நரியும் நாரையும்
|
|
|
வீரப்புலி தளபதி ஆன வரலாற்றைப் போன இதழில் பார்த்தோம். வேறு சாகஸங்கள் எதுவும் செய்யவேண்டாம் என்று அவனும் நிம்மதியாக வாழ்க்கை யைக் கழித்துக் கொண்டிருந்தான். ஆனால் விதி அவனை விட்டால்தானே!
ஒருநாள் பக்கத்து நாட்டு ராஜா ஒரு தூதுவனை அனுப்பி ''நீ இனிமேல் எனக்குக் கப்பம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் உன் நாட்டின் மீது படையெடுப்பேன்'' எனப் பூச்சி காட்டினார். நல்லராஜா அந்தப் பூச்சியை நன்றாகப் பார்த்துவிட்டு "கப்பமாவது அப்பமாவது, உன் ராஜாவை என்ன வேண்டுமானாலும் செய்யச் சொல்" என்று வீரவசனம் பேசித் திருப்பி அனுப்பிவிட்டார். அவருக்குத் தன் தளபதி வீரப்புலியின் போர்த்திறமைமேல் அவ்வளவு நம்பிக்கை.
பக்கத்து நாட்டு ராஜாவுக்கு வந்ததே கோபம்! அதுவும் மூக்குக்கு மேலே. ஒரு பெரிய படையைத் திரட்டி, நல்லராஜாவின் நாட்டைத் தாக்க அனுப்பி வைத்தார். விஷயம் அறிந்த வீரப்புலிக்குக் கவலையாகிவிட்டது. தனது வண்டவாளம் ராஜாவிற்குத் தெரியுமுன் எப்படியாவது அந்த நாட்டைவிட்டு ஓடிவிட வேண்டும் எனத் திட்டம் போட்டான். நல்லராஜாவிடம் "அரசே, கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். அவர்களை விரட்டி விடுவேன்'' என உறுதியளித்தான். பிறகு தன் திட்டத்தை விவரித்தான்.
"ஒரு பெரிய குதிரையில் என்னை ஏற்றி நன்றாகக் கட்டிவிடச் சொல்லுங்கள். கையில் ஓர் ஈட்டி கொடுத்துவிடுங்கள். பிறகு பாருங்கள் நடப்பதை" எனச் சொன்னான். அவனுக்கோ குதிரை சவாரி துளிக்கூடப் பழக்கம் கிடையாது.
நல்லராஜாவுக்கோ அவன் கேட்பது ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், சேவர்களிடம் தளபதி கேட்டதுபோல் செய்யச் சொன்னார். வீரப்புலியை ஒரு முரட்டுக்குதிரை மேல் ஏற்றி நன்றாகக் கட்டினர். கையில் ஒரு ஈட்டியைக் கொடுத்து ஊரின் எல்லைக்கு கூட்டிச் சென்றனர். அங்கே ஒரு பெரும் எதிரிப்படை சத்தம் போட்டு நின்றது. அதைப் பார்த்துக் குதிரை மிரள ஆரம்பித்தது.
குதிரை முன்னங்கால்களைத் தூக்கியது. நல்லவேளை, வீரப்புலி இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததால் கீழே விழவில்லை. அவன் திட்டம் என்னவென்றால் குதிரையை மெல்ல நாட்டுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போய், பிறகு வேகமாக ஒட்டிக்கொண்டு போய்விடுவதுதான்! ஆனால், அவன் கையில் இருந்த ஈட்டி எதிர்பாராமல் குதிரையைக் குத்திவிட்டது. குதிரையோ வலி தாங்காமல் எதிரிப்படையை நோக்கிப் படுவேகமாக ஓட ஆரம்பித்தது. தான் நினைத்த வழி போகாமல் எதிரிகளை நோக்கிக் குதிரை போவதைக்கண்டு வீரப்புலி அலற ஆரம்பித்தான். குதிரையை நிறுத்தத் தெரியவில்லை அவனுக்கு. |
|
குதிரை ஓடும் வழியில் ஒரு பனைமரம் தென்பட்டது. வீரப்புலிக்கு என்ன தோன்றியதோ, அந்த மரம் அருகில் வந்தவுடன் சட்டென்று எட்டிப்பிடித்தான். ஒருவேளை குதிரை ஓடுவதை நிறுத்தலாம் என்ற நப்பாசையோ... ஆனால் அந்த உளுத்துப்போன மரம் கையோடு வந்துவிட்டது. வீரப்புலி அந்தப் பனை மரத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க, குதிரை எதிரிப்படையை நெருங்கியது. எதிரிகளுக்கோ தம் கண்களை நம்ப முடியவில்லை. ஒரு தனி மனிதன் பனை மரத்தைத் தூக்கிக்கொண்டு குதிரையில் தாக்க வருவதை அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை. 'ஆஹா! எத்தனை பலசாலி. இவன் கையில் நாம் அகப்பட்டால் தக்காளித் துவையல்தான்' என்று நினைத்த அவர்கள் தப்பித்தால் போதும்டா சாமி என்று அந்த இடத்தை விட்டுப் பறந்தனர்.
நல்லராஜாவின் படைகள் இதைப் பயன்படுத்தி எதிரிகளை ஓட ஓட விரட்டினர். குதிரையும் களைத்துப்போய் ஒரு இடத்தில் நின்றுவிட்டது. வீரப்புலிக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
எதிரி ராஜா தோல்வியை ஒப்புக் கொண்டார். இப்போது அவர் நல்ல ராஜாவுக்குக் கப்பம் கட்ட வேண்டியதாயிற்று.
நல்லராஜாவுக்கோ ஒரே சந்தோஷம். பராக்கிரமசாலியான வீரப்புலிக்கு தன் ஒரே மகளைத் திருமணம் செய்து வைத்தார். ''வீரப்புலிதான் எனக்கு வருங்கால வாரிசு'' எனப் பறைசாற்றினார்.
வீரப்புலியும் 'இனிமேலும் சோம்பேறியாக இருக்கக்கூடாது; கடவுள் தனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார். இதைப் பயன்படுத்தி நாட்டுக்கு உழைக்க வேண்டும்' எனத் தனக்குள் உறுதிமொழி செய்து கொண்டான்.
ஹெர்கூலிஸ் சுந்தரம் |
|
|
More
நரியும் நாரையும்
|
|
|
|
|
|
|