|
|
தற்சமயம் தமிழ்த்திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் விவேக். இயல்பாகவே அவரிடம் இருக்கும் நகைச் சுவைத் தன்மைதான் அவரது இந்த முன்னேற்றத்திற்குக் காரணம். திரையுலகிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி, விவேக் உயர்ந்து கொண்டே இருக்கிறார் என்பதற்கு, யாருமே மறுக்க முடியாத ஒரு சாட்சி கிடைத்திருக்கிறது.
முதன் முறையாக ஒரு நகைச்சுவை நடிகர், புகழ்பெற்ற ஒரு குளிர்பானத்திற்கான விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறார் என்பதுதான் அந்த சாட்சி.
விவேக்கின் நகைச்சுவைகள் கண்மூடித்தனமாக சிரிக்க வைப்பதாக இல்லாமல், உணர்வுப்பூர்வமானவையாகவும் இருப்பது அவருக்குக் கூடுதல் பலம். ஒரு கட்டத்தில் அவரது நகைச்சுவை, பார்வையாளர்களைக் கட்டாயம் சிந்திக்க வைக்கும்.
இதயத்தைச் சிரிக்கவைத்து, மனதைச் சிந்திக்க வைப்பதுதான் விவேக் நகைச்சுவையின் சிறப்புத்தன்மை. விவேக்குடனான சந்திப்பிலிருந்து...
கே : உங்களால் இதை எப்படிச் சாதிக்க முடிந்தது?
ப : இயக்குநர் கே. பாலச்சந்தர் அவர்களின் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் பல வருடங்களுக்கு முன்னால் நான் அறிமுகமாகியது மிகவும் அதிர்ஷ்டவசமானது. அன்றிலிருந்து இன்றுவரை, இன்றைய இந்த நிலையை அடைவதற்கு நான் நிறையவே போராடியிருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்திய எனது ரசிகர்களுக்கும், என்மீது நம்பிக்கை வைத்து, வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு வாய்ப்பளித்த இயக்குநர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கே : மிராண்டா குளிர்பானத்தின் விளம்பரப் படத்தில் நடித்திருப்பது பற்றி...
ப : நான் ரொம்பவும் சந்தோஷப்படறேன். அந்த விளம்பரப்படத்திற்காக நான் பெற்ற பணத்தை, நான் உருவாக்கியிருக்கும் கல்வி அறக் கட்டளைக்குக் கொடுத்துவிட்டேன். இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு நகைச்சுவை நடிகர், புகழ்பெற்ற குளிர்பானத்தின் விளம்பரத்தில்... என்ற பெருமை எனக்குக் கிடைத்திருப்பதால் 100 % மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
கே : நீங்கள் அமைத்திருக்கும் கல்வி அறக்கட்டளையைப் பற்றி...
ப : ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாயப் பொறுப்பு இருக்கிறது. இதை மனதில் கொண்டுதான் என் அம்மாவின் பெயரில் நான் இந்த அறக் கட்டளையைத் துவங்கியிருக்கிறேன். இந்த அறக்கட்டளை மூலம் வசதியில்லாத குழந்தைகளுக்குக் கல்வி வசதி மட்டுமல்லாமல், மருத்துவம், பொருளாதாரம் உட்பட தேவையான வசதிகளைச் செய்துதரவும் ஏற்பாடு செய்திருக்கிறேன்.
கே : உங்களுக்கு முன்னோடி யார்?
ப : மிகச் சிறந்த நட்சத்திரம் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா இருவருக்கும் தீவிர ரசிகன் நான். அவர்களிருவரும் பெருமளவில் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சமுதாய சீர்கேட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்க அவர்கள் பயந்ததே இல்லை. |
|
கே : தமிழ் சினிமாவில் நகைச்சுவை பற்றி...
ப : எப்போதுமே தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சம் வந்ததே கிடையாது. மிகப் பெரிய நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் இந்த மண்ணில் உருவானவர்கள்தாம்.
கே : உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
ப : நம் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் எழுத்தால் நான் ரொம்பவே கவரப்பட்டிருக்கிறேன். நான் அவரை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அந்த சந்திப்புக்குப் பிறகு, அவருடைய கருத்துகளை மக்களுக்குத் திரைப்படத்தின் வாயிலாக, அதிலும் குறிப்பாக நகைச்சுவையின் வாயிலாக எடுத்துச் சொல்லத் தீர்மானித்தேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் குழந்தைகளுக்கும், இளைய தலைமுறைக்கும் நகைச்சுவையாகப் பல அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறேன். 'தண்ணீர் தண்ணீர்', 'அரங்கேற்றம்' படங்கள் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது போல், இந்த நகைச்சுவைக் காட்சிகளும் நிச்சயம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன்.
கே : உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் என்னென்ன?
ப : 'காதல் கிசுகிசு', 'விசில்', 'பார்த்திபன் கனவு', 'பாய்ஸ்', 'எனக்கு 20 உனக்கு 18', 'சாமி' போன்ற படங்களில் நகைச்சுவைக் காட்சிகளைச் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியாக அமைத்திருக்கிறேன். நான் நாத்திகனல்ல. எனக்குக் கடவுள் நம்பிக்கையுண்டு. என்றாலும், முட்டாள்தனமாகக் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாந்து போகும் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் நகைச்சுவைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறேன்.
சந்திப்பு:மாலினி மன்னத் எழுத்து:க. காந்திமதி |
|
|
|
|
|
|
|