Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஒரு விவாகரத்து
சிந்துஜா கதை எழுதுகிறாள்
பாறைகள்
- நித்தில்|மார்ச் 2004|
Share:
எனக்குள்ளிலிருந்து இன்னொரு உயிரா? இது என்ன அதிசயம்? மழையைப் போல, கடலைப்போல, காற்றைப்போல, நதியைப்போல, கொட்டும் அருவியைப்போல, அண்ட வெளியைப் போல ஜீவ உற்பத்தியும் அதிசயம் தானோ? ஒரு உயிருள்ள குட்டிக் கவிதையாய் உன்னுடைய சின்னச் சின்ன அசைவுகளும் என்னைச் சிலிர்க்கச் செய்கிறது. என்னில் ஜனித்து, என்னையே உரித்து வைத்து, என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட நீ யார்? உனக்கான உயிர் என் கர்ப்பப்பையில் புதைந்திருந்ததா? உன் இதழ்களின் இழுப்பில் என் முலைகள் ஊற்றாய்ச் சுரந்து எப்படி உன் பசியாற்று கிறது என்பது உனக்குத் தெரிகிறதா? உன்னைச் சுமக்க நேர்ந்த கணங்கள் கூட என்னுடைய விருப்பத்தோடுதானா? யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. யார் யாரையோ சார்ந்து யார் யாருக்காகவோ வாழ்ந்து தீர்க்க வேண்டிய என் வாழ்க்கையில் என்னை நம்பி எப்படிப் பிறக்க முடிந்தது உன்னால்? அதை நினைத்துதான் சில நேரம் நீ கண்ணீர் வர அழுகிறாயா?

நேற்றுப் பிறந்த நீ எதை நினைத்துச் சிரித்திருப்பாய் என்று உன் அப்பத்தாவைக் கேட்ட போது, சாமியெல்லாம் உன்னிடம் பேசி விளையாடும் என்றும், கண் விழித்தவுடன் இன்ன இன்னது செய் என்று சொல்லிக் கொடுக்கும் என்றும் சொல்லிப் போனாள். அப்படியென்றால் ஏதோ புரிதலோடுதான் நீ ஜீவிக்கிறாயா? நான் யாரென்று உனக்கு அந்தச் சாமி ஏதாவது சொல்லியதா?

அழுகையையும், சிரிப்பையும் சொல்லிக் கொடுத்த சாமிதான் யோசிக்கவும் கற்றுக் கொடுத்ததா? உன் அழுகையும் சிரிப்பையும் விட உன்னுடைய ஆழமான யோசனை என் கண்களில் கசிவையும், நெஞ்சில் பதற்றத்தோடு கூடிய கலவரத்தையும் உண்டாக்குகிறது. அந்தச் சாமி ஏன் என்னைப் போல் உன்னையும் கஷ்டப்படுத்த வேண்டும்?

நானே பாதுகாப்புணர்வு இல்லாமல் பல வேளை தத்தளிக்கும்போது, என்னை யார் என்று நினைத்து இவ்வளவு பாதுகாப்பாக என்னிடம் ஒட்டிக்கொள்கிறாய்? உன்னைச் சுற்றியுள்ளவர்களை உற்றுநோக்கி என்ன புரிந்துகொள்கிறாய்? உன்ன ஆக்கிரமிக்கும் பொருள்களுககு உன் மூளையில் என்ன பெயரிட்டுக் கொண்டிருக்கிறாய்? எல்லாக் கேள்விகளையும் தேக்கி வைத்துப் பேசத் தொடங்கியவுடன் ஏன், எதற்கு, எப்படி என்ற காரண காரியக் கேள்விகளை என்னிடம் கேட்டுவிடாதே! நானே என்னைச் சுற்றிய சம்பவங்களுக்கும், பொருள்களுக்கும் காட்சிகளுக்கும் விடை தெரியாமல், அறிமுகப்படுத்தியவர்களின் வார்த்தைகளையே நம்பியும் ஏற்க முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் உனக்கு என்ன செய்துவிட முடியும் என்பது உறுதியாக எனக்குத் தெரியவில்லை.

இப்போதெல்லாம் நீ உன்னைச் சுற்றிய மனிதர்களை அடையாளப்படுத்தி உன் சின்ன மூளைக்குள் ஏற்றிக் கொண்டிருக்கிறாய்! முந்தி மாதிரி இப்போது பாலுக்காய் உன் சித்தியிடம் போய் முண்டுவதில்லை. சில வித்தியாசமான ஒலிகளுக்குச் செவிகொடுப்பதும் சிரிப்பதும் என்று முடிவு செய்திருக்கிறாய். உன் அழுகையை என்னால் சகிக்க முடியாது என்பதையும் நீ தெளிவாய்ப் பயன்படுத்திக் கொள்கிறாய். எந்த மொழியும் அவசியமில்லாமல் இந்த அழுகையைக் கொண்டே உன் தேவை களைப் பூர்த்தி செய்துகொள்கிறாய். நான் இதைப் பல சோதனைகளின் மூலமும் உன்னைக் கூர்ந்து கவனிப்பதன் மூலமும் அறிந்து வருகிறேன்.

நான் புத்தக மடிப்பில் சேகரித்து வைத்திருந்த பறவைகளின் இறக்கைகள் என் கர்ப்பப்பைக்குள் உன் தலைமுடியாய் எப்படி முளைத்தது! உன் குட்டித் தலை என் விரல்களுக்குள் ஒரு சிறிய பந்தைப் போல அடங்கிவிடுகிறது. என் முன்னங் கைகளை உன் கழுத்தையும் தலையையும் சேர்த்துப் பிடித்துப் பழகிக் கொள்ளவே எனக்கு எத்தனை நாட்கள் ஆயின! அப்படி உன்னைத் தூக்கி எடுத்துப் பழகியது போல உன்னை வளர்க்கவும் பழக வேண்டும். உன்னை வளர்க்க உன்னிடமே பழகுவது என்பது எனக்கு விசித்திரமான புதுப் பாடமாகவே இருக்கிறது. உன் தலையையும், கழுத்தையும் சேர்த்துப்பிடித்து என் சம்மணமிட்ட தொடைகளில் வைத்து, என் தொடைகளை மெதுவாய் ஆட்டினால் உனக்குச் சுகமாக இருக்கிறது என்பதை நான் தற்செயலாகத்தான் தெரிந்து கொண்டேன். இப்போது நீ அழும் போதெல்லாம் அப்படியே செய்கிறேன். நீ அழுகையை நிறுத்தி விடுகிறாய்.

இந்தத் தொடையின் ஆட்டத்தை மெல்ல நிறுத்தினால் உன்னுடைய தேவையை மெல்ல மெல்லச் சொல்லி எனக்குப் பழக்கப்படுத்துகிறாய். முதலில் தொடையின் ஆட்டத்தை நிறுத்தியவுடன் தென்றல் கிளையின் மேல் பட்டதுபோல் உன் கால்களையும் கைகளையும் மெல்ல அசைத்துப் பார்ப்பாய்! அப்போதும் எந்த முயற்சியும் நான் எடுக்காவிட்டால் உன் பூங்கண்களை லேசாய்த் திறந்து பார்க்கிறாய். அப்போதும் ஆட்டத் தொடங்கவில்லை என்றால் சற்று வேகமாகவே கைகால்களை ஆட்டி, சிணுங்கி, சிணுங்கல் அழுகையாய் முடிகிறது. உன் அழுகையைத் தவிர்க்க மீண்டும் என் சம்மணம் போட்ட தொடையை ஆட்டத் தொடங்கியவுடன் உன் அழுகையை கப்சிப் என்று நிறுத்தி விடுகிறாய். உனக்கு மொழி அவசியப் படாமலேயே உன்னைப்பற்றிய பல பாடங்களை இப்படியே எனக்கு நடத்திக் கொண்டிருக்கிறாய்.

நீ கண் விழித்த ஒவ்வொரு முறையும் கேட்கிறேன். ''சாமி உங்கிட்ட என்ன சொல்லுச்சு...''

நீ சிரிக்கிறாய்.

''சிரிக்கச் சொல்லுச்சா'' என்றால் அதற்கும் சிரிக்கிறாய். நீ அழும் போது ''உன்னைய சாமி இப்படியா அழுகச் சொல்லுச்சு'' என்று கேட்டால், கூடக் கொஞ்சம் அழுது காட்டுகிறாய். இது என்ன? எனக்காக மட்டுமே உன் மூலமாய் சாமி அரங்கேற்றும் நாடகமா? எதுவோ, உன் அழுகையை நிறுத்துவதற்கு நான் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

உன் அப்பத்தா பாடிப் பழக்கப்படுத்திய தாலாட்டிற்குச் சொக்கிப்போய் நீ அடிமையாகிவிட்டாய். உன் அப்பாவிடம் அந்தத் தாலாட்டைப் பதிவுசெய்து வாங்கிவரச் சொன்னதற்கு முணுமுணுத்துச் சென்றார். அப்பத்தாவோ தொட்டிலை ஆட்டினால்தான் பாட்டு வரும் என்று உன்னைப் பார்க்கக் கிளம்பி வந்துவிட்டாள். அவள் தொட்டிலை ஆட்டிக்கொண்டே பாடிய தாலாட்டைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் நீ அந்த மின்சாரப் பாடலுக்குத் தூங்குவதாய் இல்லை. உனக்கும்கூட அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரிகிறது! இப்படியே வளர்ந்தால் இவ்வுலகத்தில் நீ வாழ்வது கஷ்டம். ஏமாறவும் பழகிக் கொள்ள வேண்டாமா?

ஆராராரோ ராரிராரோ
என் கண்ணே ராராரோ
நீ காரணத்தச் சொல்லியழு
என் பொன்னே நீ உறங்கு
என் தேனே நீ நித்திரையோ
என் கண்ணே நீ கதை கேளு ஆய்....
அந்த ராகம் எனக்குப் பிடிபடுவது சிரமமாகவே இருந்தது. ஒவ்வொரு வரியின் தொடக்கத்திற்கும், அதன் முடிவிற்குமாய் மனசை நெகிழச்செய்யும் இழுவை. அது ஏனோ என் தொண்டைக்கு அன்னிய மாகவே இருந்தது. ஏறக்குறைய அதே ராகத்தில் உன் அப்பத்தாவின் அற்புத வரிகளை எழுதி மனனம் செய்து உனக்காகப் பாடுகிறேன். அதையும் நீ கேட்டுக்கொண்டு துயிலப் பழகியிருப்பது எனக்குப் பெரிய ஆறுதலான விஷயம்.

வித்தியாசமான ருசிகளை ருசிப்பதில், உன் நாவிற்கு எவ்வளவு ஆர்வம்? உன் நாவின் சுவை உன் கண்களில் தெரிகிறது. கையை இழுத்துப் பிடித்து உன் வாயில் வைத்துக் கடைசி வரை சப்புகிறாய். மீண்டும் கிண்ணத்தையும் என்னையும் பார்த்துக் கேட்கிறாய். கிண்ணத்திலிருந்து எடுப்பதற் கும் உன் வாயில் ஊட்டுவதற்குமான நேரத்தைக்கூட நீ பொறுப்பதில்லை. அழுகிறாய்.

சில நேரம் தலைகீழாய் நடக்கிறது. ஒரு வாய்கூட வாங்காமல், உனக்கான உலகில் வந்து, உன்னுடன் விளையாடியும் வாங்க மறுக்கிறாய். உன்னை ஏய்ப்பதும் கடினமாக இருக்கிறது. குற்றஉணர்வாகவும் இருக்கிறது. ''சாப்பிட வேணாம்னு சாமி சொல்லுச் சாக்கும்'' என்று பொய்யாய்த் திட்டி எடுத்துப் போகிறேன்.

உனக்கும் எனக்குமேயான புதுஉலகம் இந்த இரண்டு அறைக்குள் மூன்று மாதத்திற்கு மேல் கழிந்து விட்டதுகூட வியப்பாகத்தான் இருக்கிறது. நீ உன் கண்ணில் கண்டு வியப்பாக நோக்குவன வற்றை உன் கண்களிலே நான் புதிதாக தரிசிக்கிறேன். மழை வந்தால் சன்னல் கம்பிகளில் உன்னை நிற்க வைக்கிறேன். உன் கண்களைச் சுருக்கி நீ ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறாய். அந்தப் பார்வை எதையோ என்னைச் சொல்லச் சொல்கிறது. நான் உனக்கு எதைச் சொல்லிக் கொடுக்க? நான் சின்ன வயதில் செய்து வைத்திருந்த கற்பனைகளையா? நான் கற்றுத் தெளிந்த அறிவியலையா? நான் உன்னிடம் அசடு வழிகிறேன். நீ ஏதாவது சொல்லியே தீர வேண்டும் என்பது போல மழையையும் என்னையும் பார்க்கிறாய்! அந்தக் கண்களில் மின்னல் வெட்டுகிறது.

''இதுக்குப் பேர்தான் மழையாம்'' என்றேன். நீ என்னைக் கூர்ந்து பார்க் கிறாய். ''ஆமாம், வானத்திலிருந்து இப்படித் தண்ணியா கொட்டினா அதுக்குப் பேருதான் மழையாம்'' என்கிறேன். இதற்குமேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. அதை உன்னுடைய கற்பனைக்கே விட்டுவைக்கிறேன் என்பது போல மெளனம் காக்கிறேன். நீயும் அந்த மழையைப் பார்த்துப் பிரமித்துக் கொண்டே நின்றாய்.

மழை நிற்கவும் வெளியே தூக்கிச் சென்று மரத்தைக் காட்டி இதற்குப் பெயர்தான் மரமாம் என்றேன். அதன் அடி முதல் உச்சி வரை ஒவ்வொன்றாய்க் காட்டி இந்த மாதிரி வேரும், கிளைகளும் இந்த மாதிரிப் பச்சை நிற இலைகளுமாய் இருப்பது மரம் என்கிறேன். நீயும் உச்சி வரை அண்ணாந்து என் கைபோன திசை நோக்கிப் பார்த்துக் கொண்டாய்.

முத்து முத்தாய் ஈரம் கோர்த்து நின்ற அடர் சிவப்புச் செம்பருத்திப் பூவின் கொம்பைப் பதமாய் உன் அருகே இழுத்து ''இதற்குப் பெயர்தான் பூவாம்... சொல்றாங்க, ஆமாடா தங்கம்'' என்று அதன் மழைத்துளிகளை உன் மேல் சிதறடித்தேன். நீ சிலிர்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், பூவைத் தாவிப் பிடிக்கப் போனபோது கொம்பை விட்டுவிட்டேன். அது உயரத்திற்குச் சென்றவுடன் நிமிர்ந்து அதனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து எதையோ உன் சின்ன மூளைக்குள் கற்பனை செய்து கொள்கிறாய்.

முதன்முறையாக உன்னைக் கடலுக்கு அழைத்துச் செல்வது தற்செயலாக நேர்ந்தது. உன்னைக் கோவிலுக்குக் கூட்டிச் செல்ல நம் சுற்றத்தார் கூறியபொழுது நான்தான் திருந்செந்தூரைத் தேர்ந்தெடுத் தேன். அந்தப் பரந்து விரிந்த கடலின் பிரமிப்பு உன் சின்னக் கண்களுக்குள் தேங்கி நின்றதை அந்த ஆரவாரத்தில் யார் அறிவார் என்னைத் தவிர? நான் உன் காதுகளில் சொன்னேன் ''இதற்குப் பெயர்தான் கடலாம்". நீ என் கண்களைப் பார்த்தாய். ''ஆமாடா தங்கம். இப்படி கண்ணுக்கு எட்டின தூரம் வரை தண்ணியா இருந்தா அதுக்குப் பேரு கடலாம். ஆமாம், அப்படித்தான் சொல் றாங்க'' என்று சொல்லி உன் சின்னப் பாதங்களை ஆசையாய்த் தொட்டுப் போக அலைகளுக்கு வாய்ப்பளித்தேன். அது போதாது என்று ஒரு பெரிய அலையாய் வந்து உன்னை முழுவதும் தழுவிப் போனபோது நான் பயந்து உன்னைத் தூக்கிக்கொண்டு கரையேறுகிறேன். நீயோ கெக்கரிபோட்டு உன் சின்னக் கால் களையும் கைகளையும் உதறிச் சிரிக்கிறாய்.

வெளியூரிலிருந்து வந்த உன் அப்பாவின் நண்பர் குடும்பத்திற்காக ஒரு சின்னச் சுற்றுலா ஏற்பாடு ஆனது. நான் எத்தனையோ முறை கூட்டிப் போகச் சொன்ன என் தீர்த்த யாத்திரை ஆசை உன் அப்பாவின் நண்பர் வரவால் போனால் போகுது என்று நிறை வேறியுள்ளது. கொட்டும் தண்ணீர், உன்னில் எதை எதைக் கொட்டிக் கொண்டிருக்கிறதோ? படகு சவாரியும், மலையேற்றமும், அடர்ந்த மரங்களும் என்று நீ புது பூமிக்கு வந்ததாய் உற்சாகப்பட்டுக் கொண்டிருக்கிறாய். அருவிக்கரைக்கு வந்ததும் நம்முடன் வந்தவர்கள் குளிக்கச் சென்றுவிட்டனர். நீயும் நானும் மட்டும் பிரம்மாண்டத்தின் முன் ஒரு சின்னத் துகளாய் அருவி முன் ஒரு வட்டப்பாறையில் அமர்ந்து, என் மடியின் நடுவில் உன்னை இருத்தி உன் தலைக்கருகில் என் தலைவைத்து அருவி பார்த்தோம். நீ என்னைப் பார்த்து மோகனப் புன்னகை செய்தாய். அதற்கு நான் ஏதோ பேச வேண்டும் என்பது புரிந்த பொருளாய், ''இதற்குப் பெயர்தான் அருவியாம். இப்படி மலைமேலே இருந்து தண்ணி தடதடன்னு கொட்டுச்சுன்னா அதுக்குப் பேரு அருவியாம். ஆமாடா தங்கம், அப்படித்தான் சொல்லுறாங்க'' என்றேன். நீ என் நடுமார்பில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாய் அருவி பார்த்தாய். உன் தலைமேல் என் நாடி புதைத்து உன் கைகளை என் கைகளோடு சேர்த்து இரு ஜோடி விழிகளால் ஒரு ஜோடி அருவி காண்கிறோம்.

''அஞ்சு மாசப் பிள்ளைய ஆத்துக்கெல்லாம் தூக்கிட்டுப் போகாதே'' என்று எவர் எவரோ சொன்ன வார்த்தைகளை நிராகரித்து அந்தத் தாமிரபரணி ஆத்துக்கு உன்னை அழைத்துப் போகிறேன். அதிகார வெறியின் அக்கிரமத்தினால் வரலாற்றில் மறையாக் கொலைப்பழி சுமந்தும், எப்போதும் போல் ஓடிக்கொண்டிருந்தது ஆறு. நீ அதெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான் நேசித்த நதியை நீயும் பார்க்க வேண்டும் முடிந்தால் நீயும் காதலிக்கலாம். உன் அக்குளைப் பிடித்துக் கொண்டு நதியில் உன் கால்களை வைத்தேன். நீ உன் பொக்கைவாய் பிளந்து சிலிர்க்கிறாய். அப்படியே மெதுவாய் உன்னை நீரில் இழுத்துக் கொண்டே போய் பொம்பளயாளு வட்டப்பாறையில் அமர்த்தினேன். உன் உடம்பில் சின்ன நடுக்கம் இருந்தது. ஆனாலும் நதியில் கால் நனைக்க விடச்சொல்லி சிணுங்கி எத்தனித்து, பாறையிலிருந்து சறுக்குகிறாய். உன் முழங்கால் வரை நீரில் இருக்குமாறு பாறையின் முனையில் அமர்த்தினேன். கைகளின் நடுக்கத்திலும் சிரித்துக்கொண்டே கால்களைத் தண்ணீரில் ஆட்டிக் கொண்டிருக்கிறாய். நீ சுற்றுமுற்றும் பார்த்தாய். நாலாபுறமும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. நீ புருவம் உயர்த்தி என் கண்களைக்கண்டு சிரித்தாய். நான் சொன்னேன் ''இதற்குப் பெயர்தான் ஆறாம்! ஆமாடா தங்கம், ஆறாம்'' என்று உன்னைக் கழுத்துவரை ஆற்றில் முக்கி, உன்னில் வழிந்த வியப்பைச் சின்னத் துண்டில் சுற்றி வருகிறேன்.

மூன்று மாதம் மகப்பேறு விடுப்பு, இரண்டு மாதம் கோடை விடுமுறை. கிடுகிடுவென்று எந்த நீரிலோ கரைந்து போனது ஐந்து மாதம் மொத்தமும். இந்தக் கூடுதல் இரண்டு மாதம்கூட நீ சாமிகிட்ட வாங்கிவந்த வரமாய் இருக்கலாம். இன்று பணியில் சேர வேண்டும். இனிக் காலை முதல் மாலைவரை நீ எங்கு இருக்க வேண்டும் என்பதை உன் அப்பா தெளிவாக ஆராய்ந்து அறிந்து திட்டமிட்டபடி என்னிடமும் திணித்தே விட்டார். வழக்கமான நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தங்களைப் போல நானும் உடன்பட வேண்டியதாயிற்று. அதற்கான ஆயத்தமாக இரண்டு நாட்களாக உன் பிஞ்சு வாயில் இரப்பர் முலையைத் திணித்து, பாவி நான் உன் பசிக்குப் பழக்கப்படுத்தியும் இருந்தேன்.

உனக்கான பால், பிஸ்கட், தண்ணீர் மாற்றுடைகள் எல்லாம் எடுத்தாயிற்று. உனக்குப் பிடித்த முயல் பொம்மையையும் யானை பொம்மையையும் கூடத் தேடி எடுத்து வைக்கிறேன். உனக்கும் எனக்கு மான நம் உலகத்தை ஈடு செய்யும் என்ற அற்ப நம்பிக்கையில் ஒரு கூடை நிறைய யோசித்து யோசித்து எதை எதையோ எடுத்து வைத்த போதும், மனதிற்குள் உறுத்தல் குடைய, உன்னையும் கூடையை யும் சுமந்து கொண்டு வந்து நின்றேன். அந்தக் கட்டிடம் பார்த்து, என்னையும் பார்த்து புருவம் உயர்த்துகிறாய் வழக்கம் போல். வழக்கம்போல் சொல்வதற்கு வார்த்தைகள் அற்றவளாய் உள்ளே சென்று, விளையாட்டுப் பொம்மைகள் கொட்டிக் கிடந்த பாயில் உன்ன அமர்த்தினேன். கூடையைப் பெற்றுக்கொண்டாள் வந்த பணிப்பெண். உன் கண்களை வழக்கம் போல் பார்க்க முடியாமல், அசாத்திய தைரியம் வரவழைத்துப் பார்த்தேன். உன்னுடைய கண்களில் ஒரு பயமும் மிரட்சியும் கலந்து அவ்விடம் குறித்து ஏதாவது சொல்லித் தொலைக்கக் கெஞ்சியதை நான் உணராமல் இல்லை. எங்கெங்கோ நாம் பார்த்த பாறைகள் மனதை ஆக்கிரமிக்க, பாறையாய் விறுவிறுவென்று குழந்தை காப்பகத்தின் வாசலடைந்த போது, உன் அழுகைச் சத்தம் பாறை உடைக்கும் கடப்பாரை ஒலியாய் மூளை குடைந்தே இருக்க, மறுபுறம் கண்ணீரும் பாலும் ரகசியமாய்க் கசிய, அன்றும் வகுப்பெடுப்பதும் சக பணியாளரிடம் பழகுவதும் சாத்தியமாகவே இருந்ததை நீ அறிவாயா?

நித்தில்
More

ஒரு விவாகரத்து
சிந்துஜா கதை எழுதுகிறாள்
Share: 




© Copyright 2020 Tamilonline