கம்பளிப் பூச்சி
|
|
|
ரங்காச்சாரியும் அவரது மனைவி ராதாவும் குளித்து, உடை உடுத்தித் தயாரானார்கள். பேரன் ஸ்ரீதரனின் கல்யாணத்துக்குப் போக வேண்டும்.
மணி வாசலுக்கு அழைத்துப்போய் அவர்களை ஏற்றிப்போக ஒரு காரை எடுத்துவரச் சொன்னான்.
அவர்கள் கார் வருமுன் ஒரு கார் எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து பாலுவும் ஒரு முதியவரும் இறங்கினார்கள்.
'லுப்தான்சா ·ப்ளைட்ல வந்தவர் இவர் தான். மிஸ்டர் கிருஷ்ணன். மைதிலியோட தாத்தா. இவர்தான் மிஸ்டர் வரதாச்சாரி, ஸ்ரீதரோட தாத்தா. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல வந்தார்'
'நமஸ்காரம்' என்று கிருஷ்ணனைப் பார்த்துச் சொன்ன வரதாச்சாரியின் முகம் மாறியது.
'நமஸ்காரம்' என்று பதிலுக்குக் கை கூப்பினார் கிருஷ்ணன். 'பேத்தி கல்யாணத்துக்கு வான்னா, வந்திருக்கேன். வயசாயிடுத்து, வரலை, உடம்பு தாங்காதுன்னு சொன்னேன். கேக்க மாட்டேனு மைதிலி...' அவர் பேசி முடிக்குமுன் வரதாச்சாரிக்குக் கார் வர, போய்க் காரில் ஏறி அமர்ந்தார்.
அவர் மனைவியும் தொடர்ந்து காரில் ஏறிக்கொண்டாள். 'என்ன அவர் பேசிண்டே இருந்தார். நீங்க சரியா சொல்லிக்காம முகத்தை முறிச்சிண்டு வந்தா எப்படி? கல்யாணப் பொண்ணு மைதிலிக்குத் தாத்தாவாமே அவர்' என்றாள் ராதா மாமி.
'அவன் ஸ்மார்த்தன் போலன்னா இருக்கு. நெத்தில விபூதிப் பட்டை. இவன் பேத்திதான் ஸ்ரீதருக்குக் கெடச்சிதா? நம்ம ரங்குவுக்கு அறிவு எங்க போச்சு? ஹிண்டுவுல ரெண்டு வரி விளம்பரம் போட்டா நம்மடவா ஆயிரம் பேர் லைன்ல நிப்பாளே? எப்பேர்ப்பட்ட வடகலை சம்பிரதாயம் நாம' என்று கத்தினார்.
'இதப்பாருங்கோ. நம்ம ஊர்லயே இப்ப வடகலை தென்கலை ஸ்மார்த்தாள்னு பாக்கறதில்லே... எல்லாரும் பெருமாளை சேவிக்கறோம்.. இதில என்ன வடக்கு தெக்கு ஸ்மார்த்தன், பிருகசரணம்னு... பேரனுக்குக் கல்யாணம் ஆகுமா ஆகுமானு பெருமாள் கிட்ட வேண்டிண்டுருந்தேன். அவனே கொண்டு வந்து விட்டிருக்கான். அவனுக்குப் பொண்ணு புடிச்சிப்போய் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறான். அவா யாரா இருந்தா என்ன? பொண்ணு பேரு மைதிலின்னாளே. மைதிலி நாம வெக்கற பேர்தானே. வம்பு வல்லடி வழக்கு பண்ணாம பெரியவரா லட்சணமா தம்பதிகளை ஆசீர்வாதம் பண்ணி அட்சதை போடுங்கோ.'
சிறிது நேரத்துக்கு பின் வரதாச்சாரி அமைதியானார். பிறகு மெதுவாக 'ஏதோ வேகம் வந்துதே தவிர, எனக்கு சிவ விஷ்ணு பேதம் இல்ல. ஸ்மார்த்தனா இருந்தா என்ன? நம்ம சம்பிரதாயத்தில எனக்கு ஒரு ஈடுபாடு. அவ்வளவுதான். அதை நீ சொல்லிக்குடு. ஸ்மார்த்தா மாதிரி ஒரு தடவை விழுந்து சேவிச்சா போதாது. ஒவ்வொத்தருக்கும் ரெண்டு தடவை விழுந்து சேவிக்கணும்னு பொண்ணுகிட்ட சொல்லு. கமுக்கமா இருந்துடாதே என்ன?'
ராதா மாமி மெளனமாகத் தலையை ஆட்டினார்.
வரதாச்சாரியையும் அவர் மனைவியையும் முதல் வரிசையில் நாற்காலியில் அமர வைத்தார்கள். மேடையில் வசவசவென்று கூட்டம். முகம் தெளிவில்லாமல் கண்ணில் மறைப்பு. கண்ணாடியைத் தேடினார். 'அடடா... ராதா, கண்ணாடியை ரூம் மேஜை மேல வெச்சிட்டேன்... அந்தப் பிள்ளை மணிய ஓட்டலுக்கு அனுப்பி எடுத்துண்டு வரச் சொல்லு... தூரப்பார்வை கொஞ்சம் நிழலாடறது.'
'மாமி, பொண்ணுக்கு மடிசார்ப் புடவை கட்ட உங்க ஹெல்ப் வேணும். வாங்கோ' என்று ராதாவை அழைத்துப்போனார்கள்.
வரதாச்சாரியின் பிள்ளை ரங்கு அருகே வந்தார். 'அப்பா வந்தாச்சா? எங்க வரமுடியாம போயிடுமோன்னு..' ரங்கு முடிக்கும்முன் யாரோ அவரை அவசரமாக அழைத்துக் கொண்டு போனார்கள்.
மைதிலியின் தாத்தா கிருஷ்ணனை வரதாச்சாரி அருகில் கொண்டு அமர்த்தினான், பாலு. 'வாங்கோ' என்று வரவேற்றார் வரதாச்சாரி ஒரு குற்ற உணர்வுடன்.
ஒருவர் எல்லாருக்கும் கையில் அட்சதை கொடுத்தார்.
கல்யாண மண்டபத்தில் இருந்த வெள்ளைக்காரர்களும் புரிந்து கொள்வதற்காகத் திருமண நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் அறிவித்தார்கள்: 'இப்பொழுது மைதிலி கழுத்தில் மங்கள சூத்ரம் கட்டும் நிகழ்ச்சி... இதன் மூலம் மணமகனும் மணமகளும் அதிகாரபூர்வமாக கணவன் மனைவி ஆகிறார்கள்' என்று அறிவிப்பு வந்தது.
'ஸ்வாமிகளே எழுந்து தம்பதிகளுக்கு அட்சதை போடும்' என்றவாறு எழுந்து, கிருஷ்ணன் அட்சதையை மேடையை நோக்கித் தூவினார். ரங்காச்சாரியும் எழுந்து மையமாக ஓரிடத்தில் அட்சதையை வீசினார். பிறகு கிருஷ்ணனிடம் 'கல்யாணப் பொண்ணுக்குத் தாத்தா நீர்... நீராவது எடுத்து சொல்லப்படாதோ. இப்படியா மந்திரத்தை முழுங்கறது? எங்க சம்பிரதாயப்படி கல்யாணம் அந்த நாளில நாலு நாள் சமாசாரம். இப்ப ஒண்ணரை நாளா சுருங்கிடுத்து. இங்க என்னடான்னா வந்தவுடனே தாலிங்கறாங்க! இது நன்னாவா இருக்கு?' |
|
'எல்லாம் மாறிண்டு வரது. முன்னாள்ல பேரன், பேத்திக்கு தாத்தா, பாட்டி ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணி வெப்பா. இப்ப அமெரிக்கால வளர்ந்து தஸ்க்புஸ்க்னு இங்லீஷ் பேசிண்டு, குழாயும் கவுனுமா மாட்டிண்டு, தலைமயிரை வெட்டிண்டு, பாழ் நெத்தியா நின்னுண்டு 'என் கல்யாணத்தை நானே பாத்துக்கிறேன்'னு தலைகீழா நிக்கறதுகள். இதுல போயி மந்திரம் கொறஞ்சிடுத்துனு புகார் சொல்றேள். ஆடிக்காத்தில அம்மியே பறக்கிறதாம்' என்றார் கிருஷ்ணன்.
'பெரியவாளா நம்ம பவரைக் காட்டணும். நீங்க அடிச்சுச் சொல்லணும் இப்படித்தான் செய்யணும்னு' இதைச் சொல்லும்போது தனக்கும் இந்தக் கல்யாணத்தில் அதிகாரம் குறைவு என்பது வரதாச்சாரிக்கு வருத்தமாகவே இருந்தது.
கிருஷ்ணன் விரக்தியாய்ச் சிரித்தார். 'என் கையில் என்ன இருக்கு, ஸ்வாமி? எனக்குப் பவர் இல்ல. நான் ஒரு விசிட்டர். என் சொல் அம்பலம் ஏறாது. ஏதோ மைதிலி கூப்பிட்டா. வந்தேனா, பார்த்தேனான்னு இருக்கணும். பையன் பொறந்த நேரம் தேதி கொடுத்தா... ஜாதகம் கணிச்சுப் பார்த்தா சரியில்ல. நாலுல குளிகன். ஆடிப் போயிட்டேன். 'உதித்த நாலில் நல்ல குளிகன் மேவ உறங்கவும் குச்சில்லையென உரைத்திடு தோழி'ன்னு சொல்றது ஜோதிஷ சாஸ்திரம். ஜாதகனுக்கு வீடு வாசல் இல்லாம போயிடுமாம். இது வேண்டான்னேன். யாரு கேட்டா?'
வரதாச்சாரிக்கு கோபம் மிகுந்து முகம் சிவந்தது. எனக்குப் பெண் ஜாதகம் கிடைக்கல. இவனுக்கு ஸ்ரீதரன் பொறந்த நேரம், தேதி கெடச்சிருக்கு. எப்பேர்ப்பட்ட ஜாதகம் ஸ்ரீதரனுது. நாலுல சுக்கிரன் சந்திரன். வீடு வாசல் இருக்காதாம். என்ன பேத்தல்?
'ஸ்வாமிகளே. நாங்க குளிகனைப் பார்க்கறதேயில்லை. அது மலயாளப் பழக்கம்னா... நாலில் நாலுக்கு அதிபதியும் நன்மைமிகு சுக்கிரனுமிருக்க நாடெல்லாம் மாளிகையாம் நாயகருக்கென நவிலடி நங்காய்ன்னு சொல்றா ஜோதிஷ சிந்தாமணி யில. தெரியுமா? அது ராஜயோக ஜாதகமய்யா. ஜாதகன் ஏகப்பட்ட வீடுகள் கட்டுவன். அமோகமா இருப்பன். கவலைப்படாதேயும்' என்றார் வரதாச்சாரி உரத்த குரலில்.
'நீங்க என்ன வேணா சொல்லுங்கோ. சொல்லப்போனா இந்த சம்பந்தத்துல எனக்கு முழு சம்மதம் கிடையாது. பையனை எனக்குப் புடிக்கலே. தோல் சேப்பா இருந்தா போதுமா? வேண்டாம்னு சொல்லிப் பார்த்தேன். கேட்கல. எங்க சம்பிரதாயம், சாஸ்திரம், அனுஷ்டானம் எல்லாமே வேற'
தூக்கிவாரிப் போட்டது வரதாச்சாரிக்கு. இந்த சம்பந்தத்துல இஷ்டம் இல்லியாமே? ஸ்ரீதரனைக் கல்யாணம் பண்ணிக்கக் கசக்கிறதோ. என்ன திமிர் இந்த ஆளுக்கு!
'உங்க சம்பிரதாயத்துக்கு எங்க சம்பிரதாயம் எந்த விதத்துலாங்காணும் தாழ்ந்து போயிடுத்து?' என்று சூடாகக் கேட்க விருந்தபோது 'கிருஷ்ணன் சார், உங்களை மைதிலி கூப்பிடறா, மாப்பிள்ளையோட போட்டோ எடுத்துக்கணுமாம் மேடைக்கு வாங்க' என்று ஒருவர் கிருஷ்ணனை அழைத்துப் போனார்.
'பிள்ளை வீட்டுக்காரப் பெரியவன் நான். என்னை யாரும் கண்டுக்கலை. பெண்ணோட தாத்தாவைபோய் தலையில வெச்சு மரியாதை செய்யறாங்க. ஊர்ல கல்யாணம் வெச்சிண்டிருந்தா இப்படி நடக்குமா? எல்லாம் ரங்குவோட முட்டாத்தனம்' என்று மனம் வருந்தினார் வரதாச்சாரி.
'மாமா உங்க மூக்குக் கண்ணாடி. ரூம்ல டிரஸ்ஸர் மேல வெச்சிருந்தீங்க' என்று பாலு கொண்டு வந்து வரதாச்சாரியிடம் கொடுத்தான். வரதாச்சாரி அதை அணிந்து கொண்டார். பார்வை சற்றுத் தெளிவானது. ஸ்ரீதரன் மேடையில் நின்று கொண்டு கையசைப்பது தெரிந்தது. மணப்பெண்ணைப் பார்க்க முடியாமல் விடியோக்காரர் மறைத்தார்.
'இப்பொழுது மை..தி..லி கழுத்தில் மணமகன் தாலி கட்டுவார்' என்ற அறிவிப்பு வந்தது.
'இப்பத்தானே தாலி கட்டினா. அட்சதை போட்டேனே. மறுபடியும் தாலியா! ஒருவேளை விடியோக்காரன் முதல் தடவை மிஸ் பண்ணிட்டு ரீ டேக் கேக்கிறானா? சென்னையிலதான் தாலி கட்றச்சே நிறுத்துங்கனு அமங்கலமாக் கத்தி காமிராவை ·போகஸ் பண்ணித் தொலைக்கிறான்னு பார்த்தா இங்க இப்படி ஒரு லொள்ளா!' என்று குழப்பத்தோடு வரதாச்சாரி எழுந்தார்.
கெட்டி மேளச் சத்தம். ஸ்ரீதரன் குனிந்து நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணுக்குத் தாலி கட்டினான். 'கிருஷ்ணா உனக்கு ஜயமங்களம்' என்று நாதஸ்வர டேப் ஒலித்தது.
'மாமா மேடைக்கு வாங்கோ. தம்பதிகள் உங்களைச் சேவிக்கணும்' என்று யாரோ வந்து வரதாச்சாரியை மேடைக்கு அழைத்துப் போனார்கள்.
'தாத்தா, பாட்டியை விழுந்து சேவிச்சுக் கோடா. இதான் சான்ஸ். அப்புறம் பொண்டாட்டி கால்ல விழவே நேரம் பத்தாது' என்று ஒரு புராதன ஜோக்கை சொல்லிச் சிரித்தார் புரோகிதர்.
சரிகை வேட்டியில் இருந்த ஸ்ரீதரன் அருகில் பெல்ட் போட்டு இறுக்கப்பட்ட மடிசார்ப் புடவையில் இருந்தாள் ஒரு சீனப்பெண்!
இருவரும் வரதாச்சாரியை நெருங்கினார்கள்.
'தாத்தா வாங்கோ... திஸ் ஈஸ் மை கிராண்ட் ·பாதர். தாத்தா திஸ் ஈஸ் 'மை'. மை ஒய்·ப்' என்றான் ஸ்ரீதரன்.
இருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள். 'ஸ்ரீதரா. ரெண்டு தடவை சேவிக்கணும். ஆம்படையாள்கிட்ட சொல்லு' என்றார் ராதா மாமி.
'சரி பாட்டி' என்ற ஸ்ரீதரன், மணப் பெண்ணிடம், 'ஒன் மோர் டைம்' என்று சொல்ல இருவரும் மறுபடியும் விழுந்து சேவித்தார்கள்.
'ஏய் ஏய், யார்டா இந்தப் பொண்? பேரு என்னனு கேட்டப்ப நீ மைதிலின்னு சொல்லல. நான் கிருஷ்ணன் பேத்தி மைதிலின்னு நெனச்சேன். இவ இந்தியப் பொண்ணு இல்லயா. இவ கண்ணும் மூக்கும் சீனாக்காரி மாதிரின்னாடா இருக்கு?' என்றார் வரதாச்சாரி.
'இவ பேரு மைதிலி இல்ல தாத்தா, மை..டி..லி....Mai Ti Li. சீனப் பெண்ணுதான்.. செல்லமா 'மை'ன்னு கூப்பிடறது'
'அப்ப கொஞ்ச நாழி முன்னால மைதிலிக்கு தாலி கட்றாங்கன்னு சொன்னது யாருக்காம்?'
'தாத்தா. அது வேற இன்னொரு கல்யாணம். வேற மண்டபம் கிடைக்காததுனால இங்கயே ரெண்டு கல்யாணத்தையும் செய்யறதா ஏற்பாடு. ரெண்டு மணி நேரம்தான் ஹால். அதுக்கு அப்புறம் கோயில் கமிட்டி ஜெனரல் பாடி மீட்டிங் இருக்கு. முதல்ல அவங்க கல்யாணம் முடிச்சிட்டு அப்புறமா என் கல்யாணம். அந்தப் பொண்ணு பேரு மைதிலி. கிருஷ்ணன் சார் பேத்தி. இந்தியப் பொண்ணு. பேரு மைதிலி விசுவநாதன். அவங்க ·பேமிலியும் நாங்களும் செலவைப் பங்கு போட்டுண்டு இந்த இடத்திலேயே ஒரே மேடையில ஒரே பங்ஷனா ரெண்டு கல்யாணத்தையும் நடத்திட்டோம். அங்க பாருங்கோ மேடைக்கோடியில மைதிலியும் அவ ஹஸ்பெண்டும்' மாலையுடன் இருந்த ஒரு இந்தியப் பெண் மாலையணிந்த ஒரு வெள்ளைக்கார இளைஞனிடம் பேசியபடி நின்றிருந்தாள். அருகில் கிருஷ்ணன் முக வாட்டத்துடன் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தார்.
'கிருஷ்ணன் பேத்தி மைதிலியா. கூட யாருடா? மாலையோட வெள்ளைக்காரன்னா ஒத்தன் கடோத்கஜன் போல நிக்கறான்?'
'ஆமாம். அவந்தான் ஜான் ஹாரிங்டன். ஆஸ்திரேலியாக்காரன். அவந்தான் கொஞ்ச நேரம் முன்னால மைதிலிக்குத் தாலி கட்டினான்'
வரதாச்சாரி பிரமித்துப் போய்ப் பக்கத்தில் புன்னகையோடு இருந்த மனைவியை எரிச்சலோடு பார்த்தார். 'என்ன ராதா நடக்கறது இங்க? ஒனக்கு ஏதாவது புரியறதா? புள்ளைகள் சீனாக்காரியக் கல்யாணம் பண்ணிக்கறான்கள், பொண்ணுகள் வெள்ளைக்காரனைக் கல்யாணம் பண்ணிக் கறதுகள். ஒரே கொழப்பமா இருக்கே' என்று முனகினார்.
ராதா மாமி அவர் அருகில் வந்து 'அதை அப்புறமா பேசிக்கலாம். மறக்காம பிளட் பிரஷர் மாத்திரை போட்டுண்டேளா? வயசிலே நீங்க பெரியவரா இருக்கறதால, ஸ்ரீதரனோட மாமியார் மாமனார் உங்களைச் சேவிக்கணுமாம். இதோ வரா பாருங்கோ' என்றாள்.
சீனதம்பதியினர் வரதாச்சாரி அருகில் வந்து 'குங் வா வாங் குவா குவாங் பிங் பிங் ஹ¤ ஹா ஹா' என்று சொல்லி மூன்று முறை குனிந்து வணங்கினார்கள்.
சீனப் மணப்பெண், தன் பெற்றோர் சொன்னதை ஸ்ரீதரனிடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாள்.
ஸ்ரீதரன், 'இந்த மணமக்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க ஆசீர்வதியுங்கள்னு சீன பாஷையில சொல்றாங்களாம்' என்றான் தாத்தாவிடம்.
ராதா மாமி மிகுந்த ஆச்சர்யத்துடன் 'இவா சம்பிரதாயம் நம்மளைவிட சூப்பரான்னா இருக்கு. பாருங்கோ மூணு தடவைன்னா குனிஞ்சு சேவிக்கறா' என்று சொன்ன வார்த்தைகள் வரதாச்சாரியின் காதுக்கு ஏறாமல் திகைத்து நின்றார்.
கல்யாணம் முடிந்து ஸ்ரீதரன் மனைவியோடு ஹனிமூனுக்குப் போய்விட்டான். வரதாச்சாரியும், ராதாவும் ரங்கு வீட்டில் இருந்தார்கள். வரதாச்சாரிக்கு கோபமும் ஏமாற்ற உணர்வும் முற்றும் அடங்கவில்லை. பேச்சைக் குறைத்து மனதில் புழுங்கினார்.
'ஏய் ரங்கு, நீ செஞ்சது உனக்கே நன்னாயிருக்கா? உனக்கு நான் என்ன குறை வெச்சேன்?
உன்னை ஒழுங்கா வளர்த்து படிக்க வெச்சு, முறையாக் கல்யாணம் பண்ணி வெச்சு அமெரிக்கா அனுப்பி வைக்கல? நீ என்ன புள்ளை வளர்த்திருக்காய் அமெரிக்கால? கண்டவளைக் கல்யாணம் பண்ணிண்டுட்டான். அவந்தான் சின்னவன் ஒண்ணும் தெரியாதவன்னா, உன் புத்தி எங்கடா போச்சு? நம்ம சம்பிரதாயம், கலாசாரம் எல்லாத்தையும் நீயும் சேந்து சாக்கடையில வீச எப்படிடா மனசு வந்துது?' என்று கோபத்தோடு பேச்சை ஆரம்பித்தார் வரதாச்சாரி.
ரங்கு அருகில் வந்து அமர்ந்தார்.
'நான் இதைப்பத்தி ஸ்ரீதரன்கிட்ட விவாதிச்சிருக்கேன். அவன் இந்த ஊருல வளர்ந்தவன். தன்னோட பழகின தனக்கு பிடிச்ச பெண்ணைத்தான் பண்ணிக்கணும்னு இருந்தான். நம்ம ஊருல நம்ம ஜாதகம், நட்சத்திரம், குலம், கோத்திரம் பார்த்து கல்யாணம் பண்ணிண்டப்பறம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கறோம். இந்தச் சூழ் நிலையில இங்க படிச்சு வளர்ந்தவர்களுக்கு நம்முடைய முறையில பெற்றோர் ஏற்பாடு பண்ற கல்யாணம் புடிக்கல. அப்படியே ஒரு பெண்ணை ஊரிலேருந்து கொண்டு வந்து வற்புறுத்திக் கல்யாணம் பண்ணி வெச்சா சரியா வராம டிவர்ஸ் ஆகலாம். அது போல ஆயிருக்கு.'
'எதுக்குடா நம்ம ஜாதி ஜனத்தில கல்யாணம் பண்ணிக்கறோம்? வாழ்க்கை அப்பதான் ஒரே சீரா இருக்கும். ரெண்டு பேரும் ஒரே சூழ்நிலையில வளர்ந்ததால தெய்வ நம்பிக்கை, ஆகாரம், ஆசாரம், பண்டிகைகள், பேச்சு, பழக்க வழக்கங்கள்னு எல்லாம் ஒத்துமையா அமையும். அதை விட்டுட்டு வேற இனம், மதம்னு சேர்ந்துட்டா ரெண்டு பேரோட கலாசாரமும் அடிபட்டு போயிடாதா? இதை உன் பிள்ளைக்கு நீ எடுத்து சொல்லியிருக்க முடியாதா'
'சொன்னேன். அவன் கேட்கலை. இந்த சமூகத்துக்கே 'மெல்டிங் பாட்' னு பேரு. பல அமெரிக்கர்களுடைய வம்சாவளியை ஆராய்ந்தால் அவர்களுக்கு இங்கிலாந்து, இத்தாலி, கிரீக், பிரெஞ்சு போல பல நாட்டுப் பின்னணி இருக்கிறது தெரியும். சமீப கால வரவுகளாக இங்க இந்தியர்கள் மட்டுமில்லாம, சீனர்கள், கொரியர்கள், மெக்சிகர்கள் இப்படிப் பலபேர் இருக்கிறார்கள். இங்குள்ள சூழ்நிலையில வளருவதால குழந்தைகளுக்குள் சில ஒற்றுமைகள் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. பேச்சு, பழக்கம், விளையாட்டு கள். உணவில் கூட பொதுவான தன்மைகள் ஏற்பட்டுவிடுகிறது. கல்யாணம் என்று வரும்போது, இங்கேயே பிறந்து வளர்ந்தவர் களையே விரும்புகிறார்கள். இனம் மதம் ஜாதி, கோத்ரம், ஜாதகம் எல்லாம் பற்றி அவர்கள் வருத்திக் கொள்வதில்லை. இங்க வந்து நான் செட்டிலாகும்போது இப்படி ஆகும்னு தெரியல. எனக்கு மட்டுமில்ல பல பேருக்கு இந்த பிரச்னை இருக்கு. என் ஜாதியில இல்லாம ஏதாவது, உட்பிரிவில கல்யாணம் பண்ணிண்டா பரவாயில்லனு சிலர்; பிற ஜாதியில கல்யாணம் பண்ணினா பரவாயில்ல, இந்துவா இருந்தா போதும்னு சிலர்; பிற மதங்கள் ஓகே, தமிழனா இருந்தாப் போதும்னு சிலர். தமிழன் இல்லாட்டிப் பரவாயில்ல இந்தியனா இருந்தா சரின்னு சிலர்; எந்த நாடானாலும் பரவாயில்ல, பிள்ளை ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிண்டாலே போதும்னு சிலர். அபூர்வமா சில குழந்தைகளுக்குத் தங்களுக்குப் பரிச்சயமான வட்டத்தில கல்யாணம் நடக்கிறது. ஆனால் அதுகூட அடுத்த தலைமுறையில எப்படி இருக்கும்னு உறுதியா சொல்ல முடியாது.'
புரிதலுடன் தலையாட்டினார் வரதாச்சாரி. எத்தனை கோடி வருஷமா வரது இந்த மனிதச் சங்கிலி. நாமே வேலி போட்டுண்டு மனசை அலட்டிண்டு வாழ்க்கையை நரகமா அடிச்சிக்கிறது பேத்தல்தான்.
இரண்டு நாளில் ஸ்ரீதர் ஹனிமூனிலிருந்து திரும்பி வந்தான்.
'தாத்தா, நான் சீனப்பெண்ணைக் கல்யாணம் பண்ணினது உனக்கு பிடிக்கலயா. அவள் அழகாயில்லயா?' என்றான் ஸ்ரீதரன்.
வரதாச்சாரி சிரித்தார். 'ஏண்டா என் பொண்டாட்டி அழகா இருக்காளானு கேட்கிற நேரமாடா இது? கல்யாணத்துக்கு முன்னால் கேட்டிருந்தா ஏதாவது சொல்லியிருப்பேனோ தெரியாது. அது கெடக்கட்டும். ஸ்ரீதரா உன் பெண்டாட்டி எங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லயாங்கறது பிரச்னையில்லை. உனக்குப் பிடிச்சா சரி. உன் பேச்சில, சாப்பாட்டில, டிரஸ்ல, பழக்க வழக்கத்தில மாறுதல் இருக்கலாம். இருக்கட்டும். ஆனா தயவு செஞ்சு எதை விட்டாலும் பெருமாளை விட்டு டாதே. பேயாழ்வார் சொல்லியிருக்காப்போல,
இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய் மறையாய் மறைப்பொருளாய் வானாய் பிறைவாய்ந்த வெள்ளத்தருவி விளங்கொளிநீர் வேங்கடத்தான் உள்ளத்தின் உள்ளே உளன்
பெருமாள் ஹ்ருதய கமல வாசன். என் உள்ளத்திலே, உன் உள்ளத்திலே எல்லார் உள்ளத்திலும் இருக்கார். அவரை மறக்கப்படாது. அதை நெனவு வெச்சிக்கோ. உன் பொண்டாட்டி கொழந்தைகளுக்கும் சொல்லிக் கொடு. உனக்கு சர்வ மங்களங்களும் உண்டாகட்டும்'
ஸ்ரீதரன் ஆமோதித்து பணிவாகத் தலையசைக்க அருகில் அவன் சீன மனைவி வந்து நின்றாள். அவள் விரலில் பெருமாள் உருவம் பதித்த தங்க மோதிரம் மின்னியது. அதைப்பார்த்த வரதாச்சாரி முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
ராதா மாமி புன்னகையோடு ஒரு பெருமூச்சு விட்டார்.
எல்லே சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சல்ஸ்
(இந்தக் கதை ஒரு அமெரிக்காவுக்கு வந்து குடியேறிவிட்ட இந்தியர்களின் கலாசாரப் பிரச்னையை விவாதிக்கிறது. மற்றப்படி எந்த ஒரு சமுதாயப் பிரிவையோ அவர்களது பழக்க வழக்கங்களையோ கேலி செய்வதோ விமர்சிப்பதோ இதன் நோக்கமல்ல: - சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ்.) |
|
|
More
கம்பளிப் பூச்சி
|
|
|
|
|
|
|
|