Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
புதிரா? புரியுமா?
உயிர் ஒன்று, சொல் நூறு!
- வாஞ்சிநாதன்|ஏப்ரல் 2004|
Share:
"வரதன் கண்ணயர்ந்த சமயம் தங்கக் கலசம்
கடத்த வந்த கயவன்"
"தரமற்ற கலப்படப் பண்டம் தந்த நய வஞ்சகன்
கள்ளத்தனம் அம்பலம்"

என்ன இதெல்லாம், ஏதாவது பத்திரிகையில் வந்த செய்தித் தலைப்புகளா? விளக்குகிறேன், சற்றே பொறுங்கள்.

சில காதலர்கள் ஈருடல் ஓருயிராய் இருப்பார்கள். எனக்கு இந்த விவரம் என்றும் புரிந்ததில்லை. ஆனால் ஜான் அப்டைக் என்ற அமெரிக்கக் கவிஞர்/நாவலாசிரியர், அனந்தநாராயணன் என்ற இந்தியப் பெயரை ஆங்கிலத்தில் Ananthanarayanan என்று கண்டு e, i, o, u வராமல் ஒரே உயிரெழுத்து a மட்டுமே திரும்பத் திரும்ப வந்திருப்பதை வியந்து ஆங்கிலத்தில் கவிதை யொன்றை எழுதியிருக்கிறார். அதைப் படித்ததன் விளைவாகத் தமிழில் மேலும் நீளமான ஓருயிர்ச் சொற்கள் வாக்கியங்கள் அமைக்க முயன்றேன். இப்போது பலவுயிர்கள் ஒரே உயிரைக் கொண்டதைக் காண முடிந்தவுடன், ஈருயிர் ஓருடல் அப்படி ஒன்றும் பெரிதில்லையென்று தோன்றுகிறது. ஒரே உயிர்தான் எவ்வளவு வசீகரிக்கிறது!

இதோ மதுரையில் முருக பக்தர்களின் நடனக் காட்சி:

"சங்கம் வளர்த்த நகர்ப் பக்கம் வலம் வந்த கந்தன் பக்தர் கரக நடனம்"

ஒரு பக்தி சிரத்தையானவரைக் கண்ட கடவுள் பற்றி:

"அர்ச்சகர் அன்றலர்ந்த கமல மலர் அள்ளப் பரமன் வசப் பட்டனன்"

அடுத்தது ஒரு முதலிரவுக் காட்சி:

"வண்ணக் கதம்பச் சரம் கணவன் வழங்க மனம் படபடக்கக் கமலம் மஞ்சம் வந்தனள்"
இராமன் காட்டுக்கு வரக் காரணமென்ன? இதோ:

"தசரதன் வரம் தந்த பலன், மகன் வனம் வந்தனன்"

இந்த ஓருயிரெழுத்து விளையாட்டை முடிக்க உயிர் போகும் ஒரு மகாபாரதக் காட்சி, கர்ணனின் சோகமான முடிவைப் பற்றிதான்:

"களம்கண் கர்ணன் சக்கரம் தள்ள, அந்தணக் கண்ணன் அப்பக்கம் வர, தர்மப் பயன் தந்ததன் பலன் மரணம்."

இதோடு முடித்துவிடலாமென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அனந்தநாராயணன் (ஜான் அப்டைக் கவிதை எழுதியது இவரைப் பற்றித்தானா என்று தெரியாது!) என்ற பெயர்கொண்ட மக்மாஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர், "இதெல்லாம் வெறும் சில்லறை" என்று தோன்றும்படி வெறும் அகரங்களே கொண்ட வெண்பாவையே எழுதித் தந்துவிட்டார்.

கண்கள் கலங்கக் கவனம் மயங்கன
மங்க மடங்கத் தளரற்க - நங்கள்
மரண பயமற வந்தநம் கந்தன்
சரணம் சதம்சந் ததம்.
கோனார் உரையை நீங்களே தந்துவிடுங்கள் என்று அவரிடம் கேட்டேன். இதோ: "முதுமையில் கண்கள் பழுதடைந்து, கவனம் குறைந்து உடல் அடங்கினாலும், தளர வேண்டாம்; நம் மரண பயத்தைப் போக்கிடக் கந்தனின், அருள் உண்டு" என்பதுதான் இதன் பொருள். டொரான்டோப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பசுபதி மற்றோர் அகரங்களே கொண்ட வெண்பாவைத் தருகிறார்:

பர்வதம மர்பவன் நம்பன் மலரயன்
கர்வன் தகர்த்தக டம்பனவன் - நர்த்தனன்
சங்கரன் தந்த சரவணன் நம்மவன்
கந்தன் பதம்வந் தனம்.

(பர்வதமமர்பவன்-> பர்வதம் + அமர்பவன், குன்றின் மேல் இருக்கும் முருகன்.
நம்பன் - முருகன்

மலரயன் ... கடம்பனவன் - பிரம்மாவின் கர்வம் அடக்கிய கடம்பன்)

நானும் முயன்று பார்த்தேன். என்னால் இதுபோல் ஒரு வெண்பாவும் எழுத இயலவில்லை. இதற்கெல்லாம் Canada போன்ற a மட்டுமே பெயரில் உள்ள நாட்டில் இருக்க வேண்டும் போலிருக்கிறது என்று தேற்றிக் கொண்டேன். அனந்தநாராயணன் என்னைத் தேற்றுவதற்கு மற்றுமொரு அகர வெண்பாவை அளித்திருக்கிறார்:

நகரம் வளர்நண் பரவர் பலநல்
அகரம் அமரட் சரம்வண் - பகரக்
கலவரம் தன்மனம் பட்டனன் கற்ற
பலமறக் கண்டவனந் தன்.

பொருள்:
நகரம் வளர் நண்பர் - சென்னையில் வாழும் நண்பர் (அடியேன்),
அகரம் அமரட் சரம் வண் பகர - அகரங்கள் பல அமைந்த சொற்கள் திறம்பட எடுத்துரைக்க, தான் கற்ற பலமெல்லாம் அற்றுப் போகுமாறு அனந்தன் (இக்கவிதையாசிரியர்) மனக் கலவரம் அடைந்தாராம். எப்படியோ பாடல் பெற்ற ஆசிரியனாகிவிட்டேன்!

வாஞ்சிநாதன்
Share: 


© Copyright 2020 Tamilonline