Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க
அறுவைச் சிகிச்சை
யூகலிப்டஸ் மரம்
- எல்லே சுவாமிநாதன்|ஏப்ரல் 2004|
Share:
காரில் ஏறி கராஜ் சரிவில் இறங்கியதும் நறநறவென இலைகள் சக்கரங் களின் கீழ் அரைபடும் சத்தம் வந்தது. "சே, தப்புப் பண்ணிட்டேன். இலையை அள்ளி எறிஞ்சிட்டுக் காரை எடுத்திருக்கணும்" என்றேன் குற்ற உணர்வோடு. பொடித்த இலைகளை லேசில் அள்ள முடியாது. பெருக்கி குவித்து பிரஷ்ஷால் அள்ள வேண்டும்.

என் மனைவிக்கு என்னை நச்சரிக்க ஒரு வாய்ப்பு. "நானும் ரெண்டு வாரமா சொல்லி அலுத்துப் போச்சு. ஒரு ஆளை அழைச்சு மரத்தைக் கழிச்சிட்டா இது போல இலை கொட்டி அள்ளுற வேலை மிச்சம்னு. மரத்தைக் கழிக்க தோட்டக்காரன் அறுநூறு டாலர் கேட்கிறான்". "அறுநூறு டாலர்! அது எத்தனை ரூவா தெரியுமா? அதை வெச்சு இந்தியால ஒரு கல்யாணமே செஞ்சுடலாம்"

"இந்தியால கல்யாணம் செஞ்சி வெச்சிட்டா இங்க இலை உதிராம போயிடுமாக்கும். செலவு செய்யறத செஞ்சுதானே ஆகணும்"

"சரி எங்கிட்ட விடு. அடுத்த வாரம் பார்த்துக்கிறேன்" என்று உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.

வாசலில் எங்கள் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் நடுவில் ஒரு யூகலிப்டஸ் மரம் இருந்தது. வாங்கின புதிதில் அது சின்ன மரமாக இருந்தது. வீட்டை விற்றவர் என்னிடம் அந்த மரத்தைக் காட்டி "அபூர்வமான மரம். கண்ட கண்ட மரத்தை வெச்சு ஊரை நாற அடிக்கறான்கள். இதுனாலயே யூகலிப்டஸ் வங்கி வெச்சு வளர்க்கிறேன்" என்றார் பெருமையோடு. அத்தோடு நில்லாமல் எம்பி ஒரு இலையைப் பறித்து கையில் கசக்கி முகரச்சொன்னார். இனிமையான யூகலிப்டஸ் மணம் வந்தது. "இதை வென்னீரில் போட்டு ஆவியை முகர்ந்தால் சலதோஷமே உங்களை அண்டாது" என்றார். அந்த வீட்டை நான் வாங்க இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. வீடு வாங்கின பின் வீட்டுக்குப் புதிதாக வருபவர்களை வாசலிலேயே நிறுத்தி ஒரு இலையைப்பறித்து கசக்கி முகர வைப்பது எனக்கு ஒரு சடங்காகாவே ஆனது. தெரிந்த நண்பர்கள் காரைத் தள்ளி நிறுத்தி விட்டுதான் வருவார்கள். நான் "யூகலிப்டஸ்" என்பதற்குள் "தெரியும்பா. முன்னயே சொன்னியே" என்று வெட்டி விடுவோருமுண்டு.

அந்த மரம்தான் இன்று வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்து இலையை உதிர்க் கிறது. வாரமொரு முறை வரும் தோட்டக்காரன் குவிந்த இலைகளை அள்ளித் தொட்டியில் போட்டுவிட்டுப் போவான். ஆனாலும் மறுநாளே மறுபடியும் இலை கொட்டி, குப்பை சேரும். மரத்தை நன்கு கழித்து விட்டால் குப்பை குறையும் என்று நண்பர்கள் சொல்ல, அதைச் செய்ய தோட்டக்காரன் கூடுதலாக அறுநூறு டாலர் கேட்கிறான். மாசம் எண்பது டாலர் சம்பளம் வேறு கொடுத்து அழுகிறோம்.

அறுநூறு டாலர் கொடுக்க எனக்கு வசதி இல்லாமல் இல்லை. ஒரு கொள்கைதான் காரணம். அதிக பட்சம் ரெண்டு மணி நேரம் ஆகும் காரியத்துக்கு 600 டாலரா? மணிக்கு 300 டாலர் ஆகிறது. படிச்சு எவ்வளவு பட்டம் வாங்கி இருக்கிறேன்? ஏகப்பட்ட வருசம் படிச்ச நானே மணிக்கு நாப்பத்தி சொச்சம் டாலருக்கு வேலை செய்கிறேன். படிப்பே இல்லாத, கேவலம் ஒரு மரம் வெட்றவனுக்கு மணிக்கு முன்னூறு டாலரா? கேள்வி முறை இல்லியா அய்யா இந்த நாட்டிலே? கேட்டாலே ரத்தம் கொதிக்க வில்லையா உங்களுக்கு?

மறுநாள் என் மனைவிக்குத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. சிறிது நேரம் பேசி விட்டு, என்னிடம் சொன்னாள் "டாக்டர் கமலா பேசறாங்க. அவங்க வீட்ல மரம் வெட்ட ஒரு ஆளு வரப்போறானாம். ரெண்டாயிரம் டாலர் கேட்கிறானாம் மூணு மரம் வெட்ட. அவனை இங்க அனுப்பவான்னு கேக்கறாங்க"

"வேண்டாம். நான் வேற ஏற்பாடு பண்ணியாச்சு" என்று கூசாமல் பொய் சொன்னேன்.

அவள் தொலைபேசியில் பேசி முடித்த பிறகு கேட்டாள் "ஏற்பாடு பண்ணியாச்சா. யாரு வராங்க வெட்ட?"

"உனக்கு எதுக்கு அதெல்லாம். எங்க ஆபீசுல ஒரு நண்பன் வீட்டுத் தோட்டக் காரன் இருநூறு டாலருக்குச் செய்வானாம். இந்த டாக்டர் அனுப்பற ஆள் வேண்டாம். அவங்க டாக்டர், ரெண்டாயிரம் என்ன மூவாயிரம் கூட கொடுப்பாங்க. மறுநாளக்கி அவங்களை பார்க்க வர முதல் நோயாளி செத்தான். எக்ஸ் ரே, ஈகேஜி, எல்கேஜின்னு போட்டுத் தாளிச்சிட்டு மரம் வெட்டின செலவை ஈடுகட்டிடுவாங்க. நம்மால அது போலச் சம்பாதிக்க முடியுமா?" என்றேன்.

பொய் சொல்லிவிட்டேனே தவிர, மறுநாள் காலையில் ஜாகிங் போனபோது மனத்தில் குற்ற உணர்வு இருந்தது. போகிற வழியில் ஒரு வீட்டு வாசலில் புல் வெட்டிக் கொண்டிருந்த ஆளைக் கண்டேன். அவனிடம் போய் "மரம் வெட்ட என்ன செலவாகும்" என்று கேட்டேன். "மரத்தைப் பார்க்காமல் சொல்ல முடியாது. மரத்தின் உயரம், அகலம், ஆழம், இருக்கும் இடம் எல்லாம் பொறுத்துத்தான் விலை இருக்கும். மிகவும் மலிவாக செய்ய வேண்டுமென்றால் நீயே போய் அரத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்" என்று சொன்னான்.

அந்த யோசனை எனக்குப் பிடித்தது. அன்றிரவு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு மரமறுக்கும் கருவி விளம்பரம் காட்டினார்கள். ஒரு இளம்பெண் சின்ன டிரவுசரும் மார்புக்கச்சையும் மட்டுமே அணிந்து, கவர்ச்சிகரமாக உடலைக் குலுக்கி அனாயாசமாக மரத்தை வெட்டிச் சிறு பலகைகளாக அறுத்ததைக் காட்டினார்கள். இப்படி ஒரு பெண்ணால் முடியுமானால் என்னால் செய்ய முடியாதா? அதன் விலை இருவது டாலர்கள் என்று போட்டிருந்தது. கீழே சின்ன எழுத்தில் பத்து மாதத்தவணைகளாக என்றிருந்தது. அப்போ விலை இருநூறு டாலர் ஆகும். தவிர தபால் செலவு, காப்பீடு செலவு....

எதற்கு இதைக் காசு கொடுத்து வாங்க வேண்டும்? ஒரு கப் பாலுக்குப் போய் மாட்டை வாங்குவதா? வாடகைக்கு எடுத்துக் கொண்டால்? தொலைபேசிப் புத்தகத்தில் வாடகை உபகரணங்கள் என்ற பகுதியில் தேடி, வீட்டருகில் இருந்த ஒரு கடை எண்ணைக் குறித்துக் கொண்டேன்.

கடை நான் எதிர்பார்த்ததை விடப் பெரியதாக இருந்தது. முன்னறையில் இருந்த இளம் பெண் "உங்களுக்கு என்ன வேண்டும்" என்றாள்.

"மரம் வெட்டக் கருவி வாடகைக்கு வேண்டும்"

"வெட்ட என்றால்? பலகையாக அறுக்கவா? சட்டமாக வெட்டவா? மரத் தூளாகப் பொடிக்கவா? சிற்பம் செதுக்கவா? நாற்காலி மேசை செய்யவா? விறகு போல உடைக்கவா? சரியாகச் சொல்லுங்கள். மரம்னா என்ன மரம்? ஓக், பைன், மேப்பிள்? ஒவ்வொன்றுக்கும் இங்கே தனித்தனி உபகரணங்கள் உண்டு" என்றாள்.

"யூகலிப்டஸ் மரத்திலிருந்து இலை உதிர்கிறது. சில கிளைகளை வெட்ட வேண்டும்."

"எவ்வளவு பெரிய கிளை?"

நான் கூரையில் ஒரு புள்ளியைக்காட்டி "அதுவரைக்கும் இருக்கும்" என்று சொன்னேன்.

"உயரம் கிடக்கிட்டும். குறுக்களவு என்ன?"

நான் சற்று யோசித்து இரு கைகளையும் விலக்கி ஒரு அளவு காட்ட எண்ணி, சற்றுத்தள்ளி எதிரே நடுத்தர வயதுப் பருத்த பெண்மணி கையில் இருந்த உருண்ட பையைக் காட்டி "அவ்ளோ பெரிசு" என்றேன்.

இதைக்கவனித்த அந்தப் பெண்மணி என்ன புரிந்து கொண்டாளோ தெரியாது, தன் மார்பகத்தைச் சால்வையால் போர்த்திக் கொண்டு "வெக்கங் கெட்ட ஜன்மம்" என்று சொல்லிவிட்டுச் சீற்றத்துடன் நகர்ந்தாள்.

அந்தப்பெண் கடைக்குள் பார்த்து "ஜான், டுவெல்வ் இன்ச் சர்க்குலர் சா டு கோ" என்றாள்.

மல்யுத்த வீரன் போலிருந்த ஒருவன் மகாவிஷ்ணுபோல கையில் ஒரு வட்டமான பல் சக்கரத்தையும், இன்னொரு கையில் அதைப்பொருத்தும் கருவியையும் கொண்டு வந்தான். என்னைப் பார்த்தவுடன் அவனுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும். "இதை நீ முன்ன பின்ன பார்த்து, பயன்படுத்தி இருக்கிறாயா?" என்றான்.

"எங்கள் கடவுள் சிலை கையில் பார்த்தது உண்டு. ஆனால் பயன்படுத்தியது இல்லை" என்றேன்.

ஒரு சிறு செய்முறை விளக்கம் கொடுத்து "எங்கே நீ செய்து காட்டு" என்றான். அதை என்னால் தூக்கவே முடியவில்லை. எப்படித்தான் விஷ்ணு அனாயாசமாக ஆள்காட்டி விரலில் தூக்குகிறாரோ?

"இதைவிடச் சின்னதாகக் கொடு" என்றேன்.

"எதற்கு எடுத்துக்கொண்டு போகிறாய்?" என்று கேட்டான்.
மறுபடியும் அவனுக்கு நான் விளக்கம் கொடுத்தேன். இந்தத்தடவை கிளை சின்னது என்று சொல்லிவிட்டேன். புரிந்தது போல "ஓ, உனக்கு செயின் சா தான் சரியா வரும்" என்று உள்ளே போனான். வரும்போது அவன் கையில் ஏகே-47 போல ஒரு கருவி இருந்தது. அதில் கீழ்ப்புறம் சைக்கிள் சங்கிலி போல முள் சங்கிலி இருந்தது. அதை இயக்கிக் காட்டியபின் தூக்கிப் பார்த்தேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது. வாடகை ஒரு நாளைக்கு இருவது டாலர்தான். முன் பணமாக இருநூறு டாலர் கொடுக்க வேண்டியிருந்தது. கருவியைத் திருப்பிக் கொடுத்தால் முன்பணம் வாபஸ்.

"உன்னிடம் கார்டு இருக்கிறதா" என்று அவன் கேட்க, தலையாட்டிவிட்டு வந்தேன். நான் கார்டு, ஏரோகிராமில் எழுதுவதில்லை. ஈமெயில் அல்லது தொலைபேசிதான். அவன் ஏன் அப்படிக்கேட்டான் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையானாலும் சீக்கிரம் எழுந்து விட்டேன். என்னுடைய நீல ஜீன்சை அணிந்து மேலே பனியன் போட்டுக்கொண்டு கையில் அந்தக் கருவியை எடுக்கக் காருக்குப் போகையில் மனைவி கேட்டாள்: "என்ன பண்ணப் போறீங்க?". அப்படியே சோபாவில் அமர்ந்தேன். போகும்போது இப்படிக் கேட்டால் செய்யப் போகிற காரியம் உருப்படாது என்பது என் நம்பிக்கை. அவள் தன் தப்பை உனர்ந்து கொண்டாற் போல "என் சினேகிதி உமாவுக்கு இன்னிக்கி பேபி ஷவர். நீங்களும் வரலியான்னு தெரிஞ்சிக்கதான்..." என்று இழுத்தாள்.

பேபி ஷவர் என்பது வளைகாப்பு மாதிரி சடங்கு. எல்லா சினேகிதிகளும் கர்ப்பமாய் இருக்கும் பெண்ணுக்கு வளை போட்டு, பாட்டுப்பாடி, விருந்து சாப்பிடுவார்கள். இதில் பெரும்பாலும் பெண்களே பங்கு கொள்வார்கள். ஆண்கள் அதிகமாக இருக்க மாட்டர்கள். எனக்கு இந்த சடங்கு சமாசாரம் போரடிக்கும். "நான் வரவில்லை. நீ போ. எனக்கு முக்கிய வேலை இருக்கிறது" என்று அவளை அனுப்பி வைத்தேன். அவள் திரும்பி வருவதற்குள் குறைந்த செலவில் மரத்தை வெட்டி அசத்த வேண்டும் என்று நினைத்தேன். அவள் குளித்து உடை மாற்றி, விருந்துக்கு தன் பங்கு உணவைத் தயாரித்து எடுத்துக் கொண்டாள். "மேலே பெண் தூங்கறாள். அவள் பேபி ஷவருக்கு வர மாட்டாளாம். வீட்டுல படிக்கணுமாம். அவளுக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிட மேசைமேல் சாப்பாடு இருக்கிறது. டிவி பார்த்திட்டுத் தூங்க வேண்டாம்" என்று சொன்னதுடன் ஏழெட்டுச் சின்ன வேலைகள் ஏவினாள். அவள் வெளியே போகும் வரை காத்திருந்தேன்.

பகலில் மணி பன்னிரண்டு இருக்கும்.

வாசலுக்குப் போய் மரத்தைப் பார்வை யிட்டேன். மிஞ்சிப்போனா இருவது கிளை இருக்கும். இருவது நிமிசத்துல முடிஞ்சிரும் என்று கணக்கு போட்டு அந்தக்கருவியை எடுத்து வந்தேன். அது மின்சாரத்தால் இயங்குவது. அதில் இணைத்திருந்த மின்கம்பி ஆறடி நீளமே இருந்தது. மின் இணைப்புக் கொடுக்குமிடம் வீட்டுக்குள் இருந்தது. ஓ, இதை நினைத்துதான் கார்டு (கனெக்டிங் கார்டு) இருக்கா என்று கேட்டிருக்கிறான் வாடகைக்கடையில். மறுபடி அவனிடம் போகத் தயக்கமாக இருந்தது. பக்கத்துக் கடைக்குப் போனேன். இருபதடி ஒயர் இருவது டாலராம். ஐம்பதடி ஒயர் முப்பது டாலராம். பெரிய ஒயரே வாங்கி வந்தேன். வீட்டுக்குள் இணைப்புக் கொடுத்து மறுமுனையில் கருவியைப் பொறுத்திப் பொத்தானை அமுக்க விர்ர்ரென்று சுழன்றது சங்கிலி. காரேஜிலிருந்து ஏணியை எடுத்து மரத்தில் சாத்திக்கொண்டு ஏறினேன். இருவதடி உயரத்தில் நின்று சுற்று வட்டாரத்தைப் பார்வையிடுவது வினோத அனுபவமாக இருந்தது, மூன்றாம் வீட்டில் உடலில் எண்ணை தடவிக் கொண்டு வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த கிழவி என்னை நோக்கிக் கை ஆட்டினாள். பதிலுக்கு நானும் கை அசைத்தேன். கிழவிக்கு வெய்யில் குளியல் வேறயா?

கிளைகளை வெட்டலானேன். முதலில் சிறு கிளைகளை வெட்டினேன். சிறிது நேரத்தில் இயந்திரத்தின் இயக்கம் எனக்குப் பிடிபட்டதும், உற்சாகத்துடன் இன்னும் சில கிளைகளை வெட்டினேன். இது எனக்கு ஒரு பகுதிநேரத் தொழிலாகிக் கூடுதல் வருமானம் தரக் கூடிய சாத்தியக் கூறுகள் புலப்பட்டன. சித்திரமும் கைப் பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள். முயற்சி திருவினையாக்குமல்லவா? சுழலும் சங்கிலி மரத்தைத் தொட்டவுடன் சரசரவென அறுத்து மரத்துகளை மூஞ்சியில் வாரியிறைத்தது. கையில் கைக்குட்டை இல்லை.

கருவியை ஒரு கிளையில் மாட்டிவிட்டுப் பனியனைக் கழட்டி முகத்தைச் சுற்றி முகமூடி போல போட்டுக் கொண்டேன். அப்பொழுதுதான் ஒரு விசயம் புலனானது. ஏணியிருந்து ஏறி கைக்கு எட்டிய கிளைகளை வெட்டி விட்டேன். அதற்கு மேலுள்ள கிளைகளை எப்படி வெட்டுவது? ஏணி உயரம் போதவில்லை. பிடித்து மேலே ஏறப் பிடிமானம் சரியில்லை. அணைத்து ஏறுகிற மரமுமில்லை. மேலே ஏறிக் கிளைகளை வெட்டாமல் ஏணி உயரத்துக்கு மேல் மரத்தையே பாதியாக வெட்டிவிட்டால் போகிறது. எப்படி வெட்டினால் எங்கே விழும் என்று யோசித்தேன். '<' போலவா அல்லது '>' போலவா? வெய்யிலில் தாகம் வேறு. கீழே இறங்கிக் கம்ப்யூட்டரில் போய் மரம் வெட்டும் கலை பற்றிப் படித்து விட்டு ஒரு கோகோ கோலா டின்னுடன் ஏணியில் ஏறினேன். ஒரு வாய் குடித்து விட்டு மரத்தின் நடுபாகத்தை ''>'' போல் வெட்டினேன். பாதி அறுக்கையில் சங்கிலி சுழற்சி குறைந்து நின்றுவிட்டது, பொத்தானை அமுக்க இயக்கமே இல்லை. மின்வெட்டோ? கீழே இறங்கி வீட்டுக்குள் போனால் இணைப்பு கழட்டப்பட்டு, அந்த இடத்தில் ஒரு டேப் ரிகார்டரின் ஒயர் இருந்தது. என் பெண் சோபாவில் அமர்ந்து பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"நான் அங்க மேல வேல செய்யறேன், நீ பாட்டுக்கு இங்க ஒயரைப் பிடிங்கிட்டா என்னா ஆகும்? மரத்துலேருந்து கீழ இறங்கி வந்திருக்கேன் இதச் சொல்றதுக்கு" என்று கத்திவிட்டு திரும்பவும் இணைப்புக் கொடுத்துவிட்டு வெளியே போனேன். இப்போது என் வீட்டருகில் தெருவோரமாக மரத்தின் பக்கமாய் ஒன்றன்பின் ஒன்றாய் மூன்று கார்கள் இருந்தன. அதிலிருந்து குழந்தைகள் இறங்கி எதிர் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். எதிர் வீட்டின் வாசலில் ஒரு பெண் பலூன்களைக் கட்டிக் கொண்டிருந்தாள். அருகில் அவள் குழந்தையின் பிறந்த நாள் விழாவை அறிவித்த பலகை இருந்தது. அய்யோ மரம் விழப்போகும் இடத்தில் கார் நிறுத்தி விட்டார்களே, காரை எடுத்து நகர்த்தி நிறுத்தச் சொல்ல வேண்டும் என்று நான் கிளம்பி எதிர் வீட்டுக்கு போனேன். உள்ளே குழந்தைகளின் இரைச்சலில், "வாசலில் மரம் விழுந்து விடப்போகிறது, காரை எடுங்கள்" என்று நான் சொன்னது விளங்க சிறிது நேரமானது.

எல்லோரும் விரைந்து வெளியே வரவும் அந்த மரம் முறிந்து விழவும் சரியாக இருந்தது. மரம் மூன்று கார்களின் மேலும் விழுந்ததுடன் கூடுதல் போனஸ் போல் மரமறுக்கும் கருவி கடைசிக் காரின் பின்கண்ணாடி மேல் விழுந்து நொறுங்கி உள்ளே விழுந்தது. குழந்தைகள் எல்லாம் பெரிய வேடிக்கை போலக் கைதட்டி ஆர்ப்பரிக்க, பெரியவர்களெல்லாம் வியப்பும் வேதனையும் தாங்காமல் பார்த்தார்கள்.

அத்தோடு முடிந்ததா! என்னுடைய கார் இன்சூரன்ஸ் கம்பெனி இந்த விபத்துக்குப் பொறுப்பேற்க மறுத்து விட்டது. வீடு இன்சூரன்சும் முறையான உரிமம் உள்ள மரம் வெட்டும் தொழிலாளியால் வெட்டப் படாமல் ஏற்பட்ட விபத்துக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று விலகிக் கொண்டார் கள். நல்ல வேளையாக நான் எடுத்திருந்த விபத்துப் பாலிசி ஓரளவு கைகொடுத்தது. அதிலும் முதல் மூவாயிரம் டாலர் செலவு என்னுடையது என்றும் பாக்கியை அவர்கள் கொடுப்பதாயும் ஒப்புக் கொண்டு, சேதமடைந்த கார்கள் ரிப்பேர் செய்யப் பட்டன. அறுக்கும் கருவியை வாடகைக்குக் கொடுத்த கம்பெனி என் டிபாசிட்டை பிடிங்கிக் கொண்ட தோடல்லாமல் கூடுதலாக நூறு டாலர் வாங்கிக் கொண்டார்கள்.

கார்களை ரிப்பேர் செய்ய இழுத்துக் கொண்டு போனபோது, காரின் மேல் விழுந்த மரத்தை வீட்டு முன்னால் தள்ளிவிட்டுப் போய் விட்டார்கள். என் காரை வெளியே எடுக்க முடியாமல் இரண்டு நாள் அது பாதையை அடைத்தது. ஒரு நண்பர் என்னைத் தன் காரில் ஆபீசுக்கு அழைத்துபோனார். பாதையை அடைத்த மரத்தைச் சிறு துண்டுகளாக்கி குப்பையில் போட தோட்டக்காரனுக்கு இருநூறு டாலர் அழுதேன். இந்த இன்னல்கள் போதாது போல் பக்கத்து வீட்டுக்காரர் "பாக்கி மரத்தை சீக்கிரம் வெட்டிவிடுங்கள். துளிர்த்து பெரிசாகி மறுபடியும் என் சிமிண்டு தளத்தை உடைக்கப் போகிறது" என்று படுத்துகிறார்.

இதில் பெரிய வேதனை என்ன என்றால் மூணாம் வீட்டு அசிங்கக் கிழவி என் மனைவியிடம் வந்து "நான் தோட்டத்தில் எண்ணெய் தடவிக்கொண்டு அரைகுறை உடையில் படுத்திருக்கும்போது உன் கணவன் என்னைப்பார்த்தான். எனக்கு வெட்கமாக இருந்தது. இப்படியா என்னைப் பார்க்க மரத்தில் ஏறுவது?" என்று சொல்லி விட்டிருக்கிறது. "என்னோட பார்ட்டிக்கு வராம, வீட்ல கல்யாண வயசில் பெண்ணை வெச்சிகிட்டு இப்படிச் செய்வதா?" என்று மனைவி கத்துகிறாள். எல்லாம் என் நேரம். வார ஜோதிடத்தில் போட்டிருந்தான் கார்யவியர்த்தம், மனக்கிலேசம், திரவிய நஷ்டம், தாம்பத்ய கலகம் என்று.

இதையெல்லாம் ஏன் உங்களுக்குச் சொல்கிறேன் தெரியுமா? என்னிடம் சற்றே வளைந்த மரமறுக்கிற செயின்-சா இருக்கிறது. கொஞ்சம் 'ட' போல வளைசல் இருக்கும். ரிப்பேர் செய்தால் மரமறுக்கலாம். இதன் விலை கடையில் இருநூறு டாலர் இருக்கலாம். உங்களுக்கென்று மலிவாக அம்பதே டாலருக்கு விற்க நான் தயார். என்னை உடனே தொடர்பு கொள்ளுங்கள். போனால் போகிறது ஐம்பதடி ஒயரும் இலவச இணைப்பாய்த் தந்து தொலைக்கிறேன்.

எல்லே சுவாமிநாதன்
More

அறுவைச் சிகிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline