முரசொலி மாறன் மரணம்
|
|
கர்நாடக இசையுலகின் வைரத்தூண் |
|
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2003| |
|
|
|
அக்டோபர் 31ம் தேதி. கர்நாடக சங்கீத உலகிற்கு மறக்க முடியாத துக்கநாள். ஆம், அன்று தான் இசை உலகின் ஜாம்பவான், 'பிதாமகர்' என்று அழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்கள் இயற்கை எய்தினார். இன்னும் நான்கு ஆண்டுகளில் நூறாவது பிறந்த நாளை எட்டவிருக்கும் நிலையில் செம்மங்குடி அவர்களின் மறைவு மிகப்பெரிய துயரத்தில் எல்லோரையும் ஆழ்த்திவிட்டது.
செம்மங்குடி 1908ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி கிராமத்தில் ராதா கிருஷ்ண ஐயருக்கும், தர்மாம்பாள் அம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார்.
தாய் மாமா திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்தான் செம்மங்குடி அவர்களின் முதல் குரு. குழந்தைப் பருவத்திலிருந்தே இவருள் இருந்த இசையார்வமே தாய்மாமாவை நாடி இசை கற்க வைத்தது. தொடர்ந்து உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயர், திருவிடைமருதூர் கோட்டுவாத்தியக் கலைஞர் சகாராமராவ் என்று போகும் இசை ஆசிரியர்களின் பட்டியலில், கடைசியாக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் இடம் பெற்றுள்ளார். கர்நாடக இசையுலகில் கொடிகட்டிப் பறந்த மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் தந்தையார் இவர்.
பின் அரியக்குடி, செம்பை போன்றவர்களில் பாராட்டுக்களைப் பெற்றவரானார் செம்மங்குடி. தன்னுடைய 22ஆம் வயதிலேயே புகழ்பெற்ற இசைக் கலைஞரானார். பின் 1939ம் ஆண்டு, 31வது வயதில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார்.
அன்றைய காலக்கட்டத்தில் சுவாதி திருநாள் கீர்த்தனைகள் வெறும் சாகித்ய மாக அதாவது கவிதை வடிவில் இருந்தன. அவற்றை ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இசைப்படுத்தினார். திருவாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தின் உத்தரவின் பேரில் அப்பணியைச் செய்து வந்தார். அவருக்கு ஒரு நல்ல உதவியாளர் வேண்டுமென்று மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரைக் கேட்டபோது, அவர் செம்மங் குடியை அப்பணிக்காகத் திருவனந்தபுரம் அனுப்பி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக செம்மங்குடி திருவனந்தபுரத்தில் இசைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார். சுவாதித் திருநாள் கீர்த்தனைகள் புத்தகவடிவில் வெளிவருவதற்கு செம்மங்குடியார் ஆற்றிய தொண்டு மகத்தானது.
அதுமட்டுமல்ல அரசுக் கல்லூரியின் முதல்வராகவும், அகில இந்திய வானொலியில் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், சென்னை மியூசிக் அகாடமி நடத்தும் இசையாசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராகவும் பணி யாற்றியுள்ளார். தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஸ்வரக் குறிப்புடன் புத்தகமாக வெளியிட்டவர் செம்மங்குடி. இப்படி அவர் இசைக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்.
இன்று கர்நாடக உலகில் புகழ்பெற்று விளங்கும் பலர் செம்மங்குடியாரின் சீடர்கள் என்றால் அது மிகையல்ல.
குறிப்பாக டி.எம்.தியாகராஜன், பி.எஸ். நாராயணசாமி, கல்லிடைக்குறிச்சி எஸ். ஹரிஹர ஐயர், கே.ஆர். குமாரசாமி ஐயர், பாளை சி.கே. ராமச்சந்திரன், எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.ஜே.யேசுதாஸ், சீதாராஜன் என்று மிகப் பெரிய பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
செம்மங்குடி அவர்களைப் பற்றி தங்கள் நினைவுகளை இங்கு சில இசைக் கலைஞர்கள் கூறுகிறார்கள். |
|
ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் (கர்நாடக சங்கீத விமர்சகர்):
நான் முதன் முதலாக விமர்சனம் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக, செம்மங்குடி ஐயா அவர்களிடம் சென்று ஆசி பெற்றேன். அப்போது அவர் எனக்கு கூறிய அறிவுரை என் மனதிலே இன்றளவும் பசுமரத் தாணிபோல் பதிந்துள்ளது. அவர் அப்போது சொன்னார் ''மிகப் பெரிய கலைஞர்களையெல்லாம் தாறுமாறாக ஏசி அவதூறாக விமரிசனம் எழுதினால் பெரிய மனிதனாகிவிடலாம் என்று நினைக்காதே". அடுத்த அறிவுரை: ''நீ யாரையாவது குறைசொன்னால் அதே கலைஞரை நீ நேரில் சந்திக்கும் போது எதைத் தவறு என்று சொன்னாயோ அதைச் சரியாகப் பாடிக்காட்ட உன்னால் முடிய வேண்டும். அதற்காக உண்மையைச் சொல்லவும் பயப்படாதே.'' ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இசைவிழாவின் போது நான் எழுதிய விமர்சனங்களை அவரிடம் கொண்டு போய் படித்துக் காட்டுவேன். அதில் உள்ள குறை நிறைகளை அவர் எனக்கு உடனடியாகச் சுட்டிக்காட்டுவார்.
பலருக்கு அவர் இசையுலக குருவாக இருந்திருக்கிறார். எழுத்துக்கு அவர் எனக்கு குருவாக இருக்கிறார். அவர் மிகச் சிறந்த பேச்சாளர்கூட. நினைவாற்றலில் அவருக்கு நிகர் அவரே. அவரது மறைவு எனக்கு வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத இழப்பு. என் தந்தை இறந்தபோது நான் அடைந்த துன்பத்தைக் காட்டிலும் அதிகமான துன்பத்திலே இப்போது ஆழ்ந்துள்ளேன். மூன்று தலைமுறை இசைக்கலைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அந்தக் கலங்கரை விளக்கத்தை இழந்து துன்பம் என்னும் நடுக்கடலில் திகைத்து நிற்கிறேன்.
வாணிஜெயராம் (திரைப்படப் பின்னணிப் பாடகி):
1985ல் நான் ஒலிநாடா கடை ஒன்று திறந்த போது அவர் அதைத் தொடங்கி, விற்பனையை ஆரம்பித்து வைத்து என்னையும் என் கணவரையும் மனமார வாழ்த்திச் சென்றார். எங்கு எங்களைப் பார்த்தாலும் மிகவும் பாசத்தோடு அதைப் பற்றி விசாரித்துப் பேசுவார்.
கர்நாடக இசைத்துறைக்கே ஒரு தூணாக, சரித்திரமாக, சகாப்தமாக இருந்தவர். இன்று நம்மிடையே இல்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.
கவிஞர் சுப்பு ஆறுமுகம் (வில்லுப்பாட்டுக் கலைஞர்):
கர்நாடக இசை உலகத்தின் பீஷ்மாச்சாரியார் செங்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர். சப்தஸ்வரம் என்னும் இசை மண்டபத்தில் 7 வைரத் தூண்களாக அவரை மதித்து போற்றலாம். என்றும் இந்த வைரங்கள் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.
சென்னையில் டிசம்பர் இசைவிழா துவங்கப்பட்ட ஆண்டு 1927. அப்போது சுதந்திரபோராட்ட வீரரும், காங்கிரஸ் தலைவரும் காமராசரின் ஆசானுமான தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் காங்கிரஸ் பொருட்காட்சி நடைபெற்ற போது சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு மைதானத்தில் இசைவிழா நடைபெற்றது. பிற்காலத்தில் அதுவே மியூசிக் அகாடமி என்னும் சென்னை சங்கீத வித்வத் சபையாக மாற்றப்பட்டது. அன்றைய முதல் இசைவிழாவில் பாடிய இளம் கலைஞர் களுள் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரும் ஒருவர்.
சென்ற ஆண்டு நடைபெற்ற இசை விழாவரையில் செம்மங்குடி பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவரால் கச்சேரி செய்ய முடியாவிட்டாலும், தலைமமை ஏற்று உரையாற்றினார். இந்த ஆண்டின் இசைவிழா செம்மங்குடி இல்லாத முதல் இசைவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
******
செம்மங்குடியாரின் முத்துக்கள்
தமிழ்ப்பாட்டு
"அநேகம் பேர் அர்த்தமே தெரியாமத்தான் பாடிண்டு இருந்தா. தமிழ்ப் பாட்டுப் பாடணும்கிற கட்சியைச் சேர்ந்தவன்தான் நான். தமிழ்க் கிருதிகள்லே சாகித்யம் ஜாஸ்தி. நிரவல் அதிகம்."
******
"இரும்புக் கடலை மாதிரியிருந்த குரல்..."
"முதன் முதலாக சேலம் பகுதியிலே குருநாதர் மஹாராஜபுரம் அவர்களோட கச்சேரி. புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை என்னைப் பாடச் சொன்னார். பழைய கோயில் கதவு திறக்கிற மாதிரி கர்ணகடூரமாயிருந்தது. "உங்க வீட்டுப் பிள்ளையாண்டானுக்கு இன்னும் கொஞ்சம் குரல்வளப் பயிற்சி கொடுத்தால் தேவலையோன்னு தோண்றது"ன்னார். அதுக்கப்புறம் கடும் பயிற்சி, சாதகம் பண்ணிக் குரலை ஒரு வழிக்குக் கொண்டு வந்தேன்.
1931ல் கோயம்புத்தூர்ல கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிரா, பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், உமையாள்புரம் கோதண்டரா மய்யர் மிருதங்கம். தட்சிணாமூர்த்தி பிள்ளைவாள் ஆண்டவனே! இரும்புக் கடலை மாதிரியிருந்த குரலை இப்படி மதுரமாகப் பண்ணிக்கிட்டீங்களே... என்ன அற்புதம்!"
'செம்மங்குடி ஒரு சகாப்தம்' வாழ்க்கை வரலாற்று நூலில் செம்மங்குடியார் சொல்லக் கேட்டு எழுதியவர் சங்கர் வெங்கட்ராமன்.
******
விருதுகளும் பட்டங்களும்
1953 ஜனாதிபதி விருது 1957 'ராகரத்னா' - சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு அபிநவவித்யா தீர்த்த ஸ்வாமிகள் 1969 பத்மபூஷண் விருது 1965 'சங்கீத கலாநிதி' - மியூசிக் அகாதெமி, சென்னை 1969 'இசைப் பேரறிஞர்' - தமிழ் இசைச் சங்கம், சென்னை 1976 'சங்கீத கலா ரத்னா' - 50 ஆண்டுக்கால இசைச் சேவையைப் பாராட்டி காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி வழங்கியது. 1976 சங்கீத நாடக அகாதெமியின் விருது - ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்டது. 1979 கவுரவ டாக்டர் பட்டம் - கேரளா பல்கலைக்கழகம் 1980 'தனிப்பெரும் கலைஞர்' - தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம். 1981 'காளிதாஸ் சம்மான்' - மத்தியப்பிரதேச அரசு (பாரதப் பிரதமரால் வழங்கப்பட்டது)
******
சிரிக்கவைப்பார் செம்மங்குடி
சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் வல்லவர் செம்மங்குடி. அவருக்கு வயதாகிப் பாட முடியாமல் போனாலும் எல்லாச் சபாக்களும் அவரைத் தலைமை தாங்க அழைத்ததற்கு அவரது பேச்சாற்றல் ஒரு காரணம். ஒருமுறை அவர் பாபநாசம் சிவன் சங்கீத சபாவின் இசைவிழாவைத் துவக்கி வைக்க மடிப்பாக்கத்திற்கு வந்திருந்தார். மனித உடலில் எங்கெல்லாம் தசை மற்றும் எலும்புகள் உள்ளனவோ அங்கெல்லாம் வலியேற்படுத்தி விடுமளவிற்குப் பல்லாங்குழி போல இருக்கும் மடிப்பாக்கம் வரும் சாலைகள். பாவம் மிகச் சிரமப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறார் செம்மங்குடியார். அவர் சொன்னதைக் கேளுங்கள்:
"இராவணன் ரொம்பச் சிரமப்பட்டுச் சீதையை இலங்கைக்குத் தூக்கிக் கொண்டு போகவேண்டிய அவசியமே இல்லை. பேசாமல் இந்த மடிப்பாக்கத்தில் கொண்டு ஒளித்து வைத்திருந்தால் போதும். ஹனுமான் மட்டுமல்ல, அந்த ராமனாலேயே கூட சீதையைக் கண்டுபிடித்திருக்க முடியாது".
தொகுப்பு: கேடிஸ்ரீ தகவல்: மதுரபாரதி |
|
|
More
முரசொலி மாறன் மரணம்
|
|
|
|
|
|
|