|
இன்தாம்.காம் |
|
- |மார்ச் 2003| |
|
|
|
1,40,000 பக்கங்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தகவல்களைக் கொட்டிச் சுமந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய இணைய தளம் 'இன்தாம்.காம்'.(உலகத் தமிழர் தன்முனைப்பு இயக்கம்).
தமிழில் வெளியாகும் முதல் இணைய வணிக இதழ் (மாதம் இருமுறை) இதுதான். உலகின் ஆறுகண்டங்களில் ஒன்பது கோடி தமிழர்கள் வாழ்ந்தும் உலக அரங்கில் வலிமை பெற்ற இனமாக நம்மால் அங்கீகாரம் பெறமுடியவில்லை. அதற்குக் காரணம் நம்மிடத்தில் பொருளாதார வலிமைபெற்றோர் மிகக் குறைவாக இருப்பதுதான். உலக அரங்கில் வலிமை மிக்க இனமாக நாம் மீட்சி பெறுவதற்குப் பொருளாதார வளர்ச்சியே சிறந்த அடித்தளம். உலகெங்கும் நடைபெறும் தமிழர்களின் வணிகங்களையும், தொழில் வல்லுநர்களையும் அடையாளம் கண்டு ஒருவருக்கொருவர் தெடர்பு கொள்ள இணையத்தில் (இன்டர்நெட்) உலகத் தமிழர் வணிகர் தொழில் நெறிஞர் தகவல் களஞ்சியத்தை அமைக்கும் நோக்கத்துடன் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டது. இந்தத் தளத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மலேசியாவைச் சேர்ந்த 'தன்னம்பிக்கை பாலசுப்பிரமணியம். தமிழ்நாட்டில், இந்த தளத்தின் ஒருங்கிணைப்பாளராக பேரா.இ.ஜே.சுந்தரும், விண்ணோசை மற்றும் ஒளியோவியம் பகுதிகளின் ஆசிரியராக சா.அ.செளரிராசனும் செயல்படுகிறார்கள்.
இந்தத் தளத்தில் 'விண்ணோசை' என்ற பெயரில் 24 மணி நேர இணைய தமிழ் செய்திகள் முதன்மையாக இடம் பெற்றுள்ளன. இந்தப் பகுதியில் சிங்கப்பூர், மலேசியா, ஈழம், மற்றும் சென்னை சாந்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. இவைதவிர, விளையாட்டுச் செய்திகள், காலநிலை அறிக்கை மற்றும் வணிகச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இதைத்தெடர்ந்து 'ஒளியோவியம்' என்ற பெயரில் சினிமா தொடர்பான சகல செய்திகளும் இந்தத் தளத்தில் அடக்கம். அடுத்து 'வானவில்' என்ற பெயரில் இலக்கியம் சார்ந்த தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. எழுத்தாளர்களின் நேர்காணல், அவர்களின் படைப்புகள், இலக்கிய விழாக்கள் குறித்த செய்திகள், பிரபல எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு, போன்றவை இந்தப் பகுதியில் இடம் பிடித்துள்ளன. இவைகளைத் தவிர ஓவியர்களுக்கும், சிற்பிகளுக்கும் கூட இந்தப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் தமிழர்களை உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு செயல்படத் தொடங்கிய இந்த இணையதளத்தின் ஒரு பிரிவாகச் செயல்படுவதுதான் 'பதிப்பகத் திட்டம்'. உலக மெங்கும் பதிப்பிக்கப்படுகிற தமிழ் நூல்களையும், தமிழ் தமிழர் தொடர்பான பிறமொழி நூல்களையும் உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட பகுதி இது. இப்பதிப்பகத்திட்டத்தில் உலகமெங்கும் உள்ள ஒவ்வொரு தமிழ்பதிப்பகங்கள் பற்றிய தகவல்களும் (ஆங்கில அகர வரிசையில்),அதன் நூல் விலைப்பட்டியலும், கட்டணமின்றி வெளியிடப் படுகின்றன. இத்துடன் ஒவ்வொரு பதிப்புகத்துக்கும், ஓர் இணையபரப்பு, அதற்கான இணைய முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவையும் கட்டணமின்றியே வழங்கப்படுகின்றன. உங்களுக்குத் தேவையான நூல்கள் குறித்த விவரங்களையும் இந்தப்பகுதியின் மூலம் இன்தாம் தளத்துக்கு அனுப்பி தகவல் பெறலாம். |
|
அடுத்து உள்ள மிகமுக்கியமான பகுதிதான் இந்தத் தளத்தின் நாடித்துடிப்பு-இணைய வணிகம். வணிகம் தொடர்பான சகல செய்திகளையும் அடக்கிக் கொண்டு வணிகக் கடலாக மாதமிருமுறை அலையடிக்கிறது இந்தப் பகுதி. நடைமுறை வணிகச் செய்திகள், புதிதாக சந்தையில் களமிறங்கியிருக்கும் பொருட்கள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியிலிருந்து பெறலாம்.
இந்த நான்கும் இந்தத் தளத்தின் பிரதான பகுதிகளாக இருந்தாலும், இவை தவிர, தமிழ் மற்றும் தமிழர்கள் தொடர்பான வெவ்வெறு தகவல்களும் இந்தத் தளத்தில் கிடைக்கின்றன. உதாரணமாக, உலகின் எந்நெந்த நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள், அவர்கள் அங்கு சென்றுகுடியேறிய வரலாறு, அவர்களின் தற்போதைய நிலை, தமிழர்களின் பண்பாடு, கலை, கல்வி, சமயம், இலக்கியம்,மொழி,வரலாறு,இலக்கணம், வணிகம், தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத்தளங்கள்,கோயில்கள், தாது வளம், தமிழர்களின் அறிவியல், தொழில் நுட்பம்,தமிழ் மருத்துவம், தமிழ் சினிமா,தமிழ் மற்றும் தமிழர்களின் அமைப்புகள் போன்ற அனைத்து விதமான செய்திகளும் இந்தத் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்கள், அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் தமிழைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் பல்வேறு சுவாரசியமான விஷயங்ளைத் தெரிந்துகொள்ள இந்தத் தளத்தில் மேயலாம். புத்தகப் பிரியர்களுக்கு இந்தத்தளமே ஒரு சிறந்த 'என்சைக்கிளோபேடியா'. மேலும், வணிகத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு நிச்சயம் இந்தத் தளம் ஒரு வரப்பிரசாதம்தான்.
உலகம் முழுவதும் நன்மணிகளாய் சிதறிக் கிடக்கும் தமிழினத்தின் தலைவர்களையும், அறிஞர்களையும், தொழில் வல்லுநர்களையும், பொருளாதார வலிமை மிக்கோரையும் ஒருங்கிணைத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங் களைச் செயல்படுத்த வேண்டும். உலகில் எங்கெல்லாம் வளர்ச்சிக்குரிய விஞ்ஞானத் தொழில் நுட்பங்கள் இருக்கின்றனவோ அவற்றை தமிழினத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும். பொருளாதார வளம் மிக்க தமிழர் களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். அறிவாளிகளும், உழைப்பாளி களும் நிறைந்த சமூகம் தமிழருடையது. தமிழர் மனம் வைத்து ஒன்றுபட்டு திட்டமிட்டு உழைத்தால், ஒரு வலிமைமிக்க இனமாக எழுமுடியும். |
|
|
|
|
|
|
|