Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
வேனில் வந்தது
- நாரண துரைக்கண்ணன்|டிசம்பர் 2003|
Share:
பிரபஞ்சம் முழுவதும் சௌந்தரிய உபாசனையில் ஆழ்ந்திருப்பதுபோல் காணப்பட்டது அந்நள்ளிருட் பொழுதின் நிலைமை. வானத்து உச்சியில் வளர்பிறைச் சந்திரன் வெண்ணிலவைச் சிந்தவிட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தான்; சந்திரிகையின் அவ்வொளியிலும் செடி கொடி மரங்கள் தளிர்விட்டுத் தழைத்துப் பசுமைப் போர்வையைப் புதிதாகப் போர்த்து அழகுறச் செய்த மலைகளும் பள்ளத் தாக்குகளும் இடைவெளிகளும் வேனிற் காலத்தின் தொடக்கத்தை விகசித்துக் காட்டிக் கொண்டிருந்தன. கடல் அலை களின் ஆரவாரம் காதைத் துளைக்கக் கூடிய விதமாயிருந்தது. தென்றற் காற்று ஜிலுஜிலுவென வீசிக் கொண்டிருந்தது.

இவ்வெளியுலக விசித்திரங்களெல்லாம், அறைக்குள் படுத்திருந்தவாறே ஜன்னல் வழியாக வானவெளியைப் பார்த்துக் கொண்டிருந்த வள்ளியமைக்கு மிகுந்த வேதனையை அளித்துக் கொண்டிருந்தன. நிறைவு பெறாதிருந்த சந்திரன் மேகங்களால் மறையும்போது இருள்கவிவதும், விடுபட்டுப் பிரகாசிக்கையில் ஒளி காலுவதுமாய் விந்தை புரிந்து கொண்டிருந்த ஆகாயம் அவளுக்கு அப்போதுள்ள குழப்ப நிலையில் விளங்காத புதிராயிருந்தது போலும்! தண்ணிய நிலவொளி அவளுடைய உடம்பு முழு வதிலும் பசலைபடரச் செய்ததோடு விரக தாபத்தையும் உண்டு பண்ணியது. குளுகுளுவென ரமணீயமாக வீசும் தென்றற் காற்று அவளுடைய வறண்ட உள்ளத்தில் கிளுகிளுப்பை உண்டாக்கியது. அவளுக்கு அவ்வுணர்ச்சியைத் தாங்க முடியவில்லை. குளிரினால் நடுங்குவது போல் அவள் மெல்லிய தேகம் கிடுகிடுவென நடுங்கியது. காற்றினால் தென்னம் ஓலைகளும் மாவிலைகளும் இனிய ஓசையுடன் சலசலப்பதையும், பூஞ்செடிகளும் கொடி களும் அழகாக அசைந்தாடுவதையும் கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. கூடுகளில் அடங்கியிருந்த பறவையினங்கள் நிலவொளியைப் பகலென நினைத்தோ என்னமோ திடீரென எழுந்து பறப்பதும், மரக்கிளைகள் மீது உட்காருவதும் மீண்டும் கூண்டை அடைவதுமாகக் கீச்சிட்டு இன்னிசையை எழுப்புவதுகூட அவள் செவிகளுக்கு நாராசமாயிருந்தது.

இளவேனிலின் இங்கிதக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் அச்சமயம் அவளுக்குக் களிவெறி யூட்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதுவரை அடக்கங் காரணமாக ஒடுங்கியிருந்த உணர்ச்சிகளெல்லாம் மூர்த்தணியமாக மேலோங்கித் தலை விரித்தாடின. இவ்விதம் தனக்கு வெறியூட்டும் வானவிசித்திரங்களை வள்ளியம்மை மேலும் பார்க்க விரும்பாதவள் போல் போர்வை யைத் தலைவரை இழுத்து முகத்தைக்கூட மூடிக்கொண்டாள். அப்போதும் அவள் உடம்பிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட வெதுவெதுப்பு அடங்கவில்லை. நிலவின் வெப்பத்தால் உடம்பனைத்தும் கொப் பளித்துவிட்டது போன்ற வேதனையுணர்ச்சி தாங்காதவள் போல அவள் 'ஊம்' கொட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்நிலைகூட நீடிக்கவில்லை. போர்வையை எடுத்து உதறி யெறிந்துவிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

அச்சமயம் அவள் கண்களை ஒரு சிறு காட்சி கவரலாயிற்று. முற்றத்தில் வளர்ந்திருந்த முல்லைக் கொடியொன்று அது படர்வதற்கென நட்டிருந்த மூங்கில் கறையான் அரித்ததால் உளுத்துப் போய்விட்டதால் மேலே படர்வதற்குத் தக்க கொழு கொம்பு கிடைக்கப் பெறாமல், ஆதாரமில்லாமல் காற்றில் அலமந்து கொண்டிருந்தது. அது சிறிது தூரத்தில் வளர்ந்தோங்கியிருந்த மாமரக் கிளையைத் தாவிப் பிடித்துத் தழுவிக் கொண்டு மேல் படர அடிக்கடி தன் தளிர்க் கரங்களை நீட்டிக் கொண்டிருந்தது. கடைசியாக அதன் முன்னே நீட்டிக் கொண்டிருந்த ஒரு கிளை காற்றினால் சிறிது இதன் பக்கமாகச் சாயவும் அது விடாமுயற்சியோடு தாவிப் படர்ந்து அதை நன்றாகத் தழுவிக் கொண்டது.

முல்லைக் கொடியின் இச்செயல் வள்ளியம்மையின் இருண்ட இருதயத்தில் ஒரு மின்னல் கீற்றை யுண்டாக்கிற்று. அவள் தனக்குள்ளாக ஏதோ முடிவுக்கு வந்தவள் போல், படுக்கையை விட்டு மெள்ள எழுந்தாள். ஓசை படாமல் அறைக்கதவைத் திறந்து கொண்டு அவள் வெளியே தலையை நீட்டி இருபுறமும் பார்த்தாள். பின் அவள் அடிமேலடி வைத்துப் பைய மேல்மாடிக்கு வந்தாள். பலகணியை யடுத்திருந்த அறையொன்றைக் குறிப்பாக நோக்கினாள். அவள் கண்கள் ஆச்சரியத்தாலும் அச்சத்தாலும் அகல விரிந்தன. ஆனாலும், சிறிது நிதானித்து அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பூனை போல் பம்மிப் பதுங்கிச் சுவர் ஓரமாகவே நடந்து கதவண்டை போய், திறந்திருக்கும் அவ்வறையினுள் நோக்கினாள்.

உள்ளே ஒரு பிரம்பு சாய்வு நாற்காலி மீது கலியாண சுந்தரம் சாய்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கையில் பிடித்திருந்த புத்தகமொன்று மார்பின் மீது விழுந்து கிடந்தது. 'படித்துக் கொண்டிருந்தவர் அப்படியே தூங்கிவிட்டார் போலிருக்கிறது. அதனால்தான் விளக்கையும் அணைக்காமல் கதவையும் தாளிடாமல் போய்விட்டார். ஊம்; அது நமக்கு வசதியாய் விட்டது. நம் விருப்பம் நிறைவேறுவதற்குச் சாதகமாகத் தான் நிலைமை இருக்கிறது' என்று அவள் எண்ணி மகிழ்ந்தாள். இம்மனக் குதூகலத்தோடு அவள் பயத்தைச் சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு அவன் அருகே சென்றாள். அவன் பக்கத்தில் போய் நின்று அவனைச் சிலவிநாடிகள் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள். 'ஐயோ, எப்படியிருந்தவர் எப்படியாய் விட்டார்? உடம்பு கட்டுத் தளர்ந்து உருக்குலைந்தல்லவா போயிருக்கிறார்? சமூக சீர்திருத்தம், சமதர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு ஊரிலிருக்கப்பட்ட வம்பு வேலைகள் எல்லாவற்றையும் தன் தலைமேல் தூக்கிப் போட்டுக்கொண்டு பாவம், ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார் மனுஷன்' என்று அவளையறியாமலே அவள் வாயிலிருந்து அனுதாப மொழிகள் வந்தன.

பின் அவள் பார்வை கலியாண சுந்தரத்தின் பரந்த மார்பு மீது கிடந்த புத்தகத்தின் மேல் விழுந்தது. என்ன புத்தகத்தை அவ்வளவு சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் ஆவலோடு பார்த்தாள். 'சோவியத் ரஷ்யாவும் உலக நாடுகளும்' என்று அப்புத்தகத்தின் மீது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

'அட ஆண்டவனே! இன்னுங் கூடவா இந்தச் சோவியத் பைத்தியம்? அந்தக் கட்சியின் கொள்கைக்காகப் பாடுபடப் போய்த் தானே, இவர் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகித் தலைமறைவு வாழ்க்கை நடத்த நேர்ந்திருக்கிறது? இதனால் எவ்வளவோ கஷ்டங்களும், துன்பங்களும் அனுபவித்தும் இவருக்கு இன்னும் இந்தக் கிறுக்கு போக மாட்டேனென்கிறதே!' என்று அவள் தனக்குத் தானே கூறி அங்கலாய்த்துக் கொண்டாள்.

வள்ளி குறிப்பிட்டதுபோல், கலியாண சுந்தரம் ஒரு கம்யூனிஸ்ட்தான். அரசாங்கத்தின் அடக்கு முறைப் பாணத்துக்குத் தப்பித் தலைமறைவாய் நடமாடிக் கட்சியின் வேலைத் திட்டங்களைத் தன்னால் முடிந்தவரை செய்துவரும் பேர்வழி. சென்னை நகரப் போலீஸாரின் வேட்டைக்கு அகப்படாமல், செங்கற்பட்டு, தென்னாற்காடு, தஞ்சாவூர், திருச்சி, மதுரை முதலிய ஜில்லாக்களிலெல்லாம் சஞ்சாரம் செய்து கடைசியாக இப்போது திருநெல்வேலி ஜில்லாவில் புகுந்து தன் சகோதரி வாழ்க்கைப்பட்டிருக்கும் திருச்செந்தூருக்கு வந்திருந்தான்.

போலீஸ் வேட்டைக்குப் பலியாகக் கூடிய அபாயகரமான வாழ்க்கையை இவன் நடத்துவதை இவனுடைய சகோதரி மீனாட்சியம்மையும், அவள் கணவர் செந்தில் நாயகம் பிள்ளையும் விரும்ப வில்லை. அவன் அடர்த்தியாக தாடி மீசையை வளர்த்துக்கொண்டு முஸ்லிம் உடையில் வந்ததைக் கண்டதுமே, போலீஸார் கண்ணுக்கு அகப்படாமல் தப்பவே இவ்வேஷம் போட்டு வந்திருக் கிறான் என்று அவன் அத்தான் ஒருவிதமாகப் புரிந்து கொண்டார். அத்துடன், அவன் வாயிலாக விஷயமனைத்தையும் விசாரித்து அறிந்து கொண்டுவிட்டார் அவர்; ஆதலால் அவனைச் சிறிதுகாலம் வரை அங்கேயே இருக்கும்படி அவர் வற்புறுத்திக் கூறி நிறுத்திக் கொண்டார். சில நாட்கள் இங்கு தங்கியிருந்தால் அவன் மனதை எப்படியாயினும் மாற்றிச் சர்க்காருக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுக் கம்யூனிஸ்டு கட்சிக்கே தலைமுழுக்கு போட்டுவிடச் செய்யலாம் என்பது அவர் நம்பிக்கை. அந்தப் பிராந்தியத்தில் அவர் செல்வாக்கு வாய்ந்த பிரமுகராயிருந்ததால் அவர் உதவியை நாடிவரும் சட்டசபை அங்கத்தினர்களை, மந்திரிகளைப் பிடித்து அவனுக்கு மன்னிப்பு அளிக்கச் செய்து விடலாம் என்றும் அவர் எண்ணங் கொள்ளலானார்.

கலியாண சுந்தரமும் குழப்பமான நிலையில் தான் இருந்தான். கம்யூனிஸ்டு கட்சி சமீபகாலத்தில, ஜோஷி கோஷ்டியென்றும், ரணதேவ் கோஷ்டியென்றும் இரு பிரிவாகப் பிரிந்திருந்தது. கலியாண சுந்தரத்திற்கு ஜோஷியின் கொள்கை பிடித்திருந்தது. அதில் நியாயமிருப்பதாகவும், அதனால் கம்யூனிஸ்டு கட்சிக்கு மேலும் பலமுண்டாகுமென்றும் அவனுக்குத் தோன்றியது. ஆனால், கட்சியில் ஆதிக்கம் பெற்றிருந்த ரணதேவ் கோஷ்டியினர், கலியாண சுந்தரத்தின் இக்கருத்தையறிந்து அவனை வெறுக்கலாயினர். அவனைத் துரோகியென்று கூட்டத்திலும் பத்திரிகை களிலும் தூற்றலாயினர். தான் கட்சிக் கொள்கைக்காக உண்மையாகப் பாடுபட்டு வந்தும், அவர்கள் இவ்விதம் தூஷிப்பது இவனுக்கு மிகவும் மன வருத்தத்தையளித்தது. ஒரு பக்கம் அரசாங்க அடக்கு முறை; மற்றொரு பக்கம் கட்சியினர் கொடுமை; இவற்றால் இவன் மனந் தளச்சியடைந்தது. 'கட்சிக்கு உண்மையாகப் பாடுபட்டும் என்ன பயன்? வீண் ஏச்சும் பேச்சும் தானே! அத்தான் சொல்வதுபோல் அரசாங்கத்துக்கு மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்தினால் என்ன? நம் கட்சிக் கொள்கை எங்கே போகிறது? கட்சியிலிருந்து வேலை செய்தால்தானா? வெளியிலிருந்தே நம்மால் முடிந்தவரை சோவியத் கொள்கையை மக்களிடையே பரப்பி வந்தால் போகிறது' என்றும் அவன் பலவிதமாக எண்ணலானான்.

ஆனால், கலியாணசுந்தரம் இதுவரை எவ்வித முடிவுக்கும் வரவில்லை. அவன் இது சம்பந்தமாகத் தனக்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த குழப்பமான நிலையில்தான், வள்ளியின் கடாட்சம் அவன் மீது விழுந்தது.

வள்ளியம்மை சுவை சுவையான பட்சணங்களெல்லாம் வைத்திருக்கும் மிட்டாய்க் கடையைப் பார்த்துச் சப்புக் கொட்டி நிற்கும் குழந்தை நிலையில் இருந்தாள், உறக்க நிலையில் கலியாண சுந்தரத்தைப் பார்க்கப் பார்க்க அவள் உடம்பும் உள்ளமும் முன்னை விடப் படபடத்தது. அவனை அப்படியே வாரியெடுத்து தழுவிக் கொள்ள வேண்டுமென்று அவள் துடித்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவ்விதம் செய்ய அவளுக்குத் துணிவு ஏற்படவில்லை. எனவே, அவள் போய் விசையை அழுத்தி விளக்கை அணைத்தாள். அடுத்துப் பரவிய இருளில் அவள் உள்ளம் ஒரு ஆறுதலைக் கண்டது. அவ்விருளை ஊடுருவி கருங் கண்களால் கலியாண சுந்தரத்தை நோக்கினாள். விளக்கு அணைந்தவுடனே அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சிறிது நேரம் சென்ற பின்னரே, அவள் கட்புலனுக்குக் கலியாண சுந்தரம் படுத்திருக்குமிடமும் மற்றப் பொருள்களும் ஒருவிதமாகப் புலனாயின. இருளில் தான் செய்வதை யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தோடு, அவள் கலியாணசுந்தரத்தைத் தொட முயன்றாள். இருளில் தடவிக் கொண்டே போய் அவள் அவனைத் தொட்டும் விட்டாள்.

இவ்விதம் அவனைத் தீண்டியதால் ஏற்பட்ட சுகானுபவம் அவளை இன்ப போதையில் ஆழ்த்தியது. ஆகவே, அவள் துடிதுடிப்போடு அவன் படுத்திருந்த சாய்வு நாற்காலிப் பக்கம் முழந்தாளிட்டு அமர்ந்து அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமிடுவதற்கு அவனுடைய முகத்தண்டை தன் முகத்தைக் கொண்டு போனாள்.

இதற்குள் ஸ்பரிச உணர்ச்சி தட்டுப் பட்டதோடு, தன் மீது மூச்சு படுவதையும் துயிலில் உற்று உணர்ந்த கலியாண சுந்தரம் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். ''யார் அது!'' என்று கேட்டவாறு பதறியெழுந்தான். வள்ளியம்மை விதிர் விதிர்த்துப் போய்விட்டாள். அந்தப் பயத்தில் பின் புறமாகவே சாய்ந்து விழப்போனாள்; ஆனாலும் அவள் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.

கலியாணசுந்தரத்தின் மார்பின் மீது கிடந்த புத்தகம் கீழே விழும் சப்தத்தை அவள் செவியுற்றதன் வாயிலாக அவன் எழுந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். அடுத்து அவன், ''யார் அது?'' என்று உரக்கக் கேட்கலானான்.

இவன் குரலோசை கேட்டுக் கீழே படுத்துறங்கும் அண்ணனும் அண்ணியும் விழித்துக் கொள்ளப் போகிறார்கள் என்று அவள் பயந்தாள். ஆகவே அவள் அவன் வாயைப் பொத்த முயன்றாள். ஆனால் அவள் கைகள் அவ்விதஞ்செய்யத் துணியவில்லை.

ஆகவே, அவன் யார் அது என்று கேட்டு மீண்டும் சத்தம் போடாதவாறு செய்ய, ''ஏன்? நான் தான்'' என்று தட்டுத் தடுமாறி மெள்ளக் கூறினாள்.

"நான் தான் என்றால்?" என்று அவன் அதட்டிக் கேட்டான்.

குரலைக் கேட்டுக் கூடப் புரிந்து கொள்ளாமலிருக்கிறானே என்ற ஆற்றாமையோடு, "என்னைத் தெரியவில்லையா, அத்தான்?" என்று வினாவினாள்.

இது கேட்டு, கலியாணசுந்தரம் பிரமித்துப் போய்விட்டான். திருடனோயிருக்குமோ என்று எண்ணித் துடித்துப் பதைத்து எழுந்த அவன் யாரோ பெண் பேசுவதைக் குரலினால் அறிந்து விதிர்ப்புற்றுப் போனான். யார் என அறியும் ஆவல் தூண்ட அவன் எழுந்து விளக்குப் போடும் விசையைத் தட்டப் போனான். இதை எவ்விதமோ உணர்ந்த வள்ளியம்மை, "லைட்டைப் போடாதீர்கள் அத்தான்" என்று கூறித் தடுக்கலானாள்.

அவனுக்குத் திகைப்புத்தான் அதிகமாயிற்று. "ஏன் விளக்கைப் பொருத்த வேண்டாமென்கிறாய்? நீ யார்?" என்று கேட்டான்.

வள்ளியம்மை வியப்புத் தாங்காமல், "என்னை இன்னும் கண்டுகொள்ள முடியவில்லையா?..."என்று கேட்டாள்.

எரிச்சலோடு, "தெரியாததனால் தான் கேட்கிறேன்."

"உங்கள் மைத்துனியை உங்களுக்குத் தெரியவில்லையா?"

"மைத்துனியா?..."

"ஆம். உங்கள் சகோதரியின்..."

இதுவரை மேகக் கூட்டத்தில் மறைந்திருந்த சந்திரன் இச்சமயம் வெளிவந்து பிராகாசிக்கவே, ஜன்னல் வழியாக அறையினுள் சிறிது வெளிச்ச முண்டாயிற்று.

கலியாண சுந்தரத்துக்கு இன்னமும் வள்ளியம்மையை இனங்கண்டு கொள்ள முடியவில்லை. ஆதலால், நிலவொளியில் அவளைக் கூர்ந்து நோக்கி இன்னாரென அறிய முயன்றவாறு, "சகோதரியின்..." என்று கேட்டு நிறுத்தினான்.

வள்ளியம்மை, "...நாத்தி..." என்றாள்.

"நாத்தியா?...." என்று கலியாணசுந்தரம் ஆச்சரியத்தோடு கேட்டான்.

வள்ளியம்மை, "ஆம்; வள்ளி" என்று தன் பெயரையும் சொல்லலானாள்.

கலியாண சுந்தரம் இப்போதுதான் அவளை இன்னார் எனச் சரியாகப் புரிந்து கொண்டவன் போல, "யார்? வள்ளியா?..." என்று துள்ளிக் குதித்தவாறு கேட்டான்.

வள்ளியம்மை அவனிடம் ஏற்படும் மாறுதல்களையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

கலியாண சுந்தரத்துக்குப் பிரமை தெளிய, சில விநாடிகளாயின. வள்ளியென்றதும், மூன்று வருஷங்களுக்கு முன் வைதவ்ய கோலத்தில் பார்த்த வள்ளியம்மையின் உருவம் அவனுடைய அகக் கண்முன் வந்து நின்றது. தெளிவாகத் தெரியாக நிலவொளியில் தன்முன் நிற்கும் உருவத்தைக் கூர்ந்து நோக்கினான் அவள்தானா என்று அறிய. உருவச்சாயல் ஏறக்குறைய அப்படியே தானிருந்தது; முன்பு வெள்ளைப் புடவை கட்டியிருந்த அவள் இப்போது நெருப்புப் போன்ற நிறமுடைய சிவப்புச் சேலை உடுத்தியிருந்தாள்.

முன் கோதப்படாது தாறுமாறாகக் கலைந்திருந்த கூந்தலை இப்போது மழுங்க வாரி அழகாக அள்ளிச் செருகியிருந்தாள். முன்பு தூசி படிந்த அழகிய ஓவியம் போல் இருந்த அவள் தோற்றம் இப்போது புது வர்ணம் தீட்டப்பட்டது போல் காணப்பட்டது. ஆனால், முன்பு இளமையழகு துள்ளி விளையாடிக் கொண்டிருந்த அவள் முகத்தில் இப்போது கால தேவனின் காலடித் தழும்பு பதிந்திருந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று நாற்குணங்கள் கொலுவீற்றிருக்க கம்பீரமாகக் காணப்பட்ட பெண்ணரசி இப்போது காவலற்ற ராணிபோல் காணப்பட்டாள்.

ஆகவே, "அந்த வள்ளியம்மை தானா இவள்?" என்று அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ''வள்ளியம்மையா?'' என்று மனதில் நினைத்தையே வாய் விட்டும் கேட்டான் தெளிவுபடுத்திக் கொள்ள.

வள்ளியம்மை அவன் அடுத்தடுத்துக் கேட்டதனால் அரண்டு போனாள்.
கலியாணசுந்தரம் சிறிது நிதானித்துப் பின், ''ஆமாம்; வள்ளியம்மை எங்கே வந்தாய்? இங்கு ஏன் வந்தாய்? அதுவும் இந்நடு நிசியில்?....''என்று படபடப்பு அடங்காமலே கேட்டான்.

வள்ளியம்மை அவன் இப்படி கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை; ஆதலால் பதில் சொல்ல முடியாது திணறினாள்.

''எங்கே வந்தாய் என்று கேட்கிறேன்? பேசாமலிருக்கிறாயே!''

"இங்கேதான் சும்மா!"

வள்ளியம்மை அசடு வழியத் தட்டுத் தடுமாறிக் கூறினாள்.

"சும்மாவா? அதுவும் இந்த நடு ராத்திரியில்?''

வள்ளியம்மை பேந்தப் பேந்த விழித்தாள்.

"எல்லோரும் தூங்கும் நேரத்தில் நீ தூங்காமல் நான் இருக்குமிடத்துக்கு வரலாமா?..."

வள்ளியம்மையால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

"ஆடவனொருவன் தனியாக இருக்குமிடத்தில் இளம் பெண்ணொருத்தி பகலில் போவது கூடத் தவறு என்று கருதப்படுவது உனக்குத் தெரியாதா? அப்படியிருக்க, இரவில் அதுவும் பாதி இராத்திரி வேளையில்...." உணர்ச்சி மேலீட்டால் கலியாணசுந்தரத்துக்கு மேலே பேச முடியவில்லை.
வள்ளியம்மை மெளனஞ் சாதித்தாள்.

"அது போகட்டும்; நீ எதற்காக இங்கு வந்தாய்..." என்று கலியாணசுந்தரம் வற்புறுத்திக் கேட்டான்.

"வள்ளியம்மை, என்ன இப்படி மெளனஞ் சாதிக்கிறாய்? நீ முதலில் இங்கு இந்நேரத்தில் வந்ததே பெருந்தவறு. அத்துடன் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லாமல் நிற்கிறாய், சரி; சொல்லாமல் போனால் போ. நீ இவ்விடத்தை விட்டு உடனே போய்விடு...''

கலியாண சுந்தரத்தின் குரலில் கண்டிப்பு தொனித்தது.

"மீனாவோ அத்தானோ விழித்துக் கொண்டு நீ என்னுடன் இருப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? மற்றவர்கள் நினைப்பது இருக்கட்டும். உனக்கே இது நன்றாய் இருக்கிறதா? ஒரு வயதுப் பெண் அதுவும் விதந்து வாயுள்ளவள் தனியாக இருக்கும் என்னிடம் வந்து..."

மீண்டும் அவனுக்குத் தொண்டையை அடைத்தது.

வள்ளியம்மை துணிந்து பேசலானாள். 'அத்தானிடம் மைத்துனி இருந்து பேசுவது பற்றி யார் என்ன சொல்வது?"

"மைத்துனி அத்தானிடம் பேசுவதற்கு இதுதான் நேரமா..."

வள்ளியம்மைக்கு மீண்டும் வாய் அடைத்து விட்டது.

"அது போகட்டும். என்னிடம் என்ன பேச வந்தாய்? அதையாயினும் சொல்லிவிட்டுப் போ."
ஏதோ சொல்ல வாய் படபடத்தது. ஆனால் வார்த்தை வெளிவரவில்லை.

"சரி; இப்போது சொல்லா விட்டால், காலையில் சொல்; போ."

"இருங்கள், அத்தான்"

"பின் என்ன?"

"அத்தான்..."

"ஊம்" என்று கேட்டவன், "இரு, விளக்கு போடுகிறேன். இருட்டிலேயே நாம்..."

"வேண்டாம் அத்தான்" என்று வள்ளியம்மை அவன் கரத்தைப் பற்றினாள். பற்றிய கை நடுங்கிற்று.

"ஏன்?" என்றான் அவள் செய்கையினால் துணுக்குற்ற கலியாண சுந்தரம்.

"இப்படி இருளில் இருப்பதே ஆறுதலாயிருக்கிறது..."

அவள் கைகள் அவனுடைய தோள்களைப் பற்றலாயின.

இதற்குள் கலியாணசுந்தரம் அவளுடைய அப்போதைய நிலைமையை ஒருவாறு புரிந்து கொண்டான்.

வள்ளியம்மை உணர்ச்சி மேலிட்டவளாய், "அத்தான், உங்களிடம்..." என்று கூறியவாறு அவன் மீது சாயலானாள்.

மேகங்களினூடே நுழைந்து ஓடிக் கொண்டிருந்த சந்திரன் திடீரென வெடித்து வான முழுதும் சிதறுவது போன்ற பிரமை கலியாண சுந்தரத்துக்கு ஏற்பட்டது. அவன் மூளையின் மடிப்புகளில் ஒடுங்கியிருந்த பழைய நினைவுகளும் பீறிட்டு வெளிப்படலாயின.

தங்கை மீனாட்சிக்கு மாப்பிள்ளை பார்க்க, திருநெல்வேலிக்குத் தன் பெற்றோர் போகப் போகிறார்கள் என்றதும், கோடை விடுமுறைக்குப் பட்டணத்திலிருந்து வந்திருந்த கலியாணசுந்தரமும் அவர்களுடன் புறப்பட விரும்பினான். தன் சகோதரிக்குப் பார்க்கும் மணாளன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. மதுரையிலிருந்து ரயிலி லேயே புறப்பட்ட அவர்கள் திருநெல்வேலிக்குப் போய் அங்குள்ள உறவினர் சிலருடன் பிள்ளையிருந்த திருச்செந்தூருக்குப் போயினர். கலியாணசுந்தரத்துக்கு மற்றெல்லோரையும் விட, மாப்பிள்ளையை மிகவும் பிடித்துவிட்டது. அத்துடன், மாப்பிள்ளையின் தங்கையையும் அவனுக்கு, ரொம்ப ரொம்ப பிடித்துப் போய்விட்டது.

அவன் தன் பெற்றோருடனும் உற்றாருடனும் மாப்பிள்ளையைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கையில், தங்களை உபசரிக்க வந்த மாப்பிள்ளையின் தாயாருடன் சேர்ந்து திருமணத்துக்கு நாட்குறித்து முடிவு செய்ய வந்த சமயத்தில் சிற்றுண்டி முதலியவைகளை பரிமாறிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் கண்டான். பூங்கொடிதான் பெண்ணுருக்கொண்டு நடமாடுகிறதோ என்று எண்ணும்படியாக இடை துவள மென்னடை நடந்து வந்த அந்நங்கை அவள் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்து விட்டாள். தேனில் விழுந்த ஈ போல அப்பெண்ணும் இவனைப் பார்க்கலானாள். இவனைப் போல் அவள் இவனுடைய கம்பீரத் தோற்றத்திலேயே கருத்தைச் செலுத்தாமல், உடனடியாகக் கவனத்தை வேறு விஷயங்களில் திருப்பிவிட்டாள். இவன் அவளையே வெறித்து நோக்கிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கண்டுவிட்ட அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டும், கழுத்தைச் சொடுக்கிக் கொண்டும் உட்பக்கம் போய்விட்டாள். அதற்கப்புறம் அவன் பார்வையில் அவள் படவேயில்லை. ஆனால் கலியாண சுந்தரம் அவள் யார் என அறியத் துடித்தான். சில விநாடிகளில் அப்பெண் வேறுயாருமில்லை; மாப்பிள்ளையின் உடன் பிறந்தவள்தான் என்ற தகவல் அவனுக்கக் கிடைத்தது. ஆனால், அவள் ஒரு இளம் கைம்பெண் என்பதான செய்தி அவனுக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

அவள் பாலிய விதவை என்று அவ்வீட்டார் சொன்ன பிறகு தான் கலியாண சுந்தரத்துக்கும் பிறர்க்கும் தெரிந்தது. பொதுவாகப் பார்க்கையில், அவள் பருவம் வந்த மங்கை போலவே மங்களமாகக் காணப்பட்டாள். நெற்றியில் பொட்டில்லாத குறையைக்கூட அவளுடைய செளந்தரியம் சுட்டிக்காட்டாமல் மறைத்து விட்டது. அவளுடைய முகசோபையில் கலியாண சுந்தரம் சொக்கிவிட்டான் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் அவன் சமூக சீர்திருத்தவாதியாதலால் அவள் விதவை என்பதை அதிகமாகப் பாராட்டவில்லை.

அவள் மாப்பிள்ளையிடம் வார்த்தையாடிய சிறிது நேரத்தில் அவனுடைய நற் குணத்தையும் பரந்த மனோ பாவத்தையும், தீவிர கொள்கையையும் அறிந்து கொண்டு விட்டானாதலால், இவ்விஷயத்தில், செந்தில் நாயகத்தையும் இணங்க வைத்து விடலாம் என்று நம்பினான். அவன் சொன்னால் அவன் தாய் தந்தையரும் மறுக்கமாட்டார்கள் என்றும் கருதினான். அவன் எதிர்பார்த்தது போலவே மாப்பிள்ளை செந்தில் நாயகம் பட்டதாரியில்லாவிட்டாலும் நன்கு படித்த இளைஞனாகக் காணப்பட்டதோடு, கலியாணசுந்தரத்தைப் போலவே முற்போக்குக் கொள்கைகளை உடைய வனாயிருந்தான். ஆதலால், அவன் தங்குதடையெதுவும் சொல்லவில்லை. கலியாணசுந்தரத்துக்கு தன் தங்கையைக் கொடுத்துச் சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவன் பெற்றோரை வறுபுறுத்தினான்.

கடைசி முறையாக எல்லா உற்றார் உறவினருடனும் மாப்பிள்ளையின் பெற்றோர் மீனாட்சியைப் பார்த்துவிட்டுத் கலியாணசுந்தரம், செந்தில்நாயகத்தின் தகப்பனாரிடம் வள்ளியம்மையை வதுவை செய்து கொடுக்கும் விஷயமாகக் கேட்டுவிடச் சொன்னான். இதன்படி, அவன் தந்தை சோமசுந்தரம் பிள்ளை பரமசிவம் பிள்ளையிடம் இவ்விஷயத்தைப் பிரஸ்தாபித்தபோது அவர் கேட்கக்கூடாத தொன்றைக் கேட்டது போல் ஒரே அதிர்ச்சியைத்தான் அடைந்தார். ஆயினும், சாதுரியமாகச் சமாளித்துக் கொண்டு தன் பிள்ளையைக் கேட்டு முடிவு சொல்வதாகக் கூறிச் சென்றார். பால் மணம் மாறாப் பருவத்திலேயே புருஷனை இழந்து விட்டதால், மறுபடியும் திருமணம் செய்வது தவறாகாது என்று கலியாணசுந்தரம் சொல்லிக்கொடுத்த பாடத்தை சோமசுந்தரம் பிள்ளை திருப்பி ஒப்பித்தது பரமசிவம் பிள்ளை மூளையில் நன்றாக வேலை செய்தது. அத்துடன், விஷயத்தை முழுதும் சொல்வதற்கு முன்பாகவே, செந்தில்நாயகம் இச்செய்தியைக் குதூகலமாக வரவேற்று, அவ்விதமே கலியாணஞ் செய்து கொடுத்து விடலாம் என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியது அவரையும் கோமதியம்மையையும் மேலே ஒன்றும் யோசிக்க வொட்டாமல் செய்துவிட்டது. தன் ஒரே மகளின் கதி இப்படியாய் விட்டதே என்று அவர்களுக்கும் நீண்ட காலமாக வள்ளியம் மையைப் பற்றி வியாகூலம் இருந்து கொண்டுதான் வந்தது. இந்நிலையில், தாங்கள் சிறிதும் எதிர்பாராமலே வலிய, இப்படி வள்ளியம்மையை வரித்துக் கொள்ள ஒரு பிள்ளை வருகிறானென்றதும் அவர்களுக்கு அத்தொடர்பை விட மனமில்லை. 'நமக்கிருப்பது ஒரு பெண்ணும் ஆணும் தானே! பிள்ளைக்குப் பெண் கொடுப்பவர்களே, கைம்மையாய் விட்டிருக்கிறது என்பதையும் கருதாமல் நம் பெண்ணையும் கேட்கும்போது, வேறு தடை என்ன இருக்கிறது? உறவினர் சிலர் ஒருவேளை முணுமுணுக்கலாம். ஒரு முறை தாலியறுத்துவிட்ட பெண்ணுக்கு மறுபடியும் கலியாணஞ் செய்கிறார்களே என்று. முணுமுணுத்துவிட்டுப் போகட்டுமே! நமக்கு இன்னும் என்ன வேறு பெண்களும், பிள்ளைகளுமா இருக்கின்றனர், கலியாணஞ் செய்யப் பின்னால் கஷ்ட மேற்படுமே என்று எண்ணுவதற்கு? பாவம். நம் ஒரே பெண் மற்ற மங்கையரைப் போல விவாகஞ் செய்துகொண்டு வாழ்க்கை யின்பத்தை நன்றாக அனுபவிக்கட்டும். இல்லாவிடில் விதவை என்ற காரணத்தால் உற்ற வயதுள்ள பெண் தன் சகோதரன் மனைவியுடன் இன்ப வாழ்க்கை நடத்துவதைப் பார்த்து மனமருகிக் கொண்டல்லவா இருப்பாள்?' என்று எண்ணி அவர்கள் தங்கள் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டனர்.

எதிர்ப்பு ஏற்படக் கூடிய இடங்களிலெல்லாம் யாதொரு தடங்கலும் ஏற்படாமல் இவ்வளவு தூரம் எல்லாம் செளஜன்யமாகக் கூடி வந்தும், கடைசியில் கலியாண சுந்தரத்தின் எண்ணம் ஈடேறவில்லை. யாரிடமிருந்து ஆட்சேபம் வராதென்று பொதுவாக எல்லோரும் எண்ணினார் களோ அந்த வள்ளியம்மையிடமிருந்து பலமான எதிர்ப்பு வந்தது. கலியாண சுந்தரத்தை மட்டுமல்ல; மற்றெல்லோரையுமே அதிர்ச்சி கொள்ளச் செய்துவிட்டது.

கோமதியம்மை முதலில் வள்ளியம்மையிடம் அவள் கலியாண விஷயத்தைக் கூறியபோது, தன் மகள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்பாள் என்று நம்பியே சொன்னாள். தாய் வாயிலாக இச் சமாசாரத்தை செவியுறுகையில் வள்ளியம்மையின் உள்ளம் ஒரு கணம் களிகொள்ளத்தான் செய்தது. கலியாண சுந்தரத்தின் கம்பீரத் தோற்றமும் அழகிய வதனமும் அவள் கண் முன் சிறிது நேரம் களி நடம் புரியத்தான் செய்தது, ஆனால், அடுத்த சில விநாடிகளுக்கெல்லாம் அவளுடைய செம்மையுள்ளம் அச்சிறு சலனத்தையும் சபலத்தையும் சமாளித்து விட்டது.

"எனக்கா கலியாணம்? என்ன அம்மா, பரிகாசஞ் செய்கிறீர்களா?" என்று அவள் நிதானந் தவறாமல் கேட்டாள்.

"பெற்ற மகளிடமா பரிகாசம்?"

"பின்னே!"

"உண்மைதான், வள்ளி! சம்பந்தி வீட்டாரின் கோரிக்கைக்கு அப்பாவும் அண்ணாவும் சம்மதித்து விட்டார்கள்."

"அது எப்படியம்மா சம்மதங் கொடுத்து விடுவார்கள்? நான் ஏற்கனவே கலியாணமானவள்..."

"அட, அந்தப் பொம்மைக் கலியாணத்தையா சொல்கிறாய்?" என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தார் பரமசிவம் பிள்ளை. "உனக்கு விவரந் தெரியாத சிறு வயதிலே, உன் அத்தை தான் கண்ணை மூடுவதற்கு முன் தன் பிள்ளையின் கலியாணத்தைக் கண்ணால் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்று சொன்னதற்காகச் செய்து வைத்தோமே! அதைப்போய்..." என்று கூறி முடிப்பதற்குள், கோமதியம்மை, "அது கூட என்ன ஒரு மாத வாழ்வு தானே! இன்றோ நாளையோ என்றிருந்த கிழவி குத்துக் கல்லுப்போல் உட்கார்ந்திருக்க பன்னிரெண்டு வயதுகூட நிரம்பாத செல்லையா பெரியம்மை போட்டு குளிர்ந்தல்லவா போய்விட்டான்? அந்தக் கொள்ளையைப் போய்க் கலியாணம் என்கிறாயே!..." என்று ஆற்றாமையோடு சொன்னாள்.

"அது என்னமோ அம்மா, எனக்கு ஒருமுறை கலியாணமாய்விட்டது. மறுபடியும் வந்து..." வள்ளியம்மை மேலே சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.

பெற்றோர் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்; வள்ளியம்மை அவர் களை ஏறிட்டுப் பார்த்து, "ஆமாம் நம்ம சாதியிலே அறுதலிக்கு மறுபடியும் விவாகம் செய்கிற வழக்கம் உண்டா?..." என்று கேட்டாள்.

இக்கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் பரமசிவம்பிள்ளையும், கோமதியம்மையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"அப்படி இல்லாதபோது எனக்கு மட்டும் நீங்கள்..."

இத்தருணத்தில் தற்செயலாக அப்பக்கம் வந்த செந்தில் நாயகம் தங்கையின் பேச்சைக் கேட்டு அறைக்குள் நுழைந்தான். அவனும் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டான்.

"நம்ம பக்கத்தில் மறுமணஞ் செய்கிற வழக்கம் இன்னும் சரியாக ஏற்படவில்லையானாலும் நம்ம ஜில்லாவை அடுத்துள்ள நாஞ்சில் நாட்டில் இது சகஜமாய்ப் போய்விட்டது. அங்கு நம்மவர்கள் தானே அதிகமாக."

வள்ளியம்மை, ''அங்கு நம்மவர்கள் எல்லோருமே விதவைகளுக்குக் கலியாணஞ் செய்வதில்லையே! மலையாளிகளைப் பார்த்த நம்மில் ஒரு சிலர்தான் அமங்கலிகளுக்கு விவாகஞ் செய்கிறார்கள். அப்படி செய்பவர்களை நம்மவர் மருமக்கத் தாயத்தைச் சேர்ந்தவர்களெனத் தாழ்வாக மதிக்கிறார்கள் என்றெல்லாம் அப்பாவே சொல்லியிருக்கிறாரே.'' என்று சாவதானமாகச் சொன்னாள்.

செந்தில் நாயகம், ''அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது. வள்ளியம்மை! இப்போது எல்லாமே தலை கீழ் புரட்சி.''

வள்ளியம்மை வெறுப்போடு, ''இந்தத் தாந்தோன்றித் தனத்துக்கு என்னைப் பலியாக்க வேண்டாம். நீங்கள் என்ன சொன்னாலும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைம்பெண்ணான நான் மறுபடியும் கலியாணஞ் செய்து கொள்ளச் சிறிதும் இணங்க மாட்டேன்.'' என்று கூறினாள்.

அவளுடைய உறுதியைக் கண்டு செந்தில்நாயகம் கூடக் கதி கலங்கிப் போனான். ஆனாலும், ''கைம்பெண்ணாயிருப்பவர்கள் கலியாணஞ் செய்து கொள்ளக் கூடாது என்று எந்தச் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? எந்தச் சட்டத்தில் எழுதியிருக்கிறது?'' என்று தன்னைச் சமாளித்துக்கொண்டு கேட்டான்.

''அந்தச் சாஸ்திரம், சட்டமெல்லாம் எனக்குத் தெரியாது, அண்ணா! நம்ம குடும்பத்தில், சாதியில் இதுவரை இந்த மாதிரி கலியாணம் நடந்தது கிடையாது. அதனால்..."

''கன்னிப்பெண் உன்னை ஏங்கியிருக்கும்படி வைத்துவிட்டு நான் மட்டும் கலியாணஞ் செய்து கொள்வதா?...''

''என்ன அண்ணா, நீங்கள் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? சிவனே என்று என் தலையெழுத்தை எண்ணிக் காலங் கழித்து வரும் என்னை...''

''தலையெழுத்து, விதி என்று இன்னமும் அர்த்தமில்லாத பேச்சையே பேசிக் கொண்டிருக்கிறாயே! நவயுகப் பெண்கள்...''

''அண்ணா, சும்மா பேசாதீர்கள். செந்தில் முருகன் மேல் ஆணையாகச் சொல்கிறேன். நான் மறுபடியும் கலியாணஞ் செய்து கொள்ளமாட்டேன்."

இதற்குமேல் செந்தில்நாயகம் - இல்லை - பெற்றோர்தான் என்ன செய்யமுடியும்?

வள்ளியம்மை இவ்விதம் ஒரேடியாக மறுத்துவிட்ட செய்தி கலியாண சுந்தரத்துக்குப் பெரிய ஏமாற்றத்தை யுண்டுபண்ணியது. அவளுக்குத் தன்னைத் தான் பிடிக்கவில்லையோ? என்று ஒரு கணம் எண்ணினான். ''அவள் மறுபடியும் கலியாணம் வேண்டாம் என்றல்லவா சொல்லிவிட்டாளாம். அத்துடனில்லாமல், அவள், பலவிதமான நிறங்களையுடைய நூல் புடவைகளையும் பட்டுப் புடவைகளையும் விதவிதமாகக் கட்டுவதை அக்கணமே நிறுத்திவிட்டு, வயது முதிர்ந்த விதவை மாதர் உடுத்துவது போன்று வெள்ளைப் புடவைகளையே கட்டத் தொடங்கி விட்டாளாமே!'' இத்தகவல்களனைத்தும் அவனுக்கு மேன்மேலும் பிரமிப்பையே தந்தன. இழந்த வாழ்க்கையின்பத்தை மீண்டும் பெறும் சந்தர்ப்பம் வலியக் கிடைத்தும் அதை வெறுத்தொகுக்கும் இப்பெண் விசித்திரமானவள் தான் என்று அவன் கருதினான். இத்தகைய உயர்ந்த பண்பு வாய்ந்த பெண் தனக்கு மனைவியாக வாய்த்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று எண்ணியபோது, அவனுக்கு அளவிலா வேதனை யுண்டா யிற்று. இந்த மன வேதனையையும் ஏமாற்றத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. அவன் பெற்றோர் வேறு பெண்ணைப் பார்த்து மணமுடிப்பதாக ஆறுதல் கூறியது அவனுக்கு எரிச்சலைத் தான் உண்டு பண்ணியது, வள்ளியம்மை யின் நினைவை மறக்க அவன் கல்லூரிப் படிப்புடன், பொது நலச் சேவையில் முன்னைவிட அதிகமாக ஈடுபடலானான்.

வள்ளியம்மை ஆரத் தழுவியதால் உண்டான ஸ்பரிச உணர்ச்சி கலியாண சுந்தரத்தை மேற்குறித்த பழைய நினைவுகளிலிருந்து விடுபடச் செய்தது. அவன் ஆச்சரியந்தாங்காமல், ''நீ தானா வள்ளியம்மை?...'' என்று கேட்டான்.

இவ்வியப்பொலி அவளை விதிர் விதிர்க்க வைத்தது.

''என்னால் நம்ப முடியவில்லையே! என்னைக் கலியாணஞ் செய்து கொள்ள முடியாது என்று சொன்ன - மறுபடியும் கலியாணஞ் செய்துகொள்ள மாட்டே னென்று சொன்ன - வள்ளியம்மைதானா இந்த நள்ளிரவில் என்னை நாடி வந்திருப்பது?... நான் கனவுதான் காண்கிறேனா?...''

இப்பேச்சுகளைக் கேட்கக் கேட்க, வள்ளியம்மை கலியாண சுந்தரத்தைத் தழுவியிருந்த பிடி தளரலாயிற்று.

''அத்தான், உரக்கப் பேசாதீர்கள்'' என்று நடுக்கத்தோடு மெள்ளச் சொன்னாள்.

கலியாணசுந்தரம் அவள் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவாறே, ''எவ்வளவு உறுதியோடிருந்த நீ...?'' என்று கேட்டு வியப்பு மேலிட நிறுத்தினான்.

அவனுக்கு அவள்மீது இரக்கமேயுண்டாயிற்று. ''ஐயோ, வள்ளி! நீ அப்போதே என்னைக் கலியாணஞ் செய்து கொண்டிருந்தால்...! பெற்றோர் மட்டுமல்ல, உன் அண்ணா எவ்வளவு மன்றாடினார்? உனக்காகத்தான் கலியாணங் கூடச் செய்துகொள்ள மாட்டேனென்றாரே? பெரியவர்கள் வற்புறுத்தலாலல்லவா வேண்டாவெறுப்பாகக் கலியாணம் பண்ணிக் கொண்டார்? அப்படி கலியாணஞ் செய்து கொண்ட சமயத்தில் கூட உன்னைக் கடைசி முறையாக வேண்டவில்லையா? தாலி கட்டப் போவதற்கு முன், உன்னைக் கட்டிக் கொண்டு கதறினாரே! அப்போதெல்லாம் மனம் மாறாத நீ இப்போது...''

''அத்தான் போதும், இப்படி குத்திக் குத்திப் பேசி என்னைச் சித்திரவதை செய்யாதீர்கள்...என் நெஞ்சம் வேதனையால் நைந்து போயிருக்கிறது. வெந்த புண்ணில் வேல் கொண்டு குத்துவதுபோல், அதைக் குத்திச் சல்லடைக் கண்ணாக்காதீர்கள்'' என்று குறுக்கிட்டுப் பேசத் தொடங்கிய வள்ளியம்மை, ''என்னமோ அத்தான், நீண்ட நாட்களுக்குப் பின் உங்களைக் கண்டதும் என் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. அதனால்தான், இப்போது உங்களை நாடி வந்தேன்.'' என்று கூறி நிறுத்தினாள்.

''மீசையும் தாடியுமாய் வந்ததைப் பார்த்த பின்னர் தான் உனக்கு என் மீது ஆசையேற்பட்டது போலும்!... அட கடவுளே!''

இவ்விதம் வாய்விட்டுக் கூறிய அவன் மனம் 'இந்தப் பெண்கள் உள்ளந்தான் எவ்வளவு விசித்திரமானது! என்னிடம் அழகும் இளமையும் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் இவள் உள்ளம் சலனமுறவில்லை; வயதின் முரணும் வாழ்க்கைத் துன்பத் தழும்பும் ஏறித் தளர்ந்துள்ள இப்பருவத்தில் என்மீது இவளுக்கு ஒரு கவர்ச்சி' என்று எண்ணி வியந்தது.

''பெண்புத்தி பின்புத்தி தானே!'' என்றாள் வள்ளியம்மை. கலியாணசுந்தரம், ''எந்தப் புத்தியாயிருந்தாலும் நீ அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். தவறான ஒழுக்கத்தை மேற்கொள்ளக் கூடாது...''

''எதைத் தவறான ஒழுக்கம் என்கிறீர்கள்?''

''நீ இப்போது என்னை விரும்பி வந்ததை...''

''ஏன்?''

''நான் மணமானவன். உன்னைப் போன்ற பெண்ணொருத்திக்கு உரியவன் என்பது தான் உனக்குத் தெரியுமே!''

வெண்ணிலாவைப் பொழிந்து கொண்டிருந்த சந்திரனை மீண்டும் மேகங்கள் கவிந்து கொண்டன.

வள்ளியம்மை, ''இருந்தால் என்ன? அதனால், மைத்துனிக்குரிய உரிமை பறிபோய் விடுமா? என்ன!...'' என்று கேட்டுக் கொண்டே அவனை மீண்டும் நெருங்கினாள்.

கலியாணசுந்தரம் நிதானமாக, ''உள்ளத்தின் உணர்ச்சிக்கும் உடல் தினவுக்கும் அடிமைப்பட்டு களவுமுறையில் இன்பத்தை நுகர நீ சிறிதும் விரும்பக் கூடாது. அறவழியில் அடையும் இன்பம் தான் உண்மையான இன்பம். நீ இப்போது வேண்டுமானால் சொல்லு, கலியாணஞ் செய்து கொள்ளுவதாக, நாளையே உன் அண்ணாவிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன். நல்ல இளைஞனாக...''

''போதும், உங்கள் இதோபதேசம்! தாகம் எடுக்கும்போது அதைத் தணித்துக் கொள்ள ஒரு செம்புத் தண்ணீர்க்கு வழியில்லை. பின்னால், பெரிய தடாகம் கட்டித் தரப்போகிறாராம்... என் உள்ளத் தாபத்தைச் சிறிதும் உணராது பேசும் பேச்சு இது...''

''வள்ளி, நீதானா - ஒழுக்கத்துக்கு உறைவிடமாயிருந்த நீதானா - சமூக ஒழுங்கை மீறக்கூடாது என்ற உறுதியோடிருந்த நீதானா இப்படி உணர்ச்சி மீறிப் பேசுகிறாய்? ஐயோ! உன் புத்தி ஏன் இப்படிப் பேதலித்துவிட்டது? இளமை மொட்டு அவிழ்ந்து மணம் பரப்பும் சமயத்தில், வாழ்க்கையின்பத்துக்கு முள்வேலி போட்டு, மலர்ந்து காய்ந்து சருகாகி உதிரப் போகும் தருணத்தில் வேலியை எடுத்து எறிந்தால் என்ன பலன்? இவ்வளவு நாள் கன்னி மையைக் காத்த நீ இன்னும் கொஞ்ச காலம் காக்கக் கூடாதா?"

வள்ளியம்மை உணர்ச்சியற்ற பதுமை போல் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

சந்திரன் கரு மேகங்களிலிருந்து விடுபட்டு வெண்மேகங்களைக் கடந்து கொண்டிருந்தான்.

கலியாண சுந்தரம் வள்ளியம்மையைக் கனிவாக நோக்கி, ''கொஞ்சம் யோசித்துப் பார், வள்ளியம்மை. உன் விருப்பத்துக்கு நான் இணங்குவதனால், அதன் விளைவு என்னாகும் என்பதை எண்ணிப்பார். முன், எந்தக் குடும்ப கெளரவத்துக்காக மறுபடியும் கலியாணஞ் செய்து கொள்ள மாட்டேனென்று சொன்னாயோ, அந்த நம் குடும்பங்களுக்கு நீங்காக் களங்கமல்லவா உண்டாகும்? நீ இதை விரும்புகிறாயா? சொல். ஒரு கண நேர இன்பத்துக்காக, உனக்குள்ள நற்பெயர் கெடுவதா? குடும்ப கெளரவம் அழிவதா?"

வள்ளிம்மை இதுவரை மிகச் சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்த மன உணர்ச்சிகளெல்லாம் குபீரென்று பீறிட்டுக் கதறலாக வெளி வந்தன. அவள் குழந்தை போலக் குலுங்கிக் குலுங்கி அழுதவளாய், "அத்தான், நான் மகாபாவி! நான் கேவலம் சிற்றின்ப உணர்ச்சி வயப்பட்டு நாணத்தையும் பயிர்ப்பையும் துறந்து விட்டேன். என் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ள உங்களைப் பலவந்தப்படுத்தினேன். அந்தப் பாழாய்ப் போன வேனில் வந்து உறங்கியிருந்த என் பருவ உணர்ச்சியைத் தட்டியெழுப்பி விட்டது. மந்தமாருதம் என் மதியை மயக்கி விட்டது. வசந்த காலத் தொடக்கத்தில் மன்மதனை ஈசன் எரித்து விட்டதாகக் கதை பேசி ஐதிகம் புரிந்து 'காமதகனப் பண்டிகை' யென்றும், 'ஹோலி பண்டிகை' யென்றும் கொண்டாடுகிறார்களே! இந்த மக்களின் முட்டாள்தனத்தை என்னென்பது! இந்த இளவேனிற் காலத்திலல்லவா காமன் தன் சாம்ராஜ்யத்தைப் பூவுலகெங்கம் பரவச் செய்து ஆட்சி புரிந்து புள்ளையும் புழுவையும் கூடக் களிவெறி கொள்ளச் செய்கிறான்? மக்களை மாக்களினும் கேவலமாக்கிக் காமாந்த காரத்தில் வீழ்த்திக் கொடுங்கோலாட்சி புரியும் இந்தக் காமனை அடியோடு அழித்தொழிக்க அந்த முக்கண் பெருமானுக்கு ஆற்றலில்லையா?"

வள்ளியம்மையின் தெளிந்த அறிவையறிந்த கலியாண சுந்தரம் வியப்புற்று நின்றான்.

வள்ளியம்மை, ''அத்தான், பேதமையால் நான் இழைத்த இப்பெரும் பிழையை மன்னித்து விடுங்கள். புருடோத்தமராகிய உங்களுக்குத் தீமை புரிந்த இந்தப் பாவியை மன்னித்து விடுங்கள், நான் செய்த பாவத்தை மறந்தும் விடுங்கள். பரிசுத்த மூர்த்தியாகிய நீங்கள் இருக்கும் இப்புனித ஸ்தலத்தில் இந்தப் பாவி நிற்பதற்கும் அருகதையற்றவள். என் காற்றும் மூச்சும் கூட உங்கள் மீது படக்கூடாது. நான் போய் வருகிறேன், நான் புரிந்த பாவத்துக்கு என்னை மன்னிப்பதோடு, மீண்டும் இவ்விதப் பாவத்துக்குள்ளாகாது இருக்குமாறு என்னைக் காக்க வேண்டுமென்று உங்கள் தூய உள்ளத்தால் ஆண்டவனைப் பிரார்த்தியுங்கள்...'' என்று கூறியவாறே கைகூப்பி வணங்கிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.

பாவ மன்னிப்புக் கோரி அவள் பேசிய மொழிகள் கலியாண சுந்தரத்தை வெகுவாக உருக்கிவிட்டன. அவள் அயர்வோடு செல்வதைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறே அவனும் அயர்ந்து நின்றுவிட்டான். ''ஆண்டவனே! வள்ளியம்மைக்கு அமைதியை அளிப்பாயாக!'' என்று நெஞ்சம் துதித்தது.

நாரண துரைக்கண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline