Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நேர்காணல்
நான் எப்போதும் தெருப்பாடகன் தான் - கவிஞர் மு.மேத்தா
விஸ்வநாதன் ஆனந்த்
- சேசி|பிப்ரவரி 2007|
Share:
Click Here Enlargeநம்மில் பலர் விளையாடும் சதுரங்க ஆட்டங்கள் முடிவடைவதே இல்லை. யோசித்து, யோசித்து நாம் காய் நகர்த்துவதற்குள் எதிராளி போரடித்துத் தூங்கியே போய்விடுவார்! பொழுதுபோக்காக நாம் சதுரங்கம் விளையாடும்போதே நிறைய யோசித்துத் தலைவலி வந்துவிடுகிறது! ஆனால், விஸ்வநாதன் ஆனந்த் கடினமான போட்டிகளில்கூட அனாயாசமாகவும், சில சமயம் அதிவேகமாகவும் விளையாடுவதைப் பார்த்து வியக்காமல் இருக்கமுடியாது. தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா உங்க நாயனத்தில மாத்திரம்தான் இந்தச் சத்தம் வருமா? என்று வியப்பாகக் கேட்பதைப்போல, விஸ்வநாதன் ஆனந்திடம் உங்க மூளைக்கு மட்டும்தான் இது எட்டுமா? என்று கேட்கவேண்டும் என்ற ஆசை பல நாட்களாக உண்டு.

மாஸ்கோவில் நடந்து முடிந்த மைக்கேல் டால் நினைவு அதிவேகச் சதுரங்கப் போட்டியில் கோப்பையை வென்று சென்னைக்கு வந்திருந்த அவரைத் தென்றலுக்காகத் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. விஸ்வநாதன் ஆனந்த் 1987-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது சதுரங்க உலகில் இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவரது வெற்றி பல இளைஞர்களுக்கு இந்த விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் களமிறங்கி வெற்றியும் பெற்று வருகின்றனர். அனாயாசமாகச் சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெறும் அதிசயச் சிறுவனாக இருந்து, தற்போது உலகிலேயே தலைசிறந்த சதுரங்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுவதோடு, பல இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் இருக்கிறார். தனது எண்ணங்கள், வெற்றிகள், வளர்ச்சி, அறிவுரைகள், சொந்த வாழ்க்கை என்று பல கருத்துக்களை, இதோ தென்றல் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

கே: சதுரங்கப் போட்டிகளுக்கு எப்படித் தயார் செய்து கொள்வீர்கள்? ஆட்டத்துக்கு முந்தைய இரவோ, அன்றைய காலையிலோ அவரது எண்ணங்களும், செயல்களும் என்னவாக இருக்கும்?

ப: போட்டிக்கு முன் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்பேன். இசையைக் கேட்பதோ, அல்லது லேசான உடற்பயிற்சி செய்வதோ உதவும். சில சமயங்களில் தியானம் செய்வதும் உண்டு. ஆனால் எல்லா நேரங்களிலும் மனதை அமைதியாக வைத்திருப்பது கடினம். காது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், ஏதாவது ஒரு புதிரைத் தீர்க்க முடியவில்லை என்றால் மனம் அதை நோக்கித்தான் செல்லும். இந்தத் தீவிரமான மன உளைச்சல்தான் அறிவைத் தீட்டித் தயார் செய்கிறது என்று நினைக்கின்றேன். ஆட்டத்துக்கு முதல் நாள் இரவும், அன்று காலையும் ஆட்டத்துக்கான குறிப்புகளைச் சரிபார்த்துக் கொள்வேன். ஆட்டம் இல்லாத நாட்களில் எந்த தேசத்தில் இருந்தாலும் காலையில் நல்ல ஃபில்டர் காபியுடன் செய்தியைப் பார்ப்பதில் ஆர்வம். பின்னர் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். மாலையில் திரைப்படம் பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவேன்.

கே: ஆரம்ப காலத்தில் காஸ்பரோவ் போன்ற புகழ்பெற்ற வீரர்களுடன் விளை யாடும் போதுலுங்கள் மன நிலை என்ன?

ப: நான் எப்போதும் மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை. எனது விளையாட்டிலேயே முழு கவனத்தையும் செலுத்துவேன். அவர்கள் புகழ்பெற்ற வீரர்களாக இருக்கலாம். ஆனால் என்னுடன் விளையாடும்போது அவர்கள் மற்றொரு எதிராளி ஆட்டக்காரகள்தான். 1991-ல் ரெஜியோ எமிலியாவில் (Reggio Emilia) நடந்த போட்டிகளில் நான் கார்போவ், காஸ்பரோவ் இருவரையும் தோற்கடித்தேன். அதன் பிறகுதான் சதுரங்க உலகம் ஒரு இந்தியன் உலகின் தலைசிறந்த ஆட்டக் காரர்களுக்குச் சவாலாக இருக்க முடியும் என்று உணர்ந்தது.

கே: சிலசமயம் ஒரு காயைச் சரியாக நகர்த்தியிருந்தால் ஆட்டம் வெற்றியைக் கொடுத்திருக்கலாம். போட்டிக்குப் பின் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பாதிக் காமல் எப்படி மனதைக் கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள்?

ப: ஒரு காயை நகர்த்துவதில் செய்யும் தவறால் ட்டத்தை இழப்பது மிகவும் எரிச்சலைக் கொடுக்கக்கூடிய விஷயம். மனித மனம் மிகவும் அழகான, சிக்கலான ஒன்று. சதுரங்க ட்டமும் அதைப் போலத்தான். நீங்கள் மிகவும் சிக்கலான ட்டத்தைக் கணித்து விடலாம். அதே சமயம் மிகவும் எளிதான, வெளிப்படையான ட்டத்தைத் தவறவிடலாம். ட்டத்தை இழக்கும்போது சிலசமயம் அந்தத் தோல்வி பல மாதங்களுக்கு உங்களை வதைக்கும். ஆனால் சதுரங்கத்தில் இது நடக்கக் கூடியது என்பதை உணர்ந்து அதை மறப்பதுதான் நல்லது. னால் அது சுலப மில்லை. இதுவும் நீங்களும் உங்கள் எதிராளியும் ஆட்டத்தில் ஒரு புதிரைத் தீர்க்கப் போராடுவதைப் போன்றதுதான்.

கே: போட்டிக்கு முன் உங்கள் எதிராளியின் ஆட்டத் திறனை ஆராய்ச்சி செய்வது உண்டா?

ப: நிச்சயமாக. எதிராளியின் அறிவுத் திறனையும், சமீபத்தில் எவ்வளவு சிறப்பாக ஆடி வருகிறார் என்பதையும் அறிந்து கொள்வது நல்லது. அதே போல சதுரங்கத்தில் எந்த ஆட்ட நிலைகளில் விளையாட விரும்ப மாட்டார் என்று அறிந்து கொள்வதும் உதவும்.

கே: சதுரங்க ஆட்டத்தில் ஆரம்ப நிலை, முடிவு நிலை இவ்விரண்டில் எதில் அதிக கவனம் செலுத்துவீர்கள்?

ப: நடு ஆட்ட நிலைதான் முக்கியமானது. முடிவு நிலையும் முக்கியம் - அதில் தவறுகள் செய்வதற்கு அதிக வாய்ப்புண்டு. முக்கியமாக ரூக் (rook) போன்ற காய்களை வைத்து விளையாடும் முடிவுநிலை ஆட்டத்தில் கவனமாக ஆட வேண்டும். சோர்வினால் சில சமயம் இது கடினமாகிவிடும்.

கே: அதிசயச் சிறுவன் விஸ்வநாதன் ஆனந்த் உலகளவில் சாம்பியன் ஆனதை எப்படி நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?

ப: இந்த மாற்றம் மிக மெதுவாகத்தான் நடந்தது. பெரிய அளவு மாற்றத்தைப் பற்றி நான் எப்போதும் யோசிப்பதில்லை. எப்போதும் எனது வளர்ச்சியில் உடனடிக் குறிக்கோள் என்ன என்பதைத்தான் சிந்திப்பேன். பல சிறுவர்கள் தாங்களும் பத்து வயதில் ஆனந்தைப் போல் சாதிக்க வேண்டும் என்று விரும்பிச் செயல்படுகிறார்கள். அது பெருமையாக இருக்கிறது. எனக்கு முன் மாதிரியாக இருந்தவர்களைப் பார்த்து நானும் சிறுவயதில் செயல்பட்டது உண்டு. முன்னுதார ணமாக இருப்பவர்கள் மிகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் அவர் களை பல இளைஞர்கள் மரியாதையுடன் எதிர்நோக்குகிறார்கள். இதை இந்த இளைஞர்கள் எனக்கும், எனது சதுரங்க ஆட்டத்திற்கும், எனது கருத்துகளுக்கும் கொடுக்கும் மரியாதையாகக் கருதுகிறேன்.

கே: விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றதுதான் சதுரங்கத் தில் இந்தியாவுக்குத் திருப்புமுனை என்று நாம் கருதுகிறோம். சதுரங்கத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று நீங்கள் எதைக் கருதுகிறார்கள்?

ப: 1987-ல் முதல் கிராண்ட் மாஸ்டர் கிடைப்பதற்கு இந்தியா போராடிக் கொண்டிருந்தது. இப்போது நான்கு பேர் முதல் சிறந்த 50 ஆட்டக்காரர்களில் இருக்கிறார்கள். 1987-க்குப் பிறகு ஒரு புத்துணர்ச்சி பிறந்திருக்கிறது. இப்போது இந்தியா உலகின் சதுரங்க வல்லரசுகளில் ஒன்று.

கே: உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த விஷயம் என்ன?

ப: ஒவ்வொரு வெற்றியும் முன்னேற்றத்துக் கான திருப்புமுனைதான் என்று நினைக் கிறேன்.

கே: உங்களை 10, 15 வருடங்களுக்கு முந்திய விஸ்வநாதன் ஆனந்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால்....

ப: இந்த வருடங்களில் அடிப்படைக் குணங்கள் எதுவும் என்னிடம் மாறவில்லை. ஆனால் அனுபவம் அதிகரித்திருக்கிறது.

கே: உங்களது அண்மைக்கால, நெடுங் காலக் குறிக்கோள்கள் என்னென்ன?

ப: எனது குறிக்கோள் சதுரங்க ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பாக ஆடுவதுதான். சில சமயம் நாம் இருக்கும் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கே கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

சதுரங்கமும் தொழில்நுட்பமும்

கே: சரி, மனிதர்களோடு விளையாடுவது ஒரு விதம். கணினியுடன் விளையாடு வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: கணினியுடன் விளையாடும் போது உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இது ஒரு கணித மேதை கணக்குப் பொறியுடன் (calculator) போட்டியிடுவதைப் போன்றது. மனிதனின் கூரிய அறிவையும், கற்பனைத் திறனையும் பயன்படுத்த வேண்டும். இயந்திரத்துக்குத் தளர்ச்சியோ, மனக் குழப்பமோ கிடையாது. எனவே இது கற்பனைத் திறனுக்கும், கணிதத் திறனுக்குமான போட்டிதான்.

கே: இணையப் புரட்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இது சதுரங்கத் தின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறதா?

ப: போட்டிகள் நடக்கும் அதே நேரத்தில் இணையத்தின் மூலம் ஆட்டத்தைக் கவனிக்க முடிகிறது. இணையக் குழுமங்கள் மூலம் விவாதிக்கவும், கருத்துப் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது. ஆட்டங்களை மின் தொகுப்புகளில் சேமிக்க முடிகிறது. இவை எல்லவற்றையும் சில நொடிகளில் செய்து முடிக்க முடிகிறது. சதுரங்கம் மட்டுமே, இணையத்துக்காக முழுமையாக மாற்றி அமைக்கக் கூடிய விளையாட்டு. இது பார்வையாளர்களின் அனுபவத்தை அதிகரித்து இருக்கிறது. அதனால் இணையம் சதுரங்கத்தின் வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாக உதவியிருக்கிறது.

கே: கடந்தகால சதுரங்க வீரர்களையும், இந்தக்கால வீரர்களையும் ஒப்பிட முடியுமா?

ப: கணினியின் நுழைவுதான் முக்கிய வித்தியாசம். நான் இரண்டு காலங்களுக்கும் இடைப்பட்டவன். நான் வழக்கமான முறைகளில் சதுரங்கம் விளையாடப் பயிற்சி பெற்று, பின்னர் கணினிமூலம் ஆட்டங்களை அலசவும், மின் தொகுப்புகளைப் (digital database) பயன் படுத்தவும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

கே: சதுரங்கத்தில் பயிற்சியின் மூலம் சிறப்படைய முடியுமா, அல்லது பிறவியி லேயே திறமை இருக்க வேண்டுமா?

ப: பலவிதமான திறமைகள் இருக்கின்றன. நான் இயற்கையிலேயே நன்றாக விளையாடு பவன். அதே சமயம், கிராம்னிக் (Vladimir Kramnik) போன்ற வீரர்கள் பயிற்சியின் மூலம் உருவாகி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தமது தனித் தன்மையையும், எப்படித் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதையும் அறிந்து செயல்பட வேண்டும்.

கே: சதுரங்கத்தில் சிறப்பாகத் திகழ விரும்பும் அமெரிக்காவாழ் இந்தியச் சிறுவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

ப: குழந்தைகளின் வளர்ச்சிக்குச் சதுரங்கம் ஒரு சிறந்த கருவி. அசாதாரண முறைகளில் அவர்களைச் சிந்திக்க வைக்கிறது. போட்டியிடும் தன்மை, கட்டுப்பாடு போன்ற குணங்களை வளர்க்க உதவுகிறது. சதுரங்கம் விளையாடும் பிள்ளைகள் வலுச்சண்டை களில் அதிகம் ஈடுபடாமல் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். நான் அவர் களுக்குக் கொடுக்கும் அறிவுரை சதுரங்க ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து ஆடுங்கள் என்பதுதான்.

கே: பெற்றோர்களுக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ப: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வளர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அதில் அவர்கள் தாங்களாகவே முன்னேற வழி செய்யுங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களின் வளர்ச்சியில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள், அவர்களுக்கு நல்லதே செய்ய நினைப்பவர்கள். அவர்கள் தங்கள் குழந்தை கள் சதுரங்கத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து விளையாட வழி வகுக்க வேண்டும். குழந்தைகள் தொடர்ந்து போட்டிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகக் கூடாது.
Click Here Enlargeகே: பாபி ஃபிஷருக்குப் பின் புகழ் பெற்ற சதுரங்க வீரர் அமெரிக்காவில் தோன்ற வில்லை. உலக அளவில் அமெரிக்கா வின் பங்கைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?

ப: அமெரிக்கப் பள்ளிகளில் சதுரங்கத்தைப் பரப்ப நல்ல செயல்திட்டங்கள் வைத்திருக் கிறார்கள். பெண்கள் குழு சிறப்பாகப் பங்கெடுத்து வருகிறது. ஆண்கள் குழுவும் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் சிறப்பாக விளையாடினார்கள்.

சதுரங்கப் போட்டிகள்

கே: நீங்கள் பங்குபெற்றதில் உங்களுக்குப் பிடித்த போட்டி எது?

ப: 2000-ல் நடைபெற்ற ஷிராவுக்கு (Alexei Shirov) எதிரான உலகக் கோப்பைப் போட்டிதான். மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்றினேன்.

கே: மிகவும் கடினமான எதிராளி யார்?

ப: வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு வீரர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம்.

கே: போட்டிகளின் போது மனதில் நின்ற சம்பவம் ஏதாவது இருக்கிறதா?

ப: போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் மனதில் நிற்கும் ஒன்று. ஒவ்வொரு வெற்றியும், அடுத்த வெற்றி வரும்வரை புத்துணர்வைக் கொடுக்கிறது.

கே: நீங்கள் வேகாமாகச் சதுரங்கம் ஆடுவதில் புகழ் பெற்றவர். உங்களுக்குப் பிடித்தது வழக்கமான நேர விதிப்படி ஆடும் போட்டிகளா அல்லது வேகமாக குறைந்த நேரத்தில் ஆடும் போட்டிகளா?

ப: நான் வேகமான போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறேன். வழக்கமான நேர விதிப்படி ஆடும் போட்டிகளிலும் கடந்த பத்து வருடங்களாகத் தலைசிறந்த வீரர்களை வீழ்த்தியிருக்கிறேன். சமீபத்தில் வேகமாக ஆடும் போட்டியில் கடினமான எதிராளிகளை வென்று கோப்பையைக் கைப்பற்றியிருக் கிறேன். அதனால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்களேன்.

கே: உங்களுக்குப் பிடித்த சதுரங்க வீரர்கள் யார் யார்?

ப: டால் (Michael Tal) மற்றும் ஃபிஷர் (Bobby Fischer).

கே: உலகக் கோப்பை ஆட்ட அமைப்பில் சமீபத்தில் வந்திருக்கும் மாற்றங்கள், விதிமுறை மாற்றங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: உலகக் கோப்பை ஆட்ட அமைப்பு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உலகத்தின் சிறந்த எட்டு ஆட்டக் காரர்களிடையே இரட்டைச் சுழற்சுற்று ஆட்டமாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இந்த மாற்றம் விளையாட்டு வீரர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சொந்த வாழ்க்கை

கே: உங்கள் குடும்பச் சூழலையும், அவர்களிடமிருந்து உங்களுக்கு வரும் தரவையும் பற்றிச் சொல்லுங்கள்.

ப: நான் மிக அன்னியோன்னியமான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான்தான் கடைக்குட்டி. அதனால் மிகவும் செல்லம். நெருங்கிய உறவினர்கள் அதிகம். அதனால் கோடை விடுமுறை நாட்கள் பற்றிப் பல பசுமையான நினைவுகள் உண்டு. எனது பெற்றோர்கள் எப்பொழுதும் சதுரங்கம் விளையாடவோ, அதில் வெற்றி பெறவோ என்னைக் கட்டாயப் படுத்தியதில்லை. அவர்கள் என்னைச் சதுரங்கம் விளை யாடவும், அதே சமயம் படிப்பைத் தொடரவும் அனுமதித்தனர். நான் பல விளையாட்டு களையும், பொழுதுபோக்குகளையும் கற்றுக் கொண்டேன். நான் மிக மகிழ்ச்சியான இளம் பருவத்தினால் பயன் பெற்றவன்.

கே: பெற்றோர்களைத் தவிர உங்கள் வெற்றிக்கு யார் காரணம்?

ப: நெருங்கிய நண்பர்கள் பலர் உதவி செய்திருக்கிறார்கள் - முக்கியமாக நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது.

கே: சதுரங்கம் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பங்கு வகிக்கிறது. ஆட்டத் தைப் பற்றியும், வீரர்களைப் பற்றியும், உங்கள் மனைவியுடனோ, பெற்றோர் களுடனோ விவாதிப்பது உண்டா?

ப: சதுரங்கம் எனது அடிப்படை வாழ்க்கை. சதுரங்கத்தால் பாதிக்கப்படாத திருமண வாழ்க்கையைத் தொடர முயல்கிறோம். எங்கள் இருவருக்கும் விடுமுறைகளில் செல்லவும், திரைப்படங்கள் பார்க்கவும் ஆர்வம் உண்டு. சதுரங்கப் போட்டிகளின் போது எனது மனைவியும் என்னுடன் பயணம் செய்கிறார். எனது பெற்றோர்கள் இணையத்தின் மூலம் எனது ஆட்டங்களைக் கவனித்து வருகிறார்கள். எனது மனைவி சதுரங்கம் ஆடுவதில்லை. ஆனால் ஆட்ட நுணுக்கங்களையும், எனது விளையாட்டு முறையையும் நன்றாக அறிவார். ஆட்டத்தைப் பற்றிய நல்ல உள்ளுணர்வு அவருக்கு உண்டு. அதனால் போட்டியின் போது எனது நிலை பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும்.

கே: சதுரங்கத்தைத் தவிர உங்கள் பொழுதுபோக்கு என்ன?

ப: எனக்குக் கால்பந்தும், டென்னிஸும் பிடிக்கும். ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் விளையாடுவதைப் பார்க்கப் பிடிக்கும். அவர் விளையாடும் போது அந்த விளையாட்டு மிகச் சுலபமாகத் தோன்றுகிறது. படிக்கப் பிடிக்கும். போட்டிகளின்போது என் மனைவி பல புத்தகங்களைக் கொண்டு வருவார். அவர் இந்தியாவில் புத்தகங்களைத் தேடி வாங்குவார். சமீபத்தில் Last Mughals என்ற புத்தகத்தைப் படித்தேன். மிகவும் பிடித் திருந்தது. இப்போது Einstein பற்றிய புத்தகம் ஒன்று படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு 80-களில் இருந்த Pet Shop Boys, Queen போன்ற குழுக்களின் இசை பிடிக்கும். கர்நாடக வாத்திய சங்கீதம் பிடிக்கும். சமீபத்தில் Peasant-ன் இசைக் கச்சேரி ஒன்று கேட்க வாய்ப்புக் கிடைத்தது. அதை மிகவும் ரசித்தேன். அவர் இசையைப் பற்றி அறியாத சாதாரண மனிதனும் ரசிக்கும் வண்ணம் அளிப்பது மிகவும் பிடித்திருந்தது.

கே: உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர், திரைப்படம் எது?

ப: நான் இந்தியாவில் இருக்கும் போது தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பேன். முக்கியமாக, ரஜினியின் முத்திரை கொண்ட திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். நடிகைகளில் ஜோதிகாவையும் பிடிக்கும்.

கே: உலக அளவிலும், இந்தியாவிலும் சதுரங்கத்தை வளர்ப்பதற்கு உங்கள் திட்டம் என்ன?

ப: NIIT-யுடன் இணைந்து Mind Champions Academy என்ற திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். சதுரங்கத்தை இந்தியா முழுவதிலும் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்வதுதான் இதன் குறிக்கோள். கடந்த ஆண்டு இதில் 65,000 பிள்ளைகள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த வருடம் 75,000 பேர் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு மில்லியன் சிறார்களைச் சென்றடைய வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.

கே: தென்றல் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: அவர்களுக்கு 2007-ம் ஆண்டு சிறப்பாக அமைய விரும்புகிறேன். குடும்பத்திலிருந்து மிகத் தொலைவில் பிரிந்திருக்கும் இந்தியர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கட்டும். இந்த வருடம் நம்மில் ஒவ்வொருவரும் நம்மை விட வசதிகள் குறைவாக இருக்கும் ஏழை ஒருவருக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன். இதன் மூலம் ஒரு புது இந்தியா உருவாகட்டும்.

இந்தப் புத்தாண்டில் விஸ்வநாதன் ஆனந்த் மேலும் பல வெற்றிகளைப் பெறத் தென்றல் வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

சந்திப்பு: சேசி
More

நான் எப்போதும் தெருப்பாடகன் தான் - கவிஞர் மு.மேத்தா
Share: 
© Copyright 2020 Tamilonline