சிகாகோ பட்டினத்தில் ருத்ரப்பட்டணம் சகோதரர்கள் சிகாகோவில் திரைஇசை மழை ஏசுதாசுடன் ஒரு இனிய மாலைப் பொழுது ரூபா மஹாதேவன்: இளைய தலைமுறையின் பாரம்பரிய சங்கீதம் தெற்கு சான் ஹோஸே திருக்கோவிலில் தியானம்
|
|
கிளீவ்லாண்டில் பெருகிய 'கிருஷ்ணரஸம்' |
|
- ரஸிகப் ப்ரியா|நவம்பர் 2003| |
|
|
|
ஒஹையோவிலுள்ள கிளீவ்லாண்டில் செப்டம்பர் 27, 2003 அன்று பிரபல பரதநாட்டியக் கலைஞரும், ஆசிரியருமான சுஜாதா ஸ்ரீனிவாசன் அவர்கள் கிருஷ்ணாவதாரத்தை அடிப்படையாகக் கொண்ட 'பிபரே கிருஷ்ணரஸம்' என்ற நாட்டிய நாடகத்தை அளித்தார். ஸ்ரீ கலாமந்திர் என்ற நாட்டியப் பள்ளியின் கலை இயக்குநரான சுஜாதா அவர்கள், பாரம்பரியத்தை விட்டுச் சற்றும் விலகாத அதே சமயத்தில் அசத்தும் படியான பல கலைநுட்ப அம்சங்களுடன் கூடிய நாட்டியத்தை அளித்தது மனதுக்கு நிறைவை தந்தது.
சுஜாதா சீனிவாசன் தனது பிரதம மாணவ மாணவியருடன் பரமாத்மா கண்ணனின் பிறப்பிலிருந்து அர்ச்சுனனுக்கு பகவத்கீதை உபதேசம் செய்யும் கட்டம் வரை படிப்படியாக பல உத்தம வாகேயகாரர்களின் உருப்படிகளைக் கொண்டே நிகழ்ச்சியைக் கட்டமைத்து, கலை அன்பர்களுக்கு ஒரு அருமையான விருந்து அளித்தார்.
பக்திரசம் ததும்பும் இவ்வழகான நாட்டிய நாடகம், சென்னையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பாடகருமான சுஜாதா விஜயராகவனின் மூலக்கருத்தையும், ஆராய்ச்சியையும் அடித்தளமாகக் கொண்டது. இவற்றின் அடிப்படையில் நேர்த்தியாக நாட்டியம் அமைத்து, சிறிதும் தொய்வு ஏற்படாமல் நடத்திச் சென்றார். |
|
சுஜாதாவும் அவரது சிஷ்யர்களும் கண்ணனை தவழும் குழந்தையாக, வெண்ணை திருடிக் கோபியிடம் மாட்டிக் கொண்டு யசோதையிடம் கெஞ்சும் சிறுவனாக, தீராத விளையாட்டுப் பிள்ளையாக, ராதையுடன் ஆடும் காதலனாக, ஆண்டாளின் நாயகனாக, பக்தர்களின் கடவுளாக, அர்ச்சுனனின் ஆசானாக - பல்வேறு காட்சிகளில் பிரமிக்க வைக்கும் ஆற்றலுடன் சித்தரித்தார்கள்.
அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து பரதநாட்டியம் பயின்ற சுஜாதாவின் மாணவர்கள் எல்லோருமே, உன்னதமாகத் தங்களது பாவ, தாளத் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். கிரண் ராஜகோபாலன், பூஜாகுமார், மதுரா, ஜெயா ஸ்ரீதரன், ஆர்த்தி குமார், ஸ்ரீயா ஸ்ரீனிவாசன் மற்றும் கல்யாணி பிள்ளை பங்கேற்று ஆடிய இந்நாட்டிய நாடகம் ஒரு முக்கியமான காரணத்துக்காக நடைபெற்றது. இந்தியாவிலுள்ள மங்களூர் அருகேயுள்ள 'மைத்ரேயி குருகுலம்' என்று வழங்கப்படும் ஒரு வித்தியாசமான பெண்கல்வி நிறுவனம், ஆதரவற்ற பெண்களை தத்தெடுத்து உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை, படிக்க கல்வி - ஆகிய சேவைகளை வழங்க நிதிதிரட்டியது இந்த நிகழ்ச்சி. 'இந்தியா டெவலப்மெண்ட் ரிலீப் பண்ட்' என்ற நிறுவனம் இந்தப் பொறுப்பை ஏற்று நிகழ்ச்சியை வழங்கியது.
சுஜாதா சீனிவாசன் தனது கலைநிகழ்ச்சிகள் மூலம் பொது ஜன சேவை - குறிப்பாக கல்வி உயர்வுக்கும், கோயில் திருப்பணிக்கும் நிதி திரட்டும் பணியை - பல வருடங்களாகச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
ரஸிகப் ப்ரியா |
|
|
More
சிகாகோ பட்டினத்தில் ருத்ரப்பட்டணம் சகோதரர்கள் சிகாகோவில் திரைஇசை மழை ஏசுதாசுடன் ஒரு இனிய மாலைப் பொழுது ரூபா மஹாதேவன்: இளைய தலைமுறையின் பாரம்பரிய சங்கீதம் தெற்கு சான் ஹோஸே திருக்கோவிலில் தியானம்
|
|
|
|
|
|
|