Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
போர் முடிந்து விட்டது!
- மணி மு.மணிவண்ணன்|மே 2003|
Share:
ஒரு வழியாகப் போர் முடிந்து விட்டது. மனிதன் பாதி, எந்திரம் பாதி கலந்து செய்த கலவைப் படையின் முன்னர் வெறும் மனிதர்கள் எம்மாத்திரம்! "கொடுங்கோலன் வீழ்ந்தான்" என்பதில் ஈராக்கி மக்களோடு சேர்ந்து நாமும் பெருமூச்சு விடுகிறோம். பேரழிவு ஆயுதங்களைத் தேடிக் கண்டு பிடிப்போம் என்று வீராப்பாகத் தொடுத்த போரில் கூட்டணி வெற்றி பெற்றாயிற்று. மனித வடிவில் இருக்கும் மிருகம் என்று கூட்டணி சொல்லும் சத்தாம் ஹ¤சைன், தன் தலையே போனாலும், பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தாக்க மாட்டேன் என்று கையைக் கட்டிக் கொண்டிருந்தது ஏனோ? பேரழிவு ஆயுதங்களைத் தேடித் தேடிக் களைத்துப் போன கூட்டணி, ஐ.நா.வின் உதவி வேண்டாம் என்று மறுத்து விட்டது. தன் மனைவியைக் கொன்றவனைக் கண்டு பிடித்தே தீருவேன் என்று ஒவ்வொரு கோல்·ப் மைதானத்திலும் கொலைகாரனைத் தேடிக் கொண்டிருக்கும் ஓ. ஜே. சிம்சனை, இப்படியே பேரழிவு ஆயுதங் களையும் தேடு என்று ஈராக்குக்கு அனுப்பலாம்.

போருக்குப் பின் விளைந்த குழப்பத்தில், நாகரீகத்தின் தொட்டில் என்று போற்றப்படும் நாட்டின் ஒப்பற்ற தொல்பொருள் காட்சி நிலையத்தை, எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று சூறையாடி இருக்கிறார்கள் சில கயவர்கள். எண்ணெய் அமைச்சகத்துக்குப் பாதுகாப்பளித்த அமெரிக்கக் கூட்டணிப்படை சூறையாடலைத் தடுக்க வில்லை என்கிறது செய்தி. அலெக்சாண் டிரியா நூலகத்தைச் சூறையாடிய காட்டு மிராண்டித்தனமான செயலுக்கு இணை யானது இது என்று கண்டித்திருக்கிறார்கள் உலக அறிஞர்கள்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கடந்த 111 ஆண்டுகளாக கீழ்த்திசை ஆய்வுநூல் தொடர் (Harvard Oriental Series) என்று 61 ஆய்வு நூல்களை வெளியிட்டிருக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவின் தொன்மையான சமஸ்கிருதம் பற்றிய நூல்களே. முதன் முறையாக இந்த வரிசையில் தமிழ் பற்றிய நூல் ஒன்றை இந்தத் தமிழ்ப் புத்தாண்டன்று வெளியிட்டிருக்கிறது. இதுதான் திரு. ஐராவதம் மகாதேவனின் பண்டைத் தமிழ்க் கல்வெட்டு எழுத்துகள்" (Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D.) என்ற நூல். அறிஞர் ஐராவதம் மகா தேவன் கடந்த நாற்பத்தோராண்டுகளில் தமிழ்நாடு எங்கும் அலைந்து திரட்டிய களப்பணி ஆய்வுக் குறிப்புகளின் அடிப்படையில் அமைந்தது இந்த நூல். இந்தக் குறிப்புகளைத் திரட்டி நூலாக அமைக்கக் கடந்த ஏழு ஆண்டுகளாக இரவும் பகலும் உழைத்திருக்கிறார். சிந்து சமவெளி எழுத்துகளைப் பற்றிய இவர் கொள்கைகளும் உலக அறிஞர்களால் பாராட்டப்பட்டவை.

தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் பழமையான கல்வெட்டுக் காலம் முதல் (கி. மு. 3ம் நூற்றாண்டு), கி. பி. 6ம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகள், பானை ஓடுகளில் வரிவடிவங்களில் தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியை இந்த நூலில் விவரிக்கிறார். இந்த நூலின் சில முடிவுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. பௌத்த, சமணத் துறவிகள் வழியாக மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திய பிராமி எழுத்துகள் தமிழகத்துக்கு வந்தன என்கிறார் இவர். பிராகிருத மொழிக்கு உருவாக்கப்பட்ட பிராமி எழுத்துகளைத் தமிழின் தன்மைக்கேற்ப தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னொரு முடிவு புரட்சிகரமானது என்கிறார் பேரா. வ. செ. குழந்தைசாமி. கி.மு. 3ம் நூற்றாண்டில் இருந்து தமிழ் நாடெங்கும் கிடைக்கும் பானை ஓட்டுக் கீறல்களில் தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. இவை சின்னஞ்சிறு ஊர்களிலும், எல்லா வகையான தொழில் செய்த மக்கள் வாழ்ந்த இடங்களிலும் கிடைத்திருக்கின்றன. இதனால், அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்த தமிழர்களிடையே எழுத்தறிவு, சமூக வேறுபாடுகள் இல்லாமல், பரவலாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், இந்தக் காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் வேறு எங்கும் இது போன்ற மக்கள் மொழியில் பரவலான கல்வெட்டுகளோ, பானை ஓட்டுக் கீறல்களோ இல்லை என்கிறார்.
பேச்சு மொழியில் இருந்து எழுத்துக்கு மாறிய காலத்தில் ஒரு சமதர்மச் சமுதாயமாகத் தமிழகம் இருந்ததற்குச் சங்க இலக்கியத்தையும் ஆதாரம் காட்டுகிறார் ஆசிரியர். சங்கப் புலவர்களில் மன்னர்கள், வணிகர்கள், கைத்தொழில் வினைஞர்கள், பாணர்கள், பெண்பாற் புலவர்கள் இருப்பதை ஏற்கனவே பல தமிழறிஞர்கள் குறிப்பிட்டு வியந்திருக்கிறார்கள். இப்படிப் பரவலாக எழுத்தறிவு பெற்ற சமதர்மச் சமுதாயம் அதன் சம காலத்தில் வேறெங்கும் இல்லை என்பது வியக்கத்தக்க செய்தி. பாரதத்தின் பழம் பெருமை கங்கை, சிந்து நதிக் கரைகளில் மட்டும் இல்லை, காவிரிக் கரையிலும் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்து தென்னக ஆய்வுகளுக்குப் பாரத அரசு உதவ வேண்டும் என்ற பேரா. வ. செ. குழந்தைசாமியின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூலைப் பதிப்பிக்க நிதி திரட்ட முனைந்தார் ஹார்வர்ட் பேராசிரியர் உவிட்சல். முதன்முதலாக தமிழ் பற்றிய நூலை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் பதிப்பிக்க உதவிபுரிய சிலிகன் வேல்லியில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த தமிழர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தார் பேரா. உவிட்சல். நண்பரும் தமிழறிஞருமான முனைவர் சு. பழனியப்பன் துணையை நாடி என்னோடு தொடர்பு கொண்டார். இந்த நூலின் சிறப்பைப் பற்றிச் சரியாக விளக்கி நிதி திரட்ட எங்களுக்குத் தெரியவில்லையோ என்னவோ, சிலிக்கன் வேல்லி செல்வந்தர் கள் இதில் ஈடுபாடு காட்டவில்லை. முயற்சியில் சற்றும் தளராத தமிழார்வலர்கள் சிலர் நாமே இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி செய்வோம் என்று உறுதி பூண்டோம். தொழிலதிபர் பால் பாண்டியன், அட்லாண்டாவின் பெரியண்ணன் சந்திரசேகரன், ஹ¥ஸ்டனின் கரு. மலர்ச்செல்வனோடு நானும் இணைந்தேன். நான் அப்போது வேலை பார்த்த 3காம் (3Com) நிறுவனம் சமக்கொடை (matching gift) வழங்கியது.

சிலிகன் வேல்லி தமிழர்கள் அனைவர் சார்பில் சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் கொடை வழங்கலாமே என்று அப்போதைய தமிழ் மன்றத் தலைவர் திரு. கணேஷ்பாபு அவர்களிடம் வேண்டினேன். "கண்டிப்பாகச் செய்வோம்" என்றார் அவர். மன்றத்தின் செயற்குழுவும் அவரை முழு மனதுடன் ஆதரித்தது. வளைகுடாப் பகுதியின் தில்லானா இசைக்குழு வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சியில் "உதவும் கரங்கள்" மற்றும் ஹார்வர்ட் தமிழ் நூல் திட்டத்துக்கு நிதி திரட்டினார்கள். பேரா. உவிட்சலும், திரு. ஐராவதம் மகாதேவனும் எனக்கு அனுப்பிய தனிக் கடிதங்களில் நூல் பதிப்பிக்க உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். இது போன்ற மிக அபூர்வமான ஆராய்ச்சி நூல் வெளிவர உதவி செய்யும் வாய்ப்பு கிட்டியதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

மணி மு. மணிவண்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline