|
நவம்பர் 2003: வாசகர்கடிதம் |
|
- |நவம்பர் 2003| |
|
|
|
மனுவேல் ஆரான் பற்றிய கட்டுரை படித்தேன். சென்னை பூங்கா ரயில் நிலையம் எதிரிலுள்ள விக்டோரியா அரங்கத்தில் நடந்த செஸ் போட்டித் தொடர்களின் போது அவரைச் சந்தித்த நாட்களை நெகிழ்வோடு நினைத்துக் கொள்கிறேன். அப்போது அவர் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்வார். அக்காலத்தில் T.A. கிருஷ்ணமாச்சாரியார் (விளையாட்டு நிருபர், தி ஹிந்து) என்பவர் அங்கு வருவார் என்பது ஆரானுக்கு நினைவிருக்கலாம். அவர் பங்கேற்போரின் மேசையருகே வந்து, காய் நகர்த்துவது பற்றிப் பல நுணுக்கமான விஷயங்களைச் சொல்லிப்போவார்.
உங்கள் கட்டுரை ஐம்பது வருடங்களுக்கு முன்னான அந்த இனிய நாட்களுக்கு என்னை இட்டுச் சென்றது!
K. வெங்கடராமன், பெல்மாண்ட், கலி·போர்னியா
*****
நான் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தென்றல் வாசித்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தென்றலை வாசிக்கும்போது, தமிழ் எழுத்துக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்தியாவில் வீட்டில் உள்ளதுபோல் தோன்றுகிறது. தென்றலில் முதல் அட்டை முதல் கடைசி அட்டை வரையிலும் மிகச் சுவையான தகவல்கள் உள்ளன.
தென்றலில் உள்ள சமையல் பகுதியிலிருந்து நிறையச் சமைக்கக் கற்றுக்கொண்டேன். மற்றும் எங்களுக்குத் தெரியாத நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். அதற்கு எங்கள் மனமார்ந்த நன்றி. தென்றல் வளர எங்கள் வாழ்த்துக்கள்.
சார்லி, சூசி, பிராயன், இல்லினோய்
*****
நாங்கள் கிளீவ்லாண்ட், ஒஹையோவில் இருக்கிறோம். இங்கே 'தென்றல்' இதழ்களை எந்த இடத்திலும் காணமுடிவதில்லை. ஒருவேளை இருக்குமிடம் எங்களுக்குத் தெரியவில்லையோ என்னமோ. சில மாதங்களாய் சிகாகோ நண்பர் ஒருவர் அவர் படித்துவிட்டு அவ்வப்போது எங்களுக்கு 'தென்ற'லை அனுப்பி வைக்கிறார்.
சமீபத்தில் அந்த நண்பருடன் பேசியபோது ''ஸார், இன்று கடையிலிருந்து ஒரு எக்ஸ்டரா தென்றலை உங்களுக்கென்றே தள்ளினு வந்திருக்கேன்'' என்று உவகை பொங்கச் சொன்னார்.
இதை அவர் ஒரு சாதனையாகவே நினைத்தார் என்பதை நான் உணர்ந்தேன். அவர் தென்றலை 'தள்ளினு' வந்ததைவிட அதைத் தவறாது ஆர்வமாய், செலவு செய்து ஒரு 400 மைல்களைக் கடந்து எங்களைச் சேரும்படி செய்கிறாரே! அது இன்னும் பெரும் சாதனை என்றே என்ணுகிறேன்.
என் நண்பர் இதுபோல் மாதாமாதம் தென்றலைத் தள்ளினு வருவது சரியாகத் தோன்றவில்லை. ஆகவே, ஒரு சிறு விண்ணப்பம். ஏன் நீங்கள் எங்கள் இடங்களுக்கும் தென்றலை அனுப்பி வைக்கக்கூடாது? இங்கும் பல இந்தியக் கடைகள் உள்ளன. அவர்கள் விருப்பம் கேட்டு விலாசங்களை அனுப்பட்டுமா? இல்லை எங்களுக்கு அனுப்பி வைத்தாலும் அந்த ஸ்டோர்களில் பிரித்து வைப்பதில் மகிழ்ச்சிக் கொள்வோம். சிரமம் இல்லையென்றால் இதைச் செய்யுங்கள்.
'தென்றல்' பல சிறப்பான கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், ஆராய்ச்சித் தகவல்கள், வாழ்க்கை-நாடு-உலகம் பற்றிய பலவற்றையும் தாங்கி வருகிறது. எங்களைப் போன்றோரும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். உங்கள் தமிழ்ப் பற்றையும் முயற்சிகளையும் பாராட்டித் தென்றலுக்கு வாழ்த்துக் கூறுகிறேன்.
(குறிப்பு: யாருமே பிரித்துப் பார்க்காத புதுதென்றல் எப்போது வருமோ என்று ஆவலோடு காத்திருக்கிறோம்.)
ஜெயசீலன், கிளீவ்லாண்ட், ஒஹையோ
***** |
|
தமிழ்மொழியின் வளத்தையும் இனிமையையும் அறியா பாலர் வகுப்பிலேயே குழந்தைகளை ஆங்கில மொழிவழிக் கல்விக் கூடத்தில் சேர்த்து, தாய்மொழிப் பற்றற்றவர்களாக வளர்த்துவரும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, கடல்கடந்து அமெரிக்கா வந்த பின்பும், தமிழன்னைக்குத் தொண்டு செய்யு முகமாக 'தென்றல்' என்னும் பருவ இதழை மிகச் சிறப்பாக நடத்தி வரும் நல் நெஞ்சங்களுக்கு என் மனம்நிறை கைகூப்பு.
ஔவை கலைக்கழகம் என்ற அமைப்பினைச் சென்னையில் அமைத்து, குழந்தைகளுக்குத் தமிழ்ப் பற்று வளரப் பல பணிகள் செய்து வருகின்றோம். நம் சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஒவ்வாத ஆங்கில பாலர் பாடல்களைப் பாடி வளரும் குழந்தைகள் சிறந்த தமிழ்ப் பாடல்களையும் பாட வேண்டும் என்ற அவாவில் தமிழில் இரண்டு ஒலிப்பேழைகளை வெளியிட்டுள்ளோம்.
ஆ.த.பா. போஸ், நியூபெரி பார்க் டிரைவ்,கலி·போர்னியா
*****
பகல் பொழுதின் தனிமையிலே தென்றலின் இனிமை கண்டேன் தேனமுதத் தமிழ் கண்டேன் சிந்தனைகள் சிறகடிக்க சீராக வார்த்தைகள் வரக் கண்டேன்!
மீனாட்சி இராமசந்திரன், சன்னிவேல், கலி·போர்னியா
*****
ஆகஸ்ட் மாத தென்றல் சென்னை வெப்பத்தை அடியோடு தணித்துவிட்டது. ஜெயகல்யாணியின் வேர் நன்றாகப் பிடித்துவிட்டால் மரம் நன்றாக வளர்ந்துவிடும் என்ற கடிதம் எனது தாயக தாகம் என்ற வறட்சியைப் போக்கிவிட்டது. வ.வே.சு.ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதை காதலுக்கு இலக்கணம் வகுத்து, தமிழ் இலக்கிய காதலின் மோகத்தைப் புரிய வைத்தது. ஹரிகிருஷ்ணனின் குதிரை சிறுகதை நட்புக்கு இலக்கணம் வகுத்தது.
மெயில்பாக் தர்மராஜனின் தமிழ்ப் பற்று நம்பிக்கையைத் தந்தது. லிட்டில்பாக் ·பாட்மானின் அட்டகாசம் குறித்த கட்டுரை கண்களை மசமசக்க வைத்தது. மீட்பு தமிழாக்கச் சிறுகதை மானுடன் காயப்பட்ட உண்மையைப் புரியவைத்தது. மகுடமாக அமைந்தது அப்துல் கலாம் அவர்களின் உரை. ராமனாக ஒரு அண்ணல் காந்தி, ரஹீமாக ஒரு கலாம். அந்த மண்ணில் பிறந்த பெருமை எனக்கு உயிர்ப்பை அளித்தது.
மொத்தத்தில் பார்த்தேன், ரசித்தேன், சுகித்தேன். அற்புதம், மலைத்தேன்!
சுமங்கலி (தமிழ் எழுத்தாளர்) |
|
|
|
|
|
|
|