப்பிட்டதுதான் பிடிக்கவில்லை. அம்மா பரிமாறுவதைப் பார்த்ததும் வியர்த்து ஊற்றியது. கை கால் எல்லாம் நடுங்கியது. பார்த்ததும் கண் மூடிக் கொண்டாள். ராமா...ராமா... என்றபடி அப்படியே நின்றாள் அகலிகை கல்லான மாதிரி.

அதன் பிறகு சரசு அம்மாவிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அம்மா எத்தனை கெஞ்சியும் பேச முடியவில்லை. அம்மா கண்களைச் சந்திக்க முடியவில்லை. அம்மா பக்கத்தில் வந்ததும் கண்களை மூடிக் கொள்வாள். உள்ளுக்குள் ராமா...ராமா... என்று அணிச்சையாய் ஓடும்.

அப்புறம் எல்லார்க்கும் இவள் விசித்திரமாய்ப் பட்டாள். ஒதுங்கிப் போனார்கள். அம்மா மட்டும் எப்பொழுதும் இவள் பார்வைக்காய் ஏங்குகிற மாதிரித் திரிந்தாள். சாகும்வரை அப்படித்தான் திரிந்தாள்.

அம்மா இறந்த கொஞ்ச நாளில் தங்கை காதல் திருமணம் செய்து கொண்டு போனாள். அதுபற்றி அவளுக்கு எந்தவித அபிப்ராயமும் இருக்கவில்லை.

தம்பி சம்பாதித்துப் போட, சமைத்துப் போட்டாள். உயிர்வாழ மட்டுமே சாப்பிட்டாள் என்றபடி இருந்தாள்.

சரசுவின் இருபத்தியேழாவது வயதில் தம்பி நந்தகுமாரைப் பிடித்து அவளுக்குக் கட்டி வைத்தான். எப்படி தங்கை கல்யாணத்தில் எந்தவித அபிப்ராயமும் இருக்கவில்லையோ அது மாதிரி தன் கல்யாணத்திலும் எந்தவித அபிப்ராயமும் இவளிடம் இருக்கவில்லை.

கல்யாணத்திற்குப் பிறகு ஊர் மாறியிருந்தது. வீடு மாறியிருந்தது. சம்பாதித்துப் போடுகிற நபர் மாறியிருந்தது. இங்கே தாலி கட்டியவன். அங்கே தம்பி... வித்தியாசம் தெரியவில்லை. தெரியவும் விருப்பமில்லை. தாலி கட்டியவன் சம்பாதித்துப் போடுவதோடு நின்றிருந்தால் நிம்மதியாய் இருந்திருக்கும். இரவு ஹிம்சையாய் இருக்கிறது. சம்பாதித்துப் போடுபவன் வந்து தொடும் போதெல்லாம், அன்று வீட்டிற்கு வந்து யாரோ இரண்டாவது சாப்பாடு சாப்பிட்டதுதான் நினைவுக்கு வருகிறது. வியர்த்து ஊற்றுகிறது. கை கால் எல்லாம் நடுங்குகிறது. அப்படியே கிடக்கிறாள் கல்லான மாதிரி.

''எனக்கு இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.''

முதல் முறையாய் அவளது வேண்டாம் என்கிற வேண்டுதலே நிறைவேறிப் போனது. ஓர் அதிகாலைப் பொழுதில் சரசு தண்ணீர் எடுக்கிறேன் பேர்வழி என்று நீர்குடத்தோடு படிகளில் இடறிக் கொண்டாள். கால் அகற்றி விழுந்து வயிறு பிடித்துக் கொண்டு அவஸ்தையில் அலறினாள்.

கொட்டிய நீரோடு சிசு கலந்து போனது.

அதன் பிறகு சரசு மூன்று வருடங்களுக்குப் பிறகு முழுசாய்ப் பத்துமாதம் சுமந்திருக்கிறாள். இனி பாரம் இறக்க வேண்டும். அதற்குள் இத்தனை ரகளை... நர்ஸ் கை கடித்து, அடம் பிடித்து, இவனை எட்டித் தள்ளிவிட்டு...

''என்னைக் கொன்னுடுங்க டாக்டர்... எனக்கு ஒண்ணும் வேணாம்...''

பார்க்க வந்த லேடி டாக்டரிடம் பேயாய்க் கத்தினாள்.

''சரசு...'' இவன் அடக்கினான்.

''நீங்க அமைதியா இருங்க...'' டாக்டரம்மா இவனைப் பார்த்துச் சொன்னாள்.

வெளியில் வந்தாள்.

தனக்கு ஏன் இப்படி வாய்த்தது... அல்லாடினான்.

டாக்டரம்மா வெளியில் வந்ததும் இவனைப் பார்த்து முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டாள்.

''நீங்க எல்லாம் என்ன புருஷ ஜென்மங்கள்! குழந்தை சரியான நிலையில் இல்ல... ஒழுங்கா வைஃப்ப கவனிக்க முடியாதா என்ன....இது சீரியஸ் கேஸ் ஆப்ரேஷன் பண்ணித்தான் குழந்தையை வெளிய எடுக்கணும். இந்த ஃபாம்ல ஒரு கையெழுத்துப் போடுங்க...''

போட்டான்.

டாக்டரம்மா விருட்டென்று நகர்ந்தாள்.

''நீங்கள்ளா என்ன புருஷ ஜென்மங்கள்...''

நடு ரோட்டில் நிற்க வைத்து சவுக்கால விளாசிய மாதிரி இருந்தது.

''ஒழுங்கா வைஃப்ப கவனிக்க முடியாதா என்ன...?''

கவனித்தான். சகலமுமாய் இருந்தான். துணி துவைத்தான். சிலிண்டர் காது திருகி அடுப்பு பற்ற வைத்தான். காபியோடு சரசுவின் விழிக்கிற கண்களுக்குத் தரிசனம் கொடுத்தான். இது காலை. இது மதியம் என்று மருந்து அடுக்கி மறக்காமல் சாப்பிடச் சொன்னான்.

அவள் சாப்பிட்டால்தானே... அவளுக்கு ராமா...ராமா... என்று சொல்லவே நேரம் போதவில்லை.

''உங்க வைஃப்புக்கு ஆயுசு தீர்க்கம்....''

ஆப்ரேஷன் முடித்து வெளியில் வந்த டாக்டரம்மா சொல்லி விட்டு தன் அறைக்குப் போனாள்.

குழப்பமாய் இருந்தது. பின்னால் போனான்.

அறையில் டாக்டரம்மா இருக்கை காட்டினாள்.

''ஸாரி குழந்தை உள்ளேயே இறந்து போயிருந்துச்சு...''

பச்சென்று உச்சந்தலையில் ஒரு அடி....

''உங்க மனைவி கிடைச்சதுக்காக சந்தோஷப்படுங்க...''

மருண்டு போய் உட்கார்ந்திருந்தான்.

''உங்க மனைவி பற்றி சிலது கேட்கலாமா....இங்க அட்மிட் பண்ணதுல இருந்து பாக்கறேன். உங்க மனைவி ரொம்ப விசித்திரமாய் இருக்காங்க... ஒரு முறை கூட நீங்க ரெண்டு பேரும் அன்பா அமைதியா பேசி நா பாக்கல...''

தலை குனிந்தான்.

''உங்க மனைவிக்குப் பிடிச்சது எது...?''

சத்யமாய் தெரியாது.

''இன்ஞ்செக்ஷன் போட்டுட்டு ஒன் டூ திரீ சொல்லச் சொன்னா ராமா ராமங்கறாங்க. சொல்லுங்க உங்க மனைவிக்குப் பிடிச்சது எது? பிடிக்காதது எது?''

''தெரியாது.''

''உங்க அந்தரங்க வாழ்க்கை திருப்திதானா ரெண்டு பேருக்கும்...''

இந்த நான்கு வருடத்தில் கூடியதை இவனால் விரல் விட்டு எண்ண முடியும். ஐயோ அதுகூடவா எப்பொழுதாவது தன் புத்தியை மீறி முரட்டுத்தனம் வெளிப்படும். நிறைய முறை நெருங்கி அவள் கல்லானது கண்டு மனம் நசுங்கிப் பின் வாங்கியிருக்கிறான்.

சொன்னான்.

''மை காட்...'' டாக்டரம்மா வாய் பிளந்தாள்.

''என்ன காரணம்...''

''தெரியாது...''

''நல்ல மனோதத்துவ டாக்டர்கிட்ட கூட்டிப் போங்க... எனி ஹவ் அவங்க இனி ப்ரகணன்ட் ஆகறது நல்லதில்ல முடிஞ்சவரை அன்பா இருந்து உங்க மனைவிக்கு உங்க மேல நம்பிக்கை வர்ர மாதிரி நடந்துக்குங்க...''

அமைதியாய் இருந்தான். பிறகு மெதுவாய் தயங்கிக் கேட்டான்.

''எனக்கு என் குழந்தையைப் பார்க்கணும்'' டாக்டரம்மா கூட்டிப் போனாள்.

துணி சுற்றி இருந்தது.

என் ஜீன்...

என் ரத்தம்...

என் குழந்தை...

முகம் பொத்திக் கொண்டு அழுதான்.

சரசு மயக்கம் தெளிந்து பார்த்தாள்.

''என்னால தான உனக்கு இத்தனை கஷ்டம். இனி உன்னை கஷ்டப்படுத்தவே மாட்டேன்...''

அவள் காதோடு சொன்னான். கைகளைப் பற்றிக் கொண்டான். முதல் முறையாய் அவள் இவன் பிடிக்குள் முரண்டாமல் அடங்கினாள்.

சரசுவை இவன் உள்ளுக்குள் கருக் கொண்டான்.

ரோகாந்த்
More

மனம் மாறியது
ரேடியோ
Share: 
© Copyright 2020 Tamilonline