Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கற்பு
- வரதர்|பிப்ரவரி 2007|
Share:
Click Here Enlargeமாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றி வந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.

''மாஸ்டர் நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?'' என்று கேட்டார் ஐயர்.

''ஓமோம்.. ஆரம்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன், என்ன விசேஷம்?''

'கலைச்செல்வி' பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறு கதை...''

''யார் எழுதியது?''

''எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனத்தை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.''

''சொல்லுங்கள். நினைவு வருகிறதா பார்க்கலாம்?''

'மூன்றாம் வருஷம் இலங்கையில் பெரு வெள்ளம் ஏற்பட்டதெல்லவா; அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப் பட்டிருக்கின்றது. குளக்கட்டை உடைத்துக் கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது. சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரரின் வீட்டுக்கு 'மேல்வீடு'ம் இருக்கின்றது. அங்கே அவன் தனியாக இருக்கிறான். வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் அந்த மேல்வீட்டுக்குச் செல்கிறாள். பணக்காரன் அவளைப் பதம்பார்க்க முயல்கின்றான். அவள் இசையவில்லை. அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடைந்துவிடத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல்வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்... இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?''

''என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த 'கருத்து'த்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடையின் துடிப்பிலுந்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை. படித்தால் தான் அதைப்பற்றிச் சொல்லலாம்.''

''நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் 'கருத்தை'ப் பற்றித் தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.''

''எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா..''

''ஓமோம்... அதையேதான்.''

''ஒரு பெண்ணின் - முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில்தானே இருக்கின்றது! மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல்லவா தமிழன் கொள்கை?'' ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு ''நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?'' என்று கேட்டார்.

மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டாரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்.

ஒரு நிமிஷ நேரம் மெளனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்துவிட்டவர்போல கணபதி ஐயரே மீண்டும் மெளனத்தைக் கலைத்தார்.

''மாஸ்டர் எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகிறேன் - உங்களுக்குச் சொல்லலாம். சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக்கேட்ட பிறகு 'கற்பு' பிரச்சனையைப்பற்றிப் பேசுவோம்.

போனவருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர்கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கின வுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து விட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போக முடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டுமென்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிடவரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். எங்களுக்கு ஆபத்து நேராது என்ற துணிவிலி, அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி - அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள். ''நீங்கள் இனி இங்கிருப்பது புத்தியில்லை ஐயா காலியிலிருந்த சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். இன்றிரவோ நாளையோ இந்தப் பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் ஸ்டேசனுக்குப் போய்விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்.'' என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு, ''அப்பனே முருகா! என்னை மனித்துக்கொள்' என்று மனத்துக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருட்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகை களையும் நூலில் கட்டிய தாலியொன்றைத் தவிர எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற் குள் மாலை ஐந்துமணியாகிவிட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். ''ஐயா, ஐயா, சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான்கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளிந் திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் நேற்றே ஊருக்குப் போய்விட்டா' என்று சொல்லுங்கோ நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து. உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா!'' என்று சொல்லிவிட்டு பேபிநோனா ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும். ஆள் ஒரு மாதிரி. 'ஐயா, ஐயா' என்று நாய்மாதிரிக் குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொருநாள் என் மனைவியை ரோட்டில் தனியாக் கண்டபோது அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லை என்று அவள் சொல்லியதுண்டு.

இப்போது அவன் வருகிறானென்றால்...

எனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்திலே பரண்மாதிரி மூன்று பெட்டி களைப் போட்டு அதன் மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின் மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும் படிவிட்டேன். பிறகு எங்கள் பயணப்பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்து விட்டேன். பிறகு முன்விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள் மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, ''என்ன சில்வா, இந்தப்பக்கம்?'' என்று சிரிக்க முயன்றேன்.

''சும்மாதான்.. நீங்கள் இருக்கிறீர்களா? இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக்குக் கம்பிநீட்டிவிட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்'' என்றான்.

''முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?'' என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

''எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்'' என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.
Click Here Enlarge''அதுசரி ஐயா, எங்கே அம்மாவைக் காணவில்லை?''

நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன்: ''அவ நேற்றே ஊருக்குப் போய்விட்டாவே''

'பளீர்' என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது! செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான். மற்றக் கையினால் வயிற்றை ஒரு குத்து விட்டான்.

''தமிழ்ப் பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையிற்கூட உன் பெண்டாட்டியைப் பார்த்தேனே!''

மற்றவன் கேட்டான்: ''சொல்லடா! அவளை யார் வீட்டில கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கிறாய்?'' எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்கமாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி, அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

''என்னடா பேசாமல் நிற்கிறாய்?''

குத்து! அடி! உதை!

குத்து! அடி! உதை!

குத்து! அடி! உதை!...

நான் இயக்கமின்றி கீழேவிழுந்தேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டு பேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்.

''அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்?... கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான் கள். அவன்களிடம் உன்னைக் கொண்டு போய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்தி சுடுவான்கள். உனக்கு அதுதான் சரி!... வாடா!'' என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக்கொண்டு நடுவீட்டுக்குள் வந்துவிட்டார்கள். மேலே என் மனைவி... அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்துவிட்டார்கள்.

''நில்லுங்கள்! நில்லுங்கள்!'' என்று கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.

''அவரை விட்டு விடுங்கள்!'' என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு...

என்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை - என் மனைவியை - குசினிப் பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நான் இரத்தம் கொதித்து மூளை கலங்கி, வெறிபிடித்து மயங்கிவிட்டேனா!

மறுபடி எனக்கு நினைவுவரும் பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடிமீது வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி!

மானம் அழிந்த என் மனைவி...

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப் போன 'கருத்து' என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவி யின் மடிமீது தலைவைத்துப் படுத்திருக்
கிறேனே... என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.

என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர்; இன்னொன்று. இன்னொன்று என் முகமும் அவள் கண்ணீரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாத போது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்திற்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாத போது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்துவிடுமென்றால் பிரசவத்துக் காக டாக்டரிம் போகும் பெண்களெல்லாம்...

என் மனத்தில் எழுந்த அருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்துகொண்டேன். என்னவோ கஷ்டங்க ளெல்லாம் பட்டு அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து சேர்ந்தோம்...

''இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்துவிடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்துவிடவேண்டுமா?... அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறியவள் - அப்படிச் செய்வதே கற்புடை மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்பட்டவள் பத்தினித் தெய்வமா. அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதையா? சொல்லுங்கள் மாஸ்டர்!..''

கணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டால் பொருமினார்.

''என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங் களைப்பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டுவிடுகிறோம். நான்கூட எவ்வளவு முட்டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லி விட்டேன்... ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு தேவையில்லாத விஷயங்களி஦ல்லாம் வாய்வீச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான ஒரு பகுத்தறிவு வாதியை இன்றைக்கு கண்டுபிடித்துவிட்டேன்'' என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் விட்டுச் சுவரிலே இருந்த மகாத்மாகாந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவது போலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு.


வரதர்
Share: 




© Copyright 2020 Tamilonline