தமிழா! உலாவி தொகுப்பு ஒரு அறிமுகம்
|
|
தமிழ் சொல் திருத்தி |
|
- உமர்|மே 2003| |
|
|
|
தமிழில் சொல் தொகுப்பிகள் நிறைய வந்துவிட்டாலும் சொல் திருத்தி அதிகம் வந்ததாகக் காணோம். இதற்குத் தலையாய காரணங்கள் இரண்டு. ஒன்று தமிழ் சொற்கள் எழுதும் முறையும், இரண்டாவதாகச் சொல் பட்டியல் ஆங்கிலம் அல்லது மற்ற மொழியில் உள்ளது போல் மின் வடிவில் இல்லாததும்தான். இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் வோர்ட் தொகுப்பியோடு பயன்படுத்தும் வண்ணம் ஒரு சொல் திருத்தியை அமைத்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தச் சொல் திருத்தி.
இந்தச் சொல் திருத்தியைத் துவக்கும்போது முதலில் வோர்ட் தொகுப்பிப் படிவம் ஒன்று திரையில் உள்ளதா என்று சோதிக்கும். இல்லை என்றால் ஓர் அறிவிப்புத் தந்துவிட்டுத் தொடங்கும். வோர்ட் தொகுப்பிப் படிவம் ஒன்று திரையில் இருந்து, நீங்கள் சொல் திருத்த விரும்பும் பகுதி (அந்தப் பகுதியைத் தேர்வு - highlight செய்ய வேண்டும்) TSCII எழுத்துருவில் இல்லாதிருந்தால் மீண்டும் ஓர் அறிவிப்பு தந்துவிட்டுத் தொடரும். எழுத்துரு TSCII இலும் இருந்து தேர்வும் செய்யப் பட்டிருந்தால் சொல் திருத்தியைத் தொடங்கும்போதே அப்பகுதி திருத்தியினுள் கொண்டுவரப்பட்டுவிடும்.
முன்பே எப்பகுதியும் தேர்வு செய்யப்படாதிருந்தால் வேண்டியதைத் தேர்வு செய்தபின் "Get from MS-Word" என்ற பொத்தானை அழுத்தித் தேர்வு செய்யப்பட்ட பகுதியை வோர்ட் தொகுப்பியிலிருந்து சொல்திருத்திக்குக் கொண்டுவரலாம். "Set to MS-Word" என்ற பொத்தான் சொல் திருத்தியபின் மீண்டும் வோர்ட் தொகுப்பிக்கு அனுப்ப உதவுகிறது.
வேறு சொல்தொகுப்பியை நீங்கள் பயன்படுத்தினால் அவற்றிலிருந்து வெட்டி ஒட்டியும் சொல் திருத்தலாம். வோர்ட் தொகுப்பி பயன்படுத்தும்போது எந்தத் தமிழ் எழுத்துரு பயன்படுத்துகிறீர்களோ (உ-ம்: TSC_AvarangaL, TSCu_Inaimathi) அதே எழுத்துரு சொல் திருத்தியிலும் அமைக்கப் பட்டுவிடும். வேறு தொகுப்பிகளிலிருந்து வெட்டி ஒட்டும்போது TSCII எழுத்துருவைத் தேர்வுச் செய்ய வேண்டி இருப்பதால் "Font" பொத்தான் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.
சொல் திருத்தம் செய்யும்போது, திருத்தப்படும் சொல் அகராதியில் இல்லாதிருந்தால் அச்சொல் சிவப்பு வண்ணத்தில் காட்டப்படும். அச்சொல்லுக்கு மாற்றாக ஏதும் சொற் பட்டியலில் கிடைக்கப் பெற்றால் அவை "Suggestion" பகுதியில் காட்டப்படும். இந்நிலையில் நீங்கள் மூன்று வகையான செயல்களில் ஏதாவதொன்றைச் செய்யலாம்.
முதலாவதாக Suggestion பெட்டியில் காட்டப்பட்டவற்றிலிருந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்து “Replace” பொத்தனை அழுத்தி பிழையான சொல்லைத் திருத்திக் கொள்ளலாம். இரண்டாவதாக, சிவப்பு வண்ணத்தில் காட்டப்படும் சொல் சரியானது என்றும் திருத்தியின் மூல அகராதியில்(main dictionary) அச்சொல் இல்லை என்றும் நீங்கள் கருதினால் “Add to Dict.” என்ற பொத்தனை அழுத்தி உங்கள் பிரத்தியேகமான (custom dictionary) அகராதிப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இனி அதே சொல் அப்படிவத்தில் மீண்டும் காணப்பட்டால் சரியானதாகக் கருதப்படும். மூன்றாவதாக, அச்சொல் அந்தப் படிவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பிரத்தியேகச் சொல்லாக (எடுத்துக் காட்டாக ஒருவரின் பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயர்) இருந்தால் “Ignore” பொத்தானை அழுத்தி, சொல் திருத்தத்திலிருந்து விலக்களித்து விடலாம். அச்சொல் உங்கள் பிரத்தியேக அகராதியில் சேர்க்கப்படாது. இனி அந்தச் சொல் மீண்டும் அதே படிவத்தில் இடம் பெற்றிருந்தால் மறுபடியும் சோதிக்கப்படாது. இவ்வாறு புதிதாச் சேர்க்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சொற்கள், சொல் திருத்தியின் வலது பக்கத்தில் பட்டியலிட்டுக் காட்டப்படும். இந்தப் பட்டியலில், சொல் திருத்தி ஒவ்வொரு முறை திறக்கப் படும்போதும் அப்போதைக்குச் சேர்க்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் சொற்கள் மட்டுமே பட்டியலிட்டுக் காட்டப்படும். இது ஒரு தகவலுக்காக மட்டுமே. |
|
இந்தச் சொல் திருத்தி ஒரு சோதனை நிலையில்தான் இருக்கிறது. மூல அகராதியில் (main dictionary) சில நூறு சொற்களே இடப்பட்டிருக்கின்றன. இதைச் சோதிக்கும் அனைவரிடமும் வேண்டப்படுவது சொல் தொகுப்புதான். நீங்கள் சோதிக்கும்போது சேர்க்கப்படும் சொற்கள் சொல்திருத்தி இருக்கும் இடத்திலேயே (same folder) CustDict.txt என்ற கோப்பில் சேமிக்கப்படுகிறது. இதை எல்லோரிடமிருந்து சேகரித்து, தொகுத்து மூல அகராதியில் சேர்த்து எல்லோருக்கும் தந்து விடலாம். ஒரே நேரத்தில் அதிகமான சொற்களைச் சேர்க்க விரும்பினால் இந்த CustDict.txt கோப்பை Notepad இல் திறந்து வரிக்கு ஒரு சொல்லாக (மேலிருந்து கீழ்) சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் சில தெரிந்த பிழைகள் (known bugs) இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சந்திப் பிழை. மேலும் மெருகூட்ட முயன்று வருகின்றேன்.
சோதனைகள் முடிவுற்றவுடன் எம்.எஸ்.வோர்ட் சொல் திருத்தியில் நேரடியாக இணைத்துப் (add in) பயன்படுத்தும் வகையில் இதைச் செய்து விடலாம். தனியாகச் சொல் திருத்தியை இயக்க வேண்டியிருக்காது.
நீங்கள் உங்கள் சோதனையில் கண்டவைகளை அறியத்தரவேண்டிய முகவரி: csd_one@ yahoo.com
உமர் |
|
|
More
தமிழா! உலாவி தொகுப்பு ஒரு அறிமுகம்
|
|
|
|
|
|
|